• Latest News

    November 04, 2016

    புத்தர் சிலை தொடர்பான கூட்டத்தை பகிஸ்கரித்த தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள்

    புதிதாக முளைத்த புத்தர் சிலை தொடர்பாக அம்பாறை கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று(04) நடைபெற இருந்த சந்திப்பினை தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் பகிஸ்கரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தில் உள்ள மாயக்கல்லு மலையில் அண்மையில் பலவந்தமாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது.
    குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு மாவட்ட அரச அதிபரினால் உருவாக்கப்பட்ட குழுவிற்கான சந்திப்பொன்று இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், பௌத்த மதங்களை பிரதிபலிக்கும் மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்பினர் பலரும் கலந்து இன்று ஒரு முடிவெடுக்கவிருந்த சந்தர்ப்பத்திலே இந்தச்சந்திப்பினை தமிழ், முஸ்லிம்பிரதிநிதிகள் பகிஸ்கரித்திருப்பதாக கூறப்படுகின்றது.
    சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் தெரிவிக்கையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த புத்தர் சிலையை அகற்றுவது தொடர்பாக எந்த முடிவும் இல்லை என்பதுடன் அந்த மலையில் பௌத்த துறவிகள் இருவர் தங்குவதற்குரிய இடத்திற்கான கட்டடத்தை அமைப்பதற்குரிய வேலைப்பாடுகளே அதிகம் இருப்பதாகவும் அதற்கான ஒரு சந்திப்பாகவும் இது இருக்கலாம் என்றே தாங்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
    இன்று புதிதாக முளைத்த புத்தர் சிலை அமைந்துள்ள மாயக்கல்லுமலைப் பகுதியினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வந்து பார்வையிட்டுச்சென்றதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
    இறக்காமம் மாயக்கல்லு மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக நேற்றைக்கு முன்தினமும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மூன்று மதங்களையும் சேர்ந்த மதப்பெரியார்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை ஒன்று சேர்த்து ஒரு சந்த்திப்பொன்று நடைபெற்றது.
    அந்த சந்திப்பில் புதிதாக முளைத்த புத்தர் சிலை தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படாத நிலையிலேயே அரசாங்க அதிபர் தலைமையில் 15 பேர் கொண்ட மூன்று மதங்களையும் உள்ளடக்கிய ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு இன்று மீண்டும் ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புத்தர் சிலை தொடர்பான கூட்டத்தை பகிஸ்கரித்த தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top