'அந்த நாட்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நாங்கள் எல்லோரும் பரபரப்பாகிவிடுவோம். அமைச்சை விட்டு வெளியேறுவது எப்போது? வாகனங்களையும் வீட்டையும் ஒப்படைப்பது பற்றித்தான் எம்.பி.மார் எல்லோரும் பொதுவாக தலைமையைப் போட்டு உடைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஹிஸ்புல்லாஹ் பிரதமரின் அல்லது பொறுப்பான அமைச்சரின் அறைக்குள் ஒரு பைலுடன் நுழைவார். உள்ளே சென்று காலில் விழுகின்றாரா இல்லாவிட்டால் கத்திப் பேசுகின்றாரா தெரியாது. ஆனால், அந்த செயற்றிட்டத்தைச் செய்வதற்கான ஒப்பத்தை வாங்கிக் கொண்டு வருவார். அவன் வேலகாரன் தம்பி'
முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒருவரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பற்றி நீண்டகாலம் பாராளுமன்றத்தில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவர் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னிடம் கூறிய வார்த்தைகள் இவை. உண்மைதான், முஸ்லிம்களின் அபிவிருத்தி அரசியலில் செயல்வீரன் என்று சொல்லப்படுகின்ற ஹிஸ்புல்லாஹ்வுக்கே, அவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் சிலரிடம் இருந்து ஆதரவும் வேறு சிலரிடமிருந்து எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் கிளம்பியிருப்பதைக் காண முடிகின்றது.
கிழக்கிலும் கிழக்கிற்கு வெளியிலும் வாழ்கின்ற இலட்சக்கணக்கான சாதாரண தமிழ் மக்கள் இதனை அலட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதற்கெதிராக தொடர்ந்து ஆட்சேபனையை தெரிவித்து வருவதை காண முடிகின்றது. ஹிஸ்புல்லாஹ் பேசும் பழைய வீடியோ காட்சியே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது என்றாலும், கிழக்கின் தமிழ் - முஸ்லிம் உறவு மேலும் விரிசலடைவதற்கும் நம்பிக்கையீனங்கள் அதிகரிப்பதற்கும் ஏதோ ஒரு வகையில் வழிகோலியிருப்பதாகவே தெரிகின்றது.
அரசியல் வரலாறு
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக அறியப்பட்டாலும் கூட, அவர் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் ஆரம்பகாலப் போராளியாவார். இன்றிருக்கின்ற பிரதான இரு முஸ்லிம் கட்சித் தலைவர்களும் வேறு பலரும் மு.கா.வில் உறுப்பினராவதற்கு முன்னதாகவே, ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃபினால் மு.கா.வின் முக்கிய பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்ட அவர் 1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபை உறுப்பினராகி அடுத்த வருடமே பாராளுமன்ற உறுப்பினராகி ஐந்தாறு வருடங்கள் தவிர ஏனைய காலம் முழுவதும் எம்.பி.யாக பதவி வகித்தவர். பின்னர் அக்கட்சியில் இருந்து புறமொதுக்கப்பட்டமை தனிக்கதை.
அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் கிழக்கில் முஸ்லிம் கட்சி சார்பாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ அபிவிருத்தி பணிகளை மேற்கொண்ட இருவரில் பிரதானமானவராக ஹிஸ்புல்லா முஸ்லிம்களால் அடையாளப்படுத்தப்படுகின்றார். அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கூட புணானை பிரதேசத்தில் நியமிக்கப்படுகின்ற பல்கலைக்கழக கல்லூரி போன்ற அவரது பெரும் செயற்றிட்டங்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் பாராட்டப்படுவதுண்டு.
தனித்துவ அடையாள அரசியல் கட்சியில் இருந்து வெளியேறி, சுதந்திரக் கட்சி உறுப்பினரான பின்னரும் கூட முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வந்தார். அத்துடன் தமிழ் மக்களுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் இன்று அவரை விமர்சிக்கின்ற கருணா போன்ற அரசியல்வாதிகளுடன் கூட முரண்பட்டுக் கொண்டதாக குறிப்பிட முடியாது.
ஆனால், இன்று அவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதும் தமிழ் தரப்பிலிருந்து ஆட்சேப குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சமூக வலைத்தள போராளிகளும் சில உள்ளுர் அரசியல்வாதிகளும் ஓரிரு அமைப்புக்களும் இந்த நியமனத்தை கண்டிக்கின்றன. அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னர் ஏற்பாடு செய்த ஹர்த்தால் பெரிதாக வெற்றியளிக்காத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையும் இன்னுமொரு ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஹிஸ்புல்லாஹ்வை அல்லது அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை எல்லா தமிழ் மக்களும் எதிர்க்கின்றார்கள் என்று கூறினால் அது பொய்யான கருத்தாகும். கணிசமான தமிழர்களுக்கு தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஆறுதலளிப்பதாக இருக்கின்றது. சிலருக்கு இது பிடிக்கவில்லை அல்லது உடன்பாடு இல்லை என்றாலும் எதுவும் பேசாமல் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். சில அமைப்புக்கள், அரசியல்வாதிகள், தமிழ் செயற்பாட்டாளர்களே இதனை பெருப்பித்து காண்பிக்கின்றனர். நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்தில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து சமூக வலைத்தளங்களில் பதில் கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.
கனகச்சிதமான நகர்வு
ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் பதிலியாக ஒரு மாகாணத்தை ஆள்பவர். அந்த வகையில், கிழக்கு மாகாண ஆளுநராக இதற்கு முன்பு பதவி வகித்தவர்கள் கிழக்கில் சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றதாக சொல்வது மிகக் கடினம். மறைமுக கட்சி அரசியலையே பெரும்பாலும் முன்னிலைப்படுத்தினார்கள் என்றால் மிகையில்லை. இந்நிலையில் ஆளுநர்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி முடிவெடுத்திருந்தார். இம்முறை கனகச்சிதமாக ஆளுநர் நியமன காயை அவர் நகர்த்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
'சிறுபான்மைச் சமூகங்களுக்காக ஆளுநர் பதவியைக் நானே கேட்டுப் பெற்றுக் கொண்டேன்' என்று ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சொல்லியிருக்கின்றார். அதில் இன்னுமொரு விடயமும் இருக்கின்றது. அதாவது, எப்போதும் ஏதாவது அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு இருப்பவரே ஹிஸ்புல்லாஹ். அந்தவகையில், ஒரு சாதாரண எம்.பி.யாக இருப்பதை விட ஆளுநராக இருப்பதால் தனது எதிர்கால அரசியலுக்காக எதையாவது செய்யலாம் என்று எண்ணியிருப்பார். ஆனால் ஜனாதிபதி மைத்திரியின் கணக்கு, வேறாக இருந்தது எனலாம்.
தமது கட்சிக்கு வழங்காத ஆதரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான அரசியல் நிலைப்பாடு கொண்ட எவரையும் நியமிக்காமல் அவர்களுக்கு ஒரு பாடம்படிக்க மைத்திரி நினைத்திருப்பதாகவே தெரிகின்றது. அந்த வகையில், அவருக்கு சிறந்த தெரிவாக இருந்தவர், சு.க. உறுப்பினரான ஹிஸ்புல்லாஹ்வே.
அவரை நியமித்தால் ஒரு தேசியப்பட்டியல் எம்.பி. வெற்றிடமும் கிடைக்கும் என்ற கூட்டல்கழித்தலின் அடிப்படையிலேயே, ஜனாதிபதி இந்த நியமனத்தை மேற்கொண்டிருக்கலாம். இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டமை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. தமிழர்களில் கணிசமானோரும் இதனை ஏற்றுக் கொண்டனர் அல்லது ஜீரணித்துக் கொண்டனர். எவ்வாறிருப்பினும் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புக்களுக்கும் எழுந்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் யாருமே வாயைத் திறந்து பேசவில்லை. குறைந்தபட்சம், விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகளை தவிர மற்ற எவரும் ஹிஸ்புல்லாவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததைக் கூட காண முடியவில்லை. நமது அரசியல் எந்தளவுக்கு குறுகிய அரசியல் நோக்குக் கொண்டதாக வளர்ந்திருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படலாம்.
தமிழ் அரசியல்வாதிகள்
தமிழர்கள் பயப்படத் தேவையில்லை. எல்லா இன மக்களுக்கும் சரிசமமாக சேவையாற்றவே எதிர்பார்க்கின்றேன் என்ற தொனியில் ஆளுநர் சொன்னாலும் தமிழர்களை கவரும் ஒருசில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதற்கு தமிழ் மக்களின் பக்கத்தில் இருந்து ஆட்சேபனைகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ் மக்களுக்குள் ஒழிந்து கொண்டிருக்கின்ற சில குழுக்கள் இதற்குப் பின்னால் இருப்பதாக தமிழ் முற்போக்காளர்களே கூறுகின்றனர். இதன் மூலம் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட சில சக்திகள் முயற்சி செய்வதாக இன்னுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.
குறிப்பாக, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருணா அம்மான் எனப்படுகின்ற வி.முரளிதரன் மீதும் முஸ்லிம்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுண்டு. ஆனால் அவரை கடந்த மஹிந்த ஆட்சியில் (ஹிஸ்புல்லா தலைமையில் என நினைக்கின்றேன்) காத்தான்குடி பள்ளிவாசல் ஒன்றுக்கு அழைத்து வந்திருந்ததாக நினைவிருக்கின்றது. இன்று, கருணாவும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கின்ற அளவுக்கு நிலைமைகள் மாறியிருப்பதை என்னவென்று சொல்வது.
இந்துக்களின் நலன் சார்ந்த கருத்துத் தெரிவிப்பவரான த.தே.கூட்டமைப்பின் சி. யோகேஸ்வரன் எம்.பி கூறியுள்ள கருத்து இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டியது. 'தந்தை செல்வநாயகம் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்றே கோரினார். தமிழர்கள் தீர்வைப் பெறும் போது முஸ்லிம்கள் போராடும் நிலை உருவாகி விடக் கூடாது. இவ்வாறிருக்க, தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட வேண்டும் என்று கருணா சில கருத்துக்களை கூறி வருகின்றார். முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமித்தது பற்றி கூறுகின்றார்' என தெரிவித்துள்ளார்.
யோகேஸ்வரன் போன்று பெயர்குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிரு தமிழ் எம்.பி.களும் பிரதேச தமிழ் அரசியல்வாதிகளும் சமூகநல அமைப்புக்களும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான எதிர்ப்புக்கள் அவசியமற்றவை என்ற தோரணையில் கருத்து வெளியிட்டுள்ளதை காண முடிகின்றது. எனவே, சகட்டுமேனிக்கு ஆளுநர் நியமனத்தை எதிர்ப்பதற்குப் பின்னால் வேறு ஏதேனும் நோக்கங்கள் இருக்கின்றனவா? அல்லது முஸ்லிம் ஆளுநர் தொடர்பில் தேவையில்லாத ஒரு அச்சம் உருவேற்றப்படுகின்றதா என்பதையும் தமிழ் மக்கள் ஆழமாக நோக்க வேண்டியுள்ளது.
அடிப்படை காரணம்
எது எப்படியிருப்பினும், ஆளுநர் ஹிஸ்புல்லா ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் செய்த அல்லது செய்ததாக நம்பப்படும் தமிழ் மக்களுக்கு பிடிக்காத காரியங்களே இன்று இத்தனை எதிர்ப்புக்களுக்கும் அடிப்படை வினையூக்கியாக அமைந்துள்ளது என்பதையும் இக் கட்டுரையில் குறிப்பிட்டாக வேண்டும்.
எந்த இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அந்த இனம், சமூகம் சார்ந்த அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா விட்ட குறை தொட்ட குறைகள், இன்று அவருக்கு எதிரான ஆதரமாக காண்பிக்கப்படுகின்றன. எம்.பி.யாக அமைச்சராக அவரை ஏற்றுக் கொண்ட சம்பந்தப்பட்ட தமிழ் மக்கள் பிரிவினர் ஆளுநராக ஏற்க மறுக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.
குறிப்பிட்ட தமிழ் பிரிவினர் ஹிஸ்புல்லா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சொல்கின்றனர். ஆனால் அதுவெல்லாம் எந்தளவுக்கு ஆதரபூர்வமானது எனத் தெரியவில்லை. ஆனால், ஓட்டமாவடி காளி கோவில் விவகாரம் தொடர்பாக ஹிஸ்புல்லா எப்போதோ பேசிய வீடியோ காட்சி இன்று ஒருவகையான ஆதரமாக கையாளப்படுகின்றது.
உண்மையில், கோவிலை உடைத்திருந்தால் அது தவறுதான். அதைப் பகிரங்கமாகச் சொல்வது ஆரோக்கியமானதுமல்ல. ஆனால், உண்மையாகவே இந்த இடம் கொள்வனவு செய்யப்பட்டே அங்கு முஸ்லிம்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கபடுகின்றது. இருந்த போதிலும், ஏதோ ஒரு கேள்விக்கு தனது வாயாலேயே ஹிஸ்புல்லா சொன்ன பதில் வார்த்தைகள், இந்தக் கதையின் உண்மையான உள்ளரங்கம் அறியாத தமிழ் மக்கள் மத்தியில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்தகால உறவு
முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இது ஒரு புதுவகையான முரண்பாடு எனலாம். ஏனெனில், இணைந்த வடகிழக்கில் தனியீழத்தை பிரகடனப்படுத்திய வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக இருந்த போது முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. சி. சுந்திரகாந்தன் (பிள்ளையான்) முஸ்லிம்களின் ஆதரவுடனேயே முதலமைச்சரானார். முன்னாள் புலி உறுப்பினர் என்பதற்காக முஸ்லிம்கள் எதிர்ப்புக்காட்டவில்லை.
அதன் பிறகு நஜீப் ஏ.மஜீத், நஸீர் அகமட் ஆகியோர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட போது தமிழர்கள் அதை எதிர்த்தவர்களல்லர். மாறாக முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். ஆனால் அப்போதெல்லாம் இல்லாத எதிர்ப்பு ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்டதும் ஏற்பட்டிருக்கின்றமை கவனிப்பிற்குரியது. வடக்கில் நியமிக்கப்பட்ட தமிழ் ஆளுநருக்கு முஸ்லிம்களால் காட்டப்படாத எதிர்ப்பை கிழக்கு ஆளுநர் சந்தித்துள்ளார்.
ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கான எதிர்ப்பு என்பது அவர் முஸ்லிம் என்பதற்கான எதிர்ப்பு அல்ல என்று தமிழர்கள் சொல்கின்றனர். அது பெருமளவுக்கு உண்மையே என்று வைத்துக் கொண்டாலும்.... இன்னும் தொடரும் எதிர்ப்புக்களும் கடையடைப்புக்களும், அதற்கு முன்னதான காதர் மஸ்தான் விவகாரமும், இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கான எதிர்ப்பு என்று முஸ்லிம்கள் கருதும் நிலைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றமை மிகவும் சிக்கலானதாகும்.
எது எவ்வாறாயினும், சில விடயங்களை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் முஸ்லிம்களும் இவ்விடயத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன் போட்டாபோட்டி கருத்துக்களை தெரிவிக்காமல், காளி கோவில் காணி விவகாரத்தின்; உண்மையை தெளிவுபடுத்தவே முயற்சிக்க வேண்டும்.
கிழக்கில் முதன்முறையாக தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்ற கோணத்தில் பார்ப்பதே நல்லதென தோன்றுகின்றது. ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களுக்கான ஆளுநர் மட்டுமல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவரே சொல்லியிருப்பது போல எல்லா இனங்களுக்கும் பொதுவான ஆளுநராகவே செயற்படவும் வேண்டும்.
ஆளுநரின் பொறுப்பு
எம்.பி.யாக, அமைச்சராக இருக்கின்றபோது அரசியல்வாதிகள் தத்தமது சமூகத்திற்கு சார்பாக செயற்படுவதும் அவ்வேளையில் சிறு சிறு பக்கவிளைவுகள் ஏற்படுவதும் வழக்கமானது. அந்த வகையில், ஹிஸ்புல்லாஹ்வின் சில செயற்பாடுகள் தமிழர்கள் மனம் கோணும்படி அமைந்திருக்கலாம். அல்லது பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் ஆளுநரான பிறகு ஒரு சமூகத்திற்காக மட்டும் பக்கச்சார்பாக அவரால் செயற்பட முடியாது என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதேநேரம், இந்த எதிர்ப்பும் நிகழ்கால சார்ச்சைகளும் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்க எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருக்கும். எனவே அவர் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படாமல் செயற்படுவதும் நியாயமான அபிலாஷைகள் கிடைக்க ஆவன செய்வதும் நல்லதே. ஆனால், தமிழ் மக்களுக்கோ சிங்கள சமூகத்திற்கோ கசப்பான அனுபவம் எதனையும் ஏற்படுத்திய கெட்டபெயர் கிழக்கின் முதலாவது முஸ்லிம் ஆளுநருக்கு கிடைக்காமல் இருக்கும் விதத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டியிருக்கின்றது.
தமிழ் - முஸ்லிம் உறவு என்பது பாரம்பரியமானது. கடந்த காலத்தில் இதில் நிறைய கீறல்கள் விழுந்திருக்கின்றன. அதற்கு மருந்து தடவும் முயற்சிகள் நல்லிணக்கம் என்ற பெயரில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் முஸ்லிம்களுக்கு 'உயர் பதவி' தருவோம் என்றும், முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு கிடைக்க வேண்டும் என்றும் பலவிதமான கருத்துக்களை தமிழ் தேசியம் முன்வைத்து வருகின்றது.
இவ்வாறான பின்னணியில், இன்னும் ஓரிரு வருடங்களுக்கே ஆளுநராக இருக்கக் கூடிய சாத்தியமுள்ள ஆட்சிச் சூழலில், ஹிஸ்புல்லாஹ்வை தமிழர்கள் சிலர் எதிர்பார்ப்பார்களானால் இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதி ஒருவர் உயர் பதவிக்கு வரும்போது அதை எதிர்க்கும் மனோநிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படலாம். இதுவெல்லாம் ஆரோக்கியமானதல்ல.
மிக முக்கியமாக, இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த முரண்நிலை விடயத்தில் ஏனைய முஸ்லிம் மற்றும் தமிழ் தலைமைகள் வாயைத் திறந்து பேசி, உண்மைகளைச் சொல்லி, இரு சமூகங்களையும் சமரசப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
வேறொன்றுமில்லை!
- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி)

0 comments:
Post a Comment