வில்பத்து காட்டினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன் சட்ட விரோத அழித்து முஸ்லிம்களை குடியேற்றியுள்ளார் என்று இனவாதிகள் மீண்டும் குற்றச்சாட்டுக்ளை முன் வைத்துள்ளார்கள். இவர்களின் இக்குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு சில ஊடகங்கள் ஆதரவாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. வில்பத்து காட்டினை முஸ்லிம்கள் சட்ட விரோதமாக அழிக்கவில்லை என்று பல முறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறிய போதிலும் இனவாதிகள் அதிலிருந்து விடுபடவில்லை. இனவாதிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் வில்பத்து காடழிப்புப் பற்றி குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும், அது தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கருத்துக்களும், முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின் கருத்துக்களும், முஸ்லிம் அமைப்புக்களினது கருத்துக்களும் இனவாதிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த பதிலாக அமைந்தன. ஆயினும், தற்போது மீண்டும் வில்பத்து காட்டினை முஸ்லிம்கள் அழித்து விட்டார்கள். அங்கு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதனால் கட்டிடங்களையும், காணிகளையும் மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை, கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றும் போது வில்பத்து வனவளப் பகுதியில் காட்டினை அழித்து குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் றிசாட் பதியூதீன் '2012ஆம் ஆண்டு வில்பத்து காட்டில் மக்கள் குடியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இதுவரை எந்தவொரு காணி துண்டும் மக்களிடம் கையளிக்கவில்லை. அவ்வாறு வில்பத்து பகுதியில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் எனக்கு எந்த தண்டனையை வேண்டுமானாலும் வழங்குங்கள். உண்மையாக 1990ஆம் ஆண்டு வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு குடியேற்றப்பட்டனர் எனத் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் வெளியேற்றம்
விடுதலைப் புலிகளின் பாசிச முன்னேடுப்புக் காரணமாக 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடனும், இரு ரூபா பணத்துடனும் விரட்டப்பட்டார்கள். இவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு விரட்டப்பட்டவர்களுள் ஒருவராக றிசாட் பதியூதீன் இருந்தார்.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் முழுமையாக தோற்கடித்ததன் பின்னர் முசலி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி போன்ற ஊர்களில் வசித்த முஸ்லிம்கள் மீளவும் தமது பரம்பரை வாழ்விடங்களைப் பார்வையிடச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த பூமி யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. வீடுகளும், பாடசாலைகளும், பள்ளிவாசல்களும் உடைந்த நிலையில் காடுகளாகவே காட்சியளித்தன.
1990ஆம் ஆண்டு மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து 521 குடும்பங்களைச் சேர்ந்த 1980பேர் வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் சுமார் 20 (2009ஆம் ஆண்டு) வருடங்களின் பின்னர் இவர்களின் தொகை 1320 குடும்பங்களைச் சேர்ந்த 4320 பேராக அதிகரித்துக் காணப்பட்டன. இதனால், இத்தொகையினரை மீள்குடியேற்றம் செய்வதில் காணிப் பிரச்சினையும் காணப்பட்டது. இதனால், பூர்வீக நிலங்களில் மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன்;, கொண்டச்சி, தம்பட்ட முதளிக்கட்டு, கூளான் குளம், முசலி, புதுவெளி ஆகிய கிராங்களில் வாழ்ந்த காணியற்ற மூவின மக்களுக்கும் தலா அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டும் குடியேற்றப்பட்டார்கள்.
ஆகவே, வில்பத்து காட்டின் எல்லைப் பகுதியில் வாழ்ந்த மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக காணிகளிலேயே குறியேற்றப்பட்டார்கள். காணியற்றவர்களே அரசாங்கத்தின் அனுமதியுடன் சட்ட ரீதியாகப் பெறப்பட்ட காணிகளில் குடியேற்றப்பட்டார்கள். ஆதலால், முஸ்லிம்கள் வில்பத்து காட்டினை அழித்தார்கள் என்பதும், முஸ்லிம்கள் சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதும் வேண்டுமென்று மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதப் பிரச்சாரமாகும்.
ஆர்ப்பாட்டங்கள்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த இனவாதிகள் சற்றும் எதிர் பார்க்காத வகையில் மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையினரின் வாக்குகளினால் வெற்றி பெற்றார். முஸ்லிம் கட்சிகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் மஹிந்தராஜபக்ஷவுக்குரிய ஆதரவை முதலில் விலக்கிக் கொள்வதாக அதன் தலைவர் றிசாட் பதியூதீன் அறிவித்தார். இதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸும் தமது ஆதரவை விலக்கிக் கொண்டது. இந்தப் பின்னணியில்தான் 2015ஆம் ஆண்டு பௌத்த இனவாத அமைப்புக்கள் வில்பத்து காட்டினை முஸ்லிம்கள் சட்ட விரோதமாக அழித்து குடியேறியுள்ளார்கள் என்று கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இக்குடியேற்றங்களை நிறுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
சிறுபான்மையினரின் வாக்குகளினால் வெற்றி பெற்று தமது தலையை உறுதிப்படுத்திக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்த பௌத்த இனவாதிகளிடம் சரணடைந்தார். அவர் வில்பத்து காட்டினை அண்மித்த பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். மட்டுமல்லாது மீள்குடியேற்றம் பற்றியதொரு அறிக்கையை வழங்குமாறு மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய நிஹால் ரூபசிங்கவுக்கு பணிப்புரையும் விடுத்திருந்தார். அதற்கு அமைவாக 2015.05.11ஆம் திகதி ஜனாதிபதியிடம் அறிக்கையும் வழங்கப்பட்டது. அதன்படி வனபாதுகாப்பு திணைக்களத்தினால் சட்டரீதியாக விடுவிக்கப்பட்ட 2500 ஏக்கர் காணியிலேயே மீள்குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே வேளை, வில்பத்து காட்டினை அமைச்சர் றிசாட் பதியூதீன் அழித்து முஸ்லிம்களை குடியேற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு தமது அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. ஆயினும், அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு அமைச்சர் றிசாட் பதியூதீன் பல தடவைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்ட ரீதியாக காணி பெறப்பட்டுள்ளது
2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் 04ஆம் திகதி ஜனாதிபதியின் விசேட பிரிவின் மூலம் மன்னார் மாவட்டத்தில் முசலி, மாந்தைமடு பிரதேசங்களின் செயலாளர் பிரிவுகளில் 1080 ஏக்கர் காடு மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. பின்னர் பிக்காய், வன்னிக்குளம் பிரதேச காடுகள் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு 2500 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் அநுர உத்தரசிங்கவும் தெரிவித்திருந்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக செயற்பட்ட எம்.வை.எஸ்.தேசப்பிரிய வில்பத்து வனப் பிரதேசத்தில் மீள்குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்று தெரிவித்திருந்தார். 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் படி வில்பத்து பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மீள்குடியேற்றம் சட்ட விரோதமானதல்ல என்பது தெளிவாகின்றன.
அரசாங்கத்தின் அனுமதியுடன் விடுவிக்கப்பட்ட காணிகளில் தனியே முஸ்லிம்களை மாத்திரம் குடியேற்றியுள்ளதாகவே பௌத்த இனவாதிகள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இங்கு சிங்கள, தமிழி மக்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனை எந்த பௌத்த இனவாதியும் சுட்டிக் காட்டுவதில்லை. 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் விரட்டியமையை மனிதாபிமானத்துடன் பார்க்காது. முஸ்லிம்களை நிரந்தரமாக அவர்களின் பூர்வீகக் காணிகளில் இருந்து துரத்திவிட்டு, அவ்விடங்களில் சிங்களவர்களை குடியேற்றுவதே பௌத்த இனவாதிகளின் நோக்கமாகும். கடந்த காலங்களில் சிறுபான்மையினரிடம் அடாத்தாக பல பெயர்களில் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மறிச்சிக்கட்டி எல்லையிலிருந்து மோதர ஆற்றின் தெற்காக வில்பத்து வனப் பிரதேசத்திற்குள் கடற்கரையை அண்மித்த பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் காடுகளை அழித்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று பௌத்த இனவாதிகள் சொல்லுவதில்லை. இதனை முஸ்லிம் அமைச்சர்கள் சுட்டிக் காட்டுவதுமில்லை. அமைச்சர் றிசாட் பதியூதீன் மாட்டிக் கொள்ளட்டும் என்று முஸ்லிம் சமூகத்தின் அவலத்தில் அரசியல் காய்களையே முஸ்லிம் கட்சிகள் நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
மேலும், இலங்கை நிலஅளவை திணைக்களத்தால் 1938 ஆண்டு வெளியிடப்பட்ட ஓரங்குலப் படம், 1992இல் வெளியிடப்பட்ட (1:250 000 அளவுத்திட்ட) மெற்றிக் தேசப்படம், 1990ம் ஆண்டு வெளியிடப்பட்ட (1:100 000) நிலப்பயன்பாட்டுப் படம், 2003இல் வெளியிடப்பட்ட 1:500 000 மெட்ரிக் படம், 1994ல் வெளியிடப்பட்ட 1:50,000 வீதிப்படம் ஆகிய தேசப்படங்கள், 1956இல் எடுக்கப்பட்ட 1:40,000 அளவுடைய விமான ஒளிப்படங்கள், இன்றுவரை வெளியிடப்படுகின்ற செய்மதிப்படங்கள் போன்ற அணைத்து படங்களையும் அவதானிக்கின்ற போது வில்பத்து சரணாலய எல்லைக்குள்ளோ, அதனைச் சூழ்ந்துள்ள ஒரு மைல் வரையான பாதுகாக்கப்பட்ட வன எல்லைக்குள்ளோ வடமாகாண முஸ்லிம்களின் குடியிருப்பு எதுவும் அமைக்கப்படவில்லை என் பல்கலைக்கழக புவியியல் துறை முன்னாள் விரிவுரையாளர் முஸ்தபா முகம்மது மஸ்தான் தமது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தலைவர்களின் கருத்துக்கள்
பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களை தேசத் துரோகிகள் போன்று காட்டுவதற்கு பல வழிகளை கையாண்டு கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒன்றாகவே வில்பத்து காட்டினை முஸ்லிம்கள் அழித்துள்ளார்கள் என்பதாகும். இதற்கு ஒரு சில பௌத்த சிங்கள அரசியல்வாதிகளும் துணையாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க முஸ்லிம்கள் தொடர்பில் பல ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை முன் வைத்துள்ளார். நாட்டில் பௌத்த இனவாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான வகையில் திசை திரும்பியுள்ளதற்கு இவரது கருத்துக்களும் முக்கிய காரணமாகும். ஆயினும், அவர் வில்பத்து சரணலாயத்தில் எவ்வித குடியிருப்புக்களும் இல்லை. அத்தோடு, வில்பத்து சரணாலயத்திலிருந்து ஒரு மைல் வரையிலான பரப்பளவு பிரதேசம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கும் குடியிருப்புக்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என 2015.05.11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வில்பத்து சரணாலய வனப் பகுதியில் முஸ்லிம்கள் காடுகளை அழிப்பதாக மீண்டும் குற்றச்சாட்டுக்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிய வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் முஸ்லிம் சிவில் அமைப்புகளினாலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த 'வில்பத்து பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடு' என்ற தொனிப் பொருளில் கொழும்பில் (2017 ஜனவரி) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களான ரிஸாத் பதியூதின், ஏ.எச்.எம்.பௌஸி, இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் ஆகியோருடன் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், இவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ நேரில் சென்று உண்மை நிலையை கண்டு கொள்ள நாட்டம் கொள்ளவில்லை. நேரில் சென்று பார்த்து உண்மையை சொன்னால் பௌத்த இனவாதிகள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக செல்லவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.
இதே வேளை, வில்பத்து விவகாரத்தை வைத்து அமைச்சர் றிசாட் பதியூதீனை குற்றவாளியாகக் காட்டி அரசியல் இலாபம் அடைந்து கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்களில் பலர் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனும் இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால், கட்சி அரசியலுக்கு அப்பால் சமூகத்தின் தேவையையும், உரிமையையும் கவனத்திற் கொண்டு வில்பத்து விவகாரத்தில் ஒற்றுமையுடன் செயற்பட முடியாமைக்கான காரணம் என்னவென்று கேட்க வேண்டியுள்ளது.
ஆயினும், ரவூப் ஹக்கீம் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்று 2017.01.15இல் புத்தளத்தில்; நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பின்வருமாறு தெரிவித்தார்.
வில்பத்து விவகாரத்தின் பின்னால் இருப்பது அப்பட்டமான இனவாதம். இதற்கு இந்த ஆட்சியாளர்கள் துணை போக முடியாது. மக்களுக்காக அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு போராட வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்துக்கு நாங்கள் வந்திருக்கிறோம். கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பிரச்சினை என்பது சமூகத்தின் பிரச்சினை. அதிலுள்ள மக்கள் வில்பத்து காட்டை அழித்து குடியேறியுள்ளதாக அநியாயமாக குற்றம்சாட்டுகின்றனர். இதில் ஒருவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும், நாங்கள் அந்த விடயத்தில் சமூகத்தின் பக்கம் நிற்கிறோம். வில்பத்து பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளேன். அது குறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளேன். அதில் ஜனாதிபதிக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதையும் முஸ்லிம்கள் நாட்டு சட்டத்தை மீறுபவர்களாக பிழையாக சித்திகரிப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டவுள்ளேன். வில்பத்து காடழிப்பை காரணம் காட்டி கரடிக்குழி, மறிச்சுக்கட்டி முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு தடைகள் போடப்படுகின்றன. சிறிய விடயங்களை பூதாகரமாக்கி சமூகத்துக்கு தீங்கிழைப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.
இதே வேளை, 2015ஆம் ஆண்டு வில்பத்து விவகாரத்தை பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வில்பத்து விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் அங்கு மீளக் குடியேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கி மீளக் குடியேற்ற வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இவ்வாறு கருத்துக்களை முன் வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து காட்டினை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளமை முஸ்லிம்களுக்கு குறிப்பாக வில்பத்து வனத்தின் எல்லைக் கிராம மக்களுக்கு பேரிடியைக் கொடுத்ததோடு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கிருந்து மாவில்லு பாதுகாக்கப்பட்ட வன பிரதேசம் என 40 ஆயிரத்து 30 ஹெக்டயர் நிலத்தினை வர்த்தமானியில் அறிவித்தார். இந்த பரப்பு காணியில் மாவில்லு, வேப்பல், கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, விலாத்திக்குளம் ஆகிய பகுதி மக்களின் குடியேற்ற காணிகள், மேய்ச்சல் தரை, வயற்காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்காணியை மீளத்தருமாறு மறிச்சிக்கட்டி பள்ளிவாசல் முன்னால் நிலங்களை இழந்தவர்கள் 43 நாட்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மறிச்சிக்கட்டி, முசலி, பாலக்குழி, கரடிக்குழி முஸ்லிம்கள் தங்களின் காணிகளை மீட்டுத் தருமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும், முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும் பல முறை கேட்டுக் கொண்ட போதிலும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. போராட்டங்களை செய்தும் பயன் கிடைக்கவில்லை. 2017 ஏப்ரல் மாதம் அரசாங்கம் மறிச்சிக்கட்டி, முசலி, பாலக்குழி, கரடிக்குழி பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் காணிகளை சுவிகரித்துக் கொள்வதற்காக பிரகடனப்படுத்திய 2012ஆம், 2017ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் வாங்க வேண்டுமென்று மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்திருந்தார்கள். இந்த இரண்டு வர்த்தமானி மூலமாக முஸ்லிம்களின் 82 வீதமான காணிகள் பறிக்கப்பட்டன.
இவ்வாறு வில்பத்து விவகாரம் பற்றிய உண்மைகள் இருக்கின்ற போதிலும் பௌத்த இனவாதிகள் வில்பத்து விவகாரத்தினை வைத்து மீள்குடியேற்றிய முஸ்லிம்களையும், றிசாட் பதியூதீனையும் தேசத் துரோகிகள் என்று காட்டுவதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் சமூகத்தின் பிரச்சினை என்று எதிர் கொள்வதற்கு ஒற்றுமைப்படுதல் வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதனால் முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது என்ற உண்மை தற்போது நிருபிக்கப்பட்டுள்ளது.
நன்றி : விடிவெள்ளி 29.03.2019

0 comments:
Post a Comment