• Latest News

    December 03, 2017

    சவால்மிக்க தேர்தல்

    எஸ்.றிபான் -
    உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் நடைபெறுமா என்று பலத்த சந்தேகங்கள் காணப்பட்ட நிலையில் தேர்தல் ஆணைக் குழு 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய தேர்தல் எப்போது நடைபெறும் என்பதனை நீதிமன்றத்தின் தீர்ப்புத்தான் தீர்மானிக்கும். கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, காலி எலிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேர் உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் உள்ளுராட்சித் தேர்தல் நடைnபுறுமா என்ற சந்தேகம் பரவலாக நாட்டு மக்களிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரு கட்சிகளிடையே தேர்தலை நடத்துவதில் வௌ;வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மைத்திரி அணி என்றும், மஹிந்த அணி என்றும் பிரிந்துள்ள இன்றைய நிலையில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பததே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமாகும். இந்த இரண்டு அணிகளும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் இரண்டாக பிளவுபட்டு விடும். இதே வேளை, ஐ.தே.க தம்மோடுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அநேகமான உள்ளுராட்சி சபைகளை வெற்றி கொள்ளலாமென்று நினைக்கின்றது.

    ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அணிகளை ஒற்றுமைப்படுத்தாமல் உள்ளுராட்சித் தேர்தலை சந்தித்தால் பலத்த பின்னடைவுகள் எற்படும் என நினைக்கின்றார். அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செல்வாக்கும் குறைந்துவிடும். இதனால், கட்சி மைத்திரியின் காலத்தில் பின்னடைந்து விட்டதென்ற அவப் பெயர் தன் மீது விழும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணுகின்றார்.

    ஜனாதிபதிக்கு நெருக்கடி

    உள்ளுராட்சித் தேர்தலை சந்திப்பதாக இருந்தால் மஹிந்த அணியினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சுசில் போன்றவர்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்கள். இவரது இக்கருத்திற்கு ஆதரவானவர்கள் மஹிந்த அணியை இணைத்துக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    இதே வேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்னுமொரு சாரார் மஹிந்த அணியினரை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக மஹிந்தவை இணைத்துக் கொண்டால் நாங்கள் கட்சி மாறுவோம் என்று மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் மைத்திரிபால சிறிசேனவிற்கு முடிவுகளை எடுத்துக் கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை இணைத்துக் கொண்டால் முதலில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்க வேண்டி எற்படும். சட்ட நடவடிக்கைகளையும் முடக்க வேண்டியேற்படும். அது மட்டுமல்லாது மஹிந்தவின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

    இத்தகையதொரு நிலை கட்சிக்குள் ஏற்படும் போது மஹிந்த தன்னை ஆட்டிப்படைப்பார். அவர் நம்பத்  தகுந்த ஆளில்லை என்றதொரு நிலைப்பாட்டையும் மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மஹிந்தராஜபக்ஷவையும், அவர் சார்பானவர்களையும் இணைத்துக் கொள்வதற்கு பலத்த எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கின்றார். கள்வர்களை கட்சியில் இணைத்துக் கொள்ள முடியாதென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் சந்திரிகா தெரிவித்துள்ளார். இதன் போது நாங்கள் அவர்களை விடவும் மோசமான கள்ளவர்களுடன் இணைந்துள்ளோமே என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சொன்னதாகவும், இதன் பின்னர் சந்திரிகா வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

    இதே வேளை, ஆளுந் தரப்பிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துக்  கொண்டிருக்கின்றன. இதனால், எந்த வேளையிலும் இரண்டு கட்சிகளும் தனித்து ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமென்று ஊகங்கள் தெரிவிக்கின்றன.

    ஐ.தே.கவின் நிலைப்பாடு

    ஐ.தே. கட்சிக்குள்ளும் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஐ.தே.கவினர் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமென்று பிரதமர் ரணிலை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தனித்து ஆட்சி அமைக்கும் போது கட்சிக்குள் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றார்கள்.

    இதே வேளை, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தோடு உள்ள முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டில் போட்டியிட வேண்டுமென்று கட்சியின் தலைவர்களைக் கேட்டுள்ளார். இக்கட்சிகளின் தலைவர்களும் இதற்கு கிறீன் சிக்னல் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, 107 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐ.தேக தனித்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென்று அக்கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.தே.கவின் ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதுதான் தங்களுக்கு சிறந்தது. தங்களின் தேவைகளை ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டுதான் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கருதுகின்றது.

    இந்த அரசியல் பின்புலத்தில் ஐ.தே.க தனித்து உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ளுமாயின் ஐ.தே.கவிற்கு எதிரான பிரச்சாரங்கள் மிகவும் மோசமாகவே இருக்கும், அக்கட்சியினர் நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள். பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்கள். இதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டை சம்பந்தன் ஆண்டு கொண்டிருக்கின்றார் என இனரீதியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும். ஆதலால், உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரு பிரிவுகளாக போட்டியிட்டாலும் ஐ.தே.கவின் வெற்றி இலகுவாக இருக்காது. இன்றைய நல்லாட்சியின் செயற்பாட்டில் சிங்கள மக்களும், முஸ்லிம்களும் பலத்த அதிருப்தியுடன் உள்ளார்கள். இந்த அதிருப்தி நிச்சயமாக உள்ளுராட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை.

    முஸ்லிம் கட்சிகளின்

    முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் அவற்றை இரண்டாக வகுக்க முடியும். முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐ.தேகவின் மறுவடிவமாகவே உள்ளன. அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஐ.தே.கவின் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வராது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர் போலவே உள்ளார். அவர் தனிக்கட்சி வைத்துக் கொண்டிருந்தாலும் ஐ.தேகவில் ஒரு போதும் இணைந்து கொள்ளமாட்டார்.
    இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை தனித்து சந்திப்பதா அல்லது கூட்டு வைத்துக் கொள்வதா என்று இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை.

    முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த வரை அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக்கள் உள்ளதென்று பேசப்படும் ஒரு காலமாக தற்போதைய அரசியல் சூழல் காணப்படுகின்றது. ஹக்கீமுக்கு என்றுமில்லாதவாறு விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. இதனால், உள்ளுராட்சித் தேர்தல் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் தலைமைத்துவத்திற்கானதொரு தேர்தலாகவே நோக்கப்படுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் பின்னடைவுகளை காணுமாயின் கட்சியின் தலைவர் பதவியை ஹக்கீம் இராஜினாமாச் செய்ய வேண்டுமென்ற கோசங்களும் முன் வைக்கப்படும். ஆதலால், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்கு முதலும் பலத்த சோதனை சந்திதுள்ளார். தலைவர் பதவிக்கு எதிரான உள்வீட்டுப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார். அவை அனைத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அந்த வகையில் உள்ளுராட்சி தேர்தலிலும் தமது கட்சியின் வெற்றியையும், தலைவர் பதவிக்குரிய பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொள்வார் எனலாம். ஆயினும், அன்று சவால்கள் ஏற்பட்ட போது பக்கதுணையாக செயற்பட்ட பசீர் சேகுதாவூத், ஹஸன்அலி போன்றவர்கள் கட்சிக்கு வெளியே உள்ளார்கள். நாங்கள்தான் அவரின் தலைவர் பதவியை பாதுகாத்தோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், உள்ளுராட்சித் தேர்தல் ரவூப் ஹக்கீமின் ஆளுமைக்கு ஏற்பட்டுள்ள ஒரு சவாலாகும்.

    இதே வேளை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மீது மக்கள் பலத்த வெறுப்பைக் கொண்டுள்ளார்கள். தேசியப்பட்டியல் தொடர்பில் ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இரண்டு வாரங்களுக்கு தமது நண்பர் எம்.எச்.எம்.சல்மானுக்கு வழங்கப்பட்ட அமானிதம் இரண்டு வருடங்கள் கழிந்தும் அவரிடமே உள்ளது. அவரும் நான் இரண்டு வாரங்களுக்குத்தான் பெற்றுக் கொண்டேன். அமானிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவுமில்லை. ரவூப் ஹக்கீமும் சல்மானிடமிருந்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை பெற்றுத் தரப்படும். அது இக்கட்சியின் பொறுப்பு என்று சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதனால், சாய்ந்தமருது மக்கள் தொடர் போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர்களுக்கு ஆறுதலை கூட தெரிவிக்கவில்லை. ரவூப் ஹக்கீம் மௌனமாகவே இருந்து கொண்டிருக்கின்றார். இதனால், கல்முனை மாநகர சபைக்கு தேர்தல் நடைபெறுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் பின்னடைவுகளை சந்திக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    இதே வேளை, வட்டாரங்களுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முஸ்லிம் காங்கிரஸ் சிக்கல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வட்டாரத்திற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களில் யாரை அந்த வட்டாரத்தில் போட்டியிடச் செய்வது என்பதில் இழுபறி நிலைகள் ஏற்பட்டுள்ளன.

    மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிந்த கையுடன் மக்களை விட்டும் தூரமாகிக் கொண்டிருக்கின்றார்கள். பொது மக்களுடன் அதிகாரத் தோரணையில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் அபிவிருத்திக்க கற்கள் நாட்டப்பட்டுள்ளன. அவற்றின் வேலைகள் மந்தகதியில் நடந்து கொண்டிருக்கின்றன. சில அபிவிருத்தி வேலைகள் இன்னும் நடைபெறவில்லை. தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதோடு, கையூட்டல்களுக்கே அதிக தொழில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களும், ஹக்கீமுக்கு எதிரான விமர்சனங்களும் உள்ளுராட்சித் தேர்தலில் சூட்டை கிளப்பும் என்று எதிர் பார்க்கலாம்.

    இதே வேளை, அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்னும் உள்ளுராட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வதென்று முடிவுகளை எடுக்கவில்லை. இக்கட்சி சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் ஐ.தே.கவுடன் இணைந்தும் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆயினும் இக்கட்சி தனித்துப் போட்டியிடுமா என்பதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஏனெனில், இக்கட்சிக்கு நீதிமன்றத்தில் வழக்குள்ளது. இதன் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால்,; தனித்துப் போட்டியிடுவதில் பிரச்சினைகள் உள்ளன.

    ஆயினும், அமைச்சர் றிசாட் பதியுதீன் உள்ளுராட்சித் தேர்தலை எதிர் கொள்வதற்குரிய  நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார். வேட்பாளர்களை எதற்கும் தயராக இருக்குமாறு கேட்டுள்ளார். அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்வதற்குரிய விசேட செயற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
    இதே வேளை, முஸ்லிம் கூட்டமைப்பு என்றதொரு கதையும் நீண்ட நாட்களாக முஸ்லிம் அரசியலில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இது எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்பட்டலாமென்று தெரியவருகின்றன. இதற்கு றிசாட் பதியுதீன் பூரண ஆதரவை வழங்குவதற்கு முன் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம் கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல சிவில் அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

    ஆதலால், உள்ளுராட்சி தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பேரில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளன. முஸ்லிம் மத்தியில் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒன்றிணைய வேண்டுமென்று பலமாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் உள்ளுராட்சி தேர்தல் முஸ்லிம்கள் மாற்று சக்தியை அல்லது ஒன்றுபட்டு அரசியலைச் செய்வதனை விரும்புகின்றார்களாக என்பதைக் காட்டுகின்றதொரு தேர்தலாகவும் அமையவுள்ளது.

    அது மாத்திரமல்ல இத்தேர்தல் முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்பு, புதிய அரசியல் யாப்பு போன்றவற்றிக்கு ஆதரவாக உள்ளார்களாக எதிராக உள்ளார்களா என்ற அபிப்ராயத்தை அறியும் ஒரு தேர்தலாகவும் இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    எது எப்படி இருந்தாலும் உள்ளுராட்சி தேர்தல் திட்டமிட்ட படி நடக்குமாயின் முஸ்லிம் கட்சிகளுக்கும், அவற்றின் தலைமைகளுக்கும் சவாலான தேர்தலாகவே அமையும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சவால்மிக்க தேர்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top