இலங்கை முஸ்லிம்களிடையே ஆயுதக் குழுக்கள் உள்ளன. அவர்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்புகள் உள்ளன என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன் வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகயைதொரு குற்றச்சாட்டை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். குறிப்பாக அமைச்சர்கள் ஹிஸ்புல்லாஹ், றிசாட் பதியூதீன் ஆகியோர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். காத்தான்குடி, மூதூர், கிண்ணியா ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது கருத்துகள் ஊடகங்களில் முக்கிய இடத்தினை பிடித்துக் கொண்டதோடு, பௌத்த சிங்கள இனவாதிகளின் வாய்களுக்கு அவல் போட்டதாகவுள்ளது. இத்தகைய கருத்துகள் முஸ்லிம்களுக்கு புதியதல்ல. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளும் முஸ்லிம்களிடம் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஆயினும், இன்பராசாவின் கருத்துக்களின் பின்னால் வேறு செயற்பாட்டாளர்களின் ஊக்குவிப்பு இருப்பதாகவே தெரிகின்றது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தொழிலின்றி, வருமானமின்றி கஸ்டப்படுகின்றார்கள். உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து கருத்துக்களை வெளியிட வேண்டியவர், அவர்களுக்கு; உதவிகளைச் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியவர் முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளமை அவரின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துவதாக உள்ளது. புலிகளிடம் இருந்த ஆயுதங்களை முஸ்லிம்கள் வாங்கியுள்ளார்கள் என்றால் அது பற்றிய தகவல்கள் அவரிடம் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆயுதத்தை விற்ற புலிகள் உறுப்பினர்களையும், அதனை வாங்கிய முஸ்லிம்களையும் அவர் ஆதாரங்களுடன் அடையாளப்படுத்த வேண்டும். ஆதலால், பொலிஸார் இன்பராசா முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலில் அவரை விசாரிக்க வேண்டும். சட்ட விரோதமாக யார் ஆயுதங்களை வைத்திருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்.
இதே வேளை, அமைச்சர்கள் றிசாட் பதியூதீன், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுள்ளார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே முன் வைக்கப்பட்டுள்ளதென்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதே வேளை, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் புலிகளின் ஆயுதங்களை வைத்துள்ள அமைச்சர்கள் றிசாட் பதியூதீன், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்களை கைது செய்ய வேண்டுமென்று பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசந்தரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புனவாழ்வு அளிக்கப்பட்டுள்ள புலி உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கள் பற்றி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் மந்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்ட விரோத ஆயுதங்கள் எல்லா இனங்களிடமும் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் இன்று வரைக்கும் எந்தவொரு ஆயுதக் குழுக்களும் கிடையாது. தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழக்கள் செயற்பட்டுள்ளன. ஜே.வி.பி கூட இரண்டு தடவைகள் வேறுபட்ட காலப் பகுதிகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு முஸ்லிம்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட எந்த ஆயுதக் குழுக்களும் கிடையாது. ஊடகங்களின் தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் சுமார் 45 ஆயிரம் சட்ட விரோத ஆயுதங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களிடையே ஜிஹாத், அல்ஹைதா, தலிபான் அமைப்புக்கள் உள்ளனவென்று இனவாத அமைப்புக்களும், ஒரு சில அரசியல்வாதிகளும், அமெரிக்க உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் கருத்துக்களை முன் வைத்த போதிலும் அவற்றை இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் முற்றாக நிராகரித்து வந்துள்ளனர்.
முஸ்லிம்களிடம் இல்லாத ஆயுதக் குழுக்கள் இருப்பதாக ஒரு சில அமைப்புக்களும், நபர்களும் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருப்பதன் பிரதான நோக்கம் வயிற்றுப் பிழைப்பாகும். அவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்களோ அவர்களை திருப்திப்படுத்தவே முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் 'உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய நிலையில், தற்போது கிழக்கில் இயங்கி வரும் ஜிஹாத் ஆயுதக் குழுக்கள் மீது அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியுள்ளது. புலனாய்வுத் தகவல்களின் படி கிழக்கில் 500 ஜிஹாத் ஆயுததாரிகள் உள்ளனர். இந்த ஜிஹாத் ஆயுததாரிகள் கொழும்பில் இயங்கிவரும் முஸ்லிம் பாதாளக் குழுக்களுக்கும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்முனை, மூதூர், கிண்ணியா ஆகிய பிரதேசங்களிலேயே இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா அணியினரிடமிருந்து இந்தக் குழுக்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ளன. இவ்வாறாக 13 குழுக்கள் கிழக்கில் இயங்கி வருகின்றன. ஜிஹாத், உஸாமா, முஜாஹித் என்பன அவற்றில் சிலவாகும். இந்த ஆயுதக் குழுக்களின் இருப்புக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே உதவி வருகின்றனர்.' என்று சிங்கள ஊடகமொன்று தெரிவித்திருந்தது.
முஸ்லிம்களிடையே ஆயுதக் குழக்கள் உள்ளன என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஒரு சில ஊடகங்களும் மேற்கொண்டு வந்துள்ளன. தற்போதும் இந்தப் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களில் சுமார் 95வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆயுதப் போராட்டத்தையும், ஆயுதக் கலாசாரத்தையும் வெறுக்கின்றார்கள்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும், உரிமைக் குரலையும் நசிக்கி ஒடுக்கியது மட்டுமல்லாது அவர்களின் அரசியலையும் பிளவுபடுத்தியுள்ளார்கள். தமிழர்கள் மத்தியில் குரல் கொடுப்பதற்கு எந்த அமைப்பும், கட்சியும் இருக்கக் கூடாதென்ற கொள்கையை சிங்கள பேரினவாதம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியலை சீரழித்துள்ள சிங்கள பேரினவாதம் முஸ்லிம்களின் தனித்துவத்தையும், கலாசாரத்தையும் அடக்கி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் அடிமைகள் போன்று நடத்துவதற்குரிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதற்கு துணையாக பௌத்த பேரினவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ், முஸ்லிம்களிடையேயும் அடிக்கடி இன்பராசாக்கள் போன்றவர்கள் தோன்றி இதற்கு துணையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1990ஆம் ஆண்டுகளின் பின்னர் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளினாலும், அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சி காரணமாகவும், தமிழ், முஸ்லிம் மக்களிடையே காணப்பட்ட ஒரு சிலரினாலும் தமிழ், முஸ்லிம் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் படிப்படியாக அகன்று கொண்டிருந்தாலும், இரண்டு இனங்களுக்கும் இடையே அரசியல் ரீதியான ஒற்றுமை இன்னும் ஏற்படவில்லை. இதற்கு இரண்டு இனங்களிலும் உள்ள அரசியல்வாதிகள் தடையாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இனவாதம் மூலமே தங்களின் அரசியல் வெற்றியை அடைந்து கொள்வதற்கு விரும்பும் அரசியல்வாதிகள் எல்லா இனங்களிலும் உள்ளார்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் இன ஐக்கியத்தோடு நின்று கொள்ளாமல் அரசியல் ஐக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் இன்பராசாவின் கருத்துக்கள் தமிழ், முஸ்லிம்களின் இன ஐக்கியத்தின் மீது மீண்டும் கீறல்களை ஏற்படுத்துவதோடு, அரசியல் ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பாரிய தடையையும் ஏற்படுத்துவதற்கு துணையாகவும் அமைந்துவிடும்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களில் முக்கியமான ஒரு சிலர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார்கள். ஆதலால், தமிழ், முஸ்லிம்களிடையே அரசியல் ரீதியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாதென்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாடப் பரப்பில் முஸ்லிம்களிடையே ஆயுதக் குழுக்கள் உள்ளன. இதில் றிசாட் பதியூதின், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்களுக்கு தொடர்புள்ளதென்ற கருத்துக்களும் உள்ளதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இதே வேளை, தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு இலங்கையை எப்போதும் பீதியுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கொள்கையில் வல்லரசு நாடுகள் உள்ளன. இதே வேளை, முஸ்லிம்களின் அரசியல் பலத்தை அழித்துள்ள பேரினவாதிகள், முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், கல்வியையும் சீரழிப்பதற்கே முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளன. பங்கரவாதிகள் என்று குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களிடம் ஆயுதக் குழுக்கள் உள்ளன. முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு துணையாக உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு மர்ஹும் அஸ்ரப்பின் காலத்திலும் முன் வைக்கப்பட்டது. அவர் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளார் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் உட்பட ஏனைய இன அரசியல்வாதிகளும் சொன்னார்கள். இத்தகைய கருத்துக்கள் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னரும் முன் வைக்கப்பட்டு வந்து 2012ஆம் ஆண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டும் வந்துள்ளமையை அவதானிக்கலாம்.
இலங்கையில் வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இதில் முக்கியமானவையாகும். இலங்கை அரசாங்கம் சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவையும், அமெரிக்காவுடன் ஓரளவான உறவையும் பேணிக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா இலங்கையை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு சமாதானத்தையும், சண்டையையும் ஊக்குவித்தமையை மறக்க முடியாது. நோர்வே மூலமாக சமாதான பேச்சுவார்த்தையையும், இஸ்ரேலின் மூலமாக இலங்கை இராணுவத்திற்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் ஏககாலத்தில் பயிற்சியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பதற்குப் பதிலாக இரண்டு கற்களில் இலங்கை எனும் ஒரு மாங்காயை வீழ்த்தி தம்வசப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டது. ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிராக முன் வைக்கப்படும் விரோதமான கருத்துக்கள் உள்நாட்டு அரசியலுக்காகவும், வல்லரசு நாடுகளின் பிராந்திய ஆதிக்கத் தேவைக்காகவும் முன் வைக்கப்படுகின்றன. அதற்கு துணையாக செயற்படுகின்றவர்களுக்கு பெருத்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், ஆயுத விற்பனையாளர்கள் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடலாம். ஒரு நாட்டில் ஆயுதப் போராட்டம் நடைபெறும் போது அதன் மூலமாக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் பெரும் நன்மைகளை அடைந்து கொள்கின்றன. தமது ஆயுதத்தை விற்பனை செய்வதோடு, போராட்டத்தில் ஈடுபடும் இயகத்தின் உதவியோடு தமது ஆதிக்கத்தையும் நிலை நாட்டுவது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் நீண்ட கால நடவடிக்கையாகும்.
இதே வேளை, இந்த நாடு தனியே பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு என்று பௌத்த இனவாத அமைப்புக்களும், சிங்கள அரசியல்வாதிகளில் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு ஒரு சில தமிழர்களும் இந்த நாடு முஸ்லிம்களுக்கு சொந்தமல்ல என்ற கருத்தை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாறு கிடையாது. அவர்கள் வந்தேறு குடிகள் என்றும், அவர்கள் தங்களின் சனத்தொகையை அதிகரித்து நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த இனமும் தமது சந்ததியை அதிகரித்துக் கொள்ளக் கூடாதென்று சட்டம் கிடையாது. அவ்வாறு இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பைக் கூட ஒரு பயங்கரவாத நடவடிக்கை போன்;று காட்டுவதற்கு இனவாதிகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக பொய்யான புள்ளி விபரங்களைக் கூட வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே அநாகரிக்க தர்மபால போன்ற பௌத்த கடும் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள். அவர்களின் அன்றைய நிலைப்பாடு முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், கலாசாரத்தையும் அழிப்பதாகவே இருந்தது. அன்று தொடங்கிய நடவடிக்கை இன்று காலத்திற்கு எற்றவாறு புதுவடிவம் பெற்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக நாடு பூராகவும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இதனால், முஸ்லிம்களை ஏனைய சமூகத்தினர் கோபத்தோடு பார்க்கும் நிலையை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக பேருவளை, தர்காநகர், ஜிந்தோட்டை, அம்பாரை, கண்டி மாவட்டம் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மேற்படி காரணங்களை முன் வைத்து முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களினால் தூண்டப்பட்ட இளைஞர்களின் செயற்பாடுகளாகும். நாடு பூராகவும் உள்ள சிங்கள இளைஞர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுவதே பௌத்த இனவாதிகளின் நோக்கமாகும். ஆதலால், புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர் இன்பராசா இனவாதிகளின் சூழ்ச்சியை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும், இனவாதம் மூலமாக அரசியலை வளர்த்துக் கொள்வதற்குரிய கொள்கை தோல்வியடைந்துள்ள இன்றைய நிலையில் இதனை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு தமிழர்கள் மத்தியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு சில தமிழர்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்தக்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆதலால், தமிழர்களும், முஸ்லிம்களும் எச்சரியாக செயற்பட வேண்டும். இதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
2009ஆம் ஆண்டு வரை அரசியல் செய்வதற்கு சிங்கள அரசியல்வாதிகளுக்கு பெரும்பாலும் புலிகளுடன் நடைபெற்ற யுத்தம் உதவி செய்தது. ஆனால், புலிகள் தோல்வி அடைந்ததன் பின்னர்; அத்தகையதொரு அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாதுள்ளது. இதனால்தான் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு எண்ணுகின்றார்கள். இந்த நிலைப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் உறுதி செய்வதற்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர் இன்பராசாவின் கருத்துக்கள் துணை செய்வதாகவே அமையும்.
சஹாப்தீன் -
0 comments:
Post a Comment