பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை 2007ல் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் கொலை செய்ததாக பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனசிர் புட்டோ தேர்தல் பிரசாரத்தின்போது 2007ம் ஆண்டு நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பெனசிர் புட்டோவை டி.டி.பி. எனப்படும் தெரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர்தான் கொலை செய்யதாக முன்னாள் அதிபர் முஷாரப் குற்றஞ்சாட்டினார். அதை அந்த அமைப்பு மறுத்தது.
பெனசிர் புட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரப் மீது ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அவர் தலைமறைவானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டி.டி.பி. அமைப்பின் தலைவர் அபு மன்சூர் ஆசிம் முப்தி நுார் வாலி உருது மொழியில் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் பெனசிர் புட்டோ கொலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. பெனசிர் புட்டோ கொலை குறித்து அந்த புத்தகத்தில் கூறியுள்ளதாவது கடந்த 2007ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் பிரதமர் தேர்தலில் பெனசிர் புட்டோ மீண்டும் போட்டியிட்டார். தேர்தலில் வென்றபின் போராட்ட அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றே அவர் தேர்தலில் போட்டியிட முன்வந்தார். இந்தத் தகவல் டி.டி.பி. அமைப்பின் நிறுவனர் மறைந்த பாய்துல்லா மெஹ்சூதுக்கு தெரியவந்தது. அதன்படியே இரண்டு தற்கொலைப் படை வீரர்களுக்கு பெனசிரைக் கொல்லும் பொறுப்பு வழங்கப்பட்டது.
ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது தற்கொலைப் படை வீரர் பிலால் தன் துப்பாக்கியால் பெனசிர் புட்டோ கழுத்தில் சுட்டான். பின்னர் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.இந்த தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் கராச்சியில் பெனசிரைக் கொல்ல முயற்சி நடந்தது. அந்த தாக்குதலில் 140 பேர் பலியாயினர் ஆனால் பெனசிர் தப்பிவிட்டார். பெனசிரைக் கொல்வதற்கு தற்கொலைப்படை வீரராக அனுப்பபபட்ட இப்ராஹிமுல்லா தற்போதும் உயிருடன் உள்ளார்.இவ்வாறு அந்த நூலில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment