• Latest News

    November 20, 2017

    மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி

    “மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

    “வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால், அது கிழக்குத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்” என்றும் அவர் கூறினார்.

    வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறித்து, வடக்கு முதலமைச்சரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்துக் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

    முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து அவரை ஊடகவியலாளர்கள் சந்தித்தனர்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

    “தமிழர் தலைவரின் (சம்பந்தனின்) பிரதேசமான திருமலை, தற்போது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் இல்லை.

    முஸ்லிம் மக்களுள் இருவகையினர் உள்ளார்கள். ஒரு தரப்பினர் தென்னிந்தியாவில் இருந்து மரக்கலங்களில் வந்து இங்கு குடியேறியவர்கள். மற்ற வகையினர் மத்திய கிழக்கில் இருந்து வந்து குடியேறியவர்கள்.
    தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்ப் பாரம்பரியங்களில் திளைத்தவர்கள். அவர்கள் முதலில் தமிழர்களாக இருந்தனர். அடுத்து இஸ்லாமியர்களானார்கள். ஆனால் அடுத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் தமது மதத்துக்கு முதல் இடம் கொடுப்பது மட்டுமல்லாமல் தம்மை வேறொரு இனமாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.

    அவர்கள்தான் வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்ப்பவர்கள். அவர்கள் அவ்வாறு எதிர்த்தாலும் அவர்களின் மொழிப் பற்றின் நிமித்தம் வடக்கு – கிழக்கானது தமிழ்ப் பேசும் மாநிலங்கள் என்ற கருத்தை ஏற்றேயுள்ளனர். எனவே தமிழ் பேசும் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினுள் சமச்சீர்மையற்ற ஒரு அலகை முஸ்லிம் மக்கள் பெற்றால், வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்க அவர்களுள் பலர் முன்வந்துள்ளார்கள். பிற மாகாணங்களில் இருந்து வந்துள்ள முஸ்லிம் தலைவர்கள், வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்காதது தமது மாகாணத்தில் அவர்களுக்கு வாக்கு கிடைக்காது போய்விடும் என்பதாலாகும்.

    கிழக்கு தற்போது தமிழர்களிடம் இருந்து பறிபோய்விட்டது என்பது உண்மை. அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட்டால் நாம் எஞ்சிய கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம். ஒரு சிங்கள பௌத்த பிக்குவிடம் போய் உதவி கேட்கும் அளவுக்கு, அங்குள்ள தமிழர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

    அரசியல்வாதிகளின் புறக்கணிப்பினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழர் தாயகம் பாதுகாக்கப்படுவதன் அவசியம் போன்றே வடக்கு – கிழக்கு இணைப்பும் அத்தியவசியமாகின்றது. இணைப்பின்றேல் தமிழினம் மறைந்து போகும் நிலை ஏற்பட சந்தர்ப்பமுள்ளது. மத ரீதியாக, சமூக ரீதியாக, தொழில் ரீதியாக, கல்வி ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக கிழக்கு மாகாணத் தமிழர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஆகவே எமது கிழக்குச் சகோதர சகோதரிகளைப் பாதுகாக்க வடக்கு – கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. பேரினவாதம் தொடர்ந்து தலைகாட்டாமல் இருக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்த வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. இதைத் தெரிந்துதான் சிங்களத் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றார்கள். கிழக்கை முழுமையாகத் தம்வசப்படுத்தத் தாமதமாகிவிடுமோ? என்று அவர்கள் சிந்திக்கின்றார்கள்.

    ஆனால் இன விருத்தியைப் பார்க்கும் போது முஸ்லிம் சகோதரர்களே கிழக்கைக் கைப்பற்றப் போகின்றார்கள். அவர்கள் இன விருத்தி கிட்டத்தட்ட 05 சதவீதம் என்றால், சிங்களவருடையது 02 சதவீதமும் தமிழர்களுடைய இனவிருத்தி வீதம் 01 சதவீதமுமாக உள்ளன. எனவேதான் முஸ்லிம்களுந் தமிழர்களும் சேர்ந்து இணைந்த வடகிழக்கில் தமிழ் வாழ வழிவகுக்க வேண்டும் என்கின்றேன்.

    வடகிழக்கை இணைக்குமாறு எமது முன்னைய தமிழ்த் தலைவர்கள் கோரிய போது இருந்த நிலமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அப்போது வடகிழக்கு இணைப்பு, தமிழ் மக்களை கிழக்கு மாகாணம் பாரம்பரியமாகப், பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் கோரப்பட்டது.

    இப்பொழுது தமிழ் மொழியையும் தமிழ்ப் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டின் நிமித்தம், வட கிழக்கு இணைப்புக் கோரப்பட வேண்டியுள்ளது. தமிழர் தலைவரின் திருமலையானது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை” என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top