• Latest News

    December 01, 2015

    பொறியியல் பீடம் பறி போகுமா....?

    ஒரு நாட்டின் கல்வித் தரத்தினை மேம்படுத்த,பண்பட்ட சமூகத்தினை உற்பத்தியாக்க,வறுமையினை ஒழிக்க போன்ற பல விடயங்களில் பல்கலைக்கழகங்கள் முக்கிய வகிபாகம் வகிக்கின்றன.இது போன்றே அப் பல்கலைக் கழகத்தில் போதிக்கப்படுகின்ற ஒவ்வொரு கற்கை நெறியும் ஒவ்வொரு நோக்கங்களினை நோக்கியதாக இருக்கும்.இதில் பொறியியல் பீடம் மிக முக்கியமானதாகும்.ஒரு நாட்டின் அபிவிருந்தியில் பொறியியல் துறையின் அபிவிருத்தி மிகவும் அத்தியாவசியமான ஒன்று.பொறியியல் துறையின் வளர்ச்சியற்ற அபிவிருந்தி சாத்தியமற்ற ஒன்றும் கூட.இவ்வாறான சிறப்பு மிக்க பொறியியல் துறை மிகவும் தரம் மிக்கதாக போதிக்கப்படல் வேண்டும்.இலங்கையின் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் தொடரப்படும் பொறியியல் கற்கை நெறி பொறியியல் துறையின் தரத்தினை கேள்விக்குட்படுத்துகிறதா? என்ற வினாவினை அண்மைக் காலமாக தோற்றுவித்து வருகின்றது.இதன் காரணமாக அப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக தங்களது விரிவுரைகளினை புறக்கணித்தும் வருகின்றனர்.
    தென் கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் தெரிவு,விடுதிப் பிரச்சனை,கவுன்சில் தெரிவு,வெளி வாரிப் பட்டப்படிப்பிற்கு அதீத பணம் அறவிடுகின்றமை போன்ற பல்வேறு பிரச்சனைகளின் தொடர் வரிசையில் இப் பிரச்சனையினை தென் கிழக்குப் பல்கலைக்கழகம் எதிர்கொள்கிறது.அம் மாணவர்கள் தங்களது பிரச்சனைகளாக தரம் குறைந்த கல்வி,திறன்மிக்க விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை,போதியளவு வளங்கள் இன்மை,மேலதிக துறைசார் கற்கை நெறிகளினை தொடர்வதற்கும் துறை சார் தொழிற்சாலைகளுடன் தொடர்பின்மை,தேவையற்ற நீண்ட கால விடுமுறை,ஒலுவில் பிரதேசம் பொறியியற் துறைக்கு பொருத்தமற்றமை போன்ற சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
    கல்வி என்பது படித்துக் கொடுக்கப்படும் விரிவுரையாளர்களில் பூரணமாக தங்கி இருக்கும் ஒன்றல்ல.தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட பீடாதிபதி தவிர்ந்து இரண்டு கலாநிதிகள் உள்ளனர்.மற்றைய அனைவரும் இளமானிப் பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர்கள்.இன்றைய காலத்தில் விரிவுரையாளர்கள் சாதாரண ஒரு வழி காட்டிகள் மாத்திரமே! அவர்கள் ஒரு சிறு வழியினைக் காட்டும் போது மாணவர்களின் தேடல்கள் தான் அவர்களின் அறிவினைப் பெருக்கப்போகிறது.இதனை இலங்கையின் திறந்த பல்கலைக்கழகமானது உலகின் பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் இலங்கையின் மிகவும் திறமை மிகுந்த பல்கலைக்கழகமாக விழிக்கப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை விட 1236 இடங்கள் முன்னிலை வகிக்கிப்பதை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.
    இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் பொறியியல் பிரிவு உள்ளது.ஒலுவில் பிரதேசம் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் அயல் மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் கூட பொறியியல் பிரிவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் வளர்சிக்கு அங்குள்ள விரிவுரையாளர்களினை மிகப் பெரிய பங்காளிகளாக குறிப்பிட முடியாது.கலாநிதிகள் படித்துக் கொடுத்தால் தான் அறிவு பெருகும் என்று எங்கும் இல்லை.இளமானிக் கற்கையினைத் தொடரும் இம் மாணவர்களுக்கு இளமாணி ஒருவர் விரிவுரை செய்வதென்பது போதுமானதாகும்.
    பல்கலைக்கழகங்களிலும் பாட விதானத்திற்கு அமையவே பாடங்கள் போதிக்கப்படுகின்றன.எல்லையற்ற கல்விகள் எப் பல்கலைக்கழகத்திலும் இளமாணிப் பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்களுக்கு போதிக்கப்படுவதில்லை.எல்லையற்ற அறிவு போதிக்கப்படும் இடத்தில் கலாநிதிகள் நிச்சயம் தேவைப்படுவர்.முற்றத்து மல்லிகை ஒரு போதும் மணப்பதில்லை.அக்கரை மாட்டிற்கு இக்கரைப் பச்சையும் கூட.தன்னோடு படித்த மாணவன் மற்றைய பல்கலைக்கழகங்களில் கலாநிதிகளிடம் படிக்கும் போது தாங்கள் மாத்திரம் இளமானிக் கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களிடம் படிப்பதென்பது உளவியல் ரீதியாக இம் மாணவர்களினை பின் தங்கச் செய்யலாம்.சில வேளை அக் கலாநிதிகளினை விட இக் குறித்த இளமானிகள் சிறப்பான முறையில் விரிவுரையும் நடாத்தலாம்.பல பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கலாநிதி விரிவுரையாளர்களினைப் பற்றி நொந்து கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.பொறியியல் பீடத்திற்கு தெரிவி செய்யப்படும் மாணவர்கள் மிகப் பெரிய கற்பனைக் கோட்டையினை தங்களுக்குள் வரைந்திருப்பார்கள்.இது மனிதன் என்ற வகையில் தோன்றக் கூடிய ஒன்றும் கூட.தாங்கள் பெரிய பெரிய மதிப்புக்குரிய கலாநிதிகளிடம் படிப்போம்.பேராதனை சென்று படிப்போம்.இம் மாணவர்களின் இப்படியான சில கற்பனைக் கோட்டைகள் இப்  பல்கலைக்கழகம் கிடைத்த போது தரைமட்டமாக்கப்பட்டது.
    இதனை யாருமே பொருந்திக் கொள்ளவில்லை.இப் பல்கலைக்கழகம் கிடைத்த மாணவர்கள் குறிப்பாக அம்பாறை,மட்டக்களப்பு மாணவர்கள் தங்களுக்கு வேறு பல்கலைக்கழகத்தினை கேட்டு முறையீடும் (appeal) செய்திருந்தனர்.அதாவது வளம் இல்லை என்பதை விட எமது பகுதிக்குள் இன்னும் படிப்பதா? என்ற சலிப்பும்,இப் பல்கலைக்கழகத்தினை பொருந்திக்கொள்ளாத தன்மையும்  மிகைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
    அதற்காக கலாநிதிகள்,சிறந்த விரிவுரையாளர்கள் தேவை இல்லை என்பது பொருளல்ல.ஒரு பல்கலைகழகத்தில் ஒரு சிறந்த விரிவுரையாளர்கள் சமூகத்தினை அவ்வளவு இலகுவில் உருவாக்கி விட முடியாது.அந்த குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் மாணவர்களினை,அங்கு விரிவுரை நடாத்தும் விரிவுரையாளர்களினை புலமைப்பரிசில் திட்டத்தில் உள் வாங்கி அதன் மூலம் அவர்களினை உயர்கல்வியினை தொடரச் செய்தே சிறந்த விரிவுரையாளர்கள் சமூகம் உருவாக்கப்படும்.இப்படியே பல பல்கலைக்கழகங்கள் தங்களது தரமிக்க விரிவுரையாளர் சமூகத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.அநேக பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டிலும் வெளியாகும் மாணவர்களில் சிலர் இப்படியான புலமைப்பரிசில் திட்டத்தில்  உள் வாங்குப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.அப்படியானால் கடந்த மூன்று வருடத்தினுள் இப் பல்கலைக்கழகத்தின் அடைவு என்ன? என்ற வினாவினை எழுப்பினால்.அனைத்தும் பூச்சியத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.அப்படியானால் ஏன் இங்கு உருவாக்க முடியாதோ? என்ற வினா தோன்றலாம்.இப்படியான திட்டத்திற்கு இப் பல்கலைக்கழகம் முயலவில்லை என்பதை ஒரு விடயத்தினை சுட்டிக் காட்டுவதன் மூலம் நிறுவலாம்.
    இப்பல்கலைக்கழகத்தினை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கழிந்தும் பணத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய வளத்தினைக் கூட இப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கொண்டிருக்கவில்லை.இதற்கு தகுந்த முறையில் குறித்த பல்கலைக்கழகம் முயன்றிருந்தால் தீர்வைப் பெற்றிருக்கலாம்.அதவாது பணத்தின் மூலம் சாதிக்கக் கூடியவற்றினைக் கூட இவர்களினால் சாதிக்க முடியாமல் போனதானது இவ் விடயத்தில் இவர்களின் அசமந்தப்போக்கினை தான் தெளிவாக புடை போட்டுக் காட்டுகிறது.
    அம்பாறை மாவட்டத்தில் பொறியியல் துறையில் முதுமாணிப் பட்டத்தினை நிறைவு செய்த பலர் உள்ளனர்.இளமானிக் கற்கையினை நிறைவு செய்து முதுமானிக் கற்கையின் மீது அவா கொண்டு பண வளம் இல்லாமையினால் தவிக்கும் எத்தனையோ பேர் உள்ளனர்.இவர்களினை இத் திட்டத்தில் உள் வாங்கி இப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறந்த விரிவுரையாளர் சமூகத்தினை தோற்றம் பெறச் செய்யலாம்.இத் திட்டத்தினைப் பயன்படுத்தி எமது பகுதியில் பொறியியற் துறையில் ஒரு புரட்சினையே தோற்றுவித்திருக்கலாம்.இதற்கான முறையான திட்டங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.இதற்கு இப் பகுதி பொறியியல் துறை புத்தி ஜீவிகள் பலரும் சமூக நோக்கம் கொண்டு இவ் விடயத்தில் தங்களாலான உதவிகளினை செய்ய வேண்டும்.எம்மவர்களுக்கு அடியில் நெருப்பினைக் கொடுத்தால் தான் உச்சி கொதிக்கும்? இப்போது கை மீறி ஒரு பொறியியல் சமூகம் நடு வீதியில் நின்று கொண்டு போராடும் போது தான்  எம்மவர்களும் அவர்களினை திரும்பிப் பார்க்கின்றனர்.
    இம்மாணவர்களின் இக் கோசத்தினை எதிர்க்கும் அக் குறித்த குறித்த பல்கலைக்கழகத்தின் சக துறை மாணவர்கள்,விரிவுரையாளர்கள் இவர்களின் வளப்பற்றாக் குறைக்கு என்ன செய்துள்ளார்கள்? யாரிடம் முறையிட்டுள்ளார்கள்? தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு பிரச்சினை தோன்றுகிறதென்றால் அது எங்கோ இருக்கும் பிரச்சனை அல்ல.அது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை.இம் மாணவர்கள் இதற்கு முன்பே இப் பிரச்சனையினை மக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.தாங்கள் இதனை வெளியில் சொன்னால் தங்களுக்கு அவமானம் அல்லவா? தாங்கள் பொறியியளார்கள் அல்லவா? என மூடி மறைத்துக் கொண்டார்கள்.வெள்ளம் தலை மேல் சென்ற பிறகு அணைகட்ட கோசமிட்டு என்னதான் இலாபம் கிடைக்கப்போகிறது?

    தொடரும்....
    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
    சம்மாந்துறை.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொறியியல் பீடம் பறி போகுமா....? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top