எம்.வை.அமீர் -
அளுத்கம
மற்றும் பேருவளை மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான வன்முறைகள் பேசப்படாமலும்,
அதன் சூத்திரதாரிகள் கைது செய்யப்படாமலும்,முஸ்லிம்கள் வாழ்வில் எவ்வித நன்மைகள்
கிட்டாமலும் நல்லாட்சி
மீதான பாராளுமன்றம் குருவிக் கூடாய் கலைந்திருப்பது அரசியலில் முஸ்லிம்களுக்கு
இழைக்கப்படும் அநீதியையும், வெறுமையையும்,
முஸ்லிம் தலைமைகளின் பலவீனத்தையும் சுட்டி நிற்கிறது.
என்று இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க் அப்துல் காதர்
மசூர்மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்
அரசியல் பெரும் புள்ளிகளை விசாரணைக்கு அழைக்க முடியுமென்றால் ஏன் சக்திமிக்க பொலிஸாரினால்
அளுத்கம பேருவளை வன்முறைக்கு தூபமிட்ட இனவாத அடிவருடிகளை அழைத்து விசாரணை செய்ய
முடியவில்லை? அவர்களை உடனடியாக கைது செய்து
நீதிமன்றில் நிறுத்த முடியவில்லை. அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
கடந்த ஆட்சியில் பலம் பொருந்தியவராயிருந்த
பஷில் ராஜபக்ஷவை கைது செய்து சில மாதங்கள் சிறையில் அடைக்க முடியுமாக இருந்தால், ஆதாரங்களுடன் குற்றம் நிருபிக்கப்பட்ட ஞானசார தேரரை ஏன் இந்த
நல்லாட்சி அரசு வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டனர்?
நல்லாட்சி அமைவதற்கான பிரதான
பேசுபொருள் அளுத்கம மற்றும் பேருவளை கலவரமாகும். இந்த கலவரத்தின் போது கடும் மௌனம் சாதித்த
மஹிந்த அரசின் மீது வெறுப்பை காட்ட முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மை மக்கள் 99 வீதமான வாக்குகளை நல்லாட்சிக்கு அள்ளி வழங்கினர்.
மக்கள் வாக்குகளை நல்லாட்சிக்கு தாரை வார்த்தது மஹிந்த அரசு மீதான கசப்பையும் தாண்டி,
வன்முறைகளை ஏவி விட்ட காவியுடை தரித்த
இனவாதிகளுக்கு உரிய தண்டனைகளையும் பெற்றுக் கொடுக்கவும் தான்.
ஆனால், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நல்லாட்சியிலும் நீதி கிடைக்கவில்லை. இரு
முஸ்லிம்கள் பாவிகளின் கொடும் கரங்களால் ஷஹீதாக்கப்பட்டார்கள். வாழ வேண்டிய வயதில் ஒரு
வாலிபர் ஊனமாக்கப்பட்டார். பல கோடி சொத்துக்கள் இனவாத காடையர்களால்
தீக்கிரையாக்கப்பட்டும், சூறையாடப்பட்டும்,
வாகனங்களில் கொள்ளையடிக்கப்பட்டும்
ஏற்றிச் செல்லப்பட்டன.
மேலும், நடைபெற்ற அந்த அக்கிரமத்தில் இன்னும் பல சொல்ல முடியாத சோகங்கள்
மனதுக்குள் புதைந்து கிடப்பதுடன், எமது
முஸ்லிம் பெண்கள்,வயோதிபர்கள், சிறுவர்கள் எனப் பலரும் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு
உள்ளாகினர். அதன் வடுக்கள் – எச்ச
சொச்சங்கள் அளுத்கம பேருவளை மக்களின் நெஞ்சை இன்னும் நெருஞ்சி முட்களாய் குத்திக் கொண்டிருக்கின்றன.
அநீதி இழைக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி
கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், அந்த ஆட்சி மாற்றம் ஆட்சியை மாற்றிய முஸ்லிம்களுக்கு
குறிப்பிடத்தக்க எந்தவித விமோசனத்தையும் கொண்டு வரவில்லை.
மாறாக, பொது பல சேனா எனும் கடும் போக்கு அமைப்பு வாலைச் சுருட்டிக் கொண்டு
சாக்கடைக்குள் பதுங்கும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அதன் திருகு தாளங்களை, இனத்துவ வெறுப்புகளை, குரோதங்களை அப்பட்டமாக பொது வெளியில் யாரின் தடங்களுமின்றி வெளியிட்டு வருவதைக் காண
முடிகிறது.
.
தற்போதைய இலங்கையை பொறுத்தவரை
ஆட்சியாளர்கள் தமது இனத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் அல்லது சகோதர இனம்
புண்பட்டாலும் பரவாயில்லை- தன் இனம் புண்படாத வகையில் அரசியலில் ’மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும்’ காட்டும் தோரணையில் செயற்படுவதை சமகாலத்தில் துல்லியமாக காண
முடிகிறது.
இன்று நாட்டில் மூடை மூடையாய் இனவாதம் எனும் நச்சுப் பயிரின்
விதைகள் நாடு-நகரம், பட்டி தொட்டியெங்கும் கணிசமாய்
தூவப்பட்டிருக்கிறது. தூவப்பட்ட விதைகள் விருட்சமாகும் காலம் வெகு தூரமில்லையென்றாலும்,
எமது நற்பண்புகளாலும், சமூக நல்லிணக்கத்தாலும், பிரார்த்த்னைகளாலும் மாத்திரமே நச்சு விதைகளின் வீரியத்தை எம்மால்
வெற்றி கொள்ள முடியும்.
அதை விடுத்து எமக்குள்ளான உள்ளக முரண்பாடுகளாலும்,போட்டி பொறாமைகளாலும், அடுத்த சகோதரன் மீது வசை பாடுவதாலும் எம் மீது ஏவப்படுகிற அம்பை நாம்
திருப்ப முடியாது என்பதை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அரசியல்வாதிகள், புத்திஜீவிகள்,இளைஞர்கள் என அனைவரும் உணர வேண்டிய தருணம் இதுவாகும்.

0 comments:
Post a Comment