• Latest News

    February 24, 2019

    சூனியமாகும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

    புதிய அரசியலமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் 2019 ஜனவரி 19ஆம் திகதி முன் வைக்கப்பட்டுள்ள அறிக்கை. இதனை அமுல்படுத்தினால் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு இருக்குமென்பதனை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. (விடிவெள்ளி 22.02.2019)

    எஸ்.றிபான் -
    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வேண்டுமென்ற திட்டத்தை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டுமாயின் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் ஆதரவு அவசியமென்று உணர்ந்துள்ளார். தமது இத்திட்டத்திற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சம்மதிக்க வைப்பதில் பெரிய பிரச்சினைகள் எதுவுமில்லை. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியாதென்பதனையும் ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளது. வடக்கும், கிழக்கும் இணைந்த மாகாணத்தையும், அதிகூடிய அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திட்டமாகும். இதற்காகவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்கினால்தான் தமது இலக்கை அடைந்து கொள்ளலாமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நம்புகின்றார்கள். தமது இந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியையும் இழந்துள்ளார். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்திற்காக பதவிகளை இழப்பதற்கு தயாரில்லை. பதவிக்காக சமூகத்தையே அடமானம் வைப்பதற்கும் துணிவார்கள். இதனையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    புதிய அரசியல் யாப்பு
    ******************************
    தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக ரணில் விக்கிரமசிஙக் தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டு வருவதற்குரிய அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகின்றது. அரசியல் யாப்பின் மூலமாக தமிழர்களின் அதிகபட்ச அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். சிங்களவர்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்ற ஆதரவை விடவும், மஹிந்தராஜபக்ஷவுக்கே ஆதரவு அதிகமாகும். இதனால், சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதன் மூலமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியுமென்று ரணில் விக்கிரமசிங்க கணித்துள்ளார். இதனால்தான், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை விடவும், ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் ஐக்கிய தேசிய கட்சியினர் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இதே வேளை, இனப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை முன் வைக்க வேண்டுமென்று சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழு அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளது. இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2019 ஜனவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 
    இந்த நிபுணத்துக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை முஸ்லிம்களுக்கு பாதகமான நிலைமையை ஏற்படுத்துமென்று முஸ்லிம்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றன. இந்த அறிக்கை குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அமைப்புக்கள் பலவும் அலட்டிக் கொள்ளாதிருக்கின்ற நிலையில், குரல்கள் இயக்கத்துடன் இணைந்து சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் முஸ்லிம்;கள் மத்தியில் தெளிவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார். இவரது தெளிவுரைகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய ஆபத்துள்ளதென்று புரிந்து கொள்ள முடிகின்றது.

    இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களும், தமிழர்களும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, முஸ்லிம்கள் எந்த அதிகாரமுமின்றி ஆளப்படும் சமூகமாக மாற்றப்படுவார்கள். தமிழ் சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தைக் கொடுத்து சர்வதேசத்தின் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக முஸ்லிம் சமூகத்தை பழி கொடுப்பதற்கு நிபுணத்துவக் குழுவின் அறிக்கை வழிவகுக்கலாமென்று எதிர்வுகள் கூறப்படுகின்றன.
    மாகாண சபைகளின் அதிகாரங்கள்
    ************************************************
    அரசியல் யாப்பின் 13ஆம் திருத்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதாது. அதனை விடவும் கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். அதனால், புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டால் அல்லது அரசியல் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டால் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரங்களில் முக்கியமான பல அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவே இருக்கின்றன. மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண அரசாங்கத்திற்கும் இடையே ஏதாவதொரு விடயத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டால் குறிப்பிட்ட அந்த விவகாரம் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பின்னர், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட அதற்கு மாகாண சபை அங்கிகாரம் வழங்காது போனால் மத்திய அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது.

    அது போலவே, மாகாண சபைகளின் ஆளுநர்களைக் கூட மாற்றுவதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாகாண சபைகளில் உள்ள பொதுச் சேவை ஆணைக் குழுவுக்கு 60 முதல் 70 வீத அதிகாரங்கள் வழங்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றன.
    மேலும், காணி அதிகாரமும், பொலிஸ் அதிகாரமும் வழங்கப்பட இருக்கின்றது. காணி அதிகாரத்தைப் பொறுத்தவரை, அரச காணிகளை பொது மக்களுக்கு பகிரும் போது, குறிப்பிட்ட பிரதேச செயலகத்தின் கீழ் வாழும் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்பவே பகிரப்படும். முஸ்லிம் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் அரச காணிகள் பெரும்பாலும் இல்லாத நிலையே உள்ளது. ஒரு சில பிரதேசங்களில் இருந்தாலும், அங்கு மிகவும் குறைந்த காணிகளே உள்ளன. இதன் பின்னரே மாவட்ட இன விகிதாசாரம் பார்க்கப்படுமென்று ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழுவின் அறிக்கையில் உள்ளது. காணிப் பகிர்வுக்கு முதலில் பிரதேச இனவிகிதாசாரம் கவனத்திற்கு கொள்ளப்படுவது முஸ்லிம்களினால் அரச காணியை தமது இனவிகிசாரத்தை விடவும் மிகமிகக் குறைந்த அளவுக்கே கொள்ள முடியும். ஆதலால், முஸ்லிம்கள் பாதிக்கப்படாதிருப்பதற்கு மாவட்ட இனவிகிசாரத்தை முதலில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
    மத்திய அரசு காணி ஒன்றினை ஒரு அபிவிருத்தி நடவடிக்கைக்காக மாகாண அரசிடம் கேட்டால், அதனை மாகாண அரசு மறுத்தால், ஜனாதிபதியுடன் முறையீடு செய்ய வேண்டும். ஜனாதிபதி ஒரு சபையை உருவாக்கி அதன் மூலமாகவே இதற்கு தீர்வுகளை காணலாமென்று நிபுணத்துவக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்களை எடுத்துக் கொண்டால் சிங்களவர்களும், தமிழர்களும்தான் குடியேற்றப்படுவார்கள். இதனால், காணியற்றதொரு சமூகமாக முஸ்லிம்கள் இருப்பார்கள்.
    பொலிஸ் அதிகாரமும்; மாகாண அரசுக்கு வழங்கப்படும். இதில் கூட மத்திய அரசாங்கத்தினால் அதிக தலையீடு செய்ய முடியாது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பொலிஸின் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளன. பொலிஸார் அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில், இராணுவம் அழைக்கப்பட்டே தாக்குதல் நடவடிக்கைகள் தடுக்கப்பட்;டள்ளன. எனவே, பொலிஸ் அதிகாரத்தில் கூட முஸ்லிம்களுகு ஆபத்துக்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத அமைப்புக்கள் அரசியலில் ஆழப்பதித்துள்ள இன்றைய சூழலில் இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் தாக்குதல்களை மேற்கொண்டால்; இராணுவத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையே ஏற்படும். மாகாண அரசின் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தினால் இராணுவத்தின் மூலமாக தலையீடு செய்ய முடியாது.
    ஒன்பது மாகாணங்களில் முஸ்லிம்களினால் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம்தான் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ள முடியும். இது கூட முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாத்திரமே சாத்தியமாகும். ஏனைய எட்டு மாகாணங்களில் முஸ்லிம்களினால் முதலமைச்சரையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ பெற்றுக் கொள்ள முடியாது. மூன்றுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் முஸ்லிம்களினால் ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் பெற்றுக் கொள்ள முடியாது. எட்டு மாகாணங்களில் முஸ்லிம்கள் ஆளப்படும் சமூகமாகவே இருப்பார்கள். இந்நிலையில் இம்மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களின் நிலை எவ்வாறு அமையுமென்று சிந்திக்க வேண்டியுள்ளது. மாகாண சபைளுக்கு அதிகாரங்கள் அதிகமாக வழங்குவது நல்லதுதனே என்று மேலோட்டமாக பார்க்கும் போது தெரிந்தால் கூட, கிழக்கு மாகாண முஸ்லிம்களை தவிர ஏனைய மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களின் நிலை எவ்வாறு அமையுமென்று சிந்திக்க வேண்டியுள்ளது.
    இவ்வாறு மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படலாமென்றும், அந்த அதிகாரங்கள் முஸ்pலம்களின் அடிமைச்சாசனமாக அமையும். அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்படவிருக்கின்ற ஆபத்துக்கள் பற்றி சிந்திக்கின்ற நிலையில், முஸ்லிம் கட்சி ஒன்றின் அனுபவமிக்க தலைவர் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை திருப்பியெடுக்க முடியாதவாறு இருக்க வேண்டுமென்று நிபுணத்துவக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவர்கள் யாருக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம்களுடன் பல பிரச்சினைகளுடன் முரண்பட்டுக் கொண்டும், விட்டுக் கொடுப்புச் செய்வதற்கு தயாரற்ற நிலையிலும் உள்ளவர்களுடன் எதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக முஸ்லிம்கள் அதிகாரப் பகிர்வை எதிர்க்க வேண்டுமென்று கூற முற்படவில்லை. அதிகாரப் பகிர்வு எனும் போது அது முஸ்லிம்களுக்கும் அதிகாரங்களை வழங்க வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு அரசியல் யாப்பில் சரத்துக்கள் அமைய வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குரிய வியூகத்திற்கு முஸ்லிம்கள் அதிகாமற்றவர்களாகவும், பாதுகாப்பற்றதொரு சமூகமாகவும் இருக்க முடியாது.
    மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது அளுத்கம, தர்காநகர், பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். இன்னும் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அதனை விடவும் மோசமான நிலையே ஏற்பட்டது. ஜிந்தோட்டை, திகன, கண்டி, அம்பாரை என பல இடங்களில் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களை தாக்கினார்கள். திகன பிரதேசத்தில் ஐந்து நாட்களாக முஸ்லிம்களின் மீது இனவாதிகள் தாக்குதலை மேற்கொண்டார்கள். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.
    இன்றைய மாகாணங்களுக்கு மட்டுப்படுதப்பட்ட அதிகாரங்கள் உள்ள நிலையில் இனவாதிகள் பொலிஸார் முன்னிலையிலேயே முஸ்லிம்களை தாக்கினார்கள். இராணுவம் வரவழைக்கப்பட்டே முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட்டன.
    ஆகவே, எந்த தேசிய கட்சியின் தலையிலான ஆட்சி நடைபெற்றாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே இருந்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடில்லாத அரசியல் யாப்பை முஸ்லிம்களினால் ஆதரிக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.
    இதே வேளை, 09 மாகாணங்கள் என்பதில் கூட எல்லைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 09 மாகாணங்கள் என்று முஸ்லிம்கள் திருப்தியடைய முடியாது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை வடக்குடன் இணைத்துவிட்டு, அம்பாரை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாகாணத்தை உருவாக்கலாமென்றும் எதிர்பார்க்கலாம். கரையோர மாவட்டத்தையோ, தென்கிழக்கு அலகையோ தாருங்கள், முஸ்லிம்களை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்பதாகவே முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு இருக்கின்றது. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, தேசிய கட்சியில் அவர்களை மாத்திரம் நிறுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் எதிர்காலத்தையும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் வெற்றியை மாத்திரம் கருத்திற் கொண்டு புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
    தேர்தல் முறை 
    *******************
    உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்ட கலப்புத் தேர்தல் முறையே பின்பற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் குறைவடைந்துள்ளன. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலும், மாகாண சபைத் தேர்தலும் நடைபெறுமாயின் மிகப் பெரிய அளவில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துவிடும்.

    நிபுணத்துவக் குழுவினால் முன் வைக்கப்பட்டமை அமுல்படுத்தப்பட்டால் பாராளுமன்றத்திற்கு 233 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ்வுறுப்பினர்களில் 140 பேர் தொகுதிவாரி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். பட்டியல் மூலமாக 76 பேரும், தேசியப்பட்டியலில் 12 பேரும் தெரிவு செய்யப்படுவார்கள். அத்தோடு, தேசிய ரீதியாக ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு 05 உறுப்பினர்களும் வழங்கப்படும்.
    தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் 20இற்கும் குறையாத பாராளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது, முஸ்லிம்களின் சார்பில் ஆகக் கூடியது 10 பாராளுமன்ற உறுப்பினர்களையே தெரிவு செய்ய முடியும்.
    தேசிய ரீதியில் ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு 05 உறுப்பினர்கள் என்பது தேசிய கட்சிகளுக்கே சாதகமானது. இந்த 05 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சிறுபான்மைக் கட்சிகளினால் ஒரு போதும் பெற்றுக் கொள்ள முடியாது.
    மேலும், பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்படும் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது கூட முதல் இரண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு 72 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவார்கள். பட்டியலில் மிகுதியாக உள்ள 04 பேரும் வடமாகாணத்திற்கு வழங்கப்படவுள்ளது. வடமாகாணத்தில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும். அங்கு வெளிநாடுகளுக்கு தமிழர்களில் அதிகமானவர்கள் சென்றுள்ளதால் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால், 04 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்தல் ஆணையகம் குறைத்துள்ளது. தற்போது 06 பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் சனத்தொகையின் அடிப்படையிலேயே வழங்கப்படுவது வழக்கமாகும். மறைமுகமாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்காக 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கப்பட இருக்கின்றது. ஆகவே, கலப்புத் தேர்தலில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அவர்களின் இனவிகிதாசாரத்திற்கு ஏற்ப அமையாத நிலையே ஏற்படும். ஆதலால், இத்தகைய தேர்தல் முறையை ஏற்றுக் கொள்ள முடியாதென்று முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து கூற முடியாதிருப்பதற்குரிய காணரங்கள் என்னவென்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
    ஆகவே, முஸ்லிம்களுக்கு விகிதாசாரத் தேர்தல் முறையே தங்களின்; பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்ததாகும். கலப்புத் தேர்தல் முறைமையில் தேர்தல் நடைபெற வேண்டுமாயின் இரட்டை வாக்குரிமை நடைமுறைக்கு வருதல் வேண்டும். தொகுதிவாரிக்கு வெற்றி பெறக் கூடியதொரு கட்சிக்கும், மாவட்ட அடிப்படையில் தமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் தங்கள் சார்பு கட்சிகளுக்கு வாக்களிக்க முடியும். இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.
    ஒருமித்த நாடு
    *******************
    இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எனும் அடிப்படையில் கொண்டு வரப்படும் அரசியல் யாப்பு அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, சமஸ்டி என்பது வேறு ஒரு வடிவத்தில் முன் வைக்கப்பட இருக்கின்றது. இதனை மூடி மறைப்பதற்கு சிங்களவர்கள் மத்தியில் ஒருமித்த நாடு என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது. நாடு பிரியாதென்றும் கூறுகின்றார்கள். அதே வேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமஸ்டியை ஒத்த அதிகாரப் பகிர்வையே நாம் கேட்டுள்ளோம். அதற்குரிய ஏற்பாடுகளே செய்யப்பட்டுள்ளன என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

    ஒருமித்த நாடு என்ற கோசம் எதிர்காலத்தில் தனியொரு நாட்டை தமிழர்கள் பெற்றுக் கொள்வதற்குரிய முன் ஏற்பாடாகவே இருக்கப் போகின்றது. ஒருமித்த நாடு என்ற எண்ணக்கரு, இரண்டு நாடுகள் இணைந்ததொரு ஆட்சியாகவே காட்டப்படுகின்றது என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. தமிழர்கள் நாங்கள் மன்னர் காலத்தில் தனி நாடாகவே இருந்தோம். அந்நியர்களின் ஆட்சியின் பின்னர்தான் ஒரு நாடாகா மாற்றியமைக்கப்பட்டதென்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம் அரசியல் தலைவர்கள்
    ****************************************
    இவ்வாறு புதிய அரசியல் யாப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்பட்டுள்ள நிபுணத்துவக் குழுவின் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு பாதிப்புக்கள் உள்ள போதிலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் புதிய அரசியல் யாப்பு முஸ்லிம்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும் என்ற தோரணையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் இருக்கக் கூடாதென்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் நிற்க வேண்டியதில்லை. அதற்காக முஸ்லிம்கள் தங்களின் அபிலாசைகளை தாரைவார்க்க வேண்டியதில்லை. ஒரு சமூகம் வாழ வேண்டுமென்பதற்காக இன்னுமொரு சமூகம் தம்மை அடிமைகளாக மாற்றுவதற்குரிய காரியங்களை அச்சமூகத்தின் தலைவர்கள் அங்கிகரித்துக் கொண்டிருக்க முடியாது. இதுதான் முஸ்லிம் சமூகத்தின் நிலையாகும். இதுதான் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்றால், முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகளும், பிரதிநிதிகள் எதற்காக என்று சிந்திக்க வேண்டும்.

    அரசியல் யாப்பு வராது என்றும் முஸ்லிம் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். புதிய அரசியல் யாப்பு கொண்டு வர வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டுமென்றும், அது சாத்தியமற்றதென்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் உண்மைகள் உள்ள போதிலும், இரண்டு கட்சிகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டு வருவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் தேசிய கட்சிகளுக்கு வழங்கப்படுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது இலகுவாக கிடைத்துவிடும். ஏனெனில், புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படுமாயின் சிங்கள மக்களுக்கு எந்த பாதிப்புமில்லை. 09 மாகாணங்களில் 07 மாகாணங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம்தான். எனவே, முஸ்லிம்கள் தங்களின் அபிலாசைகளைச் சொல்ல வேண்டும். நடக்காது போனால் பிரச்சினையில்லை. அதே வேளை, நடக்குமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு நஸ்டம் ஏற்பட்டு விடக் கூடாது. இதனைப் பற்றியே முஸ்லிம்களும், முஸ்லிம் தலைவர்களும் சிந்திக்க வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சூனியமாகும் முஸ்லிம்களின் எதிர்காலம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top