கம்பஹா
மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் 23,000
மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டின்
முதற்பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியுமென
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்
வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.
மினுவாங்கொடை
பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கள்ளொளுவை ஹிஜ்ரா
வீதியில் நேற்று (03) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள்
சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில்
அமைச்சர் மேலும் கூறியதாவது;
மினுவாங்கொடை
தொகுதியை உள்ளடக்கியவாறு கம்பஹா, அத்தனகல்ல பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை
ஆரம்பித்திருக்கிறோம். 23,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில்
செய்யப்படும் இத்திட்டத்தில் பாரிய நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து கல்எலிய,
கஹட்டோவிட்ட, அத்தனகல்ல, மினுவாங்கொடை, பசியால, கட்டானை உள்ளிடங்கலாக
கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் நீர் வழங்கப்படும்.
ஜனாதிபதி
மற்றும் பிரதமருடன் 4 தடவைகளை நான் சீனாவுக்குச் சென்று அதற்காக நிதியை
பெற்றுக்கொண்டு வந்தோம். எனது அமைச்சின் அதற்கான வேலைகள் இப்போது நடைபெற்று
வருகின்றன. 2020 முதற்பகுதியில் கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து
வீடுகளிலும் குழாய்நீரை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
கள்ளொளுவை
மைதானத்தை மண்நிரப்பி புனரமைத்து தருமாறும், ஹிஜ்ரா வீதியை இருபக்கமும்
வடிகான் அமைத்து காபட் இட்டு தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான மதிப்பீடுகளை செய்து, எனது அமைச்சினூடாக செய்துதரும் பொறுப்பை மேல்
மாகாணசபை உறுப்பினர் ஷாபி ரஹீமிடம் ஒப்படைத்திருக்கிறேன். இந்த
வருடத்துக்குள் அவைகள் செய்துதரப்படும்.
கம்பஹா
மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பியகம, மினுவாங்கொடை, மீரிகம,
அத்தனகல்ல போன்ற பிரதேச சபைகளில் தனித்து போட்டியிடுகிறது. மரச்சின்னத்தில்
போட்டியிடுவதால் கட்சியின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில்
இருக்கின்றனர். மினுவாங்கொடை பிரதேச சபையில் இம்முறை இரண்டு வட்டாரங்களை
நாங்கள் வெல்வோம். இதேவேளை பட்டியல் மூலமும் எமக்கு ஒரு ஆசனம் கிடைக்கும்
வாய்ப்புள்ளது.
மினுவாங்கொடை பிரதேச சபையில்
இணைந்து போட்டியிடுவதாக தொடர்பாக ஐ.தே.க. அமைப்பாளர் எட்வட் குணசேகரவுடன்
பல தடவைகள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். முஸ்லிம்கள் பெரும்பான்மயைாகவுள்ள
ஒரு வட்டாரத்தை எங்களுக்கு தரவேண்டுமென கேட்டோம். ஆனால், வெற்றிவாய்ப்பு
குறைந்த வேறொரு வட்டாரத்தையே எங்களுக்கு தருவதற்கு அவர்கள்
முயற்சித்தார்கள்.
ஏற்கனவே, இரு தடவைகள் பெரிய
கட்சிகளிடம் எங்களது வாக்குளை அடகுவைத்து நஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம். இதை
தொடர்ந்தும் செய்யமுடியாது. இப்போது தனித்துப் போட்டியிட்டு
வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு புதிய தேர்தல் முறையினால் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நாங்கள் மினுவாங்கொடை பிரதேச சபையில் மரச்சின்னத்தில்
தனித்துப் போட்டியிடுகிறோம்.
எங்களுக்கு முதலில்
நடந்த அநியாங்களுக்கு முடிவுகட்டும் வகையில் மினுவாங்கொடையிலுள்ள இரண்டு
வட்டாரங்களையும் வெற்றிகொள்ள வேண்டியது எங்களின் தார்மீக பொறுப்பாகும்.
கட்சி ஆதரவாளர்கள் இப்போது இருக்கின்ற உற்சாகத்தில் அதனை செய்வார்கள் என்ற
எதிர்பார்க்கிறோம்.
0 comments:
Post a Comment