• Latest News

    January 08, 2018

    2020 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்

    பைஷல் இஸ்மாயில் -
    நீரிழிவு , இருதய நோய் , சுவாச நோய் மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதத்தையும் தாண்டிக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சுகாதார பழக்கமுறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்களேயேயாகும் என்று அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

    “ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச பொதுமக்களுக்கான தொற்றா நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குடன் இலவச வைத்திய பரிசோதனையும் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

    இலங்கையின் 9 மாவட்டங்களில் தொற்றா நோய்கள் பற்றி விழிப்புணர்வூட்டும் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சுகாதார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து இதனை முன்னெடுத்துவருகின்றது.

    நீரிழிவு தொற்றா நோயினால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி சர்வதேச ரீதியில் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சுமார் 20 வீதமானவர்கள் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் தற்போதுள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலைமையே காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

    அரச, தனியார் வைத்தியசாலைகளில் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று கணிசமானளவு அதிகரித்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்குரிய ஒருநாள் மருத்துச் செலவு மாத்திரம் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மீறி தொற்றா நோய்கள் எங்களுடன் போராடி, உயிரைப் பறித்து வெற்றிபெறும் நிலையும் காணப்படுகின்றது. இதனை நாங்கள் இறை தீர்ப்பு அல்லது தலையெழுத்து என ஏற்றுக் கொண்டு வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலைமையில் இருந்து விடுபட நாம் முயற்சிக்கவேண்டும்.

    தொற்றா நோய்களின் அதிகரித்த தாக்கத்திற்கு எங்களது உணவு உள்ளிட்ட அன்றாட பழக்க வழக்கங்களே காரணம். முறையான உணவுப் பழக்கம், உடற் பயிற்சி என்பனவற்றினால் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும். எவர் எதைத் தெரிவித்த போதிலும், நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாது, உதாசீனம் செய்து பின்னர் அவஸ்தைப்படுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.

    சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் நோயற்ற சுகதேகியாக வாழ வேண்டும். இதுவே எங்கள் ஒவ்வொருவரினதும் அவாவாகும். எங்களை பாதுகாக்கும் விடயத்தில் நாங்கள் அதிகம் அக்கறை, கவனம் செலுத்த வேண்டும். அதிகம் ஆபத்து, அவலங்களை ஏற்படுத்தும் தொற்றா நோய்கள் குறித்து சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவதானமாகத் தொழிற்பட வேண்டும். தொற்றா நோய்கள் தொடர்பில் தெளிவான விளக்கம் பெற்றவர்களாகவும், எமது சந்ததியினர்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்றவர்களாகவும் நாம் மிளிர வேண்டும். என்றார்.

    இந்த விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு மற்றும் இலவச வைத்திய பரிசோதனையில் வைத்தியர்களான பர்வீன் முகைடீன், பஸ்மினா அறூஸ், ஐ.எல்.அப்துல் ஹை, எஸ்.எம்.றிஷாட் ஆகியோர்கள் ஈடுபட்டு செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2020 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top