• Latest News

    July 26, 2016

    ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டது: கபாலி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்தார் வைரமுத்து

    கபாலி படம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வைரமுத்து இன்று விளக்கம் அளித்துள்ளார். ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
    கவிஞர் வைரமுத்து சமீபத்தில் பங்கேற்ற ஒரு விழாவில், நான் புரிந்துகொள்கிறேன் ஒவ்வொருவரையும் என்று ஆரம்பித்து, அரசியலை, விஞ்ஞானத்தை என்று ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வருகிறார். இறுதியில், ‘கபாலி’ தோல்வியையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று பேசுகிறார். அவரது உரை அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்துவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தனது பேச்சில் ஒரு சிறு தவறு நடந்துவிட்டது குறித்து வைரமுத்து இன்று விளக்கம் அளித்து, இதை சர்ச்சை ஆக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை வருமாறு:-

    கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.

    கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது,

    ஆண் -  பெண் - உறவுகள் - இல்லறம் அன்பு – காதல் – கண்ணீர் - அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன்.

    கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.

    என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை - நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

    இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது; தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டது: கபாலி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்தார் வைரமுத்து Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top