• Latest News

    September 29, 2016

    மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், கல்வியையும் நிலை நிறுத்த புதிய உபாயங்களை தேட வேண்டியுள்ளது: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

    சஹாப்தீன் -
    மாணவர்கள் மத்தியில் எவ்வாறு ஒழுக்கத்தையும், கல்வியையும் நிலை நிறுத்த முடியுமென்று புதிய உபாயங்களை தேட வேண்டிய தேவை பாடசாலைகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனை இங்கு வருகை தந்துள்ள பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவனின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களோ, அதிபர்களோ மட்டும் போதுமானவர்களல்லர். பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் வீடுகளுக்குள் இருந்து விமர்சனம் செய்கின்றவர்களாக இல்லாமல். பாடசாலைகளுக்கு வருகை தந்து தமது பிள்ளையை பற்றி விசாரிக்க வேண்டும். தங்களது கனவுகளை சொல்ல வேண்டும். ஆசிரியர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முன் வருதல் வேண்டும். அப்போதுதான் மாணவர்களை முன்னேற்றலாம்.

    இவ்வாறு கமுஃநிந்தவூர் அல் - அதான் வித்தியாலயத்தில் நடைபெற்ற கணித வாய்ப்பாட்டு செயற் திட்;டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
    பாடசாலையின் அதிபர் திருமதி ஏ.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தொடர்ந்து உரையாற்றுகையில்,

    நிந்தவூரில் ஆகக் கூடிய ஆரம்பப் பிரிவு மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக அல் - அதான் வித்தியாலயம் உள்ளது. இங்கு 488 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இப்பிள்ளைகளின் பரீட்சை முடிவுகளில் இப்பாடசாலை வெற்றி பெற்றுள்ளதா என்பது கேள்விக்குரியதாகும். இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நிந்தவூரில் உள்ள 12 பாடசாலைகளில் இது பனிரெண்டாவது இடத்தில் உள்ளமை கவலைக்குரியதாகும். ஆதலால், இந்த விழா இப்பாடசாலையை பொறுத்தவரை மிகவும் அவசியமானதாகும். மிகவும் பொறுத்தமான நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும்.

    கிழக்கு மாகாணம் நான் கல்வித்துறையில் இருந்து கொண்டிருக்கின்ற காலம் முதல்  இன்று வரைக்கும் ஆரம்பக் கல்வியில் ஒன்பதாவது இடத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றது. ஆனால், கிழக்கு மாகாணம்தான் ஆகக் கூடிய ஆம்பக் கல்விப் பிரிவு ஆசிரியர்களையும், இப்பிரிவில் ஆகக் கூடிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் கொண்டதாக இருக்கின்றது. இத்தகைய ஆசிரியர்களைக் கொண்டுள்ளமைதான்  தொடர்ந்தும் ஒன்பதாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு காரணமோ என்று எண்ணவும் தோன்றுகின்றது. ஆகவே, இந்நிலைமையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

    ஆரம்பக் கல்வி என்பது ஒரு சாதாரணமான விசமல்ல. எமக்கு ஆரம்பக் கல்வியை கற்றுத் தந்தவர்களை அடிக்கடி பேசுவதுண்டு. எனக்கு எஸ்.முத்துமீரான் சேர், றபீக் சேர் ஆகியோர்கள் ஆரம்பக் கல்வியை கற்றுத் தந்துள்ளார்கள். இவர்களை நான் ஒரு போதும் மறப்பதில்லை.  

    இன்று பிள்ளைகளின் கல்விக்காக தண்டனை வழங்க முடியாது. தண்டனை வழங்கினால் பெற்றோர்கள் முறைப்பாடுகளை செய்கின்றார்கள். இதுதான் இன்றைய கல்வி முறைமை. ஆனால், அன்று ஆசிரியர்கள் ஐந்து அடிகளை அடித்தால் ஏன் ஐம்பது அடிகளை அடிக்கவில்லை என பெற்றோர்கள் கேட்டார்கள். இதனால், இன்று பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் பாரிய சவால்களை எதிர் கொண்டிருக்கின்றார்கள். மாணவர்கள் மத்தியில் எவ்வாறு ஒழுக்கத்தையும், கல்வியையும் நிலை நிறுத்த முடியுமென்று புதிய உபாயங்களை தேட வேண்டிய தேவை பாடசாலைகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனை இங்கு வருகை தந்துள்ள பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவனின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களோ, அதிபர்களோ மட்டும் போதுமானவர்களல்லர். பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் வீடுகளுக்குள் இருந்து விமர்சனம் செய்கின்றவர்களாக இல்லாமல். பாடசாலைகளுக்கு வருகை தந்து தமது பிள்ளையை பற்றி விசாரிக்க வேண்டும். தங்களது கனவுகளை சொல்ல வேண்டும். ஆசிரியர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முன் வருதல் வேண்டும். அப்போதுதான் மாணவர்களை முன்னேற்றலாம்.

    ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள். இதனை நான் ஐந்து வயதாக எண்ணவில்லை. ஐந்தாம் வகுப்பு வரை வளையாதது பிறகு வளையாது என்றுதான் பார்க்கின்றேன். பெற்றோர்கள் பாடசாலைக்கு பிள்ளைகளை கற்பனையுடன் அழைத்து வருகின்றார்கள். இவ்வாறு அழைத்து வருகின்ற மாணவர்களை 12 வருடங்களின் பின்னர் வெறும் கையுடன் வீட்டிற்கு அனுப்புகின்றோம். இதுவொரு பெரிய துர்ப்பாக்கிய நிலை. பெற்றோர்களும், இது வரை நாம் பிள்ளையை கவனியாது விட்டு விட்டோமே என்று கைசேதப்பட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்கின்றோம்.  

    பிள்ளைகளின் கல்வியில் தரம் ஐந்து புலமை பரிசுப் பரீட்சைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுக்கப்படுவதில்லை. இதில் பிரயோசனமில்லை. இதற்கு நாங்கள் கொடுக்கும் முக்கியத்தவம் அபரிதமாகும். மிகவும் பிரயோசனமாக இருக்கின்ற சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாக  இருக்கின்றது. இதனால், ஏராளமான திறமையான மாணவர்கள் தங்களின் வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றார்கள். 

    ஒரு மாணவன் தரம் ஐந்து புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்தால் அவனுக்கு வாழ்வுண்டு எனத் தீர்மானிக்கின்றோம். சித்தியடைவில்லை என்றால் இத்துடன் வாழ்வு முடிந்து விட்டதென்று தீர்மானிக்கின்றோம். ஆனால், துரதிஸ்டவசமாக புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள்தான் பல்கலைக் கழகத்திற்கு அதிகம் செல்லுகின்றவர்களாக உள்ளார்கள். ஒரு பிள்ளையை பொறுத்த வரை அது எந்த இடத்தில் சாதிக்குமென்று யாருக்கும் தெரியாது. ஒரு பாடசாலையில் படிக்கும் காலத்தில் குறிப்பிட்ட மாணவனின் வாழ்வு எவ்வாறு இருக்குமென்று யாரும் தீர்மானிக்க முடியாது. 

    எனவே, உண்மையான கல்வியின் அவசியத்தைப் பற்றி சிந்திக்கின்றதொரு சமூதாயமாக மாற்றமடைய வேண்டிய தேவை எமக்குள்ளது. நாம் இப்போது கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது எங்களுக்கும், அவர்களுக்கும் நீண்ட இடைவெளியைக் கொண்ட ஒரு சமூதாயத்திற்காகும். 

    இன்று மாணவர்கள் நவீன போன்களை யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே இயக்கும் திறமையைப் பெற்றுள்ளார்கள். இதற்குரிய திறமைகள் அவர்களிடம் இருக்கின்றதென்றால் இதனை விடவும் இலகுவான பாடப் பரப்பை மாணவர்கள் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க முடியவில்லை என்றால் அது எங்களின் பலவீனமாகும். ஆகவே, இந்த விசயத்தில் பாடசாலைகள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எங்களுடைய மாணவர்களை கவனிக்காத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த உண்மையை ஒவ்வொரு பாடசாலையும் மாற்ற வேண்டும். 

    கல்முனை வலயத்தில் நிந்தவூர் கோட்டம் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் என்னிடம் சொன்னார். கல்முனை வலயத்தில் ஐந்து கோட்டங்கள்தான் உள்ளது. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரின் சொந்த ஊர். இதற்கு முன்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் சொந்த ஊர். இதற்கு முன்பு மேலதிக செயலாளரின் சொந்த ஊர். இதற்கு முன்பு ஒரு கல்விக் கல்லூரி தலைவரின் சொந்த ஊர். ஏராளமான உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக இருந்தவர்களின் சொந்த ஊர். இத்தனை துரோகிகளின் சொந்த ஊர்தான் இந்த நிந்தவூர். இது சாதாரணமான விசயமல்ல. எனவே, கோட்டக் கல்விப் பணிப்பாளரும் ஓய்வு பெற்று சென்றுவிடுவார். ஆனால், எஞ்சியுள்ள துரோகியாக நான் மட்டும் உள்ளேன். இதனால், நிந்தவூரின் கல்விப் பணியை கையில் எடுக்கவுள்ளேன். இதனால் பலர் பாதிக்கப்படலாம். அது பற்றி கவலை கொள்ள முடியாது. ஊரின் கல்வி முக்கியமாகும். கல்வி என்பது அல்லாஹ்வின் பணி. எங்கள் ஒவ்வொருவரையும் அதன் பிரதிநிதியாக அல்லாஹ் நியமித்துள்ளான். இந்தப் பணியை சரியாக செய்யாது விடும் கல்வி அதிகாரி, ஆசிரியர், அதிபர் ஆகியோர்கள் முதலில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக நடக்கின்றார் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

































    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், கல்வியையும் நிலை நிறுத்த புதிய உபாயங்களை தேட வேண்டியுள்ளது: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top