கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போலவே முஸ்லிம் அரசியல் தலைமைகளின்
நடவடிக்கைகள் அமைந்துள்ளன. முஸ்லிம் சமூகத்தை பாதிக்கக் கூடிய எல்லா சட்ட
மூலங்களுக்கும் ஆதரவு அளிக்கும் மனப் போக்கையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள்
கொண்டுள்ளார்கள். கடந்த காலங்களில் 17வது, 18வது திருத்தங்கள், திவிநெகும
ஆகிய சட்ட மூலங்களுக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் கட்சிகளினதும், ஏனைய
கட்சிகளினதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் தாம் பெரும்
பாவத்தை செய்து விட்டோமென்று கவலை தெரிவித்தார்கள். இந்த வரிசையில் தற்போது
மாகாண சபைத் தேர்தலை புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு
ஆதரவு அளித்து விட்டு, மாகாண சபைத் தேர்தலை 1978ஆம் ஆண்டு யாப்பில்
அறிமுகம் செய்த விகிதாசார தேர்தல் முறையில் நடத்த வேண்டுமென்று அரசாங்கத்தை
கோரிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து மாகாண சபைத் தேர்தலை விகிதாசார
முறைப்படி நடத்துவதற்கு ஆதரவு தருமாறு கேட்டுள்ளார்.
கலப்பு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால்
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சி ஏற்படும். அதனால், கலப்பு
முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு விடமாட்டோம். பொது எதிர்
அணியினரின் உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று கலப்பு
தேர்தல் முறையை இல்லாமல் செய்வோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்
ஹக்கீம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
முஸ்லிம்களின் மீது என்னதான் அநீயாயங்கள் நடைபெற்றாலும் அதனையிட்டு
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உளரீதியாக கவலை கொள்வதில்லை. அதே வேளை, சர்வதேச
ரீதியாக அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இங்கு தமிழ், முஸ்லிம்
சமூகங்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை. ஒரு சில பிரச்சினைகள்
ஏற்பட்டாலும் அவற்றை ஜனாதிபதியுடன் பேசி தீர்த்துக் கொள்ள முடியுமென்று
ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக செயற்பட்ட நவநீதம்பிள்ளை இலங்கை
வந்த போது முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள முஸ்லிம் கட்சியின்
தலைவர் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை
பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட
அனைத்து காடைத்தனங்களையும் மூடி மறைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே
முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் கட்சிகளினதும் நிலைப்பாடாக
இருந்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறு முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைமைகளும், பாராளுமன்ற
உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களும் செயற்படுவதற்கு பதவிகளை மையப்படுத்திய நடவடிக்கைகளே
காரணமாகும். பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையே பாழாக்கிக்
கொண்டிருக்கின்றார்கள்.
மாகாண சபைத் தேர்தல் முறையை கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு
முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு காட்டி
இருந்தால் அச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருக்காது. முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அச்சட்ட மூலம்
நிறைவேற்றப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கு எதிரான சட்ட
மூலமென்ற நிலையை அது பெற்றிருக்கும். ஆனால், முஸ்லிம்களின்
பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக 50இற்கு 50 என்ற
திருத்தத்தைச் செய்துள்ளோம் என்று பெருமை கொண்ட முஸ்லிம் கட்சிகளும்,
தலைவர்களும் தற்போது அந்த சட்ட மூலத்தை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மாகாண சபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு ஆதரவு அளித்து விட்டு,
தற்போது அதனை எதிர்த்துக் கொண்டிருப்பதனைப் பார்க்கின்ற போது கடந்த
காலங்களில் நெருப்பு என்று தெரிந்து கொண்டே 17வது, 18வது திருத்த சட்ட
மூலங்களுக்கும், திவிநெகும சட்ட மூலத்திற்கும் கையை உயர்த்திவிட்டு,
பின்னர் கையை சுட்டுவிட்டதென்று பதறிக் கொண்டதனைப் போலவே மாகாண சபைத்
தேர்தல் முறையிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு ஜெனிவா வரை முஸ்லிம் அமைச்சர்களும்,
முஸ்லிம் அமைப்புக்களும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகம் என்ற நல்ல
சிந்தனைக்கு அப்பால் கட்சி என்ற சிந்தனையிலும், பதவி எனும் ஆசைக்காகவும்,
பணத்திற்காகவும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால்தான் முஸ்லிம் சமூகம்
சார்ந்த விடயங்களைக் கூட கவனத்திற் கொள்ளாது நடந்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் பேரினவாத
தேசியக் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் புரோகிதர் வேலையையே
செய்து கொண்டிருக்கின்றன. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம்
காங்கிரஸ் ஐ.தே.கவுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் எல்லா உள்ளுராட்சி சபைகளினதும் தேர்தலில்
தனித்துப் போட்டியிட வேண்டிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் இணைந்து
போட்டியிட்டதன் மூலமாக தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டமையால்
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் உயிர்ப்பின்றி இருந்த
ஐ.தே.கவினை உயிர்வாழ வைத்துள்ளோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைமை உட்பட
உயர்பீட உறுப்பினர்கள் பலரும் முணுமுணுத்துக் கொள்ளும் நிலை
காணப்படுகின்றது. இது கூட சரியாக முடிவுகளை எடுத்துக் கொள்ளாமல் போனமைக்கான
விலையாகும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்விதமாக நடந்து கொண்டிருப்பது அரசியலில்
அவர்களின் முதிர்ச்சியற்ற தன்மையையும், சுயநலப் போக்கையும் காட்டுவதாக
இருக்கின்றது.
முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் முஸ்லிம் சமூகம் எனும் புள்ளியை
நோக்கி அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு பதிலாக ஒவ்வொரு கட்சியும்
வௌ;வேறுபட்ட கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதே நிலை
தடுமாறிக் கொண்டிருப்பதற்கு பிரதான காரணமாகும்.
முஸ்லிம்களின் அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதான பாத்திரத்தை ஏற்றுக்
கொண்டுள்ளது. ஆயினும், அக்கட்சி பல தடவைகள் சமூகம் சார்ந்த விடயங்களில்
அக்கறையில்லாது செயற்பட்டு வந்துள்ளது. இதனால், அக்கட்சி தமது
தவறுகளையிட்டு மக்கள் மத்தியில் பகிரங்க பாவமன்னிப்பு கோரியுமுள்ளது.
சமூகம் சார்ந்த கட்சி எனும் அடிப்படையில் தமது தவறுகளுக்கு மன்னிப்பு
கோருவது நல்ல தன்மையாகும். ஆனால், தொடர்ந்தும் தவறுகளைச் செய்வதும், கவலை
கொள்வதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நிலையில்தான் கிழக்கு
மாகாணத்திற்கு தனியான அரசியல் தலைமை வேண்டுமென்று தெரிவிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்திற்கு தனியான அரசியல் தலைமை வேண்டுமென்பது பிரதேசவாத
நிலைப்பாடாகும். கிழக்கு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற
கட்சியாகவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தமது கடமையை சரியாக செய்யவில்லை
என்பதற்காக பிரதேசவாதம் பேச முடியாது. முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு
கிழக்கு மாகாணமே பொருத்தமாகும். அதே வேளை, முஸ்லிம் சமூகத்;தின் மீது
மிகுந்த அக்கறை கொண்ட எவரும் தலைவராக செயற்படலாம். அவர் எந்த மாகாணத்தை
சோந்தவராகவும் இருக்கலாம்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் சர்வதிகாரப் போக்கின் வெளிப்பாடாக
அக்கட்சியிலிருந்த பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் கூட்டுத் தலைமை
பற்றி பேசிக் கொள்கின்றார்கள். கூட்டுத் தலைமை முடிவுகளை எடுப்பதற்கு பரந்த
கலந்துரையாடலுக்கு வழி வகுக்கும். ஆயினும் முடிவுகளை எடுப்பதில்
காலதாமதம் ஏற்படும். மேலும், கூட்டுத் தலைமை என்பது கூட ஒருவரை தலைவராக
ஏற்றுக் கொள்ள முடியாத மனப் போக்கை காட்டுகின்றது. தலைமையின் சர்வதிகாரப்
போக்கை கட்டுப்படுத்துவதற்கு கட்சியின் யாப்பில் திருத்தங்களைச் செய்து
கொள்ள வேண்டும். தலைவருக்குரிய அதிகாரங்கள் கட்சியின் செயலாளர், உயர்பீடம்
ஆகியவற்றிக்கு பகிரப்படுமாயின் கூட்டுத் தலைமை தேவையில்லை.
முஸ்லிம் அரசியலில் ஒவ்வொரு கட்சியும் வேறுபட்ட திசைகளில் சென்று
கொண்டிருப்பதனால் எல்லா கட்சிகளையும் ஒரே திசையில் செலுத்தும் வகையில்
முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம்
கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்குவதற்காகவே கூட்டுத் தலைமை பற்றியும்
பேசப்படுகின்றது. இந்த அடிப்படை பிரச்சினை முஸ்லிம் அரசியல் தலைவர்கள்
இன்னுமொருவரின் கீழ் செயற்படுவதற்கு தயாரில்லை என்பதனைக் காட்டுகின்றது.
முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மையே முஸ்லிம்
கட்சிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்கின்றது. இவர்களின்
தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாகவே கூட்டுத் தலைமை எனும் வார்த்தை
பயன்படுத்தப்படுகின்றது. சமூக சிந்தனைக்கு மாற்றமாக வேறு சிந்தனைகளுக்குள்
அகப்பட்டுள்ளவர்களைக் கொண்டு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க முடியாது.
முஸ்லிம் கட்சிகளை இணைத்தவாறு ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு கடந்த
காலங்களில் பலர் முயற்சிகளை எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் முயற்சிகள்
வெற்றியளிக்காமைக்கு கட்சிகளின் தலைவர்களிடையே காணப்படும் ஈகோவே
காரணமாகும்.
இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் எண்ணப்பாடு இருந்தாலும், முஸ்லிம் கட்சிகளை
ஒரு கொடையின் கீழ் கொண்டு வரவேண்டியதொரு அவசர காலத்திற் முஸ்லிம்கள்
உள்ளார்கள். தேர்தல் முறை மாற்றம், தொகுதிகளின் எல்லை நிர்ணயம், அரசியல்
தீர்வு போன்ற முக்கிய விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு பாதகமான நிலைமைகளே
காணப்படுகின்றன. முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் அளிக்கப்படும்
போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு
விகிதாசாரத் தேர்தலை விடவும் கலப்பு தேர்தல் முறையின் கீழ் அதிகமாகவே
இருக்கப் போகின்றது. முஸ்லிம்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தி அரசியல்
பலத்தை கட்டி எழுப்ப வேண்டுமாயின் முஸ்லிம்களின் வாக்குகளில் 90 வீதமானவை
ஒரு கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.வுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்,
பொது பெரமுனைக்கும், ஜே.வி.பிக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும், தேசிய காங்கிரஸிற்கும், நல்லாட்சிக்கான
தேசிய முன்னணிக்கும் அளிக்கப்படுவது ஆபத்தாகும். பல கட்சிகளுக்கும்
முஸ்லிம்களின் வாக்குகள் சிதறும் போது முஸ்லிம் மக்கள் பிரதிநிதித்துவம்
குறைந்துவிடும். விகிதாசார தேர்தல் முறை என்றாலும், கலப்பு தேர்தல் முறை
என்றாலும் முஸ்லிம்களின் வாக்குகள் ஒரு கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும்.
இதற்கு முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இது
சாத்தியமில்லையாயின் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றதொரு அரசியல்
கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இதற்கு முஸ்லிம்கள் தாமாக சிந்தித்து ஒரு
முடிவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆதலால், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள்
முஸ்லிம்களின் அரசியலை ஸ்திரப்படுத்துவதற்குரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ள
வேண்டும். ஆனால், முஸ்லிம் அமைப்புக்களும், புத்;திஜீவிகளும் தமது கடமையை
சரியாக செய்யுமாக இருந்தால் அரசியல் கட்சிகளினால் சமூகத்தை வேண்டாத திசையை
நோக்கி திருப்ப முடியாது.
நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்தை
நிலைகுழையச் செய்திடும். இதிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள
வேண்டுமாயின் முஸ்லிம்களின் அரசியல் தலைமை உறுதியாக்கப்பட வேண்டும். கடந்த
காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் அரசியலை ஏற்றுக் கொண்டவர்கள் இணக்க
அரசியலில் ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்தை தோல்விப் பாதையிலேயே அழைத்துக்
கொண்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த பயணத்தை தடுத்து
நிறுத்தாது போனால் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் சூனியமாய்ப் போய்விடும்.
0 comments:
Post a Comment