இலங்கை அரசியலில்
மாகாண சபைத் தேர்தல், அத்தேர்தல் நடைபெறுவதற்கான தேர்தல் முறை என்பது
பற்றியே அதிகம் பேசப்பட்டுகின்றது. அதனோடு இணைந்தவாறு ஜனாதிபதித் தேர்தல்
பற்றியும், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியும் பேசப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. ஆயினும், எதற்கும் இறுதி முடிவு கிடைக்கவில்லை. இவ்வருட
இறுதிப் பகுதியில் அல்லது 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் மாகாண சபைத்
தேர்தல் நடைபெறலாமென்று எதிர் பார்க்கப்படுகின்றன. என்ற போதிலும் அரசாங்கம்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சங்கடப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய நல்ல சூழல் அரசாங்கத்திற்கு இல்லை.
இலங்கை
அரசாங்கம் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது. நாட்டில்
காணப்படும் அரசியல் குழப்ப நிலையால் இலங்கை நாணயத்தின் பெறுமதி
வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக
அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு
ஏற்பட்டுள்ளது. தொழிற் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
வேலை நிறுத்தப் போராட்டங்கள் என அரசாங்கத்திற்கு பல வகைகளிலும்
நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
அரசியலாகும் நெருக்கடிகள்
அரசாங்கத்திற்கு
ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு வகையான நெருக்கடிகள் அரசாங்கத்திற்கு
பாதக நிலைமைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே அரசாங்கத்தைப்
பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ள பின்னணியில் எரிபொருட்களின் விலையேற்றம்
அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளன.
பொருட்களின்
விலையேற்றங்கள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றினை மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான
எதிர் அணியினர் அரசியலாக்கி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அபிப்ராயங்களை
ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்
அணியினருக்குரிய செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
நாட்டில்
ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை பயன்படுத்தி அரசாங்கத்தை
வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டத்தை எதிர் அணியினர் முன்னெடுத்துக்
கொண்டிருக்கின்றார்கள். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு
ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால்
அரசாங்கத்திற்கு மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என எதிர் அணியினர்
கணித்துள்ளார்கள். இதனை அரசாங்கத்தில் உள்ள இரு பிரதான கட்சிகளும்
உணர்ந்துள்ளன.
தற்போது கலைக்கப்பட்டுள்ள
மூன்று மாகாண சபைகளுக்குமுரிய தேர்தலை நடத்தினால் பொது எதிர் அணி இன்னும்
பலமடைந்து விடும். மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் நடைபெறவுள்ள ஜனாதிபதித்
தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பாரிய பின்னடைவினை
ஏற்படுத்திவிடுமென்று ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியும் எண்ணிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி ஏதாவதொரு தேர்தலை எதிர் கொள்வதில் மிகுந்த அச்சத்தைக் கொண்டுள்ளது.
இதனால்தான் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது எல்லை நிர்ணயம் பற்றியும், புதிய
தேர்தல் முறை பற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுத்
தலைவரும், உள்ளுராட்சி, மாகாண சபைகள், விளையாட்டுத்துறை அமைச்சருமான பைஸர்
முஸ்தபா கதைத்துக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டுக்
கொண்டிருக்கின்றார்.
இதே வேளை, மாகாண சபைத்
தேர்தலை ஏதாவதொரு முறையில் உடனடியாக நடத்த வேண்டுமென்று பொது எதிர்
அணியினர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசாங்கம்
மாகாண சபைத் தேர்தலை சாட்டுக்கள் சொல்லி பிற்போட்டுக் கொண்டிருந்தாலும்
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னரும் தேர்தலை பிற்போடுவதற்குரிய
தந்திரங்களை அரசாங்கம் கையாளுமாயின் பொது எதிர் அணியினர் வீதிக்கு இரங்கி
போராட்டங்களைச் செய்யக் கூடிய சூழலும் ஏற்படலாம். ஆதலால், 2019ஆம் ஆண்டு
இலங்கையில் தேர்தலுக்குரிய ஆண்டாகவே இருக்கப் போகின்றது.
இந்நிலையில்
அரசாங்கம் தேர்தல்களை எதிர் கொள்ளுகின்றதொரு சூழலை ஏற்படுத்த வேண்டியதொரு
கட்டாயத்தில் உள்ளது. இதற்காக பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டியுள்ளது.
அத்தோடு அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, வேலை வாய்ப்பு, அரசியல்
தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அதிகூடுதல் நடவடிக்கைகளை எடுக்க
வேண்டியுள்ளது. இவற்றினைச் செய்வதற்காக அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களை
வரவழைக்கலாம். அதன் மறுவடிவமாக அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன்களின் தொகை
இன்னும் அதிரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.
இதனிடையே
இலங்கை அரசாங்கம் வல்லரசுகளின் பிடிக்குள்ளும் மாட்டிக் கொண்டு
தவிக்கின்றது. இலங்கையின் மீது அமெரிக்கா, சீனா, இந்தியாவின் போன்ற
நாடுகளின் தலையீடுகள் காணப்படுகின்றன. சீனா அமெரிக்காவுடன் பொருளாதாரப்
போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியாக சீனா
அமெரிக்காவை பின்தள்ளிக் கொண்டு செல்லுகின்றது. இதனால், அமெரிக்கா
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக்
கொண்டிருக்கின்றது. இந்தியாவும் இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்திக்
கொண்டிருக்கின்றது. இந்நாடுகளின் பூலோக அரசியலுக்கு இலங்கையின் அமைவிடம்
முக்கிய இடமாகவுள்ளது. இதனால் இந்நாடுகள் இலங்கையின் அரசியல், பொருளாதாரம்
போன்றவற்றில் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நாடுகளுக்கிடையே ஒரு
சமநிலைப் போக்கை கடைப்பிடிக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்துக்
கொண்டாலும் நாடுகளுக்கு இடையே காணப்படும் ஆதிக்கப் கொள்கை இலங்கையையும்
பாதித்துக் கொண்டிருக்கின்றது.
மேலும்,
அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடை கூட இலங்கையை பாதித்துக்
கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கம் குறைந்த விலையில் ஈரானிடம்
எரிபொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்றது. அதே வேளை, இலங்கையின்
தேயிலைக்கு ஈரானில் கேள்விகள் அதிகமாகவுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார
தடையால் டொலரின் அடிப்படையில் ஈரானுடன் ஏற்றுமதி, இறக்குமதியை
மேற்கொள்வதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. இதனால், பொருட்களை
கொடுத்து பொருள் இறக்குமதியை அதாவது பண்டமாற்று முறையை மேற்கொள்வதற்கு
அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு
அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்
சிறுபான்மைக் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடத்த
வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றன.
மாகாண சபைத் தேர்தல்
மாகாண சபைத் தேர்தலை புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் 50இற்கு 50எனும் அடிப்படையில் நடத்த வேண்டுமென்று பாராளுமன்றத்தில் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சிறுபான்மைக் கட்சிகளும் பூரண ஆதரவு அளித்தது.
மாகாண சபைத் தேர்தலை புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் 50இற்கு 50எனும் அடிப்படையில் நடத்த வேண்டுமென்று பாராளுமன்றத்தில் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சிறுபான்மைக் கட்சிகளும் பூரண ஆதரவு அளித்தது.
விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டுமென்று
பேரினவாதக் கட்சிகள் திட்டமிட்ட போது சிறுபான்மையினர் மத்தியில் இதற்கு
எதிர்ப்புக்கள் கிளம்பின. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை கலப்பு
தேர்தல் முறை குறைத்துவிடுமென்று சுட்டிக் காட்டிய போது முஸ்லிம், தமிழ்,
மலையக் கட்சிகள் சிறுபான்மையினரின் இனவிகிதாரத்திற்கு அமைவாக மக்கள்
பிரதிநிதித்துவம் கிடைப்பதற்குரிய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என
தெரிவித்துக் கொண்டன. ஆனால், உள்ளுராட்சி சபைத் தேர்தல்
சிறுபான்மையினருக்கு பாதிப்பை எற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அத்தோடு
ஆட்சி அமைக்கும் தரப்பினரை சரியாக அடையாளப்படுத்த முடியாத சூழலை கலப்புத்
தேர்தல் முறை ஏற்படுத்தியிருந்தது.
இதனால்,
சிறுபான்மைக் கட்சிகள் பழைய விகிதாசார முறைப்படியே தேர்தலை நடத்த
வேண்டுமென்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. ஆயினும்,
அரசாங்கத்தின் தரப்பில் சிறுபான்மையினக் கட்சிகளுக்கு சாதகமான பதில்
அளிக்கப்படவில்லை. புதிய முறையில் தேர்தல் நடத்த வேண்டுமென்று
ஜனாதிபதியும், பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென்று பிரதம
மந்திரியும், எந்த முறையிலாவது தேர்தலை நடத்துங்கள் என்று
மஹிந்தராஜபக்ஷவும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பிரதான
கட்சிகளின் இந்நிலைப்பாட்டினை அடுத்து ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், டக்ளஸ்
தேவானந்தா ஆகியோர்கள் முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய
மஹிந்தராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு மஹிந்தராஜபக்ஷவின் ஆதரவைக்
கேட்டுள்ளார்கள். அவர் அதற்கு ஆதரவு வழங்க உடன்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றன.
மஹிந்த - ரவூப் சந்திப்பு
மஹிந்தவுக்கும்,
ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களுடன் நடைபெற்றுள்ள சந்திப்பு முஸ்லிம்
அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும்
மஹிந்தராஜபக்ஷவோடு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளார் என்று
தெரிவிக்கப்படுகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது
முஸ்லிம்களும் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆயினும், அவர்கள்
மஹிந்தராஜபக்ஷவின் பக்கம் முழுமையாக சென்றுவிடுவார்கள் என்று
நம்புவதற்கில்லை.
மஹிந்தராஜபக்ஷவின்
ஆட்சியின் போது பௌத்த இனவாத அமைப்புக்களும், தேரர்களும் மேற்கொண்ட
அராஜகத்தை முஸ்லிம்கள் இன்னும் மன்னிக்கவில்லை. நல்லாட்சியில் கூட
ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின்
பின்னால் பொது பெரமுனவின் அரசியல்வாதிகள் இருந்துள்ளார்கள். இவர்களில்
சிலரை பொலிஸார் கைது செய்துமுள்ளார்கள்.
இன்று வரைக்கு
முஸ்லிம்கள் மீது அடாத்தாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாதிகளின்
கொடுமைகள், கலப்பு தேர்தல் முறை ஆகியன மஹிந்தராஜபக்ஷ காலத்திற்
விதைக்கப்பட்டதாகும் என்பதனை முஸ்லிம்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.
இதனால்தான், ரவூப் ஹக்கீம் மஹிந்தராஜபக்ஷவை சந்தித்துக் கொண்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதிவாரியும்,
விகிதாசாரமும் இணைந்தாகவுள்ள கலப்பு தேர்தல் முறை பாராளுமன்றத்தில் கொண்டு
வரப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு ஆதரவு அளித்தது. குறித்த தேர்தல்
முறை முஸ்லிம்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய போது
அது பற்றி கரிசனை கொள்ளாது அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்ட மூலத்தை
வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமென்பதில் கவனம் செலுத்தியதனால்தான் வழக்கம்
போன்று கண்களை மூடிக் கொண்டு தேர்தல் முறை மாற்றத்திற்கு முஸ்லிம்
காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
உள்ளுராட்சி
சபைத் தேர்தல் கற்றுத் தந்த பாடத்தை அடுத்து கலப்பு தேர்தல் முறைக்கு
சிறுபான்மையினக் கட்சிகள் எதிர்ப்புக் காட்டுகின்றன.
இந்நிலையில்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மஹிந்தராஜபக்ஷவை சந்தித்ததன்
பின்னர் மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறைபடியே நடத்த வேண்டும். இதனை
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று
நிறைவேற்றிக் காட்டுவோம் என்று சூளுரைத்துள்ளார்.
முhகாண சபைத்
தேர்தலை பழைய முறைப்படி நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில்
இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். இதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரவூப்
ஹக்கீம் மஹிந்தவை சந்தித்துள்ளார். இதனை பாராட்டவே வேண்டும். யாரைப்
பிடித்தாவது கலப்பு தேர்தல் முறையை மாற்றி பழைய முறைப்படி தேர்தலை முறையை
வைத்துக் கொண்டால் முஸ்லிம்களுக்கு நன்மைகள் உள்ளன.
ஆனால்,
சிந்திக்க வேண்டிய விடயம் என்னவெனில், புதிய தேர்தல் முறையின் எதிர்
விளைவை ஆராயாமல் ஆதரவு அளித்துவிட்டு, பின்னர் அதன் தாக்கத்தை கண்டதன்
பின்னர் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பது ரவூப் ஹக்கீமும், ஏனைய முஸ்லிம்
கட்சிகளின் தலைவர்களும் சமூகம் சார்ந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க
முடியாதவர்கள் என்பதனைக் காட்டுகின்றது.
இதே வேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பொது முஸ்லிம் காங்கிரஸ் இறுதி வரைக்கும் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிப்பதற்கே தயராக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை முஸ்லிம் கட்சிகள் ஆதரித்தமைக்கு மக்கள் முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்ட அழுத்தங்களேயாகும்.
ஆயினும், மஹிந்தராஜபக்ஷவை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்துக் கொண்டமையை குறைத்து மதிப்பிட முடியாது.
உள்ளுராட்சி
சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு கலப்பு
தேர்தல் முறையும் ஒரு காரணமென்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால், ரவூப்
ஹக்கீம் தேர்தல் முறையை பழைய முறைக்கு மாற்ற வேண்டுமென்பது சமூகம்
சார்ந்ததாக மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை பாதுகாத்துக்
கொள்வதற்குரிய ஒரு முயற்சியாகவும் இருக்கின்றது.
ஹஸன்அலி,
பசீர் சேகுதாவூத், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர்,
அட்டாளைச்சேனை சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமாகிய
ஏ.எம்.அன்சீல், உயர்பீட உறுப்பினர் நாஸார் ஹாஜி உள்ளிட்ட ஒரு குழுவினர்
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிக் கொண்டதன் பின்னர் கட்சியின்
செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளன. இந்த சரிவு முஸ்லிம் காங்கிரஸில் ஏற்கனவே
ஏற்பட்ட பிளவுகளின் போது ஏற்பட்ட தாக்கத்தை விடவும் அதிகமாகவும். ஆதலால்,
மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார முறைப் படியே நடத்த வேண்டுமென்பது
முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதற்கு மாத்திரமல்ல
கட்சியின் தலைமைப் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்குமுரியதொரு நகர்வாகவும்
உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று சூடு கிளம்பிக் கொண்டிருக்கையில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பேச்சுக்கள் தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளனவென்று ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று சூடு கிளம்பிக் கொண்டிருக்கையில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பேச்சுக்கள் தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளனவென்று ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இதே
வேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பின்னடைவுகள்
ஏற்பட்டிருந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகவே
இருக்குமென்று அக்;கட்சியின் செயலாளரும், கல்வி அமைச்சருமான அகிலவிராஜ்
தெரிவித்துள்ளார்.
இதே வேளை, பொது எதிர் அணியினரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
2015ஆம்
ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன
நிறுத்தப்பட்டுள்ளமை போன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொது
வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.
எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்கவையோ அல்லது
வேறு நபர் ஒருவரையோ வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதே
போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக
நிறுத்துவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. பொது எதிர் அணியினர்
கோத்தபாய ராஜபக்ஷவையோ அல்லது வேறு நபரையோ வேட்பாளராக நிறுத்த எண்ணியுள்ளது.
இதனிடையே
மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான பொது எதிர் அணியினரையும், மைத்திரிபால
சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் ஒரு குடையின்
கீழ் கொண்டு வருவதற்குரிய முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்
தேசிய கட்சிகளின் செல்வாக்குகள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாகயில்லை.
இதனால், முஸ்லிம் கட்சிகள் எந்த அணியுடன் அரசியல் கூட்டு வைத்துக்
கொள்வதென்பதில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியாத நிலையில் இருந்து
கொண்டிருக்கின்றன.
இவ்வாறு இலங்கையின் அரசியல் சூழல் இருந்து
கொண்டாலும் சிறுபான்மையின மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலை
வெற்றி கொள்ள முடியாது. அதே வேளை, அடுத்த அரசாங்கம் கூட சிறுபான்மையின
மக்களின் மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடனேயே அமைக்க வேண்டியேற்படும்
என்பதில் சந்தேகமில்லை.
சிறுபான்மையினக் கட்சிகளின்
ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்படும் அதே வேளை, அக்கட்சிகளைச் சார்ந்த சமூகம்
அரசாங்கம் மூலமாக எந்த நன்மைகளையும் பெற்றுக் கொள்ளாது. வழக்கம் போலவே
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் கட்சித் தலைவர்கள் மற்றும் சிலர்
அமைச்சர் பதவிகளையும், பிரதி அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொள்வார்கள்.
அந்தப் பதவிகள் அவர்களின் வயிறு வளர்க்கவே பயன்படுத்தப்படும். மறுபுறம்
வாக்களித்த முஸ்லிம் சமூகம் தேய்வடைந்து கொண்டே செல்லும். முஸ்லிம்
சமூகத்தின் பெயரால் தனி நபர்கள் இலாபமடைவது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் முஸ்லிம் சமூகம் தனது நிலையை திடமாக்கிக் கொள்ள முடியும்.
vidivelli -

0 comments:
Post a Comment