நீதியமைச்சர் விஜேயதாஸ
ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த
பத்திரத்தில் முன்வைத்த யோசனையில்
”முஸ்லிம் சட்டத்தின் கீழ்
திருமணம் முடிப்பதற்கான குறைந்த
வயது எல்லை, மற்றும்
அச்சட்டத்தின் கீழ் காணப்படும்
வேறு காரணங்கள் தொடர்பான
சட்ட விதப்புரைகள் இலங்கை
அங்கம் பெறும் சில
சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஒழுங்குகளுடன்
ஒத்திசையாத காரணத்தினால் அந்தச்
சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு
தேவை ஏற்பட்டுள்ளது” எனக்
கூறப்பட்டுள்ளது. 
இவ்வாறு முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திருத்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தொிவித்துள்ளதாவது, 
வாராந்த ஊடக
சந்திப்பில் முஸ்லிம் தனியார்
சட்டத்தில் திருத்தம் செய்ய
வேண்டும் என்ற அரசின்
நிலைப்பாடு சம்பந்தமாக தெரிவிக்கும்போது இணை அமைச்சரவைப்
பேச்சாளர் கயந்த கருணாதிலக
முஸ்லிம் திருமணம் மற்றும்
விவாகரத்து தொடர்பான சட்ட
மூலத்தை திருத்துவதற்கு அரசாங்கம்
ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களைக்
கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப்
பதிலளித்த அமைச்சர் சாகல
ரத்னாயக்க இந்த விடயம்
தொடர்பில் சமூக மட்டத்தில்
பேசப்படுகின்றது. நாம்  இப்போது ஐரோப்பாவின்
ஜி.எஸ்.பி.வரிச்சலுகையை
விரைவில் பெற்றுக் கொள்ளவுள்ளோம்.
இவ்வாறான சூழலில் சர்வதேச
சாசனங்களுக்குக் கட்டுப்பட்டுள்ள நாம் இதற்கு
முரண்பாடான சட்டங்களைத் திருத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட விவகாரம்
சில வருடங்களாக முஸ்லிம்
சமூகத்தின் உள்ளே ஒரு
கருத்தாடலாக இருந்துவந்துள்ளது. முஸ்லிம்
பெண்களின் அமைப்புகள் சில
இச்சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்
என்று மார்க்க அறிஞர்களிடமும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும்,
முஸ்லிம் சட்ட வல்லுனர்கள்,
புத்திஜீவிகள் ஆகியோரிடமும் வேண்டுகோள்
விடுத்து வந்தனர். அன்றே
முஸ்லிம் சமூக மட்டத்தில் பேசி
சுமூக முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய
இவ்விவகாரம் இன்று சர்வதேசம்வரை
சென்றுள்ளது. 
சர்வதேச அரசசார்பற்ற
நிறுவனங்களுடாக ஐக்கிய நாடுகள்
சபை வரை இப்பிரச்சினை
சென்றுள்ளது. சர்வதேச அரசியல்,
பொருளாதார அதிகாரவர்க்கம் இலங்கையின்
தற்போதைய அரசியலமைப்பு புதிய
உலக ஒழுங்குக்கு ஒவ்வக்கூடியதாக இல்லை என்ற
காரணத்தைக் காட்டி முழுமையான
அரசியலமைப்பு மாற்றம் செய்யப்படவேண்டும் என்று இலங்கைக்கு
அழுத்தம் கொடுத்து வருகின்ற சூழ்நிலையில், தற்போதைய யாப்பின்
16வது சரத்தின்படி ஏற்கனவே
இருக்கும் எழுதப்பட்ட, எழுதப்படாத
சட்டங்கள் தொடர்பாக மாற்றம்
செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு
ஏற்பட்டுள்ளது. இச்சட்டம் உள்ளவரை
குறித்த சில செயற்பாடுகளை,
அடிப்படை உரிமை மீறலுக்குள்
கொண்டுவர முடியாதுள்ளது என்பது
கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இவ்விடயத்தில்
முஸ்லிம் தனியார் சட்டம்
கவனிப்புக்கு உள்ளாகின்றது.
எவ்வாறாயினும் தற்போது
முஸ்லிம் விவாக விவாகரத்துச்
சட்டத்தில் திருத்தம் செய்வதென்பது
முஸ்லிம் சமூகத்தின் கைககளில்
இருந்து நழுவியது மட்டுமல்லாமல்,
உள்நாட்டு விவகாரம் என்பதையும்
தாண்டி சர்வதேச தலையீடு
ஏற்பட்டுள்ள விவகாரமாக மாறியுள்ளது.
இவ்வாறுதான் இலங்கையின் இனப்பிரச்சினையும் நாம் நமது
பிரச்சினையை நமக்குள் தீர்த்துக்கொள்ள தவறியமைதான் சர்வதேச
தலையீடுகளுக்கும், ஐ.நா. மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் அழுத்தங்களுக்கும் நாடு உட்படுவதற்கு
காரணமாக அமைந்தது. 
ஊடக சந்திப்பில்
அமைச்சர்களின் கருத்தை அவதானிக்குமிடத்து முஸ்லிம் விவாகரத்துச்
சட்டத்தில் மாற்றம் கொண்டுவராவிட்டால் ஐரோப்பிய யூனியனின்
ஜி.எஸ்.பி. வரிச்சலுகை
நாட்டுக்கு கிடைக்காது என்பதைக்
குறித்துக் காட்டுகிறது. நாட்டுக்குக்
கிடைக்கும் பாரிய பொருளாதார
நன்மை ஒன்றை தடுக்கும்
சமூகமாக இலங்கை முஸ்லிம்கள்
காட்டப்பட முஸ்லிம் விரோத
சக்திகளுக்கு ஒரு வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்க
அறிஞர்கள், முஸ்லிம்  அரசியல் தலைமைகள்,
புத்திஜீவிகள் போன்றோர், அத்தியாவசியமான சமூக விடயங்களில்
மக்களுடன் கலந்துரையாடாமல் நழுவல்
போக்கை கடைப்பிடிப்பது பெரும்
ஆபத்தை விளைவிக்கவல்லது. சமூக,
அரசியல் மாற்றங்களுக்கு இயைபாக
மார்க்க இயக்கங்களும், அரசியல்
கட்சிகளும் தத்தமது கட்டமைப்புகளுக்கு வெளியில் நின்று
ஒற்றுமைப்பட்டு சமூகத்துக்குள் கலந்துரையாடல்
செய்யவேண்டிய கடப்பாட்டின் அவசியத்தை புதிய
சூழல் உணர்த்துகிறது.  
முஸ்லிம்
தனியார் சட்டத்தில் மாற்றங்களைச்
செய்யும் நோக்கோடு குழுவொன்று
நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்று
அதிகாரத்திற்குச் சாமரம்
வீசும் அறிக்கை விடுவதை  அல்லது வாய்மூடி
மௌனித்து இருந்து அதிகாரத்திற்கு விசுவாசத்தை வெளிக்காட்டுவதை விடுத்து உள்ளக
கலந்துரையாடல்கள் மூலம்
நமது மதம், கலாச்சாரம்
தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை
எட்ட முடியுமானால் இவ்விடயங்களில் சர்வதேசம் தனது செல்வாக்கைப்
பிரயோகிக்கும் அவசியம் தடுக்கப்படும்.
இதுமட்டுமன்றி எவராயினும் வெளியில்
இருந்து வந்து முஸ்லிம்களைப்
பார்த்து உங்களது சமூகத்
தனியுரிமைகள் சம்பந்தமான விடயங்கள்
நவீன சமூகக் கட்டமைப்புக்கு விரோதமானது என்று
சுட்டுவிரல் நீட்டி குற்றம்
சாட்டவும் முடியாது. 
பாலியல் வன்முறைக்கு
உள்ளான ஒரு முஸ்லிம்
பெண்ணுக்கு தென்னை மட்டை
அடித் தண்டனை வழங்கியமை,
பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்கு
ஆதரவாக வழக்காடும் முஸ்லிம்
பெண் சட்டத்தரணிக்கு உயிர்
அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறமை,
85 வயது முஸ்லிம் மூதாட்டி
ஒருவரை மகளே கோழிக்
கூண்டினுள் அடைத்து வைத்தமை
ஆகிய முஸ்லிம் தனி நபர்களின்
அண்மைய நடவடிக்கைகளை முஸ்லிம்
சமுதாயத்தின் வழமையான செயற்பாடு
போலவும், இஸ்லாத்தின் நவீன
சமூகத்துக்கு ஒவ்வாத மனித
உரிமை மீறல் போலவும்
காட்டுவதற்கு முஸ்லிம் விரோத
செயற்பாட்டாளர்கள் முனைந்திருக்கிற இன்றைய காலத்தில்
முஸ்லிம் தனியார் சட்டம்
பற்றிய விவாதம் ஏற்பட்டிருப்பது துரதிஷ்டமானதாகும். 
ஒக்டோபர் 13 இல்
யுனெஸ்கோ அமைப்பில் பலஸ்தீனம்
கொண்டுவந்த பிரேரணைக்கு சார்பாக இலங்கை வாக்களிக்காமல் விட்டமை
இஸ்ரேலுக்கு ஆதரவாக எடுத்த
நிலைப்பாடு என்று முஸ்லிம்கள்
புண்பட்டிருக்கிறார்கள். இதுபோல முஸ்லிம்
தனியார் சட்டத்தில் திருத்தம்
கொண்டுவர வேண்டும் என்ற
அரசின் நிலைப்பாடும் முஸ்லிம்கள்
மத்தியில் குழப்ப நிலையை
ஏற்படுத்தலாம். இவ்விரு விவகாரங்களையும் பயன்படுத்தி அரசியல்
அனுகூலம் பெற விளைவோர்
முஸ்லிம்கள் மத்தியில் மேலும்
குழப்ப நிலையை அதிகரிக்கச்
செய்யவும் வாய்ப்புண்டு. கடந்த அரசின்
காலத்தில் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பொது பலசேனாவின்
செயற்பாடுகள் முஸ்லிம் மக்களுக்கு
ஏற்படுத்தியிருந்த மனக்காயங்கள்
நாட்டில் அரசியல் மாற்றத்தை
உறுதிப்படுத்திய அனுபவத்தை
உதாரணமாகக் கொண்டு, தற்காலத்தில்
இலங்கையில் அரசியல் மாற்றத்தை
கொண்டுவர விரும்பும் சக்திகள்
அதற்கான  அடிக்கல்லை
இடுவதற்கு எண்ணினால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம்
பெரும் சிக்கலுக்குள் அகப்படும்
ஆபத்து உள்ளது. 
எனவே, இக்கட்டான
இக்காலத்தில் எல்லா வேறுபாடுகளையும் மறந்து முஸ்லிம்
மார்க்க, அரசியல், குடிமைச்
சமூகத் தலைமைகள் அனைத்தும்
ஒன்றுபட்டு அவசரமாக கலந்துரையாடல்களைச் செய்து சமகாலச்
சூழலை எதிர்கொள்ளும் வகையில்
முஸ்லிம் தனியார் சட்டம்
தொடர்பான மாற்றங்களை குர்ஆனுக்கும்
சுன்னாவுக்கும் மாற்றமில்லாத வகையில்
மேற்கொள்ள வேண்டும் என
பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

 
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment