• Latest News

    September 02, 2018

    நேர்மையான அரசியல் தலைமை வேண்டும்

    சஹாப்தீன் -
    இலங்கையில் சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரம்;, பொருளாதாரம், சமூக இருப்பு போனற்வற்றில் பல பிரச்சினைகள் உள்ளன. இதனைக் காலத்திற்கு காலம் ஆட்சிபீடம் ஏறியவர்கள் ஏற்றுக் கொண்டாலும், அவற்றிக்கு தீர்வுகளைத் தருகின்றோம் என்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டாலும், தீர்வுகளை முன் வைத்தாலும், அரசியல் யாப்பில் ஒரு சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தாலும் இற்றை வரைக்கும் எந்தத் தீர்வுகளும், யாப்புத் திருத்தங்களும் சிறுபான்மையினரை திருப்திபடுத்தப்படவில்லை. சிறுபான்மையினரை ஏமாற்றுவதற்காகவே அனைத்தும் நடைபெற்றுள்ளன. 

    அத்தகையதொரு ஏமாற்று தொடர் நாடகத்தையே இன்றைய அரசாங்கமும் செய்து கொண்டிருக்கின்றது. புதிய அரசியல் யாப்பின் மூலமாக சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுமென்று பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்று, இடைக்கால அறிக்கையும் முன் வைக்கப்பட்டது. ஆனால், புதிய அரசியல் யாப்பு வருவதற்குரிய அறிகுறிகள் மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றன. தற்போது அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் தேர்தல்களை எதிர் கொள்வதற்குரிய முன் ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகளின் இந்த நாடகத்தில் முஸ்லிம் சமூகம் பெரிதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

    இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள அரசியல் தலைமைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. சிங்களவர்களுக்குள்ள அரசியல் அதிகாரங்களைப் போன்று தங்களுக்கும் தனித்துவமான அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தமிழ் அரசியல் தலைவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகளை முன் வைத்தார்கள். ஆதலால், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இனங்களுக்கு இடையே அரசியல் அதிகாரங்கள் குறித்த  முரண்பாடுகளை அவதானிக்க முடிகின்றன. தமிழர்களிடையே காணப்பட்ட இந்த அதிகார எழுச்சி முஸ்லிம்களிடையேயும் காணப்பட்டது. என்ற போதிலும் தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் எழுச்சி பெற்றுவிடக் கூடாதென்பதில் சிங்கள அரசியல் தலைவர்கள் கவனமாக இருந்தாhர்கள். இதனை இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தெளிவாக உணரக் கூடியதாக இருக்கின்றது.

    இலங்கையில் காணப்படும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தான பேச்சுவார்த்தைகளின் போதும், தீர்வுத் திட்ட முன் யோசனைகளின் போதும் முஸ்லிம் சமூகத்தை கவனத்திற் கொள்ளாததொரு கொள்கையை பெரும்பான்மையினக் கட்சிகளும், ஆட்சியாளர்களும் இன்று வரைக்கும் கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய அரசாங்கம் முன் வைத்த அரசியல் தீர்வுக்குரிய இடைக்கால அறிக்கையில் கூட முஸ்லிம்களின் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தம், ரணில் - பிரபா ஒப்பந்தம், சந்திரிகாவின் ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட சுனாமி கட்டமைப்பு ஆகியவற்றிலும் முஸ்லிம்களின் அபிலாசைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.  இவ்வாறு முஸ்லிம் சமூகம் மிக மோசமாக ஏமாற்றப்படுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் காணப்பட்ட பதவி மோகமே பிரதான காரணமாகும். முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி தமிழர்களின் எழுச்சிக்கு வலுச் சேர்த்துவிடும் என்பதற்காக ஆட்சியாளர்கள் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு அபிவிருத்தி எனும் மாயைக்குள் முஸ்லிம் சமூகத்தை தள்ளினார்கள். ஆனால், இன்று வரைக்கும் முஸ்லிம் பிரதேசங்கள் போதிய அபிவிருத்திகளை அடைந்து கொள்ளவில்லை.

    தமிழர்கள் அரசியல் ரீதியாக எழுச்சியடைந்து சாத்வீக அடிப்படையில் தமது உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில், முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் எழுச்சி பெற்றிருந்தார்கள். இதனால், இந்த இரு இனங்களின் எழுச்சியை அழிப்பதற்குரிய திட்டங்களை சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டது. பிரஜா உரிமைச் சட்டம், தனிச் சிங்கள மொழிச் சட்டம், பல்கலைக்கழக தரப்படுத்தல் சட்டம், 1972ஆம், 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கள் என்பனவற்றின் மூலமாக தமிழர்களின் அரசியல் எழுச்சியையும், ஏனைய இனங்கள் எழுச்சி பெற்று விடக் கூடாதென்பதற்குமுரிய ஏற்பாடுகளையும் ஆட்சியாளர்கள் சட்ட ரீதியாக மேற் கொண்டார்கள். இதே வேளை, முஸ்லிம்களின் பொருளாதார எழுச்சியை நசுக்குவதற்கு பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். அதன் விளைவாகவே 1915ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. இதுவே இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக் குழப்பமாகவும் பதிவாகியுள்ளது. இக்கலவரத்தின் போது முஸ்லிம்களின் வீடுகள், சொத்துக்கள், பள்ளிவாசல்கள், உயிர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.

    இன்றும் கூட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைளுக்கும் ஆதரவாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். வெளியில் எதிர்ப்பது போல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டும், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும் வருகின்றன. அதே வேளை, பேச்சுவார்த்தை, தீர்வு திட்ட யோசனைகள், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பனவற்றின் மூலமாக தமிழர்களின் அரசியல் எழுச்சி நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தோடு, இரு இனங்களிலும் உள்ள அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றர்களை நியமித்து அக்கட்சிகளை பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் அரசியல் எழுச்சியை அடக்குவதற்கு நீண்ட காலமாக திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் பேரினவாதிகள் அவர்களின் பொருளாதாரத்தையும் அழித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஜுலைக் கலவரம் தமிழர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.
    தமிழ், முஸ்லிம் இனங்களின் அரசியல் பொருளாதாரத்தைக் குறி வைத்துச் செயற்பட்ட பெரும் பேரினவாதிகள் இந்த இரண்டு இனங்களின் சனத்தொகை விகிதாசாரத்திலும் தாக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரைக்கும் மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகளும், முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் அம்பாரை, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சிங்களவர்களை குடியேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அரச காணிகளையும், தமிழ், முஸ்லிம் இனங்களிடம் புனித பூமி, வனஇலாகாவுக்குரிய காணி எனப் பல பெயர்களில் பறிக்கப்பட்ட காணிகளிலும் சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழர்களையும், முஸ்லிம்களையும் மாவட்ட ரீதியாக சிறுபான்மையினராக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இவ்வாறு காலனித்துவ ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மையிருக்கு எதிரான சதித் திட்டங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் படிப்படியாக தீவிரமடைந்து அரச ஒடுக்கு முறையாக மாறியது. திரைமறையில் மேற்கொள்ளப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் பௌத்த சிங்களவர்களின் ஆதரவைப் பெற்று அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்காக பகிரங்கமாக அரசாங்கத்தின் ஒரு நடவடிக்கையாக மாறி ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழர்களின் சாத்வீகப் போராட்டம் தோல்வி அடைந்த நிலையில் சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பேரினவாதிகளின் நடவடிக்கைகளிலிருந்து விடுதலைப் பெறுவதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சுமார் 30 வருடங்கள் நீடித்த ஆயுதப் போராட்டம் கூட தோல்வி கண்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் முஸ்லிம் இளைஞர்களில் ஒரு தொகையினர் தம்மை இணைத்துக் கொண்டு செயற்பட்டார்கள். ஆயினும், ஆட்சியாளர்கள் மேற்கொண்டு திட்டமிட்ட நடவடிக்கைகளும், உளவுப் பிரிவின் நடவடிக்கைகளும் இணைந்து தமிழ் ஆயுதக் குழுக்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் பிரிக்கப்பட்டார்கள். வரலாற்றில் 1990ஆண்டுகளில் முதற் தடவையாக தமிழர்களும், முஸ்லிம்கள் இனரீதியாக மோதிக் கொண்டார்கள். இதன் பின்னர் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, சமூக எழுச்சிக்கு சிங்களப் பேரினவாதம் எதனைச் செய்ததோ அதனை தமிழ் ஆயுதக் குழுக்களும், தமிழ்ப் பேரினவாதமும் மேற்கொண்டன. திட்டமிட்டு முஸ்லிம்களின் பொருளாதாரம், வீடுகள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். 

    தமிழ், முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த இன நல்லுறவு 1990ஆம் ஆண்டுகளின் பின்னர் கசப்பாகியது. சந்தேகங்கள் அதிகரித்தன. இன்று கசப்புணர்வுகள் குறைந்திருந்தாலும் சந்தேகங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

    2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம்கள் தாம் நிம்மதியாக வாழலாம் என்று கற்பனை செய்து கொண்டார்கள். அதே வேளை, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு முன் வைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் உறுதி வழங்கியது. அதனை தமிழர்கள் நம்பினார்கள். சர்வதேசத்திடம் இலங்கை சரணாகதி அடைந்துள்ளதென்ற தோற்றம் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகளிhனலும், சர்வதேசத்தினாலும் காண்பிக்கப்பட்டது. ஆனால், இது கூட தமிழர்களை ஏமாற்றும் விதமாக முன் வைக்கப்படுகின்றதென்று தமிழ் அரசியல் கட்சிகளினால் உணரப்படவில்லை என்றே சொல்லலாம். இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கைககளில் எடுத்துக் கொண்டன. இன்று இலங்கை இந்நாடுகளின் நலன்களைப் பேணிக் கொண்டிருக்கின்றன. இதனால், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் கடந்த காலங்களைப் போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது.

    சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வினை முன் வைப்பது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் செல்வாக்கை சிங்களவர்கள் மத்தியில் நலிவடையச் செய்திடும் என்ற நிலை இலங்கை அரசியலில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சிகளின் நலன்களுக்காக வளர்க்கப்பட்ட பௌத்த இனவாத அமைப்புக்கள் இக்கட்சிகளை அரசியல் தீர்வுக்கு செல்லவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன. இக்கட்சிகள் பௌத்த இனவாத அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன.

    தற்போது இலங்கையின் அரசியல் போக்கை பௌத்த இனவாத அமைப்புக்களே தீர்மானிக்கும் நிலையேற்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களை பேச்சுவார்த்தைகள் மூலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதே வேளை, முஸ்லிம்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆட்சியாளர்களின் அனுசரணை இருந்து கொண்டிருப்பது மட்டுமல்லாது சர்வதேசத்தின் ஆதரவும் இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைய அரசாங்கம் சர்வதேசத்தை மிகச் சரியாக கையாண்டு கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடுகளின் நலன்களை பேணிக் கொள்வதே உள்நாட்டில் தமது அரசியல் இருப்புக்கு சிறந்ததென்று உணர்ந்துள்ளது. இதனால்தான் அரசாங்கம் இலங்கையை பூலோக ரீதியாக பிரித்து ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுத்துள்ளது. இவ்வாறு சர்வதேசத்திடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுபான்மையினரை அடக்கியாள நினைத்துக் கொண்டாலும் அடுத்த ஐந்து வருடங்களின் பின்னர் இலங்கை வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்ததொரு நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை. இப்போதே ஆதிக்கப் போட்டி ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதே வேளை, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினை முன் வைத்து இலங்கை வெளிநாடுகளின் நிதி உதிவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மாறாக உள்நாட்டு அரசியலை மையப்படுத்தி அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தாதுள்ளதென்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இது எதுவரைக்கும் தொடருமென்று எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியா தமது நாட்டில் சிறுபான்மையினரை நசுக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க உலகப் பொலிஸ்காரன் என்ற தோரணையில் தமக்கு கட்டுப்படாத நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. சில நாடுகளில் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்து வைத்து ஆயுத விற்பனையை செய்து கொண்டிருக்கின்றது. அரபு நாடுகளின் எண்ணெய் வளத்திற்காக அந்நாடுகளை போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் துவசம் செய்து கொண்டிருக்கின்றது. இப்படியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நாடுகள் இலங்கையையும் தமது சுயநலத்திற்காகவே பயன்படுத்திக் கொள்ளும் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இலங்கையின் அரசியல் சூழல் காணப்பட்டாலும் தமிழர்களை ஓரளவிற்காவது திருப்திபடுத்த வேண்டியதொரு நிலையும் காணப்படுகின்றது. அதாவது தமிழர்களை ஒரளவிற்கு திருப்திபடுத்தக் கூடியதாகவும், சிங்களவர்களின் நலன்களை அதிகளவில் பேணிக் கொள்ளக் கூடியதுமானதொரு அரசியல் தீர்வை அரசாங்கம் முன் வைக்கும். இது கூட சர்வதேசம் தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதாகக் காட்டிக் கொள்வதற்கான மற்றுமொரு நாடகமாகவே அமையவுள்ளது. அத்தகையதொரு தீர்வினை விரும்பினாலும், விரும்பா விட்டாலும் தமிழர் தரப்பு ஏற்றுக் கொண்டாக வேண்டியேற்படும். ஏனெனில், அந்த தீர்வு சர்வதேசத்தின் அங்கிகாரத்துடனே முன் வைக்கப்படும்.

    இவ்வாறு அரசியல் தீர்வு தமிழர்களின் குறைந்த பட்ச அபிலாசைகளை நிறைவேற்றும் அதே வேளை, முஸ்லிம்களின் அபிலாசைகளை முற்றாக புறக்கணித்ததாகவும் அமைந்திருக்கும். முஸ்லிம்கள் பல பிரதேசங்களில் தாக்கப்பட்டு, சொத்துக்கள் அழிக்கப்பட்ட போதிலும் சர்வதேச நாடுகள் இதற்காக பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. அதே வேளை, அத்தாக்குதல்களையிட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் சர்வதேசத்திற்கு கொண்டு போகவில்லை. அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கவில்லை. முஸ்லிம்களை பௌத்த இனவாத கும்பல்கள் தாக்கிய போது அதனை இரு குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள், அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றதென்று முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள அரசியல் கட்சியின் தலைவர் சொல்லிக் கொண்டார்.

    அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ளும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைமைகளும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு சமூகத்தின் அரசியல் பலத்தை பதவிகளுக்காக அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் சாட்டுக்காக முன் வைக்கும் அரசியல் தீர்வில் முஸ்லிம்களுக்கு எதுவும் இருக்காது என்பதற்கு அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நல்ல எடுத்துக் காட்டாகும். இதில் முஸ்லிம்களின் அபிலாசைகள் உள்ளடங்கவில்லையே என்று குற்றம் சாட்டப்பட்ட போது, இது இடைக்கால அறிக்கைதான் வேண்டிய மாற்றங்களை அதில் நாங்கள் செய்வோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துக் கொண்டன.

    ஆனால், இன்று வரைக்கும் முஸ்லிம்களின் அபிலாசைகளுக்காக முஸ்லிம் கட்சிகள் முன் வைத்த முன் திட்டங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாதகமாக அமையுமென்று தெரிந்து கொண்டே அதற்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்தன. பின்னர் அதில் குறையும் கண்டன. இது போன்று கடந்த காலங்களிலும் முஸ்லிம் கட்சிகள் செயற்பட்டுள்ளன. இதே போன்றுதான் அரசியல் தீர்வு முன் வைக்கப்பட்டாலும் அதனை கேள்வி பார்வையின்றி ஆதரிப்பார்கள். முஸ்லிம்கள் மத்தியில் விமர்சனங்கள் முன் வைக்கப்படும் போது அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டதென்று முதலைக் கண்ணீர் வடிப்பார்கள். அரசாங்கத்தை திட்டுவார்கள். இதுதான் முஸ்லிம் கட்சிகள் நிலைப்பாடாகும்.

    இலங்கையின் வரலாறு ரீதியாகவும் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். இதற்கு அவ்வப்போது முஸ்லிம்களின் மத்தியில் இருந்த அரசியல் எட்டப்பர்கள் துணையாக செயற்பட்டுள்ளார்கள். அந்த எட்டப்பர் வேலை இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியல், பொருளாதாரம் இலங்கை அரசாங்கத்தினாலும், பேரினவாதிகளினாலும், இனவாதிகளினாலும், சர்வதேசத்தினாலும் திட்டமிட்டு புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் துணையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், முஸ்லிம்களின் எதிர் காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முஸ்லிம் அமைப்புக்களும், புத்திஜீவிகளும் மேற்கொள்ள வேண்டும். இதில் புத்திஜீவிகளின் பங்களிப்பு முற்றாக இல்லாதுள்ளது. இவர்கள் தங்களுக்கு மற்றவர்கள் களம் அமைத்துத் தர வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். புத்திஜீவிகள்தான் தங்களுக்கு களம் அமைத்து தமது சமூகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். பல்வேறு ஆசைகளில் மூழ்கியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது. இது கால வரைக்கும் கட்சியின் பெயரால் முஸ்லிம் சமூகத்தை சீரழித்தது நிறுத்தப்பட வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தின் மீது உண்மையான நேசம் கொண்ட புதிய அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். கட்சி பேதம், பிரதேசவாதம் போன்றவைகளினால் பிளவுபட்டுள்ள முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். ஒரு நேர்மையான அரசியல் தலைமையின் கீழ் ஒற்றுமைப்படாத வரையில் முஸ்லிம்களினால் குறைந்த பட்ச அபிலாசைகளைக் கூட அடைந்து கொள்ள முடியாது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நேர்மையான அரசியல் தலைமை வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top