2009 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 14 ஆம் திகதி செட்டிக்குளம் மெனிக்பாம் எனும் இடத்தில் தனது தந்தை மற்றும் சிறியதாயுடன் வசித்து வந்த ஒன்பது வயதுடைய சிறுமியை குறித்த குற்றவாளி ஆண்டியாபுளியங்குளம் காட்டுப்பிரதேசத்திற்கு கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது குற்றவாளிக்கு 22 வயதாகும்.
இந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் விளைவாக குறித்த சிறுமியின் இனப்பெருக்க தொகுதியும் சமிபாட்டுத்தொகுதியும் பாதிக்கப்பட்டு அந்த சிறுமி கொழும்பு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் சிகிச்சை பெற்றுள்ளார்.
குறித்த குற்ற சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டு ஒக்கேடாபர் மாதம் 25 ஆம் திகதி இரண்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஆரம்பத்தில் வவுனியா மேல் நிதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்பட்டிருந்தபோதிலும் குறித்த குற்றவாளி ஏற்கனவே இதையொத்த இன்னுமொரு பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கிலே வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் குற்றவாளியாக குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்ட காரணத்தினால் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் கோரிக்கையின் பேரில் இவ்வழக்கினை விசாரிப்பதற்காக மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டார்.
அதன் அடிப்படையில் வழக்கு விசாரணைகள் 2017 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் 27 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தொடுனர் தரப்பிலே அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் அவர்களால் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டு 2017 ஆம் அண்டு 10 ஆம் மாதம் 26 ஆம் திகதியன்று வழக்கு விசாரணைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் நேற்றையதினம் (30) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் குறித்த குற்றவாளிக்கு 10 வருட கால சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும், தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் 2 மாத சாதாரண சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நஸ்ட ஈட்டுப்பணம் வழங்கவும், நஸ்ட ஈட்டுப்பணம் வழங்க தவறும் பட்சத்தில் 2 வருட கால கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இதே குற்றவாளிக்கு 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அரசடிக்குளம் பிரதேசத்தில் ஒரு சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குற்குட்படுத்திய குற்றத்திற்காக 10 வருட கால சிறைத்தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் 2017 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 23 ஆம் திகதி விதிக்கப்பட்டு குறிப்பிட்ட குற்றவாளி தற்போது வவுனியா சிறைச்சாலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment