• Latest News

    November 21, 2017

    ஊமைத் தலைமைகளும், உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட சமூகமும்

    -சஹாப்தீன் -
    இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் எந்தப் பிரச்சினைகளையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒரு முகமாக ஒற்றுமையுடன் எதிர்கொள்ளாது இருப்பதுடன், அரசாங்கத்தின் கைப்பொம்மைகள் போன்றும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தனித்தனி முகாம்களை அமைத்துக் கொண்டு தங்களின் கீழ் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை முஸ்லிம் சமூகம் தமது பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும், நிவாரணமுமின்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் குறித்து பேசுவதற்கு யாருமில்லை. கொங்றீட் வீதிகளை அமைத்தல், குடிநீர் குழாய்கள் பொருத்துதல், அலுவலகங்களுக்கு கணிணி மற்றும் பொருட்களை வழங்குதலையே முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவைகள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளல்ல. அபிவிருத்திகள் காலத்தால் அழியக் கூடியது. உரிமைகள் காலத்தால் நிலைத்திருக்கக் கூடியது. நிலையான வேலைகளைச் செய்யாது தற்காலிக வேலைகளிலேயே முஸ்லிம் தலைமைகளும், மக்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கே அதிக நேரகாலத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் எடுத்துக் கூறுவதற்கு தைரியமில்லாதவர்கள் முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். இவர்களின் கைககள் பல வகையிலும் அசுத்தமடைந்துள்ளன. சிறுபிள்ளை மிட்டாய் கேட்பதனைப் போன்று பேரினவாத கட்சிகளிடம் எல்லாவற்றிக்கும் கையூட்டல் வாங்கிப் பழகியவர்களாகவே பெரும்பாலும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை உள்ளார்கள்.

    இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்கள் வந்தால் கட்சியை காப்பாற்ற வேண்டும். சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இயக்கம் வாழ வேண்டும். அபிவிருத்தி யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம், பள்ளிவாசல் தாக்கப்படுகின்ற, பௌத்த இனவாதத்திற்கு அடங்கிப் போக மாட்டோம். ஏன்ன விலை கொடுத்தாவது முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம், முஸ்லிம்களின் காணியை மீட்போம், வடக்கு, கிழக்கு இணைய விடமாட்டோம், முஸ்லிம்களுக்கு அதிகார அலகு தரப்பட வேண்டும், கரையோர மாவட்டம் தராது போனால் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என்றெல்லாம்; மேடைகளில் தொண்டை காயப் பேசுவார்கள். முஸ்லிம்களும் இவர்களின் உணர்ச்சிப் பேச்சுக்கு ஆளாகி கைதட்டுவதனையும், கோசங்களை எழுப்புவுதனையும் காலாகாலமாக கண்டு வருகின்றோம். ஆனால், இந்தப் பிரச்சினைகளை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பேச வேண்டிய இடத்தில் நெஞ்சுரத்துடன் பேசியுள்ளார்களா என்று முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை. முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் என்போர் ஊமைகளாக இருக்கின்ற நிலையில் முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு ஊமைத் தலைவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். வெறும் உணர்ச்சிகள் ஒரு போதும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்காது.

    ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் மனித உரிமை விவகாரம் தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு இலங்கை விவகாரங்கள் பேசப்பட்டுள்ளன. ஆயினும், முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி பேசப்படவில்லை. இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளினாலும், அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளினாலும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளைப் பற்றி எந்தவொரு சர்வதேச நாடும் இலங்கையிடம் கேள்வி எழுப்பவில்லை. இதன் மூலம் முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் அநீயாயங்கள் சர்வதேசமயப்படுத்தப்படவில்லை என்று தெரிகின்றது. முஸ்லிம் நாடாகிய சவூதி அரேபியா இலங்கையில் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டதேயன்றி, இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லுகின்றார்கள். இலங்கை வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் பேசுகின்றார்கள். ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி ஒரு நாடும் பேசவில்லை என்பதன் மூலமாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்நாட்டில் மாத்திரமல்ல, வெளிநாடுகளிலும் ஊமைகளாகவே உள்ளார்கள் என்று தெரிகின்றது.

    ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் மனித உரிமை விவகாரம் தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் கடந்த 15.11.2017இல் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை இலங்கை தொடர்பான விவகாரங்கள் ஆராயப்பட்டன. இதன் போதே இலங்கை முஸ்லிம்களின் நிலைமைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு எந்த நாடும் முன்வரவில்லை என்று ஊடகங்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

    இதே வேளை, சர்வதேச நாடுகளின் மனித உரிமை விவகாரம் தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் உள்ள திருமண வயதெல்லை அதிகரிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

    முஸ்லிம்களின் பிரச்சினைகளையும், முஸ்லிம்களுக்கு எதிரான அநீயாயங்களையும் அரசியல் கட்சிகள்தான் சர்வதேச மயப்படுத்தவில்லை என்றால் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்று கேட்கின்றோம். கொழும்பைத் தளமாகக் கொண்டு பல முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் உள்ளன. இவ்வமைப்புக்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு எதிரான அநீயாயங்கள் குறித்து அடிக்கடி கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றிய புள்ளி விபரங்களை திரட்டி வைத்துள்ளன. ஆனால், திரட்டப்பட புள்ளி விபரங்கள் கோவைகளாகவே உள்ளன. அவை சர்வதேச நாடுகளிடமும், சர்வதேச அமைப்புக்களிடமும், அரசாங்கத்திடமும் வழங்கப்படவில்லை. ஒரு சில தகவல்கள் வழங்கப்பட்டாலும் அதற்குரிய பின்னூட்டல்கள், தொடர் கவனிப்புக்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஊமையாகவே இருக்கின்றன. சிவில் அமைப்புக்களில் உள்ளவர்களில் பலர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாவும் இருக்கின்றார்கள். இதனால், அவர்கள் தாம் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புக்களை அரசியல் கட்சிகளின் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றர்கள்.
    சிவில் அமைப்புக்கள் மிகச் சரியாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்திய வகையில் மேற்கொண்டால் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் கட்டுப்படுத்தும் சக்தியை சிவில் அமைப்புக்களினால் பெற்றுக் கொள்ள முடியும். முஸ்லிம் சிவில் அமைப்புக்கள்  அரசியல் நிறத்தைக் கொண்டவர்களை உறுப்பினர்களாக வைத்திருக்கக் கூடாது.

    அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கான காணிகளை இழந்துள்ளார்கள். பொத்துவில், ஒலுவில் ஆலிம்சேனை, சம்மாந்துறை, வட்டமடு என பல இடங்களில் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டுள்ளன. வட்டமடு, வேட்பையடி, கொக்குழுவ, முறாணாவெட்டி, வட்டமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து கண்டங்களில் முஸ்லிம்களுக்குரிய சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் உள்ளன. இக்காணிகள் யாவும் சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன. சுமார் 40 வருடங்களாக முஸ்லிம்கள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள். மேற்படி காணிகள் 717 குடும்பங்களுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. இக்காணிகள் வன இலாகாவிற்குரியதென்று பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு தடைகள் போடப்பட்டுள்ளன. இதனால், காணிக்குரியவர்கள் கடந்த 10.11.2017இல் தங்களுக்குரிய காணிகளை ஒப்படைக்குமாறு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    இது போன்று பொத்துவிலில் பல இடங்களில் முஸ்லிம்களின் காணிகளை வனஇலாகா தம்வசப்படுத்தி வைத்துள்ளதாக பொத்துவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். ஒலுவில் ஆலிம்சேனையில் முஸ்லிம்கள் சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் காடு வெட்டி சட்டப்படி பெற்றுக் கொண்ட காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதே வேளை, முஸ்லிம்களி;டமிருந்து அரசாங்கத்தின் காணி என்று பறிக்கப்படும் காணிகள் மறுபக்கத்தில் பெரும்பான்மையினரின் புதிய குடியேற்றங்களுக்கு வழங்கப்பட்டும் வருகின்றன.

    திருகோணமலை மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் கபளிகரம் செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில்தான் முஸ்லிம்கள் மிகக் கூடியளவில் காணிப் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள். திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசம் உட்பட தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு தொல்பொருள் பிரதேசம் என அறிவிக்கப்படுகின்றன. இதனால், அங்கு வாழும் முஸ்லிம்கள் பீதியடைந்துள்ளார்கள். வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் முஸ்லிம்களின் காணிகள் எல்லையிடப்பட்டு முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.
    மேலும், திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தின் தேவைக்காகவும் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 27 முஸ்லிம் தனியார் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். கருமலையூற்றுப் பள்ளிவாசல் கூட இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கும் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினாலும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திகள் என்ற போர்வையிலும் முஸ்லிம்களின் காணிகள்ததான் குறிவைத்து பறிப்பட்டுள்ளன. யானைப் பாதுகாப்பு வேலிகளும் முஸ்லிம்களின் காணிகளுக்கு வேலியிட்டு தம்வசப்படுத்தியுள்ளன.

    புல்மோட்டைப் பிரதேசத்தில் 05 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும், அவற்றிக்கு தலா 500 ஏக்கர் காணி இருந்ததாகவும் கூறப்படுகின்றன. இதன் மூலம் அங்குள்ள காணிகள் பௌத்த விகாரைகளுக்குரிய என்று கபளிகரம் செய்யப்படலாமென்ற அச்சத்தையும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளார்கள்;. மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

    வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால 1990ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது காணிகளை இழந்து நிற்கின்றார்கள். இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்களின் இன்றைய தொகை 1990ஆம் ஆண்டை விடவும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், அவர்களை முழுமையாக குடியேற்றுவதற்கு கூட காணி இல்லாத நிலைமைகள் உள்ளன.

    இவ்வாறு முஸ்லிம்கள் நாட்டின் பல பாகங்களிலும் காணிப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள். அநீயாயங்களைச் சந்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அவலங்களை அரசாங்கத்திடம் எடுத்துக் காட்டி முஸ்லிம்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும், பொறுப்பு வாய்ந்த சிவில் அமைப்புக்களினதும் கடமையாகும். ஆனால், இந்தக் கடமைகளைச் சரியாகச் செய்யாது முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினாகளும் அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகம் அழிந்தாலும் அரசாங்கம் தோல்வியடைந்து விடக் கூடாதென்று எண்ணுகின்றார்கள். மஹிந்தராஜபக்ஷவின் கைககள் ஓங்கிவிடும் என்ற அச்சத்தில் உள்ளார்கள். நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற கொள்கை இருக்க வேண்டும்.

    மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு அநீயாயங்கள் நடைபெற்ற போது மஹிந்தவை காப்பாற்றும் செயற்பாடுகளையே மேற்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு அநீதி நடக்கின்றதென்று குரல் கொடுப்பதற்கு சக்தியில்லாது இருந்தார்கள். மேடைகளில் உரிமைக் குரல் எழுப்பியவர்கள் மஹிந்தவின் முன்னிலையில் ஊமைகள் போன்று சொல்வதற்கு தலையையும், கையையும் அசைத்து எல்லாவற்றிக்கும் சம்மதம் தெரிவித்தார்கள். இன்று ஆட்சி மாறியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாற்றங்களைக் காண முடியவில்லை. முஸ்லிம்களின் காணிகளில் ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படவில்லை. இதே வேளை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் உள்ளார்கள். அரசாங்கத்தினை நல்லாட்சி என்றும் அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லாட்சி முஸ்லிம்களின் விடயத்தில் தமது நல்ல தன்மையைக் காட்டாது மறுமுகத்தையே காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்நிலைக்கு முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும்தான் காரணமாகும்.
    முஸ்லிம் தலைவர்கள் என்னதான் தனித்துவக் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், உரிமைக்கான இயக்கம் என்று தமது கட்சியை சொல்லிக் கொண்டாலும் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு விலை வைத்துள்ளார்கள். அந்த விலையை செலுத்துகின்றவர்களுக்கு அவர்கள் எதனையும் செய்வதற்கு சித்தமாக உள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களின் முடிவுகளை விலைகள் தீர்மானிக்கின்ற படியால் விலைகள் வழங்கப்பட்டதும் தலைவர்கள் என்போர் ஊமைகளாகி விடுகின்றார்கள். விலைமாதுவுக்கும், முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குமிடையே பெரிய இடைவெளியைக் காண முடியாது. செயற்பாடுகளில் மாத்திரமே வித்தியாசத்தைக் காணலாம். நோக்கமெல்லாம் ஒன்றாகவே உள்ளது.

    இவ்விதமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் வாய் இருந்தும் ஊமைகளாகியுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பொய்களைப் பேசுவார்கள். போலியான வாக்குறுதிகளை வழங்குவார்கள், வாக்குகளுக்கு விலை பேசுவார்கள். முஸ்லிம்களும் கடந்த காலங்களில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே, முஸ்லிம் சமூகத்தை விலை பேசி விற்றுவிட்டீர்களே, அரசாங்கத்தின் பொம்மைகளாக செயற்பட்டீர்களே என்றெல்லாம் கேள்விகளைக் கேட்காது அவர்களின் உணர்ச்சி வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளை மீண்டும் பாராளுமன்றம் அனுப்பும் நடவடிக்கைகளையே முஸ்லிம்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், முஸ்லிம்கள் இதிலிருந்து விடுபட வேண்டும். விலை பேசும் தலைமைகளை தூக்கி எறிய வேண்டும். 
    Veerakesari-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊமைத் தலைமைகளும், உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட சமூகமும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top