பியாஸ் முஹம்மத் –
நாங்கள்
அவர்களுடைய அநியாயங்களுக்குத் துணை போகின்றவர்களாக இல்லாமலிருந்தால், மொத்த
சமுதாயத்தையும் குட்டிச் சுவராக்குவதற்கு யாராலும் முடியாது – எட்வர்ட் மோரோ – அமெரிக்க ஊடகவியலாளர்.
எல்லாம் வல்ல சக்தியொன்று தம்மை ஆள
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானதொரு மனப்பாங்காக எல்லோரிடமும்
இருக்கிறது. இப்படி ஒரு சக்தி இருப்பதை ஏற்றுக் கொள்ளாத உள்ளங்கள்
தம்மிலிருந்து ஒருவர் இந்தச் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று
எதிர்பார்ப்பது ஒன்றும் விசித்திரமானதல்ல. ஆனாலும் இப்படி மகாசக்தியாக
உருவெடுத்தவர்கள் எவருமே உலகுக்கு நல்லதைச் செய்துவிட்டுச் செல்லவில்லை
என்பது தான் இன்றுவரையுள்ள வரலாறு.
இலங்கையின் பிரதான மதமான பௌத்த மதத்தின்
மதகுருமாரும் இந்த உலக நியதியை விளங்கியிருக்கிறார்களா என்பது தற்சமயம்
கேள்விக்குறியாகியுள்ளது. கோதாபய ராஜபக்ஷவின் 69 ஆவது பிறந்த தின
வைபவத்தின் போது, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வென்டருவே உபாலி ஹிமி
அவரை ஆசீர்வதித்த வார்த்தைகள் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்றன.
நாட்டுக்கு ஹிட்லருடைய ஆட்சி தான் தேவையென்றால் நீங்கள் ஹிட்லராகி நாட்டைக்
கட்டியெழுப்புங்கள் என்று அவர் போதித்த விடயங்கள் இன்று பல்வேறு
கோணங்களில் அலசப்பட்டு வருகின்றன. இவரது கருத்துக்கள் ஜனாதிபதி, பிரதமர்
உட்பட பலராலும் தத்தமது கோணங்களில் கையாளப்பட்டு வரும் நிலையில் தமது
கருத்துக் குறித்த விளக்கமொன்றை வென்டருவே உபாலி ஹிமி வெளியிட்டிருந்தார்.
ஆட்சி செய்யும் போது தெளிவான, உறுதியான கொள்கை இருக்க வேண்டும் என்பதனை
வலியுறுத்தவே ஹிட்லரைப் போன்று என்ற வார்த்தையைப் பிரயோகித்தேனேயன்றி
ஹிட்லர் மக்களைக் கொன்றொழித்ததைப் போன்று மிலேச்சத்தனமான ஆட்சியொன்றை நடத்த
வேண்டும் என்பதல்ல என்று அவர் தனது போதனைக்கு வியாக்கியானம்
சொல்லியிருக்கிறார்.
அனுநாயக்க ஹிமி அவர்கள் சொல்வது போல
தெளிவான உறுதியான கொள்கை இருக்கின்ற ஆட்சியாளர் பற்றி அவர் சொல்ல
விளைந்திருந்தால் சிங்கப்பூரின் லீ குவான் யூ வையோ, மலேசியாவின் மஹதிர்
முஹம்மதையோ, துருக்கியின் அர்துகானையோ குறிப்பிட்டிருக்க முடியும். இந்த
ஆட்சிகளை விட ஹிட்லருடைய ஆட்சியில் மக்களைக் கொன்றொழித்த மிலேச்சத்தனத்தைத்
தவிர வேறைதனையும் வடிகட்டி எடுப்பதற்கில்லை. அரசாட்சியில் அவர் செய்த
சாதனையாக ஒன்றாக இருந்த ஜேர்மனியை அவரது அந்திம காலத்தில் கிழக்காகவும்
மேற்காகவும் பிரித்தமையைத் தான் கொள்ள முடியும். ஹிட்லருடைய தனிப்பட்ட
வாழ்க்கையிலும் கூட தலைமைகளுக்கு முன்னுதாரணமாக எடுத்துச் சொல்லுமளவுக்கு
நல்ல விடயங்கள் இருக்கவில்லை. ஹிட்லருடைய தந்தையின் தாய், யூதரொருவருடைய
வீட்டில் பணி புரிந்த பொழுது கர்ப்பமாகிறாள். ஹிட்லருடைய தந்தைக்கு தனது
தந்தை யார் என்பது தெரியாது. இந்த வெறுப்பை அவர் தனது பிள்ளையான ஹிட்லர்
மீது காட்டுகிறார். அவரை பலவிதத்திலும் துன்புறுத்துகிறார். காலப் போக்கில்
இந்தச் சித்திரவதைகளுக்காக அழாமல் தனது மனதைக் கல்லாக்கிக் கொள்ளும்
ஹிட்லர், இதற்காக யூத இனத்தையே பழி வாங்குகிறார். இந்த வெறியின் காரணமாக 60
இலட்சம் மக்களை அவர் கொன்றொழித்ததாக வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. இந்த
வகையில் தான் வெறுக்கின்ற சமூகத்தை அடியோடு கருவறுக்கின்ற விடயத்தைத் தான்
உபாலி ஹிமி ஹிட்லர் முன்மாதிரி மூலமாக கோதாபயவுக்கு ஏவினாரா என்பது
புரியவில்லை.
அப்படித் தான் ஏவியிருந்தாலும் அதில்
ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை. அகிம்சையைப் போதிக்கும் பௌத்த
மதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த நாட்டில் ஆட்சி செய்தவர்கள் அனைவருமே
தாம் ஆட்சிக்கு வருவதற்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்குமாகக் கொலை
செய்வதை தமது வழிமுறையாகவே எடுத்து வந்திருந்திருக்கிறார்கள். இலங்கை
சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 194 மன்னர்கள் இலங்கையை ஆட்சி
செய்திருக்கிறார்கள். அதில் 175 பேர் சிங்கள அரசர்கள். 19 பேர் தமிழ்
அரசர்கள். இவர்களில் 60 பேர் தாம் ஆட்சிக்கு வருவதற்காக பட்டத்து இளவரசனைக்
கொன்று விட்டு ஆட்சிக்கு வந்தவர்கள். 53 பேர் தமது சகோதரனைக் கொன்று
விட்டு ஆட்சியைக் கைப்பற்றியவர்கள். தந்தையைக் கொன்று விட்டு 5 பேர்
ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அனுலா தேவி தனது கணவனைக் கொன்று விட்டு
ஆட்சிக்கு வந்தவள். (சரத் டி அல்விஸ்)
சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தக்
கொலைகள் ஹிட்லர் பாணியிலான மனிதப் படுகொலைகளின் சொரூபத்தை
எடுத்திருக்கின்றது. அதுவும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை அமுலுக்கு வந்த
பிறகு நாட்டில் முன்சொன்ன ஹிட்லரின் ஆட்சிதான் நடந்து வருகிறது. முதலாவது
நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கு வந்து ஐந்தாண்டுகளில் சிறுபான்மைத்
தமிழர்களைக் கொன்று குவித்தார். அடுத்து வந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி
பிரேமதாச 60,000 க்கும் மேற்பட்ட ஜேவிபியினரைக் கொன்றார். சந்திரிகாவும்
மஹிந்தவும் ஜேஆர் துவக்கிய சிறுபான்மைக்கெதிரான படுகொலையை கச்சிதமாகத்
தொடர்ந்தவர்கள் என்ற வகையில் இந்தப் பட்டியலில் இணைகின்றனர். மஹிந்த
ராஜபக்ஷ காலத்திய இறுதிப் போர் படுகொலைகள் அவரதும் பாதுகாப்புச் செயலாளர்
என்ற வகையில் அவரது சகோதரர் கோதாபயவினதும் பெயர் சர்வதேச அளவில்
சொல்லப்படுமளவுக்கு காரணமாக இருந்திருக்கின்றன. ஆட்சிக்கு வருவதற்கு
எத்தனித்த ஜேவிபியினர் ஒரு கொலைக்களத்தையே நடத்திவிட்டுச் சென்றார்கள்.
வடக்கில் ஆட்சி செய்யத் துடித்த பிரபாகரன் வகைதொகையின்றி மக்களைக் கொலை
செய்து மடிந்து போனான்.
இந்த வகையில் சுதந்திரத்துக்குப் பின்னர்
ஆட்சிக்கு வர முயற்சித்தவர்களும், நிறைவேற்றதிகாரம் பொருந்தி ஆட்சி
செய்தவர்களும் எல்லாம் ஹிட்லர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.
சந்திரிக்காவுக்கு இந்தப் பெயரை முழுமையாகத் தட்டிக் கொள்ள முடியாமலும்,
மைத்திரிபாலவுக்கு இதனை நோக்கி நகர முடியாலும் இருப்பதற்கு அரசியல்
யாப்பில் நிறைவேற்றதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத பலவீனத்துக்கு
இவர்கள் ஆளாகியிருப்பது காரணமேயன்றி இலங்கையில் ஹிட்லர் யுகம்
முடிவடைந்தது என்பதல்ல. இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்றதிகாரத்தை
பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி தனக்கென அமைச்சரவையைக் கொண்டிருப்பது
முக்கியமானது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள
கட்சியிலிருந்தே அமைச்சரவை தெரிவாகிறது. அந்த வகையில் கட்சியில்
பெரும்பான்மையைப் பெற்றிருப்பதும் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு முக்கியம்
பெறுகிறது. சந்திரிகாவுடைய காலத்தில் ஒரு முறை அவருக்கு இந்தப் பலம்
இல்லாமல் போனதினால் தனது அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவுக்கு முன்னால்
தலைகுனிய வேண்டியிருந்தது. மைத்திரிபாலவின் நிலை பற்றி புதிதாக எதுவும்
சொல்ல வேண்டியதில்லை. தனது கையறு நிலைபற்றி அவர் பல இடங்களிலும் கூறி
வருவது இதற்குப் போதுமானது.தன்னை முதுகெலும்பில்லாதவர்கள் எனப் பலரும்
வர்ணிப்பதாக அவரே பல இடங்களிலும் குறிப்பிட்டு வருகிறார்.
நாட்டுக்குப் பழகிப் போன இந்த ஹிட்லர்
ஆட்சியின் நீட்சி, மைத்திரி ஆட்சியில் காணக்கிடைக்காமை தான் உபாலி ஹிமி
கோதாபயவிடம் இந்த வேண்டுகோளை விடுக்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
நிறைவேற்றதிகார முறையை இல்லாதொழிப்பதற்கு ஜேவிபி முன்வைத்துள்ள இருபதாவது
திருத்தத்துக்கு ஆதரவு கிடைக்காமலிருப்பதற்கும் நிகழ்காலத்தில் மக்களிடம்
நிலவுகின்ற இந்தக் கருத்துப் போக்கு காரணமாக அமைந்திருக்க முடியும்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கரான பௌத்த பிக்கு இந்த வேண்டுகோளை
விடுப்பதற்கான பின்னணியில் தனது இனம் அழிந்து போகாமல் காப்பதற்கான பயமும்
காரணமாக இருந்திருக்க முடியும். ஏனெனில் நிறைவேற்றதிகாரம் மிக்க அனைத்து
ஜனாதிபதிகளும் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைப் பாதுகாப்பதையே தமது தலையாய
பணியாகக் கொண்டிருந்தனர். சிங்கள இனம் அழிந்து விடும் என்ற சிங்கள மக்களின்
பயத்தைப் போக்கி அரசியல் செய்வதில் தான் அனைத்து நிறைவேற்றதிகார
ஜனாதிபதிகளும் வெற்றி கண்டுள்ளனர்.
சமகால உலகின் இயல்புகள் பற்றி தனது அப்ஸைட் டௌன் நூலில் எட்வர்டோ கலியானோ (Eduardo Galeano)
குறிப்பிடுகையில், இது பயத்தின் காலம். பெண்கள் வன்முறையான ஆண்களுக்குப்
பயப்படுகிறார்கள். ஆண்கள் துணிச்சலான பெண்களுக்குப் பயப்படுகிறார்கள்.
கள்வர் பயம், பொலிஸ் பயம், தாழ்ப்பாள் இல்லாத கதவு பற்றிப் பயம், கடிகாரம்
இல்லாத காலம் பற்றிப் பயம், தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் பற்றி,
தூக்க மாத்திரை இல்லாத இரவுகள் பற்றி, மாத்திரைகள் இல்லாமல் கழிக்கின்ற
பகல் பொழுதுகள் பற்றி எல்லாம் பயம். சனத்திரளும் பயம். தனிமையும் பயம்.
நடந்தவை பற்றியும் பயம். நடக்கவிருப்பவை பற்றியும் பயம். மரணமும் பயம்.
வாழ்வதும் பயம் என்று குறிப்பிடுகிறார்.
இந்தப் பயப்பிராந்தி தான் இலங்கையரிலும்
காணக்கிடக்கிறது. குறிப்பாக பெரும்பான்மைச் சமூகத்துக்கு, தமது அரசியலைக்
கொண்டு செல்வதற்காக அரசியல் சக்திகளால் இது ஊட்டப்பட்டிருக்கிறது. புலிகள்
மீண்டும் எழும்பி வருவார்கள் என்ற பயம், முஸ்லிம்கள் அதிகரித்து
விடுவார்கள் என்று பயம், பௌத்தர்கள் பன்சலை செல்ல மாட்டார்களோ எனும் பயம்,
முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குச் செல்கின்றார்களே என்று பயம், பௌத்த மதம்
அழிந்து விடும் என்ற பயம், சிங்கள இனம் இல்லாமல் போய்விடும் என்ற பயம்,
முஸ்லிம் பெண்களின் அபாயா ஒரு பயம், சிங்களப் பெண்களின் மேல்நாட்டு ஆடை
மோகம் ஒரு பயம், நல்லிணக்கமும் பயம், மீண்டும் யுத்தம் வருமோ என்றும் பயம்.
முன்னர் நிறைவேற்றதிகாரம் பயம், இப்பொழுது அதனை இல்லாமலாக்குவதற்குப் பயம்
என இந்தப் பயப்பிராந்தி தொடர்கிறது.
முடிவில்லாத இந்தப் பயங்களுக்கு
அடிமையானவர்கள் இந்தப் பயத்திலிருந்து மீளுவதற்கான மீட்பரொருவர் தலையெடுக்க
வேண்டும் என்று கருதுகின்றனர். இயக்கர்களுக்கும் (பேய்கள்) நாகர்களுக்கும்
இடையில் நடந்த கைகலப்பிலிருந்து நாட்டை மீட்பதற்காக இலங்கை வந்தருளிய
புத்தரை மறந்து விட்டு எங்கோ இருக்கின்ற ஹிட்லரை பௌத்த மதத்தின் உயர்பீடம்
ஞாபகப்படுத்துகின்ற அளவுக்கு இந்தப் பயம் உச்சம் கொண்டிருக்கிறது. இந்தப்
பயத்தைப் போக்குவதற்கு ஹிட்லர்களினால் முடியாது என்பதை ஆறு நிறைவேற்றதிகார
ஜனாதிபதிகளும் நிரூபித்திருக்கிறார்கள். இனி ஹிட்லர் இல்லாத இலங்கையைப்
பற்றித்தான் மக்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. போதிமாதவனின் போதனையைப்
பின்பற்றும் நாடு என்பது உண்மையாகவிருந்தால் ஹிட்லர் யுகங்களுக்கு முற்றுப்
புள்ளி வைப்பது முடியாததில்லை.


0 comments:
Post a Comment