• Latest News

    April 06, 2015

    கல்முனை மாநகரசபையின் கழிவகற்றல் சேவை சீராக இடம்பெறுவதில்லை: மகஜர் கையளிப்பு

    (எஸ்.எம்.எம்.றம்ஸான்)
    சாய்ந்தமருது 14, 16, 17ம் குறிச்சிகளில் உள்ள அஹமட் வீதி, கே.கே.வீதிகளில் கல்முனை மாநகரசபையின் கழிவகற்றல் சேவை சீராக இடம்பெறுவதில்லை எனத் தெரிவித்து, இன்று  திங்கள் கிழமை (6)  கல்முனை மாநகரசபயிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

    குறித்த பிரதேசம் சார்பாக ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.இப்ராஹீம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாக்கத் அலியிடம் அம் மகஜரைக் கையளித்தார்.
    மகஜரைப் பெற்றுக்கொண்ட மாநகர ஆணையாளர்,

    இது, குறித்த வீதிகளுக்கு மட்டுமான பிரச்சினை கிடையாது. முழுக் கல்முனை மாநகரமும் தற்போது இந்தப் பிரச்சினையை எதிர்  கொண்டுள்ளது. காரணம் அகற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கான இடவசதி கல்முனை மாநகரப் பிரதேசத்தில் இல்லை. காரைதீவு மற்றும் பள்ளக்காடு ஆகிய இடங்களுக்கே சேகரிக்கப்படும் கழிவுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்கு பாரிய செலவுகளும் ஏற்படுகின்றது. 

    தற்பொழுது அங்கு கொட்டப்படுவதிலும் சில சிக்கல்கள் தோன்றியுள்ளன. இடைக்கால நடவடிக்கையாக சாய்ந்தமருது கரைவாகுவட்டையிலுள்ள தனியார் காணி ஒன்றில் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. அதுவும் சில காரணங்களால் தற்பொழுது தடைப்பட்டுள்ளது. ஆகையால் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகள் எதனையும் வழங்க முடியாமல் உள்ளது. அத்துடன் எமது ஊழியப் படையானது கழிவகற்றும் சேவையை சிறப்புற மேற்கொள்வதற்கு எப்போதும் தயார் நிலையில்தான் உள்ளது. அதனால் அதிகாரிகள் மட்டத்தில் நாங்கள் சேவைக்கு எப்பொழுதும் தயார் நிலையிலேயே உள்ளோம். அகற்றப்படும் கழிவுகளை கொட்டுவதற்கான இடவசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதானது அரசியல் மட்டங்களிலேயே தங்கியுள்ளது. என்றார்.
    குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.........

    அஹமட் வீதி, கே.கே.வீதி 
    சாய்ந்தமருது 14, 16, 17
    2015.04.6
    கௌரவ மேயர்/ஆணையாளர்,
    மாநகரசபை,
    கல்முனை.
    ஐயா,
    கழிவகற்றல் சேவையை சீராக்கல் 

    சாய்ந்தமருது 14, 16, 17ம் குறிச்சிகளில் உள்ள அஹமட் வீதி, கே.கே.வீதி எனும் இரு வீதிகளிலும் கழிவகற்றல் சேவை சீராக நடைபெறுவதில்லை.
    சாய்ந்தமருதுவில் உள்ள சில வீதிகளில் ஒரு நாளைக்கு இரு தடவைகளும், இன்னும் சில வீதிகளில், வாரத்துக்கு சில தடவைகளும், கழிவகற்றும் சேவையை நடாத்திக்கொண்டு, மேற்படி எமது வீதிகளில் மாதத்துக்கு ஒரு தடவை, அதுவும் கால நிர்ணயமற்ற முறையில், விரும்பிய ஒரு தினத்தில் இச்சேவையை நடாத்திக்கொண்டு வருவதை இதற்கு முன்னரும் பல தடவைகள் எழுத்துமூலமும், தொலைபேசிகள் மூலமும் அறியத்தந்துள்ளோம். ஆனால் எதுவித நடவடிக்கையும் உங்கள் மாநகரசபை நிருவாகத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை.
    இது அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலாகும். இதனால் தொடர்ந்து இந்நிலை நீடித்தால்,
     1. மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து நியாயம் பெறுதல்.
    2. குப்பைப் பைகளுடன் ஆண்களும் பெண்களுமாக ஊர்வலம்வந்து உங்களைச் சந்தித்தல்.
    3. ஊடகங்கள் மூலமாக இதனை நாடறியச்செய்தல் 
    எனும் வழிமுறைகளைக் கையாண்டு, துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் எமது வீதிகளை சுத்தம் செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதென இங்குள்ள மக்கள் கூடித் தீர்மானித்துள்ளோம். என்பதை முதலில் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
    ஆகவே மாநகரசபைக்கும் எமக்கும் இடையில் ஏற்படத் தொடங்கும் முறுகல் நிலையை தவிர்க்க ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
     எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகரசபையின் கழிவகற்றல் சேவை சீராக இடம்பெறுவதில்லை: மகஜர் கையளிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top