• Latest News

    November 25, 2018

    மு.காவும் ம.காவும் இணையுமா?

    சஹாப்தீன் -
    இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்று ஐ.நா முதல் சர்வதேச நாடுகள் பலவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளாந்தம் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பித்தாலும் அவரை பிரதமராக நியமனம் செய்யமாட்டேன் என்றே தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். மைத்திபால சிறிசேனவின் இந்த நிலைப்பாட்டினால் ஐக்கிய தேசிய கட்சியினரிடையே முன்பை விடவும் ஒருமித்த செயற்பாட்டைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எவராயினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் பட்சத்தில் அவரை பிரதமராக நியமிப்பேன் என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அல்லாத ஒருவரை பிரதமராக நியமனம் செய்வேன் என்பதன் மூலமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் அடுத்த தலைவர் யார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தவே மைத்திரிபால சிறிசேன காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் யாரை பிரதமராக நியமனம் செய்யலாமென்று வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம்களிடையே பலம் பெற்ற கட்சிகளாக உள்ள முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டுமென்று தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டாலும் இக்கட்சிகளிடையே இதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.
    முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அக்கட்சியின் கொள்கை சார்ந்த செயற்பாடுகளில் மாற்றமடைந்து கொண்டிருப்பதனால், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்கள் கட்சியின் தலைமையோடு முரண்பட்டுக் கொண்டு விலகிச் சென்றமையாலும், அக்கட்சியின்; வளர்ச்சிக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தியவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டு அவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு கட்சியின் ஆரம்ப காலத்தவர்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருப்பதனாலும், கட்சியில் ஏற்பட்ட பிளவுகளும், கட்சியின் கட்டமைப்பு நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமையும், பலவீனமும், நம்பிக்கையீனமும், கட்சியின் அதிகாரங்கள் தலைமையிடம் குவிந்துள்ளமை போன்ற இத்தகைய காரணங்களினால் மக்கள் காங்கிரஸ் முஸ்லிம்களிடையே அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் ஏற்பட்டுள்ள சரிவினை கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
    கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்;லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தம்வசம் இருந்த சம்மாந்துறை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபைகளின் அதிகாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் இழந்துள்ளது. இச்சபைகளின் அதிகாரங்களை மக்கள் காங்கிரஸும், சுதந்திரக் கட்சியும் இணைந்து பெற்றுள்ளன. கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பெற்றுள்ளது. என்ற போதிலும் கல்முனை மாநகர சபையில் ஆளுத் தரப்பினை விடவும் எதிர்க் கட்சியில்தான் அதிக உறுப்பினர்கள் உள்ளார்கள்.
    2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டது. இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபை வாக்காளர்களின் 68.41 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இறக்காமம் பிரதேச சபைத் தேர்தலில் 50.11 வீத வாக்குளையும், பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் 53.29 வீத வாக்குளையும், நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் 79.99 வீத வாக்குகளையும், சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் 40 வீத வாக்குகளையும், கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 48.99 வீத வாக்குகளையும் பெற்றுக் கொண்;டது.
    ஆனால், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணநை;து யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் 47.37 வீத வாக்குளைப் பெற்றுக் கொண்டது. இதன்படி 2011ஆமு; ஆண்டை விடவும் 21.04 வீத வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளது. இறக்காமம் பிரதேச சபைத் தேர்தலில் 38.86 வீத வாக்குளைப் பெற்றுக் கொண்டது. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.25 வீத வாக்குகளை இழந்துள்ளது. பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் 30.29 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. 2011ஆம் ஆண்டை விடவும் 23 வீத வாக்குகளைப் இழந்துள்ளது. நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் 47.35 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இங்கும் 2011ஆம் ஆண்டை விடவும் 32.64 வீத வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் இழந்துள்ளது. சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் 38.01 வீத வாக்குகளைப் பெற்றது. 2011ஆம் ஆண்டை விடவும் 1.99 வீத வாக்குகளை இழந்துள்ளது. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 29.66 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இது 2011ஆம் ஆண்டை விடவும் 20.33 வீத வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளது.
    ஆகவே, 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக் கொண்டது. இதே வேளை, மேற்படி உள்ளுராட்சி சபைகளில் மக்கள் காங்கிரஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் 13.28 வீத வாக்குகளையும், இறக்காமம் பிரதேச சபைத் தேர்தலில் 27.38 வீத வாக்குகளையும், பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் 21.25 வீத வாக்குகளையும், நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் 43.34 வீத வாக்குகளையும், சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் 37.68 வீத வாக்குகளையும், கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 12.89 வீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டது. கல்முனை மாநகர சபையை தவிர ஏனைய இடங்களில் மக்கள் காங்கிரஸ் முதற் தடவையாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. மக்கள் காங்கிரஸ் இத்தேர்தலில் ஹஸன்அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் காங்கிரஸ் எனும் கூட்டமைப்பில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
    இது போலவே கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.
    இத்தகையதொரு பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் என்று எதிர் பார்க்க முடியாதுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் பாரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸ் முதற் தடவையாக நல்லதொரு தடத்தைப் பதித்துள்ளது. ஆயினும், மக்கள் காங்கிரஸை விடவும் முஸ்லிம் காங்கிரஸிற்குத்தான் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில் மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸுடன் இணையும் பட்சத்தில் அதனால் முஸ்லிம் காங்கிரஸே அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும். அத்தோடு வளர்ந்து கொண்டு வரும் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை முஸ்லிம் காங்கிரஸ் விழுங்கிக் கொள்ளும். இதனை மக்கள் காங்கிரஸார் உணர்ந்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவது என்பது முஸ்லிம் காங்கிரஸிற்கு முட்டுக் கொடுப்பதாகவே அமைந்துவிடும்.
    இதே வேளை, அம்பாரை மாவட்டத்தின் பெரும்பான்மைச் செல்வாக்கை எந்த முஸ்லிம் கட்சி பெற்றுள்ளதோ அக்கட்சியே முஸ்லிம்களின் கட்சியாகவும் பார்க்கப்படும். இதனால்தான் மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையை கைப்பற்றும் திட்டத்தை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்காவுக்கு சென்ற முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரும், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 05 பேரும் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டதனை வைத்துக் கொண்டு இக்கட்சிகள் இணைந்து விட்டன என்று சொல்ல முடியாது.
    இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மக்கள் காங்கிரஸையும் தமது கட்சியையும் ஒரு அணியாக இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இவரின் இந்த முயற்சி அவரின் அரசியல் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதற்குரிய முன்னெடுப்பாக இருக்கின்றது. கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது வாக்காளர்களில் சுமார் 80 வீதமானவர்கள் கடந்த பல தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கே வாக்களித்துள்ளார்கள். ஆனால், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துப் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவுக்கே வாக்களித்துள்ளார்கள். இக்குழு கல்முனை மாநகர சபையில் 09 உறுப்பினர்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது. பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நிந்தவூரைச் சேர்ந்தவர். ஆயினும், நிந்தவூர் பிரதே சபையின் அதிகாரத்தை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் சம்மாந்துறையை சேர்ந்தவர். சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகாரம் மக்கள் காங்கிரஸிடம் உள்ளது.
    ஆகவே, முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் இழந்துள்ள செல்வாக்கை ஈடுசெய்ய மக்கள் காங்கிரஸின் முதுகில் சவாரி செய்வதற்கு எத்தனிக்கின்றது என்று மக்கள் காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    மேலும், அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 80 வீத வாக்குகளை ஒரு கட்சிக்கு அளித்தால்; மாத்திரமே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இத்தேர்தலில்; முஸ்லிம் காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களை மாத்திரம் நிறுத்தி மூன்று பேரையும் வெற்றியடையச் செய்தது. தற்போது அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அக்கட்சி பைசால் காசீம், மன்சூர், ஹரீஸ் மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நசீர் ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.எம்.இஸ்மாயிலும் உள்ளார். இரு கட்சிகளும் இணையும் பட்சத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிடுவார்கள். இவர்களுடன் இன்னும் சிலர் போட்டியிடுவார்கள். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளுமாயின் மக்கள் காங்கிரஸினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையேனும் பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும். மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளுமாயின் முஸ்லிம் காங்கிரஸினால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றுக் கொள்ள முடியும்.
    மேலும், முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணநை;து போட்டியிடுமாயின் மூன்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒருவரை போட்டியிலிருந்து தவிர்க்க வேண்டும். தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி தருவாகக் கூறலாம். ஆனால், அட்hளைச்சேனையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நசீரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் நியமனம் செய்வோம் என்று சொல்லி போட்டியிடாது தவிர்க்க முடியாது. ஆதலால், அவருக்கு வாய்ப்பு கொடுத்தேயாக வேண்டும். மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதில் நசீர் மிகவும் உறுதியாக உள்ளார். அதற்குரிய நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். அப்படியாயின் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் யாரை போட்டியிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கட்சியின் தலைமையினால் கோர முடியும்.
    இதே போன்றுதான் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் நிலைமைகள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே பெற்றுக் கொள்ள முடியும். தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக கொள்ள முடியும். இதே நிலைமைதான் திருகோணமலை மாவட்டத்திலும் உள்ளது.
    மேலும், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை என்பது தேர்தலை நோக்கக் கொண்டிருக்க முடியாது. தேர்தலில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் அதே வேளை, சமூகத்தின் எதிர்காலத்திற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், ஆளுந் தரப்பில்தான் இருக்க வேண்டும். அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற நோக்கமும் இருக்கக் கூடாது. ஆளுந் தரப்பானாலும், எதிர்க்கட்சியானாலும் எடுக்கப்படும் முடிவுகள் சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் பக்குவத்தைக் கொண்டிருக்கின்றார்களா என்பது சந்தேகமாகும். எப்போது அமைச்சர் பதவியைப் பெறலாமென்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
    கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டாலும், அக்கட்சியின் சார்பில் மேயர் பதவிக்கு பெயர் குறிக்கப்பட்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் மேயராக தெரிவு செய்யப்படுவதற்கு மக்கள் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களும் வாக்களித்தார்கள். அதே வேளை, மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முபீத் பிரதி மேயர் பதவிக்கு போட்டியிட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. இவ்வாறு பிரதி மேயருக்கு கழுத்தறுப்பு செய்தவர்களுடன் எவ்வாறு பொதுத் தேர்தலில் இணைந்து கொள்ள முடியுமென்று கல்முனை மாநகர சபையில் உள்ள மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் கேட்கின்றார்கள்.
    இதே வேளை, மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்வதனை விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக தங்களை பலியாக்க முடியாதென்று தெரிவிக்கின்றார்கள். அத்தோடு, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளினால் கட்சியை விட்டு வெளியேறி மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டவர்களும், ஹஸன்அலியின் தலைமையிலான குழுவினரும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவதனை விரும்பவில்லை. மக்கள் காங்கிரஸ் இணைவது என்பது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாக மட்டுமன்றி தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு மக்கள் காங்கிரஸ் தமது வாக்குகளை தாரைவார்ப்பதாகிப் போய்விடும் என்று தெரிவிக்கின்றார்கள்.
    இவ்வாறு இக்கட்சிகளின் கூட்டமைப்பு பற்றிய பேச்சுக்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது கிடைக்கப் பெற்றுள்ள கருத்துக்களின் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைவதற்கு வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றது. இதனை சாத்தியமாக்க வேண்டுமாயின் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் இரண்டு வேட்பாளர்களும், மக்கள் காங்கிரஸின் சார்பில் இரண்டு வேட்பாளர்களும் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்குமாயின் மக்கள் காங்கிரஸும் அது பற்றி சாதகமாக பரிசீலிக்குமென்று மக்கள் காங்கிரஸின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
    25.11.2018 Virakesari
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவும் ம.காவும் இணையுமா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top