எல்லா தமிழர்களும் மாடு சாப்பிடுவார்கள் என்று குறுகிய சுய இலாபத்துக்காக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேச சபையின் கடந்த அமர்வில் தெரிவித்த கருத்துகளை வன்மையாக கண்டிப்பதாக இப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடராஜா ஜீவராசா தெரிவித்து உள்ளார்.
இப்பிரதேச சபையின் அமர்வு வியாழக்கிழமை இடம்பெற்றபோது மாடுகள் கொல்களத்தை தனியாரின் பொறுப்பில் விடுவதா? சபையே நடத்துவதா? என்று காரசாரமான விவாதம் நடந்தது. மாடுகள் கொல்களத்தை தனியாருக்கு விடுகின்ற பிரேரணையை தவிசாளர் முன்வைத்து இதை முன்மொழிந்து வழி மொழிய உறுப்பினர்களை கோரி இருந்தார். ஆனால் இதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் வலியுறுத்தியதை அடுத்தே விவாதம் இடம்பெற்றது.
ஜாஹீர் அடங்கலாக பெரும்பான்மையான முஸ்லிம் உறுப்பினர்கள் இஸ்லாமிய சமய முறைப்படிதான் மாடுகள் அறுக்கப்பட வேண்டும், மாடுகள் கொல்களம் கடந்த காலத்தில் தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருந்ததால் சுகாதார சீர் கேடுகள் இடம்பெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன, அத்துடன் வருமானம் அற்ற நிலையில் உள்ள காரைதீவு பிரதேச சபை மாடுகள் கொல்களத்தை அதுவாக நடத்துவதன் மூலம் சபைக்கு மாதாந்தம் இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதாக விவாதத்தில் முன்வைத்தார்கள். இதில் ஒரு கட்டத்தில் குறுக்கிட்டு பேசியபோதே தவிசாளர் ஜெயசிறில் எல்லா தமிழர்களும் மாடு சாப்பிடுவார்கள், முஸ்லிம்களுக்குத்தான் முறைப்படி மாடுகள் அறுக்கப்பட வேண்டும், தமிழர்கள் செத்த மாட்டையும் சாப்பிடுவார்கள் என்றார். அதே நேரம் தவிசாளரின் இந்த கருத்துகளை தமிழ் உறுப்பினர்கள் எவரும் சபையில் கண்டித்து இருக்கவில்லை.
இவற்றை ஆட்சேபித்து முன்னாள் தவிசாளர் ஜீவராசா ஊடகவியலாளர்களுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
எல்லா தமிழர்களும் மாடு சாப்பிடுவார்கள், செத்த மாட்டையும் சாப்பிடுவார்கள் என்று தெரிவித்து இருப்பதன் மூலம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே களங்கப்படுத்தி விட்டார். இந்து பெருமக்களை அவமானப்படுத்தி விட்டார். குறிப்பாக சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணின் மக்களை கேவலப்படுத்தி விட்டார். சபையில் இவரின் நடவடிக்கைகளை நாம் மிக நெருக்கமாக அவதானித்து வருகின்றோம். அறியாமை, அகம்பாவம் ஆகியவற்றால் இவர் செய்து வருகின்ற பிழையான காரியங்களின் வரிசையில் குறுகிய சுய இலாபத்துக்காக தமிழர்கள் எல்லோரையும் மாடு தின்னிகள் ஆக்கிய இவரின் தவறு மன்னிக்க முடியாதது ஆகும். எனவே இவர் இதற்காக தமிழ் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன் இவருடைய கருத்துகளை வாபஸ் பெறவும் வேண்டும். இதற்கான அழுத்தத்தை காரைதீவுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள தமிழ், இந்து அமைப்புகள் இவர் மீது கட்டாயம் பிரயோகிக்க வேண்டும்.
நான் இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சுட்டி காட்டி சொல்ல வேண்டி உள்ளது. இவர் இவ்வாறு பேசியதற்கு சபையில் தமிழ் உறுப்பினர்களில் ஒருவர்கூட எதிர்ப்பு வெளியிட்டு இருக்கவில்லை என்பதால் அவர்களும் எமது இனத்தை விற்று விட்டார்கள். இவர்கள் யாருக்கும் எமது மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற அருகதை கிடையாது. அதே நேரத்தில் காரைதீவு மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று சொல்லி கொள்கின்ற காரைதீவு மகா சபையும் இவ்விடயத்தில் மெத்தன போக்குடன் உள்ளதாகவே கொள்ள வேண்டி உள்ளது

0 comments:
Post a Comment