• Latest News

    April 30, 2015

    மஹிந்த தொலைக்காட்சியில் பாராளுமன்ற விவாதத்தைப் பார்த்து தனது தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்!- ஜே.வி.பி

    19ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றியிருப்பதானது நாட்டின் ஜனநாயகத்துக்கும் மக்களின் உரிமைக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி இதனைத் தடுப்பதற்கு தொலைக்காட்சியில் நேரடியாக பாராளுமன்ற விவாதத்தைப் பார்த்துக் கொண்டு தனது தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்ததாகவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

    ஏகாதிபத்தியத்துக்கு வழிவகுத்த 18வது திருத்தத்தை 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இல்லாதொழிப்பதற்கு முதற்தடவையாக பாராளுமன்றத்துக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    18வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வரையறையில்லாத அதிகாரங்களை 19வது திருத்தத்தின் மூலம் குறைப்பதற்கு முடிந்துள்ளது என ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

    அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் மாத்திரம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது. அரசியலமைப்பு சபையை அமைத்து அதனூடாக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதன் மூலமே நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழிக்க முடியும். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கும் செயற்பாடுகளை குறைக்க முடியும்.

    19வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்த சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    அடுத்த பிரதமர் யார், அடுத்த பிரதி பிரதமர் யார் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அரசியலமைப்புத் திருத்தத்தைப் பார்ப்பது பிழையானது. அரசியலமைப்புத் திருத்தத்தை மேலும் ஜனநாயகம் நிறைந்ததாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.

    அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமராகி அதிகாரங்களைத் தான் எடுத்துக்கொள்ளலாம் என ரணில் விக்ரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை தான் பெற்றுக்கொள்ள முடியும் என மஹிந்த ராஜபக்ச தரப்பும் சிந்தித்துள்ளன. குழம்பிப் போயுள்ள நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மஹிந்த ராஜபக்ச அவசியம் என்ற நிலைப் பாடொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

    அதனால்தான் அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ள இரண்டு முக்கியமான திருத்தங்கள் தொடர்பில் இரவு 7 மணிவரை இணக்கப்பாடு ஒன்றுக்கு வரமுடியவில்லை. அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தனர்.

    பாராளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் சுயாதீன குழுவுக்கு செல்லக்கூடாது என அவர்கள் வாதிட்டனர்.

    தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றத்துக்கு அவ்வாறான சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை. நிறைவேற்று அதிகாரத்துக்கே அதற்கான அதிகாரம் இருந்தது.

    இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி இதனைத் தடுப்பதற்கு தொலைக்காட்சியில் நேரடியாக பாராளுமன்ற விவாதத்தைப் பார்த்துக் கொண்டு தனது தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்ததாகவும் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்த தொலைக்காட்சியில் பாராளுமன்ற விவாதத்தைப் பார்த்து தனது தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்!- ஜே.வி.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top