
நாட்டில் பிரதம மந்திரியோ, அமைச்சரவையோ இல்லாத அல்லது செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மோசமான அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை மக்கள் சிக்கியுள்ளார்கள். இதிலிருந்து வெளிவருவது என்பது பதவிக்காக போராடிக் கொண்டிருக்கும் தலைவர்களின் சிந்தனை மாற்றங்களிலேயே தங்கியுள்ளன. பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டுமென்ற கோஷத்தில் ஐக்கிய தேசிய முன்னணியினரும் உள்ளார்கள். இவர்களின் இந்த விட்டுக் கொடுக்காமை காரணமாக இலங்கை சர்வதேசத்திலிருந்து தூரமாகிக் கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டில் பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டென பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
பதவி மோகத்தினால் அரசியல் தலைவர்கள் நாட்டை சீரழித்துக்
கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் பதவிக்காக எதனையும் செய்யக்
கூடியவர்களையே தலைவர்கள் என்று பொது மக்கள் அழைத்துக்
கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு பதவிக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும்
பேரினவாத அரசியல் தலைவர்களுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும்,
ஏனைய கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இணைந்து செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றார்கள். பேரினவாத அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் எப்படி
நாட்டிற்கு என்றில்லாது அவர்களின் சுயநல அரசியலுக்காகவே அமைந்துள்ளனவோ. இதே
போன்றுதான் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், ஏனைய கட்சிகளிலுள்ள முஸ்லிம்
அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளும் சமூகத்திற்காக என்றில்லாது
கட்சிகளினதும், தனிப்பட்டவர்களினதும் அரசியலை மையப்படுத்தியதாகவே
இருக்கின்றன. இதனால்தான் இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடனும், மைத்திரிபால
சிறிசேன – மஹிந்தராஜபக்ஷவுடனும் இணைந்துள்ளார்கள்.
முஸ்லிம் அரசியல்
கட்சிகளை எடுத்துக் கொண்டால் எந்தவொரு அரசியல் கட்சியும் பேரினவாதக்
கட்சிகளுடன் சங்கமித்துள்ளமையை ஏற்றுக் கொள்வதில்லை. தாங்கள் இணக்க அரசியலை
மேற்கொண்டு வருகின்றோம். எதிர்ப்பு அரசியலைச் செய்தால் அபிவிருத்திகளைச்
செய்ய முடியாதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இணக்க அரசியல்
என்ற பேரில் ஐக்கிய தேசிய கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள்
காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், மைத்திரிபால சிறிசேன – மஹிந்தராஜபக்ஷவுடன்
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வும் செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்ப்பு அரசியல் என்றாலும், இணக்க அரசியல் அரசியல் என்றாலும் அது முஸ்லிம்களின் உரிமைகளை மையப்படுத்தியதாக இருப்பது அவசியம். ஆனால், முஸ்லிம் அரசியலில் அத்தகையதொரு கொள்கைப் போக்கை கண்டு கொள்ள முடிவதில்லை. தாங்கள் இணக்க அரசியலை செய்து கொண்டிருக்கின்றோம் என்று முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துக் கொண்டாலும் அவை முகவர்கள் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் கட்சிகள் இணக்க அரசியலையே
மேற்கொண்டிருந்தால் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின்
உரிமைகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
முஸ்லிம்களின் எந்தவொரு உரிமைகளையும் இக்கட்சிகள் பெற்றுக் கொடுத்தது
கிடையாது. இணக்க அரசியல் என்பது உடன்படிக்கைகளின் அடிப்படையில் சமூகம்
சார்ந்த உரிமைகளை அடைந்து கொள்வதற்காக செய்யப்படும் ஒன்றாகும். இணக்க
அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஆனால், முஸ்லிம்
கட்சிகளினால் தெரிவிக்கப்படும் இணக்க அரசியல் என்பது பதவிகளை
அடியொட்டியதாகவும், பேரினவாத கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை
பாதுகாத்துக் கொள்வதுமாகவே இருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின்
ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் கட்சியை தொடங்கியவுடன்
எதிர்ப்பு அரசியலையே மேற்கொண்டிருந்தார். இந்த எதிர்ப்பு அரசியல் மூலம்தான்
மர்ஹும் அஸ்ரப்பின் சமூக உணர்வு வெளிக்கொணரப்பட்டது. ஆயினும், இக்கட்சி
1994ஆம் அஸ்ரப் - சந்திரிகா உடன்படிக்கை ஒன்றின் மூலமாக இணக்க அரசியலை
மேற்கொண்டது. அந்த உடன்படிக்கையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள்
உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம்
கட்சிகளினால் வெளிப்படையாக ஒரு தெளிவான உடன்படிக்கைகள் செய்து
கொள்ளப்படவில்லை. முஸ்லிம் கட்சிகள் தாம் இணைந்துள்ள பேரினவாத கட்சிகளுடன்
உடன்படிக்கை செய்துள்ளோம் என்று தெரிவித்துக் கொண்டனவே அல்லாது அதனை
மக்களின் பார்வைக்கு முன் வைக்கவில்லை.
தாம் ஆதரிக்கும் பேரினவாதக்
கட்சிகள் ஆட்சி அமைப்பதற்குரிய ஆசனங்களை முஸ்லிம்களின் வாக்குகளினால்
பெற்றுக் கொடுக்கும் வேலையையும், ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரிக்கும்
வேட்பாளர் வெற்றி பெறுவதற்குரிய வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும்
வேலையையுமே முஸ்லிம் கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த அரசியல்
செயற்பாட்டை ஒரு போதும் இணக்க அரசியல் என்று அழைக்க முடியாது. இதனை முகவர்
அரசியல் என்றே அழைக்க வேண்டியுள்ளது.
இன்று நாட்டில் மிகவும் மோசமான
அரசியல் நெருக்கடி உள்ள போதிலும், அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு
முஸ்லிம் கட்சிகள் தவறியுள்ளன. மறுக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின்
உரிமைகளை மீட்டெடுப்பதற்குரிய பேரம் பேசுதல்களைச் செய்யாது ரணில்
விக்கிரமசிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும்,
மஹிந்தராஜபக்ஷவுக்கும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் கட்சிகள் முகவர்கள் அரசியலை செய்து கொண்டிருப்பதனால்தான்
மஹிந்தராஜபக்ஷ காலத்தில் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் உள்ளிட்ட இன்னும் பல
இடங்களில் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் காவல்துறையினதும்,
அரசாங்கத்தில் இருந்த ஒரு சில முக்கியஸ்தர்களினதும் பின்புலத்துடன்
தாக்குதல்களை மேற்கொண்டார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.
வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. இவ்வாறு சம்பவங்கள் நடைபெற்றுக்
கொண்டிருந்த போதெல்லாம் தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், முஸ்லிம்
காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்தன. இக்கட்சிகள்
இச்சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டாலும் மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியை
கேள்விக்கு உட்படுத்தவில்லை. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை பற்றி முஸ்லிம்
அமைச்சர்கள் எவரும் என்னிடம் முறை;பாடு செய்யவில்லை என்று மஹிந்தராஜபக்ஷ
கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றின் போது தெரிவித்திருந்தார்.
அப்போது கூட நாங்கள் எடுத்துச் சொன்னோம் என்று மறுதலித்துப் பேசுவதற்கு
யாரும் துணியவில்லை. இந்த நிலைப்பாட்டை இணக்க அரசியலில் காண முடியாது.
முகவர் அரசியலில்தான் காண முடியும். முகவர் என்பவர் தாம் யாரின் கீழ்
செயற்பட்டுக் கொண்டிருக்கின்றாரோ அவரிடும் கட்டளைக்கு செயற்படுவதாகும்.
இதனையே முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வந்த போது முஸ்லிம்கள் தம்மை
பிரதிநிதித்துப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் இணக்க
அரசியல் என்ற மாயை நம்பவில்லை. முஸ்லிம் கட்சிகள் ஆரம்பத்தில்;
மஹிந்தராஜபக்ஷவுக்குத்தான் ஆதரவு அளித்தார்கள். ஆயினும், முஸ்லிம்கள்
மஹிந்தராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதில்லை என்ற முடிவுக்கு பெரும்பாலானவர்கள்
வந்திருந்தார்கள். இதன் பின்னர் முஸ்லிம் கட்சிகள் மைத்திரிபால
சிறசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு அளித்தன. பின்னர் பொதுத் தேர்தலை
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்று
போட்டியிட்டார்கள். முஸ்லிம்களின் ஆதரவுடன் வெற்றி கொண்ட ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும்
முஸ்லிம்களின் நலன்களில் போதிய கவனம் செலுத்தவில்லை. தேர்தல் காலங்களில்
முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நல்லாட்சி என்ற பேரில் ஜனநாயக விரோத செயல்கள் பல இடங்களில் நடைபெற்றன.
ஜிந்தோட்ட, அம்பாரை, கண்டி, திகன உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லிம்களின் மீது
பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இதன் போது காவல்துறையினர்
துணையாக செயற்பட்டார்கள். அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இதில்
சம்பந்தப்பட்டிருந்தார்கள். இதன் போது கூட முஸ்லிம் அரசியல் தலைமைகள்
அரசாங்கத்திற்கு போதிய அழுத்தங்களை கொடுக்காது அடங்கியே நடந்து கொண்டன.
ஆதலால், 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்திலும்
முஸ்லிம் கட்சிகள் இணக்க அரசியல் என்ற போர்வைக்குள் முகவர் அரசியலையே
செய்து கொண்டிருக்கின்றன. முகவர் அரசியலின் உச்சக் கட்டம்தான் ஜனநாயகத்தைப்
பாதுகாத்துக் கொள்வதற்கு போராடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியின் மேடைகளில் தமது
கட்சியின் தனித்துவ அடையாளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஐக்கிய தேசிய
கட்சியின் தனித்துவ அடையாளத்தை வெளிக்காட்டும் உடைகளை அணிந்து கொண்டு
ஆக்ரோசமாக பேசிக் கொண்டிருக்கின்றார்.
மஹிந்தராஜபக்ஷவின்
அரசாங்கத்திலும், மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்திலும்
முஸ்லிம்களின் மீது ஜனநாயக விரோத செயல்களை காட்டுத்தர்ப்பார் போல்
அரங்கேற்றிக் கொண்டிருக்கும் போது அதற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாத்துக்
கொள்வதற்கு போராடுகின்றோம் என்று போராட்டங்களை நடத்தவில்லை. மாறாக
முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களை
செய்த போததெல்லாம் பொறுமையுடன் இருக்குமாறு முஸ்லிம் அரசியல் தலைமைகள்
கேட்டுக் கொண்டன. இவை இணக்க அரசியலின் இலட்சணமாகக் கொள்ள முடியாது. அதே
வேளை, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோத செயல்களை கண்டிக்க
வேண்டும். இதனை அனுமதிப்பது என்பது சட்டம், ஒழுங்கை குழி தோண்டி
புதைப்பதற்கு சமனாகும். ஆனால், நாம் இங்கு சொல்ல வருவது முஸ்லிம் கட்சிகள்
இன்றைய சூழலை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதாகும்.
இதே வேளை,
எதிர்ப்பு அரசியலை செய்யக் கூடிய பக்குவம் கூட முஸ்லிம் கட்சிகளின் மக்கள்
பிரதிநிதிகளுக்கு கிடையாது. எப்போதும் ஆளுந் தரப்பாக இருக்க வேண்டுமென்றே
முடிவுகளை எடுக்கின்றன. ஆளுந் தரப்பாக இருக்க வேண்டுமென்ற சிந்தனை கூட
முகவர் அரசியலுக்கு பெருந்துணையாக இருந்து கொண்டிருக்கின்றன. பேரினவாத
கட்சிகளை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்களின் உரிமைகளை வழங்காததொரு அரசியலையே
செய்து கொண்டிருக்கின்றன. இதற்காக தம்மோடு இணைந்துள்ள முஸ்லிம்
கட்சிகளையும், தமது கட்சியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற
உறுப்பினர்களையும் முகவர்கள் போல் வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் ஊதுகுழலாக
செயற்பட வைத்துள்ளார்கள். தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அதே போன்றதொரு
கடித்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எழுத முடியும். ஆனால்,
அவர் ரணில் விக்கிரமசிங்க மீதுதான் குறைகாண்கின்றார். இந்த சிந்தனை
அதாவுல்லாஹ்வின் முகவர் நிலையையே காட்டுகின்றது.
தற்போது
ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு முஸ்லிம் காங்கிரஸும், மக்கள்
காங்கிரஸும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று ஏற்பட்டுள்ள
நெருக்கடி போன்றதொரு நிலை கல்முனை மாநகர சபையிலும் காணப்படுகின்றன. மாநகர
சபையில் 41 உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களில் அரைவாசிக்கு
மேற்பட்டவர்கள் எதிர்த்தரப்பில் உள்ளார்கள். மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன்
மேயராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த சட்டத்தரணி றக்கீப் தெரிவு
செய்யப்பட்டுள்ளார். மேயர் தெரிவில் ஏற்பட்ட ஒற்றுமை அதன் பின்னர் காண
முடியவில்லை. மாநகர சபையின் கூட்டங்கள் பெரும்பாலும் குழப்பத்திலேயே
முடிவடைந்து கொண்டிருக்கின்றன. மேயர் மாநகர சபை கட்டளைச் சட்டத்திற்கு
முரணாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். சர்வதிகாரி போன்று செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றார் என்று மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் அணியினர்
தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மேயரோ தான் மாநகர சபையின்
கட்டளைச் சட்டத்திற்கு அமையவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
மேயருக்குரிய அதிகாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துச்
செயற்படுகின்றேன் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். ஆயினும், மேயர்
தமது பக்கத்திற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாததன் காரணமாக திணறிக்
கொண்டிருக்கின்றார் என்பது உண்மையாகும்.
இங்கு முக்கியமான விடயம்
என்னவென்றால் ரணில் விக்கிரமசிங்கவின் தலையை பாதுகாத்துக் கொள்வதற்கு
முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் காங்கிரஸோடு இணைந்து செயற்படலாமென்றால், கல்முனை
மாநகர சபையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு
வருவதற்கு மக்கள் காங்கிரஸுடன் ஏன் பேச முடியாதுள்ளது என்பதுதான். ஆகவே,
ஒரு சபைக்குள்ளேயே முஸ்லிம் கட்சிகளினால் இணக்கப்பாட்டைக் காண
முடியாதுள்ளது. அப்படியாக இருந்தால் எவ்வாறு சமூகத்தின் அரசியலை கூட்டாக
இவர்களினால் முன்னெடுக்க முடியும். கல்முனை மாநகர சபையில் ஏற்பட்டுள்ள
அனைத்துக் குழப்பங்களுக்கும் கட்சி சார்பான சிந்தனையே காரணமாகும். மேயர்
மாநகர சபை உறுப்பினர்களை இணக்கப்பாட்டுடன் வழிநடத்தாது முகவர் போன்று
வழிநடத்த விளைவதாக எதிர்; அணியினர் குற்றம்சாட்டுகின்றார்கள்.
இதே
வேளை, முஸ்லிம் கட்சிகளின் உள்ளகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு கூட
இணக்கப்பாட்டை காண முடியாதுள்ளது. அரசியல் கட்சிகளின் உயர்பீடத்தில்
உள்ளவர்கள் கட்சித் தலைவரின் முகவர்கள் போன்று சொல்லுவதற்கெல்லாம் தலை
அசைத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள். கல்முனை தொகுதி பாராளுமன்ற
உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ரணில்
விக்கிரமசிங்கவின் அரசியல் போக்கில் அதிருப்தி கொண்டவராகவே இருக்கின்றார்.
இதே வேளை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பாடுகளைக் கொண்டவராகவும்
உள்ளார். அவர் ரவூப் ஹக்கீமின் முடிவுகளுடன் இணக்கப்பாடு இல்லாதவராகவே
இருக்கின்றார்.
கல்முனையில் நடைபெற்ற வைபவமொன்றின் போது 'இந்த
கல்முனையில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் என்ன
நடந்திருக்கின்றது. அதைக் காட்டுங்கள் என்று கேட்ட போது மௌனம். அவ்வாறு
இருக்கின்ற பிரதமருக்கு (ரணிலுக்கு) எடுத்தால் போல் கையுயர்த்துகின்ற
பாராளுமன்ற உறுப்பினரை நீங்கள் உருவாக்கவில்லை. அவ்வாறு செய்ய முடியாதென்று
அலரி மாளிகையை விட்டு வெளியேற முற்பட்ட போது என்னுடைய தலைவர் உட்பட ஏழு
பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னுடைய கையைப் பிடித்தார்கள். உங்களுடைய
வேலையைப் பாருங்கள் என்று விரல் நீட்டிச் சொன்னேன். தலைவர் ஆடிப் போனார்.
இது எனக்கும், பிரதமருக்குமிடையே உள்ள பிரச்சினை. இதில் நீங்கள் யாரும்
குறுக்கே நிற்கக் கூடாது என்றேன். எந்த இடத்தில் எது பேசினால் எது
நடக்குமென்று எனக்குத் தெரியும். தேசிய அரசியலில் கொண்டை கட்டிக்
கொண்டிருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்ல. பழம் திண்று கொட்டை
போட்டிருக்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக முஸ்லிம்
காங்கிரஸில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கப்பாட்டை காண
முடியாதுள்ளதுடன், ரவூப் ஹக்கீம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை
முகவர்கள் போன்று வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.
ஆதலால், முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முகவர் அரசியலில்
இருந்து முற்றாக விடுபட வேண்டும்.
(09.12.2018) வீரகேசாி வெளியீடு
0 comments:
Post a Comment