- நேர்காணல்-எஸ்.அஷ்ரப்கான் -
எம்.எஸ்.சுபைருடனான நேர்காணலில் அவர் வழங்கிய காத்திரமான பதில்கள்
எம்.எஸ்.சுபைருடனான நேர்காணலில் அவர் வழங்கிய காத்திரமான பதில்கள்
கேள்வி- கிழக்கு மாகாண சபையில் ஒரு அமைச்சராக இருந்த நீங்கள் ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் களமிறங்க காரணம் என்ன ?
பதில்- நான் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக, அமைச்சராக இருந்து ஏறாவூர் மக்களுக்கு மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் சேவை செய்தவன் என்ற அடிப்படையில் தற்போது மீண்டும் எமது ஏறாவூர் பிரதேச மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கின்ற சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகின்றேன். அதுபோன்று மிக முக்கியமாக இன்று இதர கட்சிகளுடைய வேட்பாளர்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படும் நிலையில் அநேகமாக மக்கள் என்னை வேண்டிக்கொண்டார்கள் அதன் விளைவாகவே இன்று நான் பலமான அணியுடன் களமிறங்கியுள்ளேன்.
கேள்வி- ஏறாவூர் நகர சபையில் தனித்து ஒரு அணியினரால் ஆட்சியமைக்க முடியாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நீங்கள் ஸ்ரீ.ல.சு.கட்சி சபையை கைப்பற்றும் என்று உறுதியாக கூறுகிறீர்கள். இது எவ்வாறு சாத்தியப்படும் ?
பதில்- கூட்டாட்சியிலே ஆட்சியை கொண்டு செல்வதென்பது நகர சபையிலே குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு ஆராக்கியமான சபையாக இச்சபை இருக்காது. வாக்களித்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை இது நிறைவேற்றாது. ஆகவே ஏறாவூர் மக்கள் நன்கு சிந்தித்து ஒரு தேசிய ரீதியான கட்சியிடம், அரசாங்கத்தை ஆளுகின்ற கட்சியிடம் இச்சபையை ஒப்படைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை செய்துதான் மக்கள் எனது அணியினை களமிறக்கியிருக்கின்றார்கள். அமோக வாக்குகளால் வெற்றியடையச் செய்வதே ஏறாவூர் மக்களின் நோக்கமாகும்.
கேள்வி- பலமான எதிரணியினை எதிர்த்து களமிறங்கி, எவ்வாறு உங்களால் சபையையும் கைப்பற்ற முடியும் என்று உறுதியாக கூற முடிகிறது. இது சவாலாக அமையாதா?
பதில்- உள்ளுராட்சி தேர்தல் வருவதற்கு முன்பே எமது ஊரிலுள்ள பல்வேறு தரப்பினரான புத்திஜீவிகள், படித்தவர்கள் என்னிடம் இத்தேர்தலில் களமிறங்குமாறும் இதன் ஊடாக நகர சபையினை எனது தலைமையிலே பெற்றுக் கொடுக்கின்ற விடயத்திலே ஒருமித்த முடிவினை எடுத்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இந்த மண்ணிலே பலம் வாய்ந்த பல அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் இருவரும் பெரும் பலம் பொருந்திய சூழ்நிலையிலும் இவர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கின்ற போட்டி இன்று இரு துருவங்களாக மாறியிருக்கின்றது. ஹாபீஸ் நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். அதுபோல் அதே கட்சியிலே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற அலிசாஹிர் மௌலானா சுயேட்சையிலே தராசு சின்னத்திலே போட்டியிடுகின்றார். இவர்கள் இருவரும் எவ்வளவு பலம் பொருந்திய சூழ்நிலையிலும் இருவரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வராத சூழ்நிலை காணப்படுகின்றது.
கட்சி தலைமையினால் இவ்விருவரையும் ஒற்றுமைப்படுத்தி ஒரு சின்னத்தில் போட்டியிடவைக்க முடியாத நிலையை ஏறாவூர் மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் இவ்வாறு பிரிந்து செயற்படுவதை ஏறாவூர் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இதனை சிந்தித்த மக்கள் இவர்கள் எவ்வாறு ஒற்றுமைப்பட்டு எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப்ப்போகின்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் எனது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எனது வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெற வைப்பதற்காக ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இதனால் திட்டவட்டமாக கூறுகின்றேன். எந்தவிதமான சவால்களும் எங்களுக்கு இத்தேர்தலில் இல்லை. படித்த, பண்புள்ள தகுதியான மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்களையே நாங்கள் களமிறக்கியுள்ளோம்.
நான் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக, கிழக்கு மாகாணத்தின் பிரதி தவிசாளராக அது மாத்திரமல்ல இந்த ஏறாவூர் நகர சபை பிரதேச சபையாக இருக்கின்றபோது அந்த சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டவன் என்ற அடிப்படையிலும் எமது மாவட்டத்தின் சிரேஷ்ட அரசியல்வாதி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ்வின் வழிகாட்டல் இவை அனைத்திற்கும் மேலாக நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பதனாலும் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களுடைய தொடர்புகள் இவைகள் அணைத்தும் இத்தேர்தலில் ஏறாவூர் நகர சபையை கைப்பற்றக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால் பாராளுமன்றத்தை, மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் கட்சிகள் என்று கோசமெழுப்பி வருகின்றவர்களுக்கு ஏறாவூர் மக்களின் ஒத்துளைப்புடன் பெறப்போகும் இந்த தேர்தல் வெற்றி ஒரு பாரிய அதிர்ச்சியைக் கொடுக்கும், அதற்கான தேர்தலாக இத்தேர்தல் அமையும்.
கேள்வி- நாட்டின் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக உள்ள நீங்கள் ஏறாவூர் பிரதேசத்திற்கு எவ்வாறான சேவைகளை செய்ய உத்தேசித்துள்ளீர்கள்?
பதில்- விசேடமாக கடந்த மாகாண சபையிலே நான் அமைச்சராக இருந்தபோது குறிப்பாக புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் சுகாதாரத்துறை ரீதியாக இன்னும் பல அமைச்சுக்களுடைய பிரிவுகளுடாக பல்வேறு சேவைகளை நான் செய்திருந்தேன். தற்போது ஸ்ரீ லங்கா சுதந்ிரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் அதேபோன்று ஏறாவூர் பிரதேச செயலகத்தினுடைய அபிவிருத்தி இணைத்தலைவராகவும் செயலாற்றுகின்ற நான் ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருக்கின்றேன்.
அந்த அடிப்படையில் ஜனாதிபதியவர்கள் எனக்கு நம்பிக்கையூட்டியிருக்கின்றார் எதிர்காலத்தில் இந்த நகர சபை கைப்பற்றப்படுமானால் இப்பிரதேசத்தின் உட்கட்டுமானங்கள், போக்குவரத்து மற்றும் நகரை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அபிவிருத்திகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாக, அதுபோன்று அமைச்சர் பைசர் முஸ்தபா,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் மற்றும் இதர அமைச்சர்களும் என்னிடம் கூறியிருக்கின்றார்கள் மிக அதிகமான நிதிகளை தந்து இந்த நகர சபையை கட்டியெழுப்புவதற்கு உதவுவதாக, இதன் மூலம் காத்தான்குடியை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் கட்டியெழுப்பி குட்டி சவூதி அரேபியா போன்று கட்டியெழுப்பியுள்ளது போன்று எனக்கும் ஒரு கனவு இருக்கின்றது, எமது ஏறாவூர் பிரதேசத்தையும் அவ்வாறு கட்டியெழுப்ப வேண்டுமென்று, இதனை மக்கள் தீர்ப்பின் மூலம் எதிர்வரும் நகர சபையை நாம் கைப்பற்றியவுடன் நனவாக்குவோம்.
கேள்வி- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய அரசியல் போக்கு தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள் ?
பதில்- குறிப்பாக இந்த ஏறாவூர் மண்ணை பொறுத்தவரைக்கும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபினுடைய கட்சி அமைப்பு இங்கு பலம் பொருந்திய நிலையில் காணப்பட்டது. நானும் அக்கட்சியில் இருந்து மறைந்த தலைவருடைய காலத்தில் கட்சியின் இளைஞர் அமைப்பாளராக செயற்பட்டவன். அக்காப்பகுதியிலிருந்து அஷ்ரபினுடைய மரணம் வரைக்கும் மிக அதிகமான மக்கள் அக்கட்சியின் போராளிகளாக பல்வேறு இன்னல்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இயங்கினார்கள்.
ஆனால் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸினுடைய பாதை வழிதவறிச் செல்கின்ற சூழ்நிலை உருவானதால் இன்று கட்சிக்குள்ளே பல பிளவுகள் கட்சியின் தலைமைத்துவத்தை கட்சிக்குள் இருந்து விமர்சிக்கின்ற போக்கு அதேபோன்று கட்சித்தலைவருடன் இருந்துகொண்டு கட்சித் தலைவர் செய்த சமுக விரோத விடயங்கள் தொடர்பாக அக்கட்சியிலிருந்து வெறியேறியவர்கள் விலாவாரியாக கூறி அதற்கான சான்றுகளையும் மக்களிடத்திலே காண்பித்திருக்கின்றார்கள். அதனால் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பாரிய விருட்சம் இன்று சின்னாபின்னமாக்கப்பட்டு அதுவும் தேர்தல் காலங்களில் மரச்சின்னத்தை கைவிட்டுவிட்டு ஐக்கிய தேசிய கட்சியினுடைய யானை சின்னத்தில் போட்டியிடுகின்ற அபாக்கிய நிலை காணப்படுகின்றது.
அடுமட்டுமல்ல மறைந்த தலைவரினுடைய ஒரு வாக்கு றணில் விக்ரமசிங்ஹ சாரதியாக இருக்கும்வரைக்கும் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் பயணிக்கக் கூடாது என்கின்ற கொள்கையை மீறி றவூப் ஹக்கீம் தலைமையிலான காங்கிரஸ் சங்கமமாகியிருக்கின்றது. இதனை பெரும்பான்மையான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எதிர்க்கின்றார்கள். அந்த அடிப்படையில்தான் இன்று ஏறாவூரிலே இருக்கின்ற அதிகமான மு.கா போராளிகள் ஆதரவாளர்கள் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கின்றார்கள்.
கேள்வி- முஸ்லிம்களின் உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் சாய்ந்தமருது மக்களும் அரசியல்வாதிகளை வெறுத்தொதுக்கி சுயேட்சைக் குழுவாக போட்டியிடுகின்றார்கள். இந்த முடிவினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில்- நல்லாட்சி அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமுகம் கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தது. அந்த வகையிலே நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து மு. கா. செய்த பங்களிப்பிற்கு எந்தவிதமான பயனையும் முஸ்லிம் சமுகத்திற்கு பெற்றுக் கொடுக்கவில்லை. அக்கரைப்பற்றில் இருக்கின்ற நுரைச் சோலை வீட்டுத்திட்டம் முஸ்லிம்களினுடைய நீண்டகால பிரச்சினையாக இருக்கின்றது. இந்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அம்பாரை மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களினுடைய வட்டமடு காணிப்பிரச்சினை அதுபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற காணிப்பிரச்சினைகளை இன்றும் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் எடுத்து நோக்குகின்றபோது, நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பல உரிமைகளை பெற்றுக் கொடுத்ததில் சாதனை படைத்திருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது, தமிழ் விடுதலைப் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றார்கள், தமிழ் மக்களினுடைதாக குறிப்பிடப்படும் இராணுவ முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பல சாதனைகளை அவர்கள் செய்திருக்கின்றார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்விலே தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக பேசப்பட்டிருக்கின்றது. ஆனால் முஸ்லிம் சமுகத்தின் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனால் இன்று முஸ்லிம் சமுகத்திற்கு ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
இந்தப் பின்னணியில்தான் சாய்ந்தமருதினுடைய உள்ளுராட்சி பிரச்சினை தீர்க்கப்படாத நிலை மிக நீண்ட காலமாக காணப்படுகின்றது. இதனை மு.கா. முஸ்லிம் சமுகத்துடன் கலந்தாலோசனை செய்யாமல், அந்த மக்களின் கோரிக்கையை தீர்த்துவைக்க வக்கில்லாமல் அம்மக்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிலையை தோற்றுவித்திருக்கின்றது. இதனால்தான் இன்று மக்கள் மு.கா. வில் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றார்கள். இதனால்தான் மக்கள் இவர்களை இன்று புறந்தள்ளி தேசிய கட்சிகளுடன் கைகோர்த்திருக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி மன்றத்தினை வழங்குவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் தேசிய கட்சியுடன் நெருங்கிய உறவினை இன்று முஸ்லிம் மக்கள் பேணி வருகின்றார்கள்.
கேள்வி- வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக உங்களுடைய கருத்தென்ன ?
பதில்- ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினுடைய ஒரு மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்ற வகையில் இங்குள்ள கூடுதலான சகோதரர்கள் தனித்தனியேதான் இருக்க வேண்டும். அது ஒருபோதும் இணையக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். தேசிய காங்கிரஸனுடைய தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉள்ளாஹ் இந்த இணைப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தி பிரச்சாரங்களை செய்து இன்று தனித்தனியேதான் இருக்க வேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றார். எமக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது, இந்த வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு நழுவல் போக்கை கடைப்பிடிக்கின்றது. இதனால் இவர்கள் இதற்கு ஆதரவாக பேசி ஏதோ ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கு எமது மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எனவே எமது நிலைப்பாடு முஸ்லிம்களுக்கான தேசியம் என்ற அடிப்படையில் வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும்தான் இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

0 comments:
Post a Comment