• Latest News

    November 22, 2017

    சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும்!!! -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-

    -எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீன் -
    மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும், அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட இந்த ஊருக்கான உள்ளுராட்சிசபையை பெற்றுத்தர மதிப்புக்குரிய எதிர்க்கட்சித்தலைவர் சம்மந்தன் அவர்கள் முன்வரவேண்டும் என்று சாய்ந்தமருது கடற்கரை வீதியில் 2017-11-21 ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே சாய்ந்தமருது மாளிகைக்காடு  ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின்  தலைவர் வை.எம்.ஹனிபா மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.
    சாய்ந்தமருது மக்களால் மிக இறுக்கமான முறையில் முன்னெடுக்கப்படும் தங்களுக்கான உள்ளுராட்சிசபையை பெறும் வரையிலான பல்வேறுபட்ட போராட்டங்களின் ஒரு வடிவமாகவே குறித்த ஊரின் மீனவர் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஊர்வலமாகவும் உணர்ச்சியுற்ற இளைஞர்களால் தூக்கியும் வரப்பட்ட பள்ளிவாசலின்  தலைவர் வை.எம்.ஹனிபா தொடர்ந்து உரையாற்றுகையில்,
    சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை என்ற பந்து இப்போது சம்மந்தன் ஐயாவின் கையில் இருக்கின்றது. நாளை 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்பின்போது எங்களது மக்களின் அபிலாஷை உங்களது கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது மக்கள் யாருக்கும் எதிரானவர்களோ எவரதும் அபிலாஷைகளுக்கும் எதிரானவர்களோ இல்லை. எங்களது மக்களின் விடயத்தில் நீங்கள் நீதமாக நடப்பீர்கள் என நாங்கள் மிகவும் நம்புகின்றோம் எங்களது நம்பிக்கைக்கு அநீதியிழைக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம் எனவே எங்களது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேறித் தாருங்கள் என்று மக்கள் வெள்ளத்தில் வைத்து வை.எம்.ஹனிபா கோரிக்கை விடுத்தார்.


    சாய்ந்தமருது மக்கள் அரசியல் குரலற்ற மக்களாக இருப்பதாகவும் இந்த மக்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் உதவ முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அதேவேளை நீங்கள் உதவும் பட்சத்தில் எத்ர்காலத்தில் நாங்களும் உங்களுக்கு பக்கத்துணையாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.
    நிந்தவூரில் இருந்து காரைதீவு பிரிந்து சென்றபோதோ சம்மாந்துறையில் இருந்து நாவிதன்வெளி பிரிந்து சென்றபோதோ அக்கரைப்பற்றில் இருந்து ஆலையடிவேம்பு பிரிந்து சென்றபோதோ முஸ்லிம் மக்கள் குறுக்காக நிற்கவில்லை என்றும் தாங்கள் தமிழ் மக்களுடன் இணைந்தே வாழ விரும்புவதாகவும் இவ்வாறன சூழலில் கல்முனையில் உள்ள பிரச்சினையை பொதுவான பிரச்சினையாக நினைத்து உதவ முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    எதிர்காலத்தில் இரு சமூகங்களும் சேர்ந்து முடிவு காணவேண்டிய அநேக விடயங்கள் இருப்பதாகவும் தற்போது கல்முனையில் தோன்றியுள்ள அசாதாரண நிலையை தீர்க்க, தீர்க்கதரிசனத்துடன் செயற்படுமாறும் அப்போது நீங்கள் உரிமையுடம் முஸ்லிம்களது உதவியை கோர முடியும் என்றும் தெரிவித்தார்.
    கல்முனை முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்களின் அபிசாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான தீர்வும் கிடைக்க வேண்டும் என்றும் நாங்களும் அதற்கு ஆதரவாகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.  

    தொடர்ந்து உரையாற்றிய  வை.எம்.ஹனிபா, அண்மையில் தாங்கள் ஆஸாத் சாலியூடாக ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை பெற்றுத்தாருங்கள் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஊர்கூடி ஆதரிப்பதாக உறுதியளித்து வந்ததாகவும் அதனை கூடியிருந்த மக்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று வினவியபோது ஆம் என்று ஆக்ரோஷமாக மக்கள் ஆதரித்தனர். இதேவேளை ஆஸாத் சாலிக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும்!!! -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்- Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top