• Latest News

    November 16, 2016

    நல்லாட்சி அரசு முஸ்லிம்களை செழிப்பாக போசிப்பார்கள் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

    ( கல்முனை நிருபர் )
    நல்லாட்சி அரசு மிளிர்வதற்கு முஸ்லிம் மக்கள் பங்களிப்புச் செய்தார்கள் என்பதற்காக நல்லாட்சி அரசு முஸ்லிம்களை செழிப்பாக போசிப்பார்கள் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நல்லாட்சி அரசில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நலன்சார்ந்த விடயங்களையும் பாதுகாக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால்தான் முடியும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
     
     அமைச்சரவையுடன் தொடர்புடைய குழுக்களில் தலைவர் இருந்து கொண்டு இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக பல்வேறு விதமாக போராடுவதனால் தான் நல்லாட்சியிலும் முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
     
    கல்முனைத் தொகுதியில் மண்ணெல்லாம் மாண்புறும் அபிவிருத்திகள் நிகழ்வில் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை அமைச்சர் ஹக்கீம் திங்கட்கிழமை (14) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பௌசி ஞாபகார்த்த கடற்கரை மைதானத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
      
    இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ஜவாத், ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
      பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
      
    கடந்த பொதுத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்ரமசிங்கவை கல்முனை சந்தாங்கேணி மைதானத்திற்கு அழைத்துவந்து இரண்டு வாக்குறுதிகளை கல்முனைத் தொகுதி மக்களின் நலனிற்காக பெற்றெடுத்தோம். மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் கனவாக இருந்த கல்முனை புதிய நகர திட்டத்தை நனவாக்குவதற்கான வாக்குறுதியையும் சாய்ந்தமருது மக்களின் அபிலாஷையாக இருந்த உள்ளுராட்சி சபையினை வழங்குவதற்கான வாக்குறுதியையும் அவர் வழங்கினார். அவ்வாக்குறுதிகளை புதிய அரசை அமைத்த பின்னர் நிறைவேற்றித் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
      
    கொடுத்தவாக்கை நிறைவேற்றுகின்ற அரசியல்வாதி என்ற வகையில் பொதுத்தேர்தலின் பின்னரான அமைச்சரவை உருவாக்கத்தின்போது கல்முனை புதிய நகர திட்டத்தை அமைப்பதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நகர திட்டமிடல் அமைச்சினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. அத்தோடு சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை உருவாக்கி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை பணித்திருந்தார்.
     
    சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோ அல்லது வேறுயாருமோ கேட்கவில்லை றிசாட் பதியுதீனும் ஜெமீலும்தான் இதனைக் கேட்டார்கள் என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதுபோன்று படுமோசமான பொய்யை இந்த மண்ணில் அரங்கேற்றி இருந்தார்கள். இந்த நாட்டினை வழிநடத்தும் தலைவரில் ஒருவரான பிரதமரே சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றத்தை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கும் நிலையில் ஒரு அமைச்சர் இதற்கான கோரிக்கையினை முன்வைக்க வேண்டிய தேவைதான் என்ன என்பதை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
      
    சாய்ந்தமருதில் ஒரு கடையினைத் திறந்துவிட்டு சாய்ந்தமருதுக்கு பெரும் அபிவிருத்தியினை றிசாட் பதியுதீன் கொண்டு வந்துவிட்டார் இதனால் இப்பிரதேசம் செல்வச் செழிப்புடன் வளரப்போகின்றது என்ற பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். அவர்களால் இந்த அரசில் செய்யக்கூடிய ஆக உச்சகட்ட வேலை இவ்வாறான கடைகளைத் திறப்பது மாத்திரமே. இதன்மூலம் பயன்பெறுவது மக்கள் அல்ல அவர்களே, ஏனெனில் இதில் இடம்பெறுகின்ற ஊழல்களுக்கு அளவே இல்லை. வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் நடவடிக்கையினால் முஸ்லிம் சமூகம் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.
      
    இவ்வாறானவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தை தலைமை தாங்குவதற்கு தகுதியோ அருகதையோ இல்லாதவர்கள் இச்சமூகத்தை வழிநடத்தப்போகின்றோம் என்று கூறுகின்றனர். இது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். மயில் கட்சியினர் தனிநபரின் குடும்ப நலன் சார்ந்த பிழைப்பு அரசியலை நடத்துகின்னர். அதற்கு மாற்றாக ஒரு கொள்கையுடன் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் சகல அரசியல் உரிமைகளையும் பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக மறைந்த தலைவர் அஷ்ரஃப்பினால் உருவாக்கப்பட்ட பேரியக்கம் தற்போது தலைவர் றவூப் ஹக்கீமின் தலைமையில் சிறப்புடன் இயங்குகின்றது என்பதை அனைவரும் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.
      
    அமைச்சர் சம்பிக்க ரணவக்க மறைந்த தலைவர் அஷ்ரஃப் தொடக்கம் முஸ்லிம் சமூகத்தின் நலனிற்காக செய்யப்படுகின்றவர்களை முஸ்லிம் சமூக அடிப்படைவாதிகள் என்றும் ஜிஹாத் என்றும் கூறியதோடு முஸ்லிம் மத்ரஸாக்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று கூறி தெற்கில் உள்ள சிங்கள பெரும்பான்மை இளைஞர்களை மூளைச் சலவை செய்து அன்று தீவிர வாதத்தை வளரச் செய்தார்.
     
    அவரைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற அரசியல் கத்துக்குட்டியாக இருக்கின்ற அமைச்சர் தயாகமகே இன்று இனவாதச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். இவ்வாறான மிகப் பெரிய இனவாதிகள் இந்த நல்லாட்சி அமைச்சரவையிலும் இருக்கின்றார்கள். இவ்வாறு பல இனவாதிகள் இருக்கின்ற அமைச்சரைவையில் இந்த சமூகத்தை, இந்த சமூகத்திற்கு வரவிருக்கின்ற ஆபத்துக்களை மிக நேர்த்தியாக, சாணக்கியமாக, இராஜதந்திரமாக பாதுகாக்கின்ற பொறுப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செய்துவருகின்றது. அபிவிருத்திப் பணிகளும் பதவிகளும் ஒருபுறமிருக்க சமூகத்தின் உரிமை, பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் முன்னுருமை கொடுக்கின்ற ஒரே ஒரு இயக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகின்றது.
     
    இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல் மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையின் பின்னணியில் தயாகமகே ஆடுகின்ற ஆட்டத்தை அவர் ஒரு அமைச்சர், இந்த அரசின் அங்கம் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தலைவர் றவூப் ஹக்கீம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து மிகப் பெரும் எச்சரிக்கையினை கொடுத்திருக்கின்றார். உங்களது கட்சியை சேர்ந்த தயாகமகே தாண்டவமாடுவதையும், அவரின் இனநல்லுறவை சீர்குலைக்கின்ற செயல்களையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நேற்றிரவும் (13) கூட ஹம்பாந்தோட்டையில் வைத்து பிரதமரிடம் பேசியிருக்கின்றார்.
     
    தயாகமகே அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர் என்ற வகையில் எமது பிரதேசத்துக்கு வருகின்ற பல்வேறுவிதமான நன்மைகளை தடுப்பதற்கு பல்வேறு கோணங்களில் செயற்பட்டபோதிலும் கூட அவற்றையெல்லாம் முறியடித்து எமது பிரதேச நலன்களை பேணிப்பாதுகாப்பதோடு அபிவிருத்திகளையும் செய்துவருகின்றோம்.
     
    அண்மையில் கல்முனை பிரதேசத்தில் இருந்த தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நெய்ட்டா) மாவட்ட காரியாலயத்தை இடமாற்றுவதற்கு முற்பட்;டார். இதற்கான அமைச்சருக்கு தெரியாமல் இந்நிறுவனத்தின் பணிப்பாளரை மூளைச்சலவை செய்து இவ்விடமாற்றத்தை மேற்கொள்ள முனைந்தனர். அச்சந்தர்ப்பத்தில் லண்டனிலிருந்து தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களை தொடர்பு கொண்டு எவ்வித காரணமும் இல்லாமல் இக்காரியாலயத்தை அம்பாறை நகருக்கு இடம் மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியதனால் அவ்விடமாற்றம் தடுக்கப்பட்டது. அத்தோடு இந்தக் காரியாலயம் எக்காரணம் கொண்டும் இடமாற்றம் செய்யப்படாது என்ற உறுதிமொழியினை குறித்த அமைச்சரிடமிருந்து பாராளுமன்றத்தில் வைத்து பெற்றுக்கொண்டேன். இவ்வாறு சகல விடயங்களுக்கும் போராட வேண்டிய நிலை உள்ளது.

      அதேபோன்ற நிலையில்தான் தமிழ் மக்களுக்கும் உள்ளனர். அவர்களும் இந்த நல்லாட்சி உருவாகுவதற்கு ஒத்துழைப்பு நல்கியவர்கள். இருந்தபோதிலும் வடக்கில் முன்னாள் போராளிகள் மற்றும் விதவைகளின் எதிர்காலம் தொடர்பாக அரசு எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழ் சமூகம் என்பதற்காக அவர்களுக்கு என்ன நடந்தாலும் எமக்குக் கவலை இல்லை என்று இருந்துவிட முடியாது.

    புதிய ஒரு அத்தியாயத்துக்குள் தமிழ், முஸ்லிம் சமூகம் செல்ல வேண்டிய தருணம் இதுவாகும். தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்காக முஸ்லிம் காங்கிரசும் குரல் கொடுக்க வேண்டும். அதேபோன்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இரா.சம்பந்தனும் வெறுமனே தமிழ் சமூகத்திற்காக மாத்திரம் குரல் கொடுக்காது வடகிழக்கில் ஒன்றாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்காகவும் குரல் கொடுக்க வேண்டும். இதைத்தான் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது.
     
    முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக உருப்படியாக எதனையும் கூறாமல் வடக்கு, கிழக்கு இணைய வேண்டும், சமஷ்டி ஆட்சி வேண்டும், ஒரு மாநில சபை வேண்டும் என்று வாதிடுகின்ற நிலையினை சம்பந்தன் ஐயா நிறுத்த வேண்டும்.
     
    தெற்கில் உள்ள அரசியல் தலைமைகளை நம்புவதன் மூலம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெறமுடியாது என்பதை தமிழ் தலைமைகள் தற்போது உணர்ந்திருப்பார்கள். தமிழ் மக்களின் உரிமையினைப் பெறவேண்டுமாக இருந்தால் வடக்கு, கிழக்கில் சகோதர சமூகமாக இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் ஏக பிரதிநிதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து உருப்படியான, உயிரோட்டமான, ஆக்கபூர்வமான சரியான தீர்வுத்திட்டத்தை உருவாக்கின்றபோதுதான் நிலையான விமோசனம் இரு சமூகங்களுக்கும் கிடைக்கும் என்ற யதார்த்தத்தை சம்பந்தன் ஐயா உணர வேண்டும்.
     
    இதற்கு முன்னிருந்த தமிழ் தலைமைகளான சிவ சிதம்பரம் ஐயா, நீலன் திருச்செல்வன் போன்றவர்கள் இதை உணர்ந்து செயற்பட்டார்கள். இவர்களுடன் பெருந்தலைவர் அஷ்ரஃப் இணைந்து செயற்பட்டார். அதன் பயனாய் தலைவர் அன்று பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு துறைமுக அதிகார சபையில் தொழில்வாய்ப்புகளை வழங்கியும் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தும் அன்று தமிழ் முஸ்லிம் உறவுக்காக அஷ்ரஃப் பாடுபட்டதை மறக்க முடியாது. இவ்வாறு யதார்த்தபூர்வமான அரசியலை செய்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கிறது.
     
    அந்த வகையில் தமிழ் மக்கள் வாழும் சேனைக்குடியிருப்பில் சனசமூக சிகிச்சை மையம் அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை றவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்துள்ளார். கல்முனைத் தொகுதியில் உள்ள சகல பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய உள்ளோம். மறைந்த தலைவர் கல்முனை அபிவிருத்தி தொடர்பாக கண்ட கனவை நனவாக்கும் வகையில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இந்த நாட்டில் பெரும் அபிவிருத்திகள் நடைபெறுகின்ற தொகுதியாக கல்முனைத் தொகுதி மாறும் எனவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நல்லாட்சி அரசு முஸ்லிம்களை செழிப்பாக போசிப்பார்கள் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் - பிரதி அமைச்சர் ஹரீஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top