ஏ.எல்.நிப்றாஸ் -
முஸ்லிம்களுக்கு எதிராக உலக ஒழுங்கில் தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நகர்வுகள், யுத்தங்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள், நெருக்குவாரங்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒழிந்து கொண்டிருக்கின்ற மறைமுக நிகழ்ச்சிநிரல் பற்றிய தெளிவான நிலைப்பாட்டுக்கு முஸ்லிம்கள் வந்தாக வேண்டியிருக்கின்றது. அதுவே, ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ள வழிவகுக்கும்.
முஸ்லிம்களுக்கு எதிரான நேரடி, மறைமுக நிகழ்ச்சி நிரல்கள், அதற்குப் பின்னாலுள்ள நோக்கங்களை புரிந்து கொள்ள முஸ்லிம்கள் வரலாற்றினூடான மீள்வாசிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும். இன, மத ரீதியாக அல்லாமல் சமூகவியல் ரீதியாகவும் உலக ஒழுங்கை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
உலகில் 1.8 பில்லியனாக வாழ்கின்ற முஸ்லிம்கள் சனத்தொகை அடிப்படையில் உலகில் 2ஆவது இடத்திலுள்ள மிகப் பெரிய மதக் குழுமமாகும். முஸ்லிம்கள் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னர் உலகின் பெரும் நிலப்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முஸ்லிம்களால் கடைசியாக ஆளப்பட்ட பெருநிரப்பரப்பு உஸ்மானிய (ஒட்டமன்) பேரரசு ஆகும்.
இந்த சாம்ராஜ்யம் வீழ்ந்த பின் அரபு நாடுகள்தான் இன்று முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்புக்களாக தற்காலத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றன. இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதில் 50 நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாக உள்ளன. ஆகவே முஸ்லிம்களின் வரலாறு உலகெங்கும் பரந்து பட்டதாகவும் தொன்மையானதாகவும் இருப்பதால் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்களும் பரந்ததாகவும் நாட்பட்டதாகவும் இருக்கக் காண்கின்றோம்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ், சிங்கள இனங்களைச் சேர்ந்த மக்களுக்கெதிரான இப்பேர்ப்பட்ட ஒரு உலக நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களும், தென்னாசிய போன்ற ஓரிரு பிராந்தியங்களில் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களும் தொடர்ச்சியாக சோடிக்கப்பட்ட காரணங்களால் நெருக்குவாரப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.
ஆனால், அதற்காக - தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்களும் முஸ்லிம் நாடுகளும் செய்கின்ற காரியங்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு உட்பட்டவையும் இல்லை ஏற்றுக் கொள்ளத்தக்கவையும் இல்லை. அதேபோன்று முஸ்லிம்களுக்காக போராடுவதாகச் சொல்லிக் கொண்டு, அப்பாவிச் சிறுவர்களையும் பொது மக்களையும் அநியாயப் படுகொலை செய்து அதன்மூலம் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தக் காரணமாகின்ற ஆயுத இயக்கங்களின் மனிதவிரோத செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
மறுபுறத்தில், இலங்கை போன்ற பல்லின நாடுகளி;ல் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்கள் அரபுநாட்டவர் போல தம்மை நினைத்துச் செயற்படுவதை மறுபரீசீலனை செய்ய வேண்டும். அதற்காக, விட்டுக்கொடுத்தல் அல்லது இணங்கிப் போதல் என்ற கோதாக்களில் பொறுப்புவாய்ந்த அமைப்புக்கள் பேச விடயங்களைப் பேசமால் பொறுமைகாத்துவிட்டு, சமூக நல்லிணக்கத்திற்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் பாங்கில் செயற்படுவதையும் பொறுத்தருள முடியாது.
எல்லாவற்றுக்கும் பின்னால்
ஏனென்றால் மேற்குலகம் தொட்டு கீழைத்தேயம் வரை முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற 99 சதவீதமான நகர்வுகளுக்கு சிறியதும் பெரியதுமாக ஒரு அஜந்தா இருக்கின்றது. நிகழ்ச்சிநிரலை புரிந்துகொள்ளாவிட்டால் நிகழ்ச்சிகளின் முடிவை யாரோதான் தீர்மானிப்பார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளும், பொறுப்புவாய்ந்த அமைப்புக்களும், இயக்கங்களும் கெட்டு குட்டிச்சுவராகி இருப்பதற்கு எதனையும் எதிர்த்து கேள்வி கேட்காமல் இருப்பதே அடிப்படைக் காரணம் என்பதை முதலில் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உலக ஆயுத ஏற்றுமதிச் சந்தையில் முஸ்லிம்களின் பரம விரோதிநாடாக கருதப்படும் அமெரிக்கா முதலாம் இடத்தில் இருக்கின்றது. அதாவது உலக பொலிஸ் காரனாகவும் நாட்டாமையாகவும் தன்னைக் காட்டிக் கொள்கின்ற அமெரிக்காவே பெரும்பாலான ஆயுதங்களை விற்பனை செய்கின்றது. ஆயுதச் சந்தையில் முதல் பத்து இடங்ளுக்குள், தமக்கு அடைக்கலம் கொடுத்த பலஸ்தீனத்தை சிதைத்த இஸ்ரேல் மற்றும், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன.
அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சித்தரிக்க முயன்று அடிக்கடி தோற்றுப் போகின்ற போதிலும், உலகுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்வது முஸ்லிம் நாடுகள் இல்லை. ஆக இங்கே நடப்பது ஆயுத வியாபாரம் எனும் நிகழ்ச்சி நிரலாகும். அதாவது இந்த ஆயுத ஏற்றுமதி நாடுகள்தான் அரசாங்கங்களுக்கும் அதற்கெதிராக கிளர்;ச்சி கொள்கின்ற ஆயுதக் குழுக்களுக்கும் ஆயுதங்களை நேரடியாகவும் வேறு நாடுகள் ஊடாகவும் விற்பனை செய்கின்றன.
தீவிரபோக்குடைய இளைஞர்களில் ஆயுத பசிக்கு தீனிபோட்டு விட்டு மறுபுறத்தில் அவர்களை அழிப்பதற்காக அரசாங்கங்களுக்கு அதைவிடப் பெரிய ஆயுதங்களை வழங்குகின்றன. ஒருகட்டத்தில் சமாதானத்தை நிலைநாட்டுதல் என்ற பெயரில் அவ்வாறான நாடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி நவீன பாணியிலான ஒரு காலனித்துவத்தை மேற்கொண்டு வருகின்றன. அரபுலகில் நடப்பவை இதற்கு நல்ல உதாரணமாகும்.
உலக இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது நிலங்களைக் கைப்பற்றி அவர்களை நாதியற்றவர்களாக ஆக்குவது என்ற உள்நோக்கமே இவற்றுக்கெல்லாம் அடிப்படையான நிகழ்ச்சி நிரலாகும். அது பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அந்த வகையில், உலகில் முஸ்லிம்கள் வாழும் பிராந்தியங்களில் நடந்த, நடக்கின்ற யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆயுத விற்பனை என்ற நோக்கத்தை விட நில ஆக்கிரமிப்பும் இயற்கை வளங்களை கையகப்படுத்தும் நோக்கமும் மேலோங்கிக் காணப்படுகின்றது.
உலக நாடுகள் தொடக்கம் இலங்கை வரை 90 களுக்குப் பின்னராக நடைபெற்று வருகின்ற நிகழ்ச்சிகளை ஒரு தொடராக நோக்கினால், முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சிநிரலின் வன்மத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சதாமிற்கான திட்டம்
ஈராக்கிய ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹூசைன் முஸ்லிம்களால் ஒரு ஹீரோவாக நோக்கப்படுபவர். மறுபுறத்தில் பல வில்லத்தனமான வேலைகளையும் பார்த்துள்ளார். ஈரான்-ஈராக் யுத்தம் மற்றும் குவைத் யுத்தம் நடைபெற்ற காலங்களில் அதிகாரத்தை தன்கையில் வைத்திருந்தவர் என்றாலும், அவர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் நியாப்படுத்தும் தரமன்று. இந்நிலையில் 2003ஆம் ஆண்டளவில் அமெரிக்கா தனது கூட்டாளிகளோடு களத்தில் இறங்கி போர் தொடுத்தது.
அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருந்த ஒரு பெரும் முஸ்லிம் ஆட்சியாளரையும் ஆட்சியையும் கவிழ்ப்பதற்கான நிகழ்ச்சி நிரல் இங்கு நடந்தேறியது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் 'சதாம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததாக' உலகளவில் பரப்புரை செய்து, சதாம் அழிக்கப்பட வேண்டியவர் என்பதை நியாயப்படுத்தி விட்டு களமிறங்கினார்கள். சதாம் மனித உரிமைகளை மீறுவதாக சொன்னவர்கள் அங்கு அதைவிடப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தி விட்டு தமக்கு விரும்பியவர்களுக்கு அதிகாரம் வழங்கி, 2006இல் சதாமுக்கு தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தனர்.
ஆனால் அங்கு அப்படியான எந்த பேரழிவு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக சதாமின் 23 வருட ஆட்சியில் நடக்காத அநியாயங்களை, மனித உரிமை மீறல்களை நிகழ்த்திவிட்டு உலக பொலிஸ்காரர்களும் ஊர்காவல் படையினரும் தப்பித்துக் விட்டு, எண்ணெய் வளம் நிறைந்த ஈராக்கில் தமது ஆதிக்கத்தை பலப்படுத்தினர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அரபு வசந்தம்
பிறகு அரபு வசந்தம் என்று ஒரு பேரெழுச்சி முடுக்கிவிடப்பட்டது. அரபிய ஆட்சியாளர்கள் நூற்றுக்கு நூறுவீதம் தூய்மையானவர்கள் என்றோ சுற்றவாளிகள் என்றோ நாம் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் தமது நாடுகளை சிறப்பாக வளர்ச்சியடையச் செய்திருந்தார்கள். யாரிடம் கையேந்தாத, எந்தக் கொம்பனிடம் மண்டியிடாத தன்னிறைவு நாடாக கட்டமைத்திருந்தார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.
ஆனால், சதாம் போன்றோரை பிடித்து தூக்கிலிட்டது போலவோ பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்ட ஒசாமா பின்லேடனை அலாக்காக சுட்டது போலவோ, தமக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்த முடியாத நிலை மேற்குலகுக்கு இருந்தது.
இந்த வேளையில்தான் 2010ஆம் ஆண்டு ஆபிரிக்க முஸ்லிம் நாடான துனிசியாவில் 'மல்லிகைப் புரட்சி' என்ற ஜனநாயகவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் வெற்றிபெற்று ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியதையடுத்து, இந்த எழுச்சிக் காய்ச்சல்- அரபு வசந்தம் என்ற பெயரில் வேறுபல அரபு நாடுகளுக்கும் தொற்றிக் கொண்டது. ஏனென்றால் அரபு நாடுகள் பலவற்றில் அபிவிருத்தியும், பொருளாதார வளமும் இருந்தபோதும் நெடுங்காலமாக ஆட்சிசெய்யும் ஆட்சியாளர்களின் பண்பில் அல்லது ஆட்சியில் மாற்றமொன்று வேண்டுமென்ற உணர்வு அந்தந்த நாடுகளிலேயே துளிர்விட்டிருந்த காலமது.
இந்தப் பின்னணியில் சொல்லி வைத்தாற்போல் லிபியா, எகிப்து, யெமன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இதேபாங்கிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அல்லது யாரோ இதற்கான பொறியைத் தட்டிவைத்தார்கள். அரசுக் கெதிரான போராட்டமாக, இரு அணிகளுக்கிடையிலான மோதலாக இது உருவெடுத்தது. உண்மையாகச் சொல்லப் போனால்... ஒருசில முஸ்லிம் நாடுகளின் ஆட்சிகளை வீழ்த்த வழிதெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட முஸ்லிம் விரோத சக்திகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உள்நாட்டுக் கலவரங்களுக்குள் மூக்கை நுழைத்து, அமைதியை நிலைநாட்டுதல், சமரசத்தை ஏற்படுத்தல், ஜனநாயகத்தை நிலை நிறுத்துதல் என்ற தோரணையில் முஸ்லிம் சாம்ராஜ்யங்களை அழித்தொழிக்கும் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதற்கு முதலில் இலக்கான நாடு எகிப்து எனலாம். துனிசீயாவில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து 2011இல் இளைஞர் போராட்டம் என்ற அடைமொழியோடு எகிப்திய புரட்சி ஆரம்பமானது. சுமார் 30 வருடங்களாக ஆட்சிபுரியும் அதிபர் ஹூஸ்னி முபாரக்கின் பதவி விலகலை முன்னிறுத்தி தெருப் போராட்டங்கள் இடம்பெற்றன. கடைசியில் இலங்கையைப் போலவே அரச படைகளுக்கும்,போராட்டக் காரர்களுக்கும் இடையில் பாரிய மோதல் வெடித்து, அதில் பலர் இறந்தனர். அந்த நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி, முஸ்லிம்களை அழித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த நினைத்த நிகழ்ச்சிநிரலுக்கு சொந்தக் காரர்கள், கடைசியில் அதைச் செய்து முடித்தனர்.
லிபியா முதற்கொண்டு
அரபு வசந்தம் ஆரம்பமான பின்னர், உயிர்ப்பலி எடுக்கப்பட்ட முதலாவது ஆட்சியாளராக லிபியாவின் அதிபர் கேர்ணல் கடாபியை குறிப்பிட முடியும். சுகபோக விரும்பியாகவும், கர்வம் நிறைந்தவராகவும் 34 வருடங்களாக ஆட்சி செய்த கடாபி நிறைய தவறுகளைச் செய்திருக்கின்றார். ஆனால் சமகாலத்தில் லிபியாவில் அவர் ஏற்படுத்திய அபிவிருத்தி என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. குறிப்பாக தனிநபர் வருமானத்தை கணிசமாக உயர்த்தியிருந்தமை அமெரிக்காவையே கதிகலங்க வைத்தது எனலாம். பிறகென்ன, அந்த நாடும் அரபு வசந்தத்தின் கீழ் சிதைக்கப்பட்டு, கடாபி பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
துனிசிய புரட்சியின் சமகாலத்தில் எழுச்சி பெற்ற மெயன் புரட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் மட்டுமன்றி ஏனைய அரபு நாடுகளின் செல்வாக்கும் இருக்கின்றது. அங்கு மதப்பிரிவுசார் நிலைப்பாடுகளும் கணிசமான செல்வாக்குச் செலுத்துவதாக குறிப்பிட முடியும். இந்நிலையில், சவூதி அரேபியா தலைமையிலான முஸ்லிம் நாடுகளும் இன்னுமொரு முஸ்லிம் நாட்டுக்கெதிராக போர் தொடுத்து, அழிவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு உலக 'நாட்டாமைகளால்' வழிகெடுக்கப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம் விரோத சக்திகளின் தூண்டுதலாலும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்றன ஒரு சில அரபு நாடுகளின் பக்கபலத்தோடும் ஆட்சிமாற்றம், வசந்தம் அல்லது ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற தோரணையில் தியுனீசியா தொடங்கி யெமன் வரையில் நடந்து கொண்டிருக்கின்ற போராட்டங்களும், சிரியாவின் உள்நாட்டு மோதல்களும் மறுபுறத்தில், சமகாலத்தில் பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில் காசாவில் முஸ்லிம்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலிய மிலேச்சத் தாக்குதலும் அடிப்படையில் ஒரே நிகழ்ச்சிநிரலின்பாற்பட்டவை என்றே கருத வேண்டியுள்ளது.
முஸ்லிம் நாடுகளில் ஸ்திரத்தன்மையை குலைத்து, பொருளாதாரத்தை சீரழித்து, மக்களைக் கொன்று, ஆட்;சியாளரை அடிபணிய வைத்து, அங்குள்ள எண்ணெய் உள்ளிட்ட வளங்களைச் சூறையாடும் நவீன காலனித்துவ நிகழ்;ச்சி நிரலின் செயல்வடிவங்கள்தான் இவை. இதேவேளை, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் மியன்மார், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்களை அடக்கி ஒடுப்பதற்கான நிகழ்ச்சிநிரல் வேறு வழிமுறைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கை நிலவரம்
இலங்கையில் ஆரம்பகாலத்தில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு பௌத்த இனவாதம் காரணமாக இருந்திருக்கலாம். முஸ்லிம்களின் யுத்தகால இழப்புக்களுக்கு ஆயுத இயக்கங்கள் காரணமாக இருக்கலாம். அரசியல் ரீதியான ஓரங்கட்டல்களை பெருந்தேசியவாதம் முன்னின்று மேற்கொள்ளலாம்.
அது வேறு விடயம் ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பிற்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பெரும்பாலான சம்பவங்களுக்குப் பின்னால் உள்நாடு அல்லது வெளிநாட்டு சக்திகளின் உள்நோக்கங்கள் நிறைந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் உப நிகழ்ச்சி நிரலும் இருக்கின்றது என்பதை, உன்னிப்பாக நோக்குவோரால் புரிந்து கொள்வது கடினமன்று.
பிராந்தியத்தில் சியோனிசம், இந்துத்துவா மற்றும் பௌத்த இனவாதங்கள் தேவையானபோது முஸ்லிம்களுக்கு எதிராக திரைமறைவில் கைகோர்த்துச் செயற்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கெதிரான உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவும் உள்நாட்டுச் சக்திகளின் உப நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாகவும் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
வடக்கில் இருந்த முஸ்லிம்கள் அற்ப காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டமை, இன்னும் மீளக் குடியேற்றுவது சவாலாக இருக்கின்றமை, கிழக்கில் பள்ளிவாசல்கள் பலிபீடங்களாக ஆக்கப்பட்டமை, சமாதானப் பேச்சுக்களில் முஸ்லிம்கள் சிறு குழுக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டமை, பேச்சுக்களில் தனித்தரப்பாக இடம்வழங்க விரும்பாமை என்பனவெல்லாம் இயல்பாக நடந்த நிகழ்ச்சிகள் அல்ல. அவற்றுக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருந்தது.
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, ஹலாலை பறித்தமை, அபாயா அணியக் கூடாது என சிங்களவர்கள் மட்டுமன்றி ஒருசில தமிழர்கள் சிலரும் போhக்கொடி தூக்கியமை, திகண கலவரத்தில் வர்த்தக நிலையங்களும் பள்ளிகளும் இலக்கு வைக்கப்பட்டமை, மாட்டிறைச்சி அறுக்கக் கூடாது என்று மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றோர் போர்க்கொடி தூக்கியமை, ஹஜ்பெருநாள் காலத்தில் அதுவிடயத்தில் வரையறைகள் விதிக்கப்பட்டமை, முஸ்லிம்களுக்குள் இத்தனை இயக்கங்கள் உருப்பெற்று பிளவுகள் தோன்றியுள்ளமை, முஸ்லிம் தனியாள் சட்டத்தை திருத்தச் சொல்லி வேறு மதத்தவர்கள் போராடுகின்ற வினோதம் ஆகியவற்றுக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கின்ற நோக்கங்கள் நிறைந்த நிகழ்ச்சி நிரல் என்னவென்பதை சிந்தித்து உய்;த்தறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆயுதக் கதைவிடுதல்
இதன் மிகப் பிந்திய முன்னெடுப்பாகவே, தமிழ் விடுதலைப் புலிகள் என்ற கட்சியின் தலைவர் இம்ராசா என்பவர் கூறியிருக்கின்ற கருத்தை கருத முடிகின்றது. 'இப்போது முஸ்லிம்களிடமே ஆயுதம் இருப்பதாகவும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புலி உறுப்பினர்கள் நல்ல விலைக்கு ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்றுவிட்டனர்' என்றும் படுமுட்டாள்தனமான, அடிப்படையற்ற ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
தமிழர்கள் உயிருக்கும் மேலாக நினைத்த விடுதலைப் போராட்டத்திற்காக உயிரைக் பணயம் வைத்து போராடியவர்கள் ஆயுதங்களை விற்றிருப்பார்கள் என்றால் அது ஒருவகையில் காட்டிக் கொடுப்பாகும். ஓரிருவர் செய்ததை எல்லா புலிகளும் செய்தது போல் பகிரங்கமாகச் சொல்வது போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதனையும் மீறி அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்றால் இதற்குப் பின்னால் இருக்கின்ற நோக்கம் பற்றி சிந்திக்க வேண்டும்.
இதற்கு அடுத்தநாள் ராவண பலய விடுத்துள்ள அறிவிப்புடன் கோர்த்து நோக்கினால் நிகழ்ச்சிநிரல் என்னவென்று புலனாகும். அதாவது பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தமும், முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக மேற்படி நபர் உருவாக்குகின்ற கருத்தியலும் ஒரே விதமான நிகழ்ச்சி நிரல்களின் நோக்கங்களை கொண்டவை என்பதை யாரும் மறுக்கவியலாது.
எனவே, உலக முஸ்லிம்களைப் போலவே இலங்கை முஸ்லிம்களும் தமக்கெதிரான உலக சக்திகளின் ஒன்றிணைவு, அவற்றின் நிகழ்ச்சி நிரல்களை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.
- (வீரகேசரி 26.08.2018)
0 comments:
Post a Comment