• Latest News

    December 07, 2017

    சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கு பாரிய நிதியுதவி.. அமைச்சர் ரிஷாட் புதிய திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்..

    ஊடகப்பிரிவு -
    தயாரிப்பு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளில் ஈடுபடும் 5000 க்கு மேற்பட்ட  கைத்தொழிற்சாலைகளுக்கு பாரியளவிலான நிதியுதவி வழங்கும் திட்டத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சு நடைமுறைப்படுத்துகின்றது.  09 வர்த்தக வங்கிகள் அடங்கலான 11 முன்னணி நிதி நிறுவனங்களின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்படுகி;ன்றது.
    “சிறிய மற்றும் நுண் கைத்தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பல உற்பத்தி நிறுவனங்கள் போதுமான அளவு நிதியைப் பெறுவதில்லை. இதனாலேயே அந்த தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்களால் சூழல் அதிகளவில் மாசடைகின்றது. இதனைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இதனை அடிப்படையாக கொண்டே இந்த பாரிய நிதியுதவியை தொழிற்சாலைகளுக்கு வழங்கி சூழலை பாதிக்காத வகையிலான உற்பத்திகளை முன்னெடுக்க முடிவுசெய்துள்ளோம். அரசாங்கத்தின் இந்த சிறிய மற்றும் நுண்கடன் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியுதவியினால்  சூழலைப் பாதுகாக்கும் நேய அடிப்படையிலான செயற்பாடுகள் வலுப்பெறும்” இவ்வாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
    சூழலை மாசடையாது பாதுகாக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி வழங்கும் கைத்தொழில், வர்த்தக   அமைச்சின் திட்ட முகாமைத்துவ பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு கொழும்பில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ, அமைச்சின் செயலாளர் என். ரஞ்சன் அசோக்க உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் என பலர்; கலந்துகொண்டனர்.
    அடுத்த 3 – 5 ஆண்டுகளில் இந்த தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் சூழல்  மாசடைவதை தடுத்து நிறுத்தி, சிறந்த சூழல் ஒன்றை உருவாக்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
    இலங்கை வங்கி, கொமர்சல் வங்கி, மக்கள் வங்கி, நிதி அபிவிருத்திக்கான வர்த்தக வங்கி (டி.எப்.சி.சி) கிராமிய அபிவிருத்தி வங்கி உள்ளடங்கலான நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கான கடன்களை வருடாந்த வட்டி 6.5 சதவீதத்திற்கு 5000 தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக 5.2 பில்லியன்  நிதியுதவு தொகையை வழங்குகின்றன.
    “நவீன தொழிற்துறை அபிவிருத்தி முயற்சியானது, கடந்த காலங்களை போன்றல்லாது தற்போது நிலைபேறான வளர்ச்சி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் நிலைபேண் அபிவிருத்தி சட்டவரைபை நோக்கியவாறான  பொருளாதார மறுசீரமைப்பை மையமாகக் கொண்டே நல்லாட்சி  பயணிக்கின்றது. 2018 – 2022ம் ஆண்டு காலப்பகுதியலான ஐ.நா நிலைபேண் அபிவிருத்தி சட்டவரைபு ஒப்பந்தத்தில் ஐ.நா சபையுடன் இலங்கை அண்மையில் கைச்சாத்திட்டது. 
    இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் பல்வேறு வழிகளில் முன்னேறிச்  செல்வதற்கான திட்டங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டுவருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். 





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கு பாரிய நிதியுதவி.. அமைச்சர் ரிஷாட் புதிய திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top