• Latest News

    October 05, 2016

    ஒலுவில் துறைமுகத்திற்கு எதிராக நிந்தவூரில் ஆர்ப்பாட்டம்.

    சஹாப்தீன் -
    நேற்று நிந்தவூர் பிரதேசத்து கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை மேற்கொண்டார்கள். ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன் பிடித் துறைமுகத்தினால் நிந்தவூர் பிரதேசத்திலும்; பாரிய கடலரிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால், கடற்தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் வருமான ரீதியாக பெரும்பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கோரியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.
    மட்டுப்படுத்தப்பட்ட நிந்தவூர் பிரதேச மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவிலான கடற்தொழில் மீனவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.
    நிந்தவூர் கடற்கரை பிரதேசத்திலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி சுமார் 03 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நிந்தவூர் பிரதேச செயலகம் வரை இடம் பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபா உம்மா அப்துல் ஜலீலிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனும் கலந்து கொண்டார்.
    ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் எதிர்த் தாக்கமாக நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால், மீனவர்களின் தோணிகள், படகுகள் போன்றவற்றினை கரை ஒதுக்கி வைப்பதற்கும், வலை போன்றவற்றை வெயிலில் காய வைப்பதற்கும் போதிய இடவசதியில்லாத நிலை நிந்தவூர் கடற் கரையில் ஏற்பட்டுள்ளது.
    கடலரிப்பு காரணமாக நிந்தவூரில் கடலானது சுமார் 100 மீற்றர் வரை முன்னோக்கி வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் 'அரசே! எமது நிலத்தையும், கடல் வளத்தையும் பாதுகாத்துத் தா', அரச அதிகாரிகளே, நாமும் வாழ வேண்டும்', 'ஒலுவில் துறைமுகத்தை அகற்று', '5000 மீனவர்களின் பொருளாதாரத்தை பாதுகாத்துத் தா', 'அபிவிருத்தி என்ற பெயரில் மீனவர்களை புதைக்காதே', 'கடலில் உள்ள துறைமுக அலை அணையை அகற்று', 'கப்பல்துறைமுகம் என்று வயிற்றில் அடிக்காதே' ஆகிய சுலோகங்களையும் ஏந்தியிருந்தார்கள். சுலோகங்களில் உள்ள வாசகங்களை உச்சரித்துக் கொண்டவர்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்றமை குறிப்பிடத்தக்கது.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் கலந்து கொண்டார்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்டுள்ள கடலரிப்பு மீனவர்களை மட்டும் பாதிக்கவில்லை. முழு நிந்தவூரையும் பாதித்துள்ளது. மேலும், காரைதீவு, சாய்ந்தமருது போன்ற ஊர்களையும் பாதிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. திட்டமிடப்படாத வகையில் ஒலுவிலில் துறைமுகம் அமைத்தமையால்தான் ஒலுவில் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது. ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் திட்டமிடாத வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
    இதனால், தற்போது நிந்தவூர் பிரதேசம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே, அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் கட்சிகள், அரசாங்க அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுகத்தினால் அரசாங்கத்திற்கு வருமானமில்லை. பொது மக்களுக்கும் நன்மையில்லை. இத்தகைய துறைமுகம் அவசியமில்லை. ஆதலால், இதனை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார்கள்.
    மேற்படி பிரச்சினைகளைக் கொண்டதொரு மகஜர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதன் பிரதிகள் பிரதம மந்திரி, கடற்தொழில் அமைச்சர், நகர திட்டமிடல் அமைச்சர், கைத்தொழில் வாணிப அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர், மாகாண கடற்தொழில் அமைச்சர், அம்பாரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர், மனித உரிமை ஆணைக் குழு, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கரையோரம் பேணும் திணைக்களம், மனித அபிவிருத்தி தாபனம் ஆகியவற்றிககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒலுவில் துறைமுகத்திற்கு எதிராக நிந்தவூரில் ஆர்ப்பாட்டம். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top