• Latest News

    November 09, 2016

    பணத்துக்கும், பகட்டுக்கும், பதவிக்கும், நாங்கள் அடிமைப்பட்டு இருக்கும்வரைக்கும் தயாகமகே போன்ற அரசியல்வாதிகளுக்கு வாசிதான்.

    கடந்த திங்கள் 07.11.2016 ஆம் திகதி அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். 

    இந்த விவகாரத்தினை நிகழ்ச்சி நிரழலில் சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் அமைச்சர் தயாகமகேவின் தடையையும் தாண்டி மன்சூரின் கடும் அழுத்தம் காரணமாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டது. இறுதியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மன்சூரை சிக்கலில் மாட்டிவிட முன்னாள் மாகான அமைச்சர் உதுமான் கடும் முயற்சி செய்ததாக அங்கு நேரில் அவதானித்தவர்கள் கூறினார்கள்.   

    மன்சூரின் கேள்விக்கு,  இலங்கை ஓர் பௌத்த நாடு என்றும், பௌத்த நாட்டில் புத்தசிலை வைக்க யாருடைய அனுமதியும் பெறதேவயில்லை என்றும், பொத்துவில் தொடக்கம் கல்முனை வரைக்கும் சுமார் பன்னிரண்டாயிரம் ஏக்கர் நிலம் தீகவாப்பிக்குரிய புனிதப்பிரதேசமென்றும் அமைச்சர் தயாகமகே அவர்கள் பதில் வழங்கியதோடு சிலையை அகற்றினால் பதவி துறேப்பேன் என்றும் அதிகாரத்தொனியில் முஸ்லிம் உறுப்பினர்களை அச்சுருத்தியிருந்தார்.  

    தாயாகமகேவின் துவேச கருத்துக்கு மன்சூர் பதிலளிப்பதென்றால் வரலாற்று ரீதியாக பல உண்மைகளை கூறியிருக்க வேண்டும். அப்படி கூறியிருந்தால் அது துவேசக்கருத்தாகவே சிங்களவர்களின் பார்வையில் பதிந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையாக சிங்களவர்கள் இருந்த அந்த இடத்தில் மன்சூர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இது மன்சூரின் தனிப்பட்ட பிரச்சினை போன்றதொரு சூழ்நிலை அங்கு இருந்தது. அவருக்கு சார்பாக முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் பேசாது வாய்மூடி மௌனியாக இருந்ததனால் சில கருத்துக்களை தவிர்த்து சூழ்நிலைக்கு ஏற்ப பொறுமை காத்துள்ளார்.  

    முஸ்லிம் மக்களின் வாக்குகளின் மூலம் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்ற தயாகமகேயின் இனவாதக் கருத்துக்களையிட்டு நாம் எந்தவிதத்திலும் ஆச்சரியப்படதேவையில்லை. ஏனெனில் கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்களுக்குரிய கல்முனை அஷ்ரப் ஜாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருந்த பல கோடிரூபாய் பணத்தினை தடுத்தது நான்தான் என்ற உண்மையை பகிரங்கமாக திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழர்கள் மத்தியில் கூறியிருந்தார். 

    முஸ்லிம்களுக்குரிய பிரதேசத்துக்கு இவ்வளவு பாரிய நிதி சென்றுவிடகூடாது என்பதற்காகவே அதனை தயாகமகே தடுத்தார் என்பது தெரிந்திருந்தும் எம்மவர்களில் சிலர் அவருக்கே வாக்களித்தார்கள்.
    தேர்தல் ஒப்பந்தத்துக்கு அமைய முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொது தேர்தலில் கூட்டு சேர்ந்து யானை சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டது. அதில் இம்மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில், முஸ்லிம்களுக்குரிய மூன்று தொகுதிகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற அம்பாறை தொகுதி தோல்வியடைந்தது. தனது தொகுதியில் தோல்வியடைந்தவர் எவ்வாறு பாராளுமன்றம் சென்றார்? முஸ்லிம்களின் வாக்குகளே தயாவை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது. 

    தான் இவ்வாறான இனவாத கருத்துக்களை கூறினால் அது எதிர்காலங்களில் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்ற வாக்கு வங்கியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று அமைச்சர் தயாகமகே சிந்திக்க மறந்திருப்பாரா? அல்லது தான் ஒரு உண்மையான பௌத்தமத காவலன் என்று காண்பிப்பதன்மூலம் சிங்களவர்கள் மத்தியில் செல்வாக்கினை ஏற்படுத்த இவ்வாறான கருத்துக்களை தயாகமகே அவர்கள் கூறியிருப்பாரா? 

    இங்கே நாங்கள் ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இல்லாத ஒரு செல்வாக்கினை பெறுவதற்காக இருக்கின்ற செல்வாக்கினை இழக்கின்ற விசப்பரீட்சையில் எந்தவொரு அரசியல் வாதிகளும் இறங்கமாட்டார்கள். 

    முஸ்லிம்கள் என்றால் கொள்கை அற்றவர்கள் என்றும், இலாப நோக்கம் கொண்ட வியாபாரிகள் என்றும், அற்ப பணத்துக்காகவும், பதவிக்காகவும் எதையும் செய்வார்கள் என்ற தோற்றப்பாடு அமைச்சர் தயாகமகேவிடம் இருந்திருக்கலாம். அத்தோடு தேர்தல் ஒன்று நெருங்கும்போது இதனையெல்லாம் அவர்கள் மறந்துவிடுவார்கள் என்றும், அப்படித்தான் மறக்காவிட்டாலும் அவர்களுக்கு பணத்தினை வழங்குவதன்மூலம் மறக்கடிக்க செய்யலாம் என்ற சிந்தனையும், எதிர்பார்ப்பும் தயாகமகே அவர்களிடம் இருந்திருக்கலாம்.  

    எனவே தேர்தல் வருகின்றபோது எங்களது கொள்கை என்ன? எங்களது சிறுபான்மை இன அரசியல் என்ன நிலையில் இருக்கின்றது? அரசியல் அதிகாரத்தினை எவ்வாறு பெறுவது? எங்களது சமூகத்தின் எதிர்கால இலட்சியமென்ன? மற்றும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால பாதுகாப்பு பற்றிய எந்தவித சிந்தனையும் எமது சமூகத்தில் உள்ள சிலருக்கு ஏற்படுவதில்லை. 

    மாறாக எந்த அரசியல்வாதி அதிகமாக பணம் அல்லது பதவி அல்லது ஏதாவது பகட்டுக்களை கான்பிக்கின்றார்களோ அவர்களுக்கு எமது பெறுமதியான வாக்குகளை வழங்கி அவர்களை அரசியல் அதிகாரத்தில் அமர்த்தசெய்வதன் மூலம் எமது சமூகத்தின் உரிமைக்குரலை நசுக்க முற்படுகின்ற நிலைமை இருந்துகொண்டே இருக்கின்றது. இந்த நிலைமை தொடர்ந்து இருக்கும்வரைக்கும் தயாகமகே போன்ற இனவாதிகள் மட்டுமல்ல, யூதர்கள் கூட பணம் இருந்தால் எமது சமூகத்தினை நம்பி தேர்தலில் கேக்கலாம். வாக்களிக்க எமது சமூகத்தில் சிலர் தயாராகவே இருக்கின்றார்கள்.
    முகம்மத் இக்பால்
    சாய்ந்தமருது 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பணத்துக்கும், பகட்டுக்கும், பதவிக்கும், நாங்கள் அடிமைப்பட்டு இருக்கும்வரைக்கும் தயாகமகே போன்ற அரசியல்வாதிகளுக்கு வாசிதான். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top