பாராளுமன்றத்தில்
தொடர்ச்சியாக 38 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருபவர்கள்
பிரதமர் ரணிலும் நானும். கடந்த தடவை பொதுஜன ஜக்கிய முன்னணியில் கேட்டு 3
ஆசனங்களைப் பெற்றோம். இம்முறை மீண்டும் ஐ.தே.கட்சியில் கேட்டு மூன்று
ஆசனங்களைப் பெறுவோம். என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
பி.தயாரத்ன சூளுரைத்தார்.
காரைதீவில், அமைச்சரின் அரசியல்
விவகாரங்களுக்கான இணைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று
முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்ற வரவேற்பு
விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற
உறுப்பினருமான பி.தயாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆறு நிறைவேற்று ஜனாதிபதிகளின் கீழ் 1977முதல் தொடர்ச்சியாக 38வருடங்கள்
அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்றத்தை அலங்கரித்த
பி.தயாரத்ன மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டுள்ளதை ஆதரித்தே
இவ்வரவேற்பு விழா இடம்பெற்றது.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை
அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் உள்ளும் புறமும் குரல் கொடுத்து
வருபவன்.
வட்டமடு விவகாரத்திலும் கல்முனை தமிழ் பிரதேசசெயலக விவகாரத்திலும் கூடிய
அழுத்தம் கொடுத்தவன். அதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒருபோதும்
செயற்பட்டவனல்ல.
தலைவன் என்ற அடிப்படையில் எந்த இனத்திற்கு அநீதி நடக்கின்றதோ அதனை
வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக குரல்கொடுத்தேயாக
வேண்டும். அதனையே செய்து வருகின்றேன்.
துரதிஸ்டவசமாக அமைச்சரவையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய தமிழ் அமைச்சர்கள் இல்லாததது பெருங்குறையே.
எனவே தமிழ் மகன் ஒருவன் ஏதாவது தேசியக் கட்சியினூடாக தேர்தலில் நின்று
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி அமைச்சராக வேண்டும்.அப்போது நாம்
மௌனிப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெறுமனே உரிமை உரிமை என்று காலத்தைப்
போக்காமல் உரிமையோடு மக்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுப்பவர்களாக
மாறவேண்டும். கிழக்கில் அந்த மாற்றம் வந்திருக்கிறது. மத்தியிலும்
வரவேண்டும்.
யாருக்காகவும் நான் எனது கொள்கையை மாற்றமாட்டேன். இந்தத் தடவையுடன்
ஓய்வுபெற விரும்புகின்றேன். அம்பாறை மாவட்டத்தில் நண்பர் தயா கமகேயுடன்
இணைந்தே பயணிப்போம். எம்மிடையே எந்த வேறுபாடுமில்லை. என்றார்.
அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் உரையாற்றுகையில்:
1977 முதல் ஜ.தே.கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக அரசியலில்
பிரவேசித்த தயாரத்ன எம்.பி., நிறைவேற்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன
ஆர்.பிரேமதாச டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த
ராஜபக்ச தற்சமயம் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கீழ் பாராளுமன்ற
உறுப்பினராக அமைச்சராக தொடர்ச்சியாக சேவையாற்றி வந்தவராவார்.
கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் தளம்பல் நிலை ஏற்பட்டபோது நிலையான
பாராளுமன்றம் அமையவும் யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டிற்கு அமைதியையும்
சமாதானத்தையும் வழங்க எண்ணி பொதுஜன ஜக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்கிய அவர்
2010ல் இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு
மீண்டும் அமைச்சரானார்.
ஆனால் அமைச்சுக்குரிய அதிகாரம் முற்றாக கிடைக்கவில்லை.அதனால் அவரால்
நினைத்த மாதிரி மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை. ஜனாதிபதி மஹிந்தவின்
கீழ் முழு மந்திரியாக இயங்க அவரால் முடியவில்லை. அதற்கான சூழ்நிலையுமில்லை.
இதனால் மந்திரியாகவிருந்தும் ஜனாதிபதியோ அரசாங்கமோ தனது மக்களுக்கு உரிய
சேவையைச் செய்ய விடவில்லை என்ற ஆதங்கம் அவருக்கிருந்தது. ஒன்றுமே செய்ய
முடியவில்லை.
இந்நிலையில்தான் இவ்வாண்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றது.தற்போது நாட்டில்
நல்லாட்சிக்கு அத்திவாரமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தில் ஐ.தே.கட்சித்
தலைமைகளும் பிரதம மந்திரியும், ஐ.தே.க.வில் இணையுமாறு வேண்டுகோள்
விடுத்ததற்கமைவாக மீண்டும் ஜ.தே.க.வில் சேர்ந்தார். அவரது வெற்றியை உறுதி
செய்யுங்கள். என்றார்.
கூட்டத்தில் அமைச்சரின் இணைப்பாளர் சுனில், ஐ.தே.க.பிரமுகர் பேரின்பம்,
பொறியியலாளர் தங்கவேல், தொழிநுட்ப உத்தியோகத்தர் ரவீந்திரன் ஆகியோரும்
உரையாற்றினர்.

0 comments:
Post a Comment