(அஸ்லம் எஸ்.மௌலானா)
மட்டக்களப்பு-
பொத்துவில் ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்தை வலியுறுத்தி இந்திய பிரதமர்
நரேந்திர மோடியிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள கோரிக்கையை எமது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலுப்படுத்த முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை
உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல்
மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
"மறைந்த
ஜனாதிபதி ஆர்.பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில்
வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சராக பதவி வகித்த மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர்,
ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு சென்றிருந்த வேளையில், மட்டக்களப்பில்
இருந்து பொத்துவில் வரை ரயில் சேவையை விஸ்தரிப்பு செய்வதற்கு உதவுமாறு
விடுத்த வேண்டுகோள், அந்நாட்டு அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,
பொறியியலாளர் குழுவொன்று இங்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆய்வு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய மதிப்பீட்டு அறிக்கையின்படி 400 மில்லியன்
ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் ஈரான் முன்வந்திருந்தது.
எனினும்
அப்போது வடக்கு- கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலை மற்றும் நாட்டில்
ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக மர்ஹூம் மன்சூர் மேற்கொண்டு வந்த முயற்சி
தடைப்பட்டது. என்றாலும் அரசியல் அதிகாரம் அற்ற நிலையிலும் அவர் மரணிக்கும்
வரை இவ்விடயத்தில் மிக ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு
வந்தார். ஆனால் அவரது நீண்ட கால கனவு நனவாகவில்லை.
இதன்
தொடர்ச்சியாகவே கடந்த 2014 டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி கல்முனையில்
இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றிருந்த தற்போதைய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்பிராந்திய மக்களின் நீண்ட கால அபிலாஷையான
மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் சேவை விஸ்தரிப்பு செய்யப்படும் என
வாக்குறுதியளித்து சென்றிருந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் இது தொடர்பில் எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இது
தொடர்பில் கல்முனை மாநகர சபையில் நான் பிரதி மேயராக இருந்தபோது கடந்த 2016
மார்ச் மாத சபை அமர்வில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனி நபர் பிரேரணை
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நல்லாட்சி
அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் தேர்தல்
வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியும் வருகின்ற போதிலும் கல்முனையில்
பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி மாத்திரம்
இன்னும் வெற்று வாக்குறுதியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில்
சபாநாயகர் தலைமையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரச உயர்மட்ட
தூதுக்குழுவில் பங்கேற்றிருக்கின்ற எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இக்கோரிக்கையை இந்திய பிரதமர்
நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். இதனைக் கவனத்தில் கொண்டு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, இந்திய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ வேண்டுகோள்
ஒன்றை முன்வைப்பதன் மூலம் அமைச்சர் ஹக்கீமின் கோரிக்கை வலுப்பெறும்
என்பதுடன் தேர்தல் காலத்தில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி
தருவதற்கு உதவும் என நம்புகிறேன்" என்றார்.
0 comments:
Post a Comment