முகம்மது தம்பி மரைக்கார் -
‘கிழக்கின் எழுச்சி’ என்கிறதொரு
விடயம் கொஞ்ச நாட்களாக ஊடகங்களில் ஒரு காய்ச்சல் போல் பரவி வருகிறது.
‘முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்கிலுள்ள ஒருவர் வகிக்க
வேண்டும்’ என்கிற கோசத்தினை பிரதானப்படுத்தி, கிழக்கின் எழுச்சியாளர்கள்
பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனாலும், கிழக்கின் எழுச்சி பற்றி, தாம்
அலட்டிக் கொள்ளவேயில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில்
சிலர் கூறுகின்றனர்.
இன்னொரு புறம், அலட்டிக் கொள்ளாத அந்த
விடயம் குறித்து, அடிக்கடி அவர்கள் பேசிக்கொள்வது முரண்நகையாக உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியோடு ஒப்பிடுகையில் கிழக்கின்
எழுச்சி – மிகச் சிறியதொரு விடயமாகும். அதனால், ‘கிழக்கின் எழுச்சியானது
முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு தூசு போன்றதாகும்’ என்று, அந்தக் கட்சியின் சில
பிரமுகர்கள் கூறி வருகின்றனர். இருந்தபோதும், கிழக்கின் எழுச்சி என்கிற
தூசு, காங்கிரஸின் கண்;களுக்குள் விழுந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதனால், அது மு.காவுக்குக் கரிக்கத் தொடங்கியிருக்கிறது. கொஞ்ச நாட்களாக
சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் சுவரொட்டிகளிலும் கிழக்கின் எழுச்சி
பற்றிப் பேசப்பட்டு வருகிறது.

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸின்
தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசனலி ஆகியோர் மு.கா
தலைவரை அச்சுறுத்தும் வகையிலான ஆதாரங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு
களத்தில் குதித்துள்ளனர். இப்படியானதொரு நிலையில்தான், ‘நமது விதியை நாமே
எழுதுவோம்ƒ நமது கட்சியை மீட்போம்ƒ கிழக்குத் தலைமையொன்றிடம் முஸ்லிம்
காங்கிரஸை ஒப்படைப்போம்’ என்கிற கோசத்தை முன்வைத்து கிழக்கின் எழுச்சி
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சங்கர் படத்தில் வரும் அந்நியன் போல,
கொஞ்ச நாட்களாக, இணையத்தில் மட்டும் தலைகாட்டி வந்த கிழக்கின்
எழுச்சிக்காரர்கள், கடந்த 19 ஆம் திகதியன்று, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றினூடாக, தம்மை நேரடியாக
அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
கிழக்கின் எழுச்சி என்கிற
செயற்பாட்டின் தலைவராக வபா பாறூக் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். வபா பாறூக்
என்பவர் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது பொருளாளராவார். மு.காவின் மறைந்த
தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்புக்கு நெருக்கமானவராக இவர் இருந்தார் என்று
கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால், முஸ்லிம் காங்கிரஸில் ஹக்கீமை விடவும்
வபா பாறூக் சீனியராவார். ஆனால், இந்தத் தகவல்கள் காங்கிரஸில் புதிதாக
இணைந்தவர்களுக்கும், கட்சியின் இளம் தீவிர செயற்பாட்டாளர்களில்
அதிகமானோருக்கும் தெரியாது. கிழக்கின் எழுச்சியினுடைய பிரதித் தலைவர் அலி
ஷப்ரி என்பவராவார். இவர் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி. ஹசன் அலியின்
புதல்வர். இந்த அமைப்பின் செயலாளராக அஸ்ஹுர் இஸ்ஸதீன் உள்ளார். இவர்
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் மூத்த புதல்வர்
என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும்தான் கிழக்கின் எழுச்சியினுடைய
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். மேற்படி நபர்களில் வபா பாறுக்கை
கழித்து விட்டுப் பார்த்தால், மற்றைய இருவரின் தந்தையர்களும் மு.கா
தலைவருக்கு எதிர் அரசியல் செய்யும் செயற்பாட்டில் ஏற்கனவே இருப்பவர்கள்.
மட்டுமன்றி, சேகு இஸ்ஸதீனின்
மகளைத்தான், ஹசன் அலியின் மகனொருவர் திருமணம் செய்துள்ளார். அந்த வகையில்
சேகுவும் ஹசன் அலியும் சம்பந்தியர்களாவர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்
போது, கிழக்கின் எழுச்சியின் பின்னால் சேகு இஸ்ஸதீன் மற்றும் ஹசன் அலி
ஆகியோரின் ஆதரவு இருக்கலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அன்றைய
ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தச் சந்தேகத்தினை ஓர் ஊடகவியலாளர்
முன்வைத்தார். ‘கிழக்கின் எழுச்சியில் – தந்தையர்களின் ஆசிர்வாதம்
மகன்களுக்கு இருக்கிறதா’ என்று அந்த ஊடகவியலாளர் கேட்டார். அந்தக்
கேள்விக்கு, கிழக்கின் எழுச்சியினுடைய செயலாளர் அஸ்ஹுர் இஸ்ஸதீன்
பதிலளித்தார். ‘கிழக்கின் எழுச்சியின் பின்னால் எங்கள் தந்தையர்களான சேகு
இஸ்ஸதீனோ, ஹசன் அலியோ இல்லை. ஆனால், கிழக்கின் எழுச்சியினுடைய நோக்கத்துடன்
அவர்கள் கருத்தியல் ரீதியாக உடன்பாடு கொண்டவர்கள். முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் ரவூப் ஹக்கீமுடன், அந்தக் கட்சியின் செயலாளர் ஹசன் அலி கடந்த
காலங்களில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
அந்த வகையில், மு.கா தலைவரின்
பிழைகளில் செயலாளர் ஹசன் அலிக்கும் பங்கு இருக்கிறது. அதற்குரிய பொறுப்பினை
ஹசன் அலி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஹசன் அலியிடம் நாம் நேரடியாகத்
தெரிவித்து விட்டோம்’ என்றார். கிழக்கின் எழுச்சி என்பதை, பிரதேச வாதம்
கொண்டதொரு கோசமாக ஒரு தரப்புக் கூறுகிறது. ஆனால், அதை அப்படிப் பார்க்கத்
தேவையில்லை என்கிறது இன்னொரு தரப்பு. விவாதிக்க வேண்டிய விடயம் இதுவல்லƒ
கிழக்கின் எழுச்சி ஏன் உருவானது? அது முன்வைக்கும் கோசத்துக்கான காரணம்
என்ன? என்பன போன்ற கேள்விகளை முன்னிலைப்படுத்தியே விவாதமொன்றினைத் தொடங்க
வேண்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம் கண்டி மாவட்டத்தைச்
சேர்ந்தவர். இன்னொரு வகையில் சொன்னால், கிழக்கு மாகாணத்தின் பழக்க
வழக்கம், நடைமுறை, கலாசாரங்களிலிருந்து வேறுபட்டதொரு சூழலில் வாழ்ந்தவர் –
வாழ்பவர்.
ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திடீர்
மரணமடைந்தபோது, கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த கண்டி மாவட்டத்தைச்
சேர்ந்த ரவூப்ஹக்கீம் தலைவராக்கப்பட்டார். ஹக்கீமை தலைவராக்குவதற்கு
அப்போது கட்சிக்குள் ஆதரவு வழங்கிய முக்கியஸ்தர்களில் அதிகமானோர், கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நினைவுகொள்ளத்தக்கது. கிழக்கு
மாகாணத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவானது. அந்தக் கட்சியின் இருதயம்
கிழக்கு மாகாணம்தான். உதாரணமாக, மு.காவுக்கு இம்முறை ஐந்து நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தேர்தல் மூலம் கிடைத்தனர். இவர்களில் நால்வர் கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
கட்சித் தலைவர் ரவூப்ஹக்கீம் மட்டுமே
கிழக்குக்கு வெளியில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவானார். ஆக, முஸ்லிம்
காங்கிரஸுக்குள் கிழக்கு மாகாணம் முதன்மைப்படுத்தப் படுவதிலோ அல்லது
முஸ்லிம் காங்கிரஸை கிழக்கு மாகாணத்தவர்கள் அதிகம் சொந்தம் கொண்டாடுவதிலோ
தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனைத் தவறு என்று சொல்கின்றவர்கள்
முஸ்லிம் காங்கிரஸின் வரலாறு பற்றித் தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த
மூத்த முக்கியஸ்தர்கள் பலரை, தலைவர் ஹக்கீம் ஓரங்கட்டி வருவதாக,
கட்சிக்குள் ஒரு பாரிய குற்றச்சாட்டு உள்ளது. மட்டுமன்றி, முஸ்லிம்
காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களாக கிழக்குக்கு வெளியிலுள்ளவர்களை, மிகத்
திட்டமிட்டு தலைவர் ஹக்கீம் உள்ளீர்த்து வருவதாகவும் ஒரு விமர்சனம்
இருக்கிறது.
உயர்பீடத்தில் கிழக்கு
மாகாணத்தவர்களின் ஆதிக்கத்தினைக் குறைப்பதற்காகவே, மு.கா தலைவர் ஹக்கீம்
இவ்வாறு செய்கின்றார் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
உயர்பீடம்தான் அந்தக் கட்சியின் யாப்பின்படி தீர்மானங்களை நிறைவேற்றும்
சபையாகும். உயர்பீடத்தில் தற்போது 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
முன்னொரு காலத்தில் மு.காவின் உயர்பீடத்தில் கிழக்கு மாகாணத்தவர்களின்
ஆதிக்கம் இருந்தது. ஆனால், அந்த நிலைவரம் திட்டமிட்டு இல்லாமலாக்கப்பட்டு
வருவதாக, கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் கவலையுடன்
தெரிவிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸ்
தலைவருக்கு அடுத்த தரத்திலுள்ள தவிசாளர் பஷீர் சேகுதாவூத், அவருக்கு அடுத்த
தரத்திலுள்ள செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோரும் தலைவர் ஹக்கீமால்
கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இவர்களும் கிழக்கு மாகாணத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னொருபுறம், கிழக்கு
மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி
வருகின்ற போதும், அவை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அக்கறை
காட்டாமல் இருந்து வருகின்றார் என்கிற புகார்களும் முன்வைக்கப்பட்டு
வருகின்றன. குறிப்பாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், ஆலிம்சேனை,
சம்மாந்துறை மற்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை உள்ளிட்ட பல
பிரதேசங்களில் – முஸ்லிம் மக்களினுடைய காணிகள் பேரினவாதிகளால் அடாத்தாகப்
பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றுக்கான தீர்வுகளை இதுவரை மு.கா தலைவர்
பெற்றுக்கொடுக்கவில்லை என்கிற கோபம் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு
உள்ளது. இவ்வாறான கோபங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முதலீடுகளாகக்
குறிவைத்தே, கிழக்கின் எழுச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ்
தலைவருக்கு எதிரான மனநிலையோடு, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களில் பலர்
உள்ளனர். அவர்கள் தமது எதிர் மனநிலையை இன்னும் வெளிப்படையாகத் திறந்து
காட்டவில்லை. ஆனால், அதற்கான ஒரு தருணத்தினை அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அவர்களுக்கு ‘கிழக்கின் எழுச்சி’ என்பது சந்தோசமான விடயமாகும்.
எவ்வாறாயினும் கிழக்கின் எழுச்சி வெற்றிபெறுமா, அதன் இலக்கினை அடையுமா
என்கிற கேள்விகளும் உள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் என்கிற யானையுடன் கிழக்கின்
எழுச்சி என்கிற எறும்பு எப்படிப் பொருதும் என்கிற கேள்வி நியாயமானது.
ஆனால், யானையின் காதுக்குள் எறும்பு நுழைந்த கதையொன்றும் நம்மிடையே உள்ளதை
நாம் மறந்து விடலாகாது. மு.காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.
தவம், தனது பேஸ்புக் பக்கத்தில், கிழக்கின் எழுச்சியை நையாண்டி
செய்துள்ளார். அதன் செயற்பாட்டாளர்களை ‘சிரிப்பு பொலிஸ்’ என்று மட்டம்
தட்டி மகிழ்ந்துள்ளார். ஆனால், கிழக்கின் எழுச்சி பற்றி முஸ்லிம்
காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான
ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்திருக்கும் கருத்து வேறு வகையானது. தவத்தின்
கருதுகோளுக்கு மாற்றமானது. ‘இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலான முஸ்லிம்
காங்கிரஸை நசுக்குவதற்காக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள சக்திகள்
ஒன்றிணைந்துள்ளதாகவும் அதன் வெளிப்பாடுதான் கிழக்கின் எழுச்சி’ என்றும்
ஹாபிஸ் நசீர் கூறியுள்ளார்.
ஆக, மு.கா முக்கியஸ்தர்களுக்கிடையில்
கிழக்கின் எழுச்சி எனும் செயற்பாடானது ஒருவித குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து
ஆளுக்கொரு விதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரவூப்ஹக்கீம் என்பவர்,
கிழக்கினூடாகப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியினைக்
கொண்டு, அந்தப் பிராந்திய மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்,
எவற்றையெல்லாம் செய்யாமல் விட்டுள்ளார் என்பது அநேகமாக எல்லோருக்கும்
தெரிந்த கதையாகும். முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன்,
அந்தக் கட்சியினர் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்தத் திட்டத்தின் பெயர் ‘வீட்டுக்கு வீடு மரம்’ என்பதாகும். அதாவது,
ஒவ்வொரு வீட்டிலும் முஸ்லிம் காங்கிரஸின் தொண்டர்களைக் கொண்டு, அந்தக்
கட்சியின் சின்னமான மரத்தை நடப்போகிறார்கள். அதனூடாக கட்சியை வளர்த்தெடுக்க
முடியுமென்று அவர்கள் நம்புகின்றனர்.
மு.கா. தலைவரின் சிந்தனையிலிருந்து
இந்தத் திட்டம் பிறந்ததாக கூறப்படுகிறது. ஒரு சமூகத்தின் அரசியல்
உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட – முஸ்லிம் காங்கிரஸ்
எனும் கட்சியை கையில் வைத்துக் கொண்டு, அதனை எவ்வாறெல்லாம்
மலினப்படுத்துகின்றார்கள் என்பதற்கு ‘வீட்டுக்கு வீடு மரம்’ என்கிற
மு.காவின் திட்டம் ஓர் உதாரணமாகும். ‘முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல்
கட்சியானது, தன்னுடைய தங்கப் பாத்திரத்தை ஏந்தி, பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறது’ என்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரொருவர்.
கிழக்கின் எழுச்சியினுடைய பலம் மு.கா தலைவரின் பலவீனங்களாகும். கிழக்கின்
எழுச்சியினை யாரும் வளர்த்து விடத் தேவையில்லை. மு.கா தலைவரின் பிழைகளே
கிழக்கின் எழுச்சியை, பாலூட்டி சீராட்டி வளர்த்து விடப் போதுமானதாகும்.
நன்றி – TM
0 comments:
Post a Comment