• Latest News

    March 19, 2018

    முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி

    சஹாப்தீன் -
    இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இலட்சியங்கள் இல்லாத திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னதான் சாதனை படைத்துள்ளோமென்று பீத்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கப் பெற்றுள்ள பெறுமானம் சிறந்தாக அமையவில்லை. சாதாரண முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இணக்க அரசியலுக்கே பழக்கப்பட்டுள்ளார்கள். காலத்திற்கு காலம் ஆட்சி அமைத்த பேரினவாதிகளுடன் இணக்க அரசியல் என்ற போர்வையில் அமைச்சர் பதவிகளைப் பெற்று வருகின்றமையே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் நிலைத்த முடிவாக இருந்து வந்துள்ளது. ஆளும் தரப்போடு ஏற்படுத்திக் கொண்ட இணக்க அரசியல் மூலமாக முஸ்லிம்கள் நன்மைகளை அடைந்துள்ளார்கள். ஆயினும், இணக்க அரசியலினால் முஸ்லிம்கள் அடைந்து கொண்ட தீமைகள் அதிகமாகும். இதனால், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும், அரசியல்வாதிகளும், முஸ்லிம்களும் தெரிவு செய்து கொண்ட இணக்க அரசியல் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதே வேளை, முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் என்றும், தலைவர்கள் என்றும் உலாவிக் கொண்டிருப்பவர்கள் இணக்க அரசியல் மூலமாக நிறையவே சம்பாதித்துள்ளார்கள். இவர்களின் பசிக்கு முஸ்லிம் சமூகம் விலை பேசப்பட்டுள்ளமையை பெரும்பாலான முஸ்லிம்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதுதான் முஸ்லிம் அரசியலை இலட்சியப் பாதையில் கொண்டு செல்வதற்கு இருக்கின்ற மிகப் பெரிய தடையாகும்.

    முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் திட்டமிட்ட வகையில் பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவற்றில் முக்கியமானவை முஸ்லிம்களின் உணவகங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகின்றது என்பதும், முஸ்லிம்களின் ஜவுலிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பெண்களுக்கான உள்ளாடைகளில் கருத்தடைக்குரிய மருந்துகள் தடவப்பட்டுள்ளமை என்பதுமாகும். இப்பிரச்சாரம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பொய்ப் பிரச்சாரம் என்பதனை அரசாங்கமும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், புத்திஜீவிகளும் தெளிவாக அறிந்து வைத்துள்ள  போதிலும் அவற்றை தடுப்பதற்குரிய முன் ஆயத்தங்கள் எதனையும் மேற்படி தரப்பினர் செய்யவில்லை.

    இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாதிகளின் பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் காலூன்றி போன பின்னணியில்தான் தர்கா நகர், பேருவளை பிரதேசங்களில் மஹிந்தராஜபக்ஷவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும், இன்றைய அரசாங்கத்தின் காலத்தில் ஜிந்தொட்ட, கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய, திகன உட்பட பல இடங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும், குருநாகல் மாவட்டத்திலும், புத்தள மாவட்டத்தில் ஆனமடுவிலும் என பல இடங்களில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்களின் மீத மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

    இவ்வாறு முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங் கட்சியில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களினால் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த இனவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை. இந்த நாட்டை எந்தப் பேரினவாத கட்சி ஆட்சி அமைத்துக் கொண்டாலும் அக்கட்சிகளின் இயக்குநர்களாக பௌத்த இனவாதிகளே இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியாளர்கள் பௌத்த இனவாதிகளின் பின்புலத்தில் உள்ள சிறிய தொகை வாக்குகளையும் தமதாக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பௌத்த இனவாத அமைப்புக்களுடன்  நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார்கள். அவர்களை வெளிநாடுகளுக்கும் அழைத்துக் கொண்டு செல்லுகின்றார்கள். இதனால், முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும், சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கைளை முன் வைத்த போதிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால்தான், அம்பாரையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத சூழ்ச்சி கண்டி மாவட்டத்தை மட்டுமன்றி அதனைத் தாண்டியும் சென்றுவிட்டது.

    முஸ்லிம்கள் இவ்வாறு தாக்கப்படும் போது முஸ்லிம் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். ஆனால், இணக்க அரசியலுக்குள் குப்புரக் கிடக்கும் முஸ்லிம் கட்சிகளினாலும், மக்கள் பிரதிநிதிகளினாலும் எதிர்ப்பு அரசியலை தெரிவு செய்ய முடியவில்லை. அரசாங்கம் பௌத்த இனவாதிகளை பகைத்துக் கொள்வதற்கு தயாரில்லாத அதே வேளை, முஸ்லிம்களின் வாக்குகளை முஸ்லிம் கட்சிகளின் ஊடாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாமென்று நினைக்கின்றன. பேரினவாதிகள் முஸ்லிம் அரசியல் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பலவீனத்தை மிகச் சரியாக எடை போட்டு வைத்துள்ளார்கள். அமைச்சர் பதவிகளை வழங் முஸ்லிம் அரசியல் தலைவர் முதல் சாதாரண மக்கள் வரை சமாளித்துக் கொள்ளலாமென்று அவர்கள்; அறிந்து வைத்துள்ளார்கள்.

    1915ஆம் ஆண்டு பௌத்த இனவாதிகளினால் மத்திய மாகாணத்திலும் வேறு இடங்களிலும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சிங்கள – முஸ்லிம் இனக் கலவரம் போன்றதாகவே கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் அமைந்துள்ளன. இந்த தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் முறையாக செயற்படவில்லை என்பதும், அரசாங்கத்தின் தலைவர்கள் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதும் முஸ்லிம்களிடையே பலத்த எதிர்ப்புக்களை தோற்றுவித்ததுள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் எதிர்க் கட்சிக்குச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கைகள் பல பாகங்களிலும் முன் வைக்கப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் அமைச்சர் றிசாட் பதியுதீன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜே.வி.பின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர்கள் பாராளுமன்றத்தில் மிகவும் சூடான கருத்துக்களை முன் வைத்தார்கள். மேலும், அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தமக்கே உரித்தான பாணியில் கருத்துக்களை முன் வைத்தார். 

    அமைச்சர் றிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் கண்டி மாவட்டத்தில் இப்படியான ஒரு பிரச்சினை நடைபெறலாமென்று ஏற்கனவே பிரதமரிடமும், பொலிஸ் அதிகாரிகளிடமும்  தான் தெரிவித்த போது அங்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தன்னிடம் கூறி, நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள் எனக் காட்டமாகத் தெரிவித்தார். 

    மேலும், அவர் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சபாநாயாகர் கருஜயசூரிய தலைமையில் சந்தித்த போது முஸ்லிம்களின் பிரச்சினைகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதாவது, இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாதிகள், ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதில் உண்மையில்லை. இந்த நாட்டில் காவல்துறை இருக்கின்றது. உளவுத்துறை இருக்கின்றது. முஸ்லிம்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஏன் அவர்களை கண்டுபிடித்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியாது? மலட்டுத்தன்மையுள்ள மருந்தை உணவுப் பண்டங்களில் முஸ்லிம்கள் கலந்து கொடுக்கின்றார்கள் என்றால், அவற்றை ஏன் கண்டுபிடிக்க முடியாதெனக் கேட்டார்.

    மேலும், 25 வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் மீளக்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் வளர்ந்திருந்த காடுகளை துப்புரவாக்கினர். இதன்போதுதான் என்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நானும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அகதிதான். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான கதைகளை இனவாத நோக்கத்தில் பரப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது வெளிப்படுத்தப்படவில்லை. தவறு இருந்தால் உரியவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டியுள்ளோம். இனவாதிகள் முஸ்லிம்கள் மீது வீண்பழியைப் போடுகின்றனர். நாங்கள் ஒருபோதும் தவறு செய்யவில்லை என்று அமைச்சர் றிசாட் தெரிவித்தமை முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.

    இவரைப் போன்று பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் கருத்துக்களும் முஸ்லிம்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன. அதாவது, பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாகமகே என்பவரின் பேச்சைக் கேட்டு அம்பாரைக்கு செல்லவில்லை என்று தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தைரியமில்லாதவர். அவர் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது போனால் அவருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்க வேண்டியேற்படும் எனத் தெரிவித்து இருந்தார்.

    இணக்க அரசியலிருந்து எதிர்ப்பு அரசியலுக்கு செல்ல முடியாத முஸ்லிம் காங்கிரஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஹரீஸ் பேசிய பேச்சையிட்டு கொதித்துப் போய் இருந்தது. இதனால்தான் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று செயலாளர் நிஸாம் காரியப்பர் கேட்டுள்ளார். அவர் தமது கருத்தை சொல்லும் வரைக்கும் ரவூப் ஹக்கீம் கால அவகாசம் வழங்கியுள்ளார். மேலும், உயர்பீட உறுப்பினர்களிடையே பலத்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றின் அடிப்படையில் ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்;று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் முழுமையான அனுமதியுடன்தான் கொண்டு வரப்பட்டுள்ளதென்பது தெளிவாகின்றது.

    முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் பலரின் பலத்த எதிர்ப்புக்கள் காரணமாக ஒழுக்காற்று நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. என்றாலும், ஹரீஸின் கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பையும், ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கோபத்தையும், எதிரணியினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தமை உண்மையாகும். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் வெறுப்புக்கு தமது கட்சி உட்பட்டுவிடக் கூடாதென்பதற்காகவே ஹரீஸிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த நிஸாம் காரியப்பர் மூலமாக மிகவும் கச்சிதமாக உயர்பீடத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் காங்கிரஸினால் இணக்க அரசியலிருந்து விடுபட முடியாத நிலையைக் காட்டுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்து விடயத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதனால், இணக்க அரசியலை தொடர்ந்தும் பேண வேண்டிய இக்கட்டத்தில் அக்கட்சி உள்ளது. 

    முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட போது சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவே இருந்தார். ஆதலால், அவரிடம் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்பது ஒன்றும் தவறில்லை. மேலும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்காது போனால் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையை ஆதரிப்போம் என்று சொல்லுவதும் தவறில்லை. அதற்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டமை முஸ்லிம்களின் உணர்வுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே உள்ளது. இதனால், பௌத்த இனவாதிகளுக்கும், இவர்களுக்குமிடையே என்ன வேறுபாடுள்ளதென்று சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், ஹரீஸின் அரசியல் செயற்பாடுகள் குறித்த பலத்த விமர்சனங்கள் உள்ளன. ஆயினும், முஸ்லிம்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவர் முன் வைத்த கருத்துக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமானால் இதற்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்திற்கு எதிராக வாய் திறக்கவும் மாட்டார்கள். முஸ்லிம் சமூகத்தின் குரலாக  செயற்படாதுள்ள நிலையில் இத்தகைய கோரிக்கைகள் அவர்களை முழுமையான ஊமையர்களாக்கிவிடும்.

    இதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், அயல்நாடான இந்தியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்தாக அறியக் கிடைக்கவில்லை. இதனால், பௌத்த இனவாதிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதே வேளை, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பௌத்த இனவதிகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார்கள் என்பது வெளிச்சமான விடயமாகும். 

    மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதக நிலையை ஏற்படுத்;தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதல்கள் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பிற்போடப்பட்டள்ளது. கூட்டு எதிரணியினரின் அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன. மேலும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மையப்படுத்தி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்;டாலும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டுமென்ற பின்புலமும் இதில் உள்ளது. இத்தகையவர்களுக்கு எதிராக அவசர கால சட்டத்தின் மூலமாக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் இந்த வன்முறை உதவியுள்ளது. ஆதலால், முஸ்லிம்கள் தமக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து யாரையும் நம்புவதற்கில்லை.  மறு புறத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்திலும் எதிர்வினை ஏற்பட்டுள்ளது.

    தற்போது தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும், தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டாலும், பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகள் முடிந்து விட்டதென்று நம்புவதற்கில்லை. மேலும், அரசாங்கம் பௌத்த இனவாதிகளை முழுமையாகக் கட்;டுப்படுத்தும் என்பதற்கும் உத்தரவாதமுமில்லை. ஏனெனில் ஜப்பானுக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் பௌத்த இனவாதிகளும் கலந்து கொண்டுள்ளார்கள். குறிப்பாக கலகொட அத்த ஞானசாரத் தேரர் அதில் கலந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இன்றைய அரசாங்கத்திற்கும் பௌத்த கடும்போக்கு இனவாதிகளுக்கும் இடையே நெருக்கங்கள் உள்ளமை நிரூபணமாகியுள்ளது.

    இதனால், முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து இணக்க அரசியல் மூலமாக முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று உறுதியாகக் கூற முடியாது. முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினாகளும் இணக்க அரசியலில் இருக்கின்ற நிலையில் முஸ்லிம் தாக்கப்பட்டமை மட்டுமல்ல முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகள் யாவும் முழுக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் ஒரு துண்டுக் காணி கூட விடுவிக்கப்படவில்லை. புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் நலன்கள் பேணப்படும் அம்சங்கள் உள்ளடக்கப்படுவதற்கு உத்தரவாதங்களில்லை. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டம் பற்றி எதுவுமில்லை. இவ்வாறு எல்லா ரீதியிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பின்னணியில் இணக்க அரசியலை விடவும் எதிர்ப்பு அரசியலே நன்மைகளைக் கொண்டுவரும். ஆளுங் கட்சியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுமில்லை. முஸ்லிம்களைப் பற்றி பேசவும் முடியாது. ஆதலால், எதிர்க்கட்சியில் இருந்தால் குறைந்தபட்சம் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசலாம். சர்வதேசத்திடம் முறையிடலாம். ஆயினும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்க அரசியலையே மேற்கொள்வார்கள். இதில்தான் அவர்களுக்கு இலாபமாகும். சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாதவர்கள் தமது பக்கட்டை நிரப்பவே சமூகத்தைப் பாவிப்பார்கள். முஸ்லிம் சமூகம் தோல்வியடைந்தாலும் தாங்கள் தோல்வியடைந்து விடக் கூடாதென்பதில் குறியாக உள்ள அரசியல் தலைமைகள் உள்ளவரை இணக்க அரசியலே முஸ்லிம்களின் அரசியல் பாதையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 
    Virakesari 18.03.2018
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top