• Latest News

    January 27, 2019

    நீர் வழங்கல் திட்டங்களினால் கடந்த மூன்றரை வருடங்களில் 300 பில்லியன் ரூபாவை கடனாக செலுத்தவேண்டியுள்ளது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

    நீர் வழங்கல் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தாலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கடந்த மூன்றரை வருடங்களாக 300 பில்லியன் ரூபாவை முழுமையாக கடன் அடிப்படையில் பெற்றே வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    கண்டி மாவட்டத்தில் தெஹியங்க அகறுமுல்ல தொடக்கம இத்தஸ்பிடிய வரையிலான பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் 1.8 மில்லியன் ரூபா செலவிலான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், கடுகண்ணாவ, பாம்வத்தை குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் 62ஆம் கட்டை - ரயின்கோ நிறுவனம் வரையிலான குடிநீர் திட்டம் ஆகியற்வறை பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைத்த பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

    நேற்று சனிக்கிழமை (26) நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

    நீர் வழங்கல் திட்டங்களுக்காக ஒரு சதமேனும் அரசாங்கத்தின் வரவு, செலவுத் திட்டத்தினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இருந்தாலும் இத்திட்டத்துக்காக பாரியளவிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    நீர் கட்டணத்தை அதிகரித்ததை காரணம்காட்டி சிங்கள வாரஇதழ் பத்திரிகையொன்று என்னை விமர்சித்திருந்தது. மேலும், சில அமைச்சர்களும் நீர்க்கட்டண அதிகரிப்பு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

    குடிநீர் விநியோகத்தில் உற்பத்திக் கட்டணத்தில் கால்வாசி பங்கை மாத்திரமே அரசாங்கத்தினால் அறவிட முடியும். இவ்வாறான நிலை தொடர்ந்தால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை பராமரிப்பது மிகக் கடினமாகும்.

    முதலீடு செய்யும் பணம், அதற்கான வட்டி, பராமரிப்புச் செலவு மற்றும் உற்பத்திக் கட்டணம் ஆகியவற்றை பார்க்கும்போது இவ்வருடத்துக்குள் மாத்திரம் 12 பில்லியன் ரூபாவை நாங்கள் கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

    அமைச்சரவை எனது கோரிக்கையை நிராகரித்தாலும், பொது மக்களின் பால் இது நல்ல விடயம்தான். நீர்க் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால், கடன் செலுத்தவேண்டிய தொகையை திறைசேரியே வழங்க வேண்டும்.

    நீர் வளம் என்பது மிகவும் பெறுமதி வாய்ந்ததொன்றாகும். இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இந்த நீர் வழங்கல் திட்டத்தை முதலீடு செய்து முடித்துள்ளோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நீர் வீண்விரயம் செய்வதை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    ஊடகப்பிரிவு
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீர் வழங்கல் திட்டங்களினால் கடந்த மூன்றரை வருடங்களில் 300 பில்லியன் ரூபாவை கடனாக செலுத்தவேண்டியுள்ளது: அமைச்சர் ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top