• Latest News

    October 06, 2016

    மக்களின்; எதிர்ப்பை சம்பாதித்துள்ள் மின் உற்பத்தி நிலையம்

    சஹாப்தீன் -
    அரசாங்கம் நாட்டின் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்வதற்காக தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தைப் பெற்று நாட்டு மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் 'BIO MASS' தொழில் நுட்பத்தின் அடிப்படையில் மின் உற்பத்தி நிலையமொன்று தனியார் நிறுவனமொன்றினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் உமியினை எரித்து நீராவி மூலமாக விசை ஆழிகளை (Turbines) இயக்கி மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.

    இந்த மின்உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ஏழு குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது நான்கு கிணறுகளிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 03 இலட்சத்து 60ஆயிரம் (360,000) லீட்டர் தண்ணீர் உறுஞ்சி எடுக்கப்படுகின்றது. இப்பாரிய அளவு நீரினை சூடாக்கி நீராவியாக மாற்றுவதற்கு நாளாந்தம் 90 ஆயிரம் (90,000) கிலோ உமி எரிக்கப்படுகின்றது. இந்நடைமுறையின் மூலமாக நாளாந்தம் சுமார் 2.5 மெகா வோட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. 

    பாரிய முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மின் நிலையம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றது. அத்தோடு, நாட்டின் மின்சார தேவையில் ஒரு சிறு அளவை பூர்த்தி செய்தும் வருகின்றது. 

    ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் பொது மக்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே வேளை, எவ்வளவுதான் பொது மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஒரு சிறு அளவிற்கேனும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதனை தவிர்க்க முடியாது. ஆயினும், பொது மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்துமாயின் அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த  வேண்டியது அவசியமாகும்.

    பொதுவாக ஒரு தொழிற்சாலையிலிருந்து அகற்றப்படும் கழிவுகளினால்தான் பொது மக்களுக்கு பாரிய சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த சீர்கேடுகளை ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டவுடன் உணரப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர்தான் இந்த பாதிப்பை மக்களினால் உணர முடியும். ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்கு முன்னர் அதன் நன்மை. தீமைகளை பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கைகள் பிழையாகவும் அமைவதுண்டு. 

    அந்த வகையில் தற்போது நிந்தவூரில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியிடப்படும் கழிவுகளினால் நிந்தவூர் 09, 10, 21, 22, 23ஆம் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவிக்கின்றார்கள். அதாவது மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியிடப்படும் புகையோடு சாம்பலும் கலந்து வெளியேறுவதே இப்பிரிவு மக்களின் அசௌகரியத்திற்கு காரணமாகும். அதிலும், அட்டப்பள்ளம் எனும் பிரதேசத்தில் வாழும் மக்கள்தான் அதிக அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.

    பாடசாலைகளில் உள்ள தளபாடங்களிலும், மாணவர்களின் சீர் உடைகளிலும் சாம்பல் படிவதனால் கல்வி நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியாதிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். சாம்பல் உடலில் படிகின்ற போது கடி ஏற்படுவதாகவும், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு உட்பட்டுக் கொண்டிருப்பதாகவும், கண் நோய்களுக்குள்ளாகிக் கொண்டிருப்பதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

    ஏற்கனவே, இப்பிரதேசத்தில் அதிக அளவில் ஆரிசி ஆலைகளும், செங்கல் உற்பத்தி நிலையங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலமாகவும் இப்பிரதேச மக்கள் சுகாதார சீர்கேடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியேற்றப்படும் கழிவுகள் ஆரிசி ஆலை, செங்கல் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளினால் ஏற்படும் தீங்குகளை விடவும் அதிகமாக இருப்பதனாலும், மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பாதிப்பு ஏற்படுமாயின் காலம் செல்லும் போது இன்னும் பாதிப்புக்களின் அளவு அதிகரிக்கலாமென்ற பயம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மின் உற்பத்தி நிலையத்தினை தடை செய்யுமாறு கோரிக்கைகளை முன் வைப்பதும் தவிர்க்க முடியாததாகும்.

    நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையம் நிந்தவூருக்கு பெருமையை சேர்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இது அமைந்துள்ள இடம் பொருத்தமற்றது. பொது மக்களின் குடியிருப்பு, வயற்காணிகள், தென்னந் தோட்டங்கள், சிறு பயிர்ச் செய்கை நிலங்கள் ஆகியவை சூழப் பெற்றுள்ளதொரு இடத்தில் அமைந்துள்ளமையால்தான் எதிர் மறை தாக்கங்களை விரைவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.
    மேலும், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அகற்றுவதற்கு அதிநவீன முறைகள் பின்பற்றப்படவில்லை. கழிவுகள் பொது மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில் அகற்றப்படுமாயின் பொது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.

    இதே வேளை, மின் உற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களில் 95 வீதமானவர்கள் ஏழை மக்களாவார்கள். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தீங்குகளை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை இம்மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் எடுக்கவில்லை. இம்மக்கள் இவர்களுக்கு முறைப்பாடுகளை செய்துள்ள போதிலும், அவர்களின் சொந்த இடங்களுக்கு சென்று துயரங்களை கேட்டறிந்து கொள்ளவுமில்லை. மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிந்தவூரைச் சேர்ந்த பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். இது விடயத்தில் பிரதி அமைச்சர் தமது கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

    'BIO MASS' தொழில் நுட்பத்தின் மூலமாக உலகில் பல நாடுகளில் மின் உற்பத்தி நடைபெற்றுக் கொணடிருப்பதனை இணையத்தளங்கள், முகநூல்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. அதன் படி சுமார் 40 நாடுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இம்முறையின் மூலமாக மின் உற்பத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் பொருத்தமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளதுடன், அதிநவீன முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

    சூழலுக்கு மிகக் குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய BIO MASS தொழில் நுட்ப முறையில் கூட சூழலின் இயற்கைத் தன்மைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. 

    உலகில் அதிகளவு உமியைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்யும் நாடுகளில் வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நாடுகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து சூழலுக்கும், பொது மக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்தகவல்களின் பிரகாரம்
    •    நேரடியாக உமியை பற்றவைத்து மின்உற்பத்தி செய்யும் நிலையங்களினால் வெளியிடப்படும் புகை அல்லது வாயுக்களில் நூற்றுக்கு மேற்பட்ட இரசாயனங்கள் கலந்துள்ளன. அவற்றில் சில அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பது ஏஜென்சி (USEPA) மற்றும் சர்வதேச கேன்சர் தடுப்பு ஏஜென்சியால்
    (IARC) தடுக்கப்பட்ட நச்சு வாயுக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

    •    வியட்நாமில் உள்ள ஒரு நடுத்தர BIO MASS மின் நிலையத்தை அண்டிய நூறு குடும்பங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 55வீதமான மக்கள் தமது வீடுகளில் படரும் சாம்பல் தூசுகள் மூலமாக சுவாச நோய்களால் அவதியுறுவதாக தெரிவித்துள்ளார்கள்.  43 வீதமான மக்கள் இது போன்ற மின் நிலையங்களால் தமது பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

    •    மின் நிலையங்களுக்கு மிக அருகில் வசிக்கும் மக்களில் 32 வீதமான மக்களுக்கு எரிச்சல் மற்றும் சிரங்கு போன்ற நோய்களும்,  29 வீதமான  மக்களுக்கு கண் எரிவுவும், 28.6 வீதமான மக்களுக்கு இருமல் அடிக்கடி ஏற்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    •    மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய அதிலும் 0.5 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கு மேலே சொன்ன பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும், தூர இடங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் குறைந்த அளவில் சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    •    மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியாகும் புகை மூலம் ஏற்கனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு ஆபத்தும், ஆஸ்துமா வர இருப்பவர்களுக்கு விரைவில் ஆஸ்துமா ஏற்படவும் சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    •    பூரண அல்லது சரியான ஒழுங்குபடுத்தல்கள் இல்லாத BIO MASS மின் நிலையங்களில் மூலம் சூழல் மற்றும் சுகாதார பாதிப்புக்கள் ஏட்படாது என்று கூற முடியாது . அங்கு குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் அந்நிலையத்தை அண்டி வசிக்கும் மக்களுக்கு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள உமி மூலமாக இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு பெறப்பட்டுள்ள மேற்படி தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான், நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தினையும் பார்க்க வேண்டியுள்ளது.

    நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்திற்காக பல கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டிற்கு நன்மைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தொழில் வாய்ப்புக்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் பெரும் வருமானத்தைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த நன்மைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டுமாயின் பாதிக்கப்படும் பொது மக்கள் எதிர்ப்புக்களை காட்டாதிருக்க வேண்டும். எந்தவொரு தனி நபரும் இந்நிலையில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

    இதே வேளை, இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போது பொது மக்களுக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுமென்று நான் உட்பட ஒரு சிலர் தமது முக நூல்கள் மூலமாக எடுத்துச் சொன்ன போது இதனை யாரும் எற்றுக் கொள்ளவில்லை. இத்தகையவர்களை வேறு கோணத்திலேயே நோக்கினார்கள். நிந்தவூரில் உள்ள புத்திஜீவிகள் வரிசையில் உள்ள பெரும்பான்மையான விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், பொறியிலாளர்கள் போன்றவர்கள் இதற்கு ஆதரவாகவே பேசிக் கொண்டார்கள். இதனை அமைப்பதற்கு அரசியல்வாதிகள் தூண்டு கோலாகவும், பாதுகாப்பாகவும் இருந்தார்கள்.

    தற்போது மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இதனை உடனடியாக அகற்ற முடியாத சூழல் உள்ளது. பொது மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத மாற்று வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டும். அவ்வாறான வழிகள் இருக்குமாயின் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் காட்டப்படும் காலதாமதம் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எண்ணமாகும்.
    விடிவெள்ளி - 04.10.2016


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மக்களின்; எதிர்ப்பை சம்பாதித்துள்ள் மின் உற்பத்தி நிலையம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top