• Latest News

    September 30, 2016

    நிந்தவூர் அனல் மின்சார நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி

    எம்.சஹாப்தீன் –
    நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள உமியினால் இயங்கும் தனியார் அனல் மின்சார நிலையத்தினை மூடுமாறு வேண்டி இன்று (30.09.2016) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நிந்தவூரில் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்ட பேரணியில் பெருந் தொகையான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள்.

    நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள இந்த அனல் மின்சார நிலையம் உமியினால் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தொழிற்சாலையில் வெளியிடப்படும் புகையோடு உமிச்சாம்பலும் கலந்து வருவதனால் இப்பிரதேசத்தில் உள்ள பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த அனல் மின்சார நிலையத்தினால் வெளியாகும் பெருமளவான உமிச் சாம்பல் வீடுகளிலும், உடைகளிலும், தாவரங்களிலும் படிந்து பல சேதங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். அத்தோடு பொது மக்கள் சொறி, சிரங்கு, மூச்சுத் திணரல் போன்ற நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

    மேலும், கிணறுகளில் நீரின் அளவு நாளாந்தம் குறைந்து கொண்டிருப்பதனால் தண்ணீர் பிரச்சினைகளையும் எதிர் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்கள். இந்த மின் நிலையத்தின் இயக்கத்திற்கு நாளாந்தம் ஏழு கிணறுகள் மூலமாக பெருமளவு நீர் உறுஞ்சப்பட்டு வருவதனால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

    குறிப்பிட்ட மின்சார நிலையத்தினால் ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இதனை தடை செய்யுமாறு பொது அமைப்புக்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நாங்கள் இன்று (30.09.2016) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம். இதனை தடைசெய்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களின் கண்களை சாம்பல் கொண்டு நிரப்பாதே, பணமோ – பொருளோ கேட்கவில்லை. சாதாரண வாழ்க்கையை கேட்கின்றோம், பிரதி சுகாதார அமைச்சரே எம்மையும் எங்கள் உயிரையும் காப்பாற்றுங்கள், மின் உற்பத்தியாளரே எங்கள் வயிற்றில் அடிக்காதே, நல்லாட்சி அரசே மின நிலையத்தை உடனடியாக அகற்று, தனிப்பட்ட நபரின் தேவைக்காக நாங்கள் இறக்க வேண்டுமா? போன்ற சுலோங்களை ஏந்தியிருந்தார்கள்.

    இன்று நிந்தவூர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்றலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்டப் பேரணி நிந்தவூர் பிரதான வீதியின் ஊடாக பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது. ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள் நிந்தவூர் பிரதேச செயலளார் திருமதி ஜலீலிடம் மகஜர் ஒன்றினையும் சமர்ப்பித்தார்கள்.

    மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் திருமதி ஜலீல், குறிப்பிட்ட அனல் மின்சார நிலையத்தினால் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் பாதிப்புக்கள் பற்றி முழுமையான அறிக்கை ஒன்றினை வழங்குமாறு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் என்னை பணித்துள்ளார். அதற்கமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    இதே வேளை, நிந்தவூர் பிரதேச சபையிலும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மகஜர் ஒன்றினை வழங்கினார்கள்.











    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் அனல் மின்சார நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top