• Latest News

    December 04, 2018

    மாநகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு மாற்றமாக கல்முனை மேயர் செயற்படுகின்றார் – மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் குற்றச்சாட்டு

     சஹாப்தீன் -
    கல்முனை மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் தொகை ரூபா 10 கோடியை அறவீடு செய்யுங்கள் என்று மேயரைக் கேட்டால் அதனைச் செய்வதற்கு அவர் முன் வருவதில்லை. திண்மக் கழிவு அகற்றல், பொது சுகாதார சேவை ஆகியவற்றில் குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிபர்த்தி செய்யவில்லை. கட்சி சார்ந்த நடவடிக்கைகளையும், மாநகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு மாற்றமாகவும் மேயர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
    கல்முனை மாநகர சபையின் எதிர்த் தரப்பு உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு கல்முனை எஸ்.எல்.ஆர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநகர சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
    கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டங்கள் குழப்பங்களிலேயே தொடர்ந்து முடிவடைந்து கொண்டிருக்கின்றது. கடந்த எட்டு மாதங்களில் முதலாவது கூட்டம் மட்டுமே அமைதியான முறையில் நடைபெற்றது. குறிப்பாக கடந்த 03 மாதங்களாக மிகவும் மோசமான குழங்களைக் கொண்டதாகவே மாநகர சபையின் கூட்டங்கள் அமைந்துள்ளன. மேயர் கூட்டங்களை இடைநடுவில் முடித்து விட்டு வெளியேறும் ஒருவராகவே இருக்கின்றார்.
    கடந்த 08 மாதங்களாக கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த வேண்டுமென்பதற்காகவே நாங்கள் பொறுமை காத்து வந்தோம். ஆனால், இதனை மேயர் புரிந்து கொள்ளாது பக்கச்சார்புடைய நிர்வாகத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றார்.
    மாநகர சபைக்கு 06இற்கும் மேற்படாத உப குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். நிதி, சுகாதாரம், பொதுச் சேவை ஆகிய 03 குழுக்களே அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் எதிர்த் தரப்பு உறுப்பினர்களே அதிகமாக இருக்கின்றார்கள். இக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு மேயர் தடையாக இருந்து கொண்டிருக்கின்றார். அவர் தமது கட்சி சார்ந்த நிர்வாகத்தையே மேற்கொள்கின்றார். அவர் மாநகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு மாற்றமாக சர்வதிகாரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
    கல்முனை மாநகர சபையின் நிர்வாகம் மக்களுக்கு நன்மைகளைச் செய்யும் ஒரு சபையாக இருக்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். அவருக்கு எதிராக கிளர்ச்சிகளைச் செய்ய வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. கடந்த 08 மாதங்களாக சபையில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாது இருக்கின்றார். திண்மக் கழிவு அகற்றல், பொதுச் சுகாதாரம், நிதி நடவடிக்கை போன்றவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. அதனைச் சரியாக செய்யாது எதிர்த் தரப்பினர் மீது பழியைப் சுமத்திக் கொண்டிருக்கின்றார்.
    கல்முனை மாநகர சபையின் நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இருக்கும் பட்சத்தில் நாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். இதற்கு மாற்றமாக இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை மேயர் பதவியை விட்டுப் போங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. மக்களுக்கு நன்மை தரக் கூடிய தீர்மானங்களை எடுக்கும் போதும், அத்தகைய தீர்மானங்களை கொண்டு வரும் போதும் அதற்கு தலை சாய்த்து செயற்படுங்கள் என்றுதான் கூறுகின்றோம்.
    கல்முனை மாநகர சபையை கொண்டு செல்ல பணமில்லை என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். கல்முனை மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூபா 10 கோடி உள்ளது. இத்தொகையை உரியவர்களிடம் இருந்து அறவீடு செய்யுங்கள் என்று பல தடவைகள் கேட்டுள்ளோம். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. இது மக்களின் பணம் என்பதனை அவர் புரிந்து கொள்ளவில்லை. இந்நிலுவைத் தொகையை அறவீடு செய்தால் தமது கட்சியின் ஆதரவாளர்களின் செல்வாக்கை இழக்க வேண்டியேற்படும் என நினைக்கின்றார். இவ்வாறு அவர் சிந்திக்க முடியாது. கல்முனை மாநகர சபையின் நிர்வாகம் கட்சி சார்ந்ததாகவும், இன ரீதியானாகவும், வேறுவகையான பாகுபாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
    இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தார்கள்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாநகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு மாற்றமாக கல்முனை மேயர் செயற்படுகின்றார் – மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top