• Latest News

    September 23, 2016

    அஸ்ரப்புக்கான நன்றிக் கடன் என்னவோ?

    எஸ்.றிபான் -
    கடந்த 16ஆம் திகதி முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் 16வது நினைவு தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு தாமரை தடாகம் சர்வதேச மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது போன்று பிரமாண்டமான முறையில் அஸ்ரப்பின் நினைவு தினக் கூட்டம் இதற்கு முதல் நடைபெறவில்லை. அஸ்ரப் மரணித்ததன் பின்னர் ஒரு சில வருடங்கள் அவரின் நினைவு தின நாளில் பள்ளிவாசல்களில் விசேட துஆக்கள் நடைபெற்றன. பின்னர் அது மங்கிக் கொண்டு சென்றன. இதனால், அஸ்ரப்பின் அபிமானிகள் கவலை கொண்டார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட பெரிய அளவில் நினைவு நிகழ்வுகளை நடத்தவில்லை. ஆயினும், 16வது நினைவு தினத்தை மூக்கில் விரல் வைக்கும் வகையில் மிகவும் ஆடம்பரமாக, அதிக பணச் செலவில் கொண்டாடியுள்ளார்கள். அஸ்ரப்பின் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கால கட்டத்திலும், அவர் ஆரம்பித்த கட்சிக்குள் பல முரண்பாடுகளும், வெட்டுக்குத்துக்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்சி பிளவுபடுமா? ரவூப் ஹக்கீமின் தலைவர் பதவி பாதுகாக்கப்படுமா? ரவூப் ஹக்கீமோடு முரண்பாடு கொண்டுள்ளவர்கள் கட்சியிருந்து நீக்கப்படுவார்களா? அல்லது அவர்களினால் கட்சியில் நிலைத்திருக்க முடியுமா? என்ற பின்னணியில் இத்தகைய பெரு விழா நடைபெற்றுள்ளது. 

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் பல நெருக்கடிகளையும், வழக்குகளையும் சந்தித்துள்ளது. இவற்றிருந்து கட்சியை பாதுகாத்துக் கொள்வது என்பது மிகப் பெரிய கடின பணியாக இருந்தது. 2006ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் மரச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நீதிமன்றம் தடை போட்டது. அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்கு கூட செல்ல முடியாத நிலை இருந்தது. நீதிமன்றத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், செயலாளர் ஹஸன்அலிக்கும் ஏற்பட்டது. இவ்வாறு பல துன்பங்களை ஏற்படுத்தியவர்கள் இன்று கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் கட்சியை வழி நடத்தும் பொறுப்புக்களை கொண்டவர்களாகவும், ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கமாகவும் உள்ளார்கள். இதே வேளை, கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக ரவூப் ஹக்கீமோடு உழைத்தவர்கள் முரண்பாட்டாளர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் அரசியல். இதனால்தான் அரசியலை சாக்கடை என்று அழைக்கின்றார்கள்.

    இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஸ்ரப் ஒப்படைத்தனைப் போன்றில்லை. கட்சியில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அஸ்ரப்பின் கொள்கைளும், கோட்பாடுகளும் மாற்றப்பட்டுள்ளன. கட்சியின் யாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செய்யப்பட்டதென்று சொல்ல முடியாது. தலைவரின் தேவைக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. 

    கட்சியின் கொள்கை, கோட்பாடுகளில் மாற்றங்கள், கட்சியின் முக்கிய இரண்டு உறுப்பினர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமோடு முரண்பாடு, உயர்பீட உறுப்பினர்களில் பலர் கட்சியின் தலைமையின் நடவடிக்கைகளில் அதிருப்தி, உயர்பீட உறுப்பினர்களில் பலர் பதவிகளுக்காக தலைவருடன் உறவுக்காரர் போன்று வேசம் போட்டுள்ளமை - இவர்கள் கட்சியின் தகவல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஊடகவியலாளர்களையும் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், நேசர்கள் யார்? வேசதாரிகள் யார் என்று அடையாளங் காண முடியாது துர்ப்பாக்கியம், தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பற்றிய பிரச்சினைக்கு முடிவு காணாத அவலம், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்காக ரவூப் ஹக்கீமின் அனைத்து காரியங்களையும் நியாயப்படுத்தும் சந்தர்ப்பவாதிகள், கட்சிக்கு கிடைக்கும் அமைச்சர் பதவிகள் மூலமாக வரும் பதவிகளை பங்குபோட்டுக் கொள்ளும் உறவுக்காரர்கள், தரகர்கள் என்ற வேலிகளினால் ரவூப் ஹக்கீம் சூழப்பட்டுள்ளார்.

    இத்தகைய வேலிகளினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மத்தியில் தளம்பல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சிக்குள் காணப்பட்ட பிளவுகளினால் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தளம்பளடைந்து தங்களை தேசிய காங்கிரஸ் என்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும், ஐ.தே.க என்றும், சு.க என்றும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இப்போது கட்சியின் ஒரு பகுதி ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை கடந்த காலங்களைப் போன்று மாற்றுக் கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றிவிடலாம். இதனால், கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக பெரு விழாக்காளை நடத்த வேண்டியதொரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் பாலமுனையில் பாரிய பணச் செலவில் கட்சியின் மாநாட்டையும், கொழும்பில் அஸ்ரப்பின் 16வது நினைவு தினத்தையும் ரவூப் ஹக்கீம் நடத்தியுள்ளார். பெரிய அளவிலான விழாக்கள் கட்சியின் ஆதரவு தளத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தளம்பலை சரி செய்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த காலங்களில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமோடு முரண்பட்டவர்கள் கட்சிக்கு வெளியே சென்றார்கள். புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள். தற்போது ரவூப் ஹக்கீமோடு முரண்பாடு கொண்டவர்கள், கட்சியின் நடவடிக்கைகள் குறித்து நியாயமான கேள்விகளைக் கேட்கின்றவர்கள் கட்சிக்கு உள்ளே உள்ளார்கள். இவர்கள் யாரும் கட்சியை விட்டு செல்லும் எண்ணங் கொண்டவர்களாக தெரியவில்லை. இவர்களை மாற்றுக் கட்சியினர் தங்களது கட்சிக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றார். தமது பிரிவு கட்சியின் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். கட்சியில் உள்ளக ஜனநாயகத்தை சீரழித்து விடும் என்று எண்ணுகின்றார்கள். ஆதலால், இவர்கள் கட்சிக்குள் தொடர்ந்தும் போராட்டங்களை செய்யும் நிலையில் உள்ளார்கள். இதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய தலையிடியாகும்.

    மேலும், கட்சியின் செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் தங்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டுத்தான் முரண்பாடுகளை கட்சிக்குள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தங்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வேண்டாமென்று சொல்லி பல மாதங்கள் கழிந்து விட்டன. ஆயினும் தேசியப் பட்டியல் விவகாரம் தீர்க்கபடவில்லை. ஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் தேசிய பட்டியலில் வாய்ப்பு கேட்கின்றார்கள் என்றதும் துள்ளிக் குதித்து அறிக்கையிட்டவர்கள், தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு வழங்கிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்று ஒரு வருடத்தை கடந்துள்ள போதிலும் அது பற்றி கேட்பதில்லை. இதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக ஜனநாயகமாகும். 

    தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக சண்டையிடுகின்றவர்கள், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ள அமைச்சர் பதவிகளில் ஒரு பதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சத்தம் போடுகின்றவர்கள், வேறு தேவைகளுக்காக தமக்கு நெருக்கமாக கட்சியின் ஆதரவாளர்களை கொழும்புக்கு அனுப்பி வைக்கும் உயர்பீட உறுப்பினர்கள் தங்களுக்கு அரசியல் முகவரி தந்த, முஸ்லிம் சமூகத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை வெளிக்காட்டிய மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மரணத்தில் உள்ள முடிச்சுக்களை அவிழ்பதற்கு சண்டையிட்டவுமில்லை, சத்தமிட்ட போடவுமில்லை, கொழும்புக்கு ஆதரவாளர்களை அனுப்பி வைக்கவுமில்லை. இன்று வரைக்கும் அஸ்ரப்பின் மரணத்தின் சூத்திரதாரிகள் யாரென்று வெளியிடப்படவில்லை. அதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவுமில்லை. இதுதான் மர்ஹும் அஸ்ரப்பின் மீதுள்ள பற்றுதலாகும். அஸ்ரப்புக்கு நினைவு தினம் கொண்டாடுவது அவரின் மீதான பற்றுதலினாலல்ல. தங்கள் மீதான பலிகளை போக்கிக் கொள்ளவும், நாங்கள் அஸ்ரப்பை மறக்கவில்லை என்று கட்சியின் ஆதரவாளர்களுக்கு காட்டிக் கொள்ளவுமாகும். தலைவனின் கொள்கைகளைப் பின்பற்றாது நினைவு தினம் கொண்டாடுவதில் எந்தப் பயனுமில்லை. 

    இதே வேளை, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டுமென்ற கருத்தும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடையே உள்ளது. கட்சிக்கு புதிய தலைவர் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு மாற்றமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தெளிவான பதிலை அளிக்காதுள்ளார் என்று குற்றம் சாட்டுகின்றவர்கள் ரவூப் ஹக்கீம் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கின்றார்கள். மறு பக்கத்தில் ரவூப் ஹக்கீம் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும், இன்னும் சில உயர்பீட உறுப்பினர்கள் அவற்றில் ஒரு சில உண்மைகள் இருந்தாலும், மற்றவர்கள் யாரையும் தலைவராக வைக்க முடியாது என்கின்றார்கள். இவர்கள் தலைவர் மாற்றப்பட வேண்டும். ஆனால், இப்போதைக்கு கட்சிக்குள் யாரும் தகுதியில்லை எனத் தெரிவிக்கின்றார்கள். இன்னும் சில உயர்பீட உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் நல்ல தலைவர். அவர் ஹஸன்அலியையும், பசீர் சேகுதாவூத்தையும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதைச் செய்தால் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விடும் எனக் கூறுகின்றார்கள். இக்கருத்தை சொல்லிக் கொண்டவர்கள் யாரும் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களல்லர். இவர்கள் மாற்றுக் கட்சிகளின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். அங்கு இடமில்லை என்பதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் அடைகளமானவர்கள். 

    ரவூப் ஹக்கீமோடு பலத்த முரண்பாடுகளைக் கொண்டவர்களாகவும், அவருக்கு எதிராக பல அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டவர்களாக செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் உள்ளார்கள். இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்குரிய அனைத்து அதிகாரங்களையும் ரவூப் ஹக்கீம் தலைவர் என்ற அடிப்படையில் கொண்டிருக்கின்றார். ஆயினும், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை ரவூப் ஹக்கீம் எடுக்கவில்லை. பாலமுனையில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் மௌலவிகள் கலீல், இல்யாஸ் ஆகியேர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிய ரவூப் ஹக்கீம், அவர்களை விடவும் பெருந் தொல்லையை கொடுத்துக் கொண்டிருக்கும் இவர்களை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதன் மர்மம் என்னவென்று ஆராய வேண்டியுள்ளது.

    கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சியின் சொத்துக்கள் குறித்து பல கேள்விகளை கேட்டுள்ளார். அவற்றிக்கு சரியகான பதிலளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை, பசீர் சேகுதாவூத் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் குழப்பும் வகையில் பொய்களை பரப்பிக் கொண்டிருப்பதாகவும், கட்சியின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருப்பதாகவும், தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக சதி செய்து கொண்டிருப்பதாகவும் உயர்பீடத்தில் உள்ள ரவூப் ஹக்கீமுக்கு மிகவும் நெருக்கமாகவுள்ளவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.  ரவூப் ஹக்கீமும் கட்சியின் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டுள்ளது. பசீர் சேகுதாவூத் சொல்லுவதில் உண்மையில்லை. என்னை நம்புங்கள் என்று தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கட்சியின் ஆதரவாளர்களை குழப்பமடையச் செய்யவும், தலைவருக்கு எதிராக சதி செய்தும், கட்சியின் சொத்துக்களைப் பற்றி பொய்களைச் சொல்லியும் வரும் பசீர் சேகுதாவூத்தை ஏன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்க முடியாதுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் பசீர் சேகுதாவூத்தை கட்சியிலிருந்து நீக்க முடியாதென்றால் அவர் பொய்களை சொல்லவில்லை. உண்மைகளைக் கூறுகின்றார் எனவும் எண்ண வாய்ப்புண்டு. அவர் சொல்லுவது பொய், ஆயினும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சம் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அப்படியாயின் அச்சத்திற்கு காரணம் யாது?
    இதே வேளை, செயலாளர் ஹஸன்அலி கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். ரவூப் ஹக்கீமுக்கு பசீர் சேகுதாவூத்தை போன்று விசுவாசமாக செயற்பட்டவர். இவர் தனக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இவர் கட்சியின் நடவடிக்கைகள் பற்றியும், முடிவுகள் பற்றியும், அரசியல் தீர்வுகள் குறித்தும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவரின் கருத்துக்கள் ரவூப் ஹக்கீமுக்கு தலையிடியைக் கொடுத்துள்ளது. இவரைக் கட்சியிலிருந்து நீக்கும் துணிவு ரவூப் ஹக்கீமுக்கு வரவில்லை. 

    மர்ஹும் அஸ்ரப் கட்சியின் நடவடிக்கைகளுக்கும், தலைவருக்கு சவால்விடும் வகையிலும் செயற்பட்டவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கினார். அந்த துணிவு இன்றைய தலைவருக்கு வராமல் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். அக்காரணங்களை வெளியில் சொல்ல முடியாதிருக்கலாம். இதே வேளை, கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படவுமில்லை. கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல பிரச்சினைகளை எதிர் கொண்டார். அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழு அமைக்கவில்லை என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு குழுவினர் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை கட்சி நியமிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

    இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பல சிக்கல்களும், முரண்பாடுகளும் தோன்றியுள்ளன. இவற்றை தீர்க்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. முரண்பாட்டாளர்களை கட்சியிலிருந்து நீக்கவும் தலைவர் துணியவில்லை. எது பொய், எது உண்மை என்று கட்சியின் ஆதரவாளர்களுக்கு தெரியவுமில்லை. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண் செயற்பாடுகளினால் ஆதரவாளர்கள் மத்தியில் தளம்பல் ஏற்பட்டுள்ளது. கட்சிக்குள் மற்றுமொரு பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நினைக்கும் அளவிற்கு பிரச்சினைகள் உள்ளன. இத்தகைய சூழலில்தான் மிகுந்த பணச் செலவில் எந்த ஆண்டிலும் நடைபெறாத வகையில் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்சிக்கு பெரிய விழாக்கள் அவசியம். அவையும் கட்சியின் பெறுமதியை வெளிப்படுத்தும். ஆனால், பெரிய விழாக்கள் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு உதவும் என்பதற்காக நடத்தக் கூடாது. 

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் அஸ்ரப்பின் நினைவு தினத்தை கொண்டாடி விட்டதாக திருப்தி கொள்ளாது. அவரின் கொள்கைகளை வாழ வைக்கவும், கட்சிக்குள் காணப்படும் பிணக்குகளை தீர்த்து கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுவே மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்புக்கு செய்யும் மிகப் பெரிய நன்றிக் கடனாக இருக்கும்.
    விடிவெள்ளி - 23.09.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஸ்ரப்புக்கான நன்றிக் கடன் என்னவோ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top