• Latest News

    August 03, 2019

    நிந்தவூரில் இரட்டைக் குழந்தைகள் கொலை! நடந்தது என்ன?

    சஹாப்தீன் -
    அன்று 29.7.2019 திங்கட் கிழமை நிந்தவூரில் 09 மாதங்கள் நிரம்பிய இரட்டைக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி என்ற செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவுகின்றது. முகநூல்களில் கற்பனைக் கதைகளும், ஊகங்களும் செய்திகளாக மக்களின் பார்வைக்கு செல்லுகின்றன. இப்படியும் ஒரு தாயா? ஏன் இந்தக் கொடுமையை செய்ய வேண்டும்? நெஞ்சில் ஈரமில்லையா? என்றெல்லாம் முகநூல்களில் சிலர் எழுதினார்கள். இன்னும் சிலர் தெருக்களிலும், வீடுகளிலும், வேறு இடங்களிலும் கூடி பேசிக் கொண்டார்கள். பின்னர் அந்தக் குழந்தையின் தாய் மனநோயாளி என்ற செய்தி பரவுகின்றது. இதன் பின்னர் சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? கணவன் வீட்டில் இருந்தாரா? அவர் என்ன செய்தார் என்றெல்லாம் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. 
    யார் இந்தத் தாய்?
    நிந்தவூரைச் சேர்ந்த அலியார் சியாதுல் ஹக்கீம் (36) நடுத்தரமான உயரம். நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர். திடகாத்திரமானவர். அழகானவர். எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடிய குணமுடையவர். குடும்பத்தில் மூத்தபிள்ளை. 
    கிண்ணியாவைச் சேர்ந்த நிஹாமுதீன் அஹமட் அமீஸா (26) நடுத்தரமான உயரம். மெல்லிய உடல். நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர். அழகானவர். எல்லோரையும் கவரும் மலர்ச்சியான இன்முகத்தைக் கொண்டவர். குடும்ப உறுப்பினர்களோடும், கணவரோடும் மிகவும் அன்பாக பழகி எல்லோரினதும் அன்பைப் பெற்றவர். குடும்பத்தில் மூத்தபிள்ளை.
    இவர்கள் இருவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களிடையே காணப்பட்ட ஜோடிப் பொருத்தம் எல்லோராலும் பேசப்பட்டது. இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். கிண்ணியாவில் அமீஸாவின் தாய் வீட்டிலும், சியாதுல் ஹக்கீமின் தாய் வீட்டிலும் மாறிமாறி தங்கி வந்தார்கள். இதனிடையே சியாதுல் ஹக்கீம் தானும் மனைவியும் வாழ்வதற்கு தமது சொந்த செலவில் நிந்தவூரில் வீடு ஒன்றினையும் கட்டிருந்தார். இந்த வீடு சியாதுல் ஹக்கீமின் தாயின் வீட்டிற்கு பக்கத்திலேயே கட்டப்பட்டுள்ளது.
    இவ்வாறு இந்த அழகு ஜோடியின் வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் போது, அமீஸா கர்ப்பமடைந்தாள். கணவன் சியாதுல் ஹக்கீம் மனைவியை பொறுப்புடன் கவனித்து வந்தார்.
    வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்
    2015ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதன் பின்னர் இவர்களின் வாழ்வில் இன்னும் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. குழந்தை பிறந்ததும் மிகக் கூடுதலாக சியாதுல் ஹக்கீமும், அமீஸாவும் கிண்ணியாவிலேயே தங்கி இருந்தார்கள். 
    மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் முதற் தடவையாக நிம்மதியை கெடுக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. அது புயல் வீசத் தொடங்கியது. அச்சம்பவம்தான் அமீஸா தனது கையாலேயே தனது இரட்டைக் குழந்தைகளையும் கத்தியால் அறுத்து கொலை செய்யும் இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
    கிண்ணியாவில் தாயின் வீட்டில் தனது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருந்த அமீஸா 2017ஆம் ஆண்டு வீட்டில் அழுக்கான உடைகளை சலவை இயந்திரத்தில் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தாள், இதன் போது அவளது குழந்தை வேலைக்கு தடையாக இருந்துள்ளது. இதனால், தனது குழந்தைக்கு பால் கொடுத்து கட்டிலில் தூங்க வைத்துவிட்டு வேலையை செய்வதற்கு முடிவு செய்தாள். அதன்படி குழந்தையை கட்டிலில் போட்டு தூங்க வைப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டாள். ஆனால், குழந்தை தூங்கவில்லை. தாய் அமீஸா வேலைக் கலைப்பாள் தூங்கி விட்டாள். இந்நிலையில் குழந்தை தாயை விட்டு கட்டியிலிருந்து இறங்கிச் சென்றுள்ளது. 
    சிறிது நேரம் கழித்து அமீஸா கண் விளித்துப் பார்க்கின்றாள். குழந்தையை காணவில்லை. வீட்டின் எல்லா இடங்களிலும், அயலிலும் தேடிப் பார்க்கின்றாள். குழந்தையை காணவில்லை. துடிதுடித்து உறவினர்கள் உட்பட எல்லோரும் குழந்தையை தேடிய போது, அக்குழந்தை சலவை இயந்திரத்திற்குள் விழுந்து இறந்து கிடந்தது. அமீஸாவுக்கு தலை சுற்றியது. தனது கணவனுக்கு என்ன சொல்வேன். எனது கவனக் குறைவால் பிள்ளை இறந்து விட்டதே என்று அழத் தொடங்கினாள். நடுக்கமுற்றாள். 
    தாய் தூங்கியதும் குழந்தை சலவை இயந்திரத்திற்கு அருகில் வந்து என்ன நடக்கின்றதென்று அறிந்து கொள்வற்காக முயற்சி செய்து, உயர்மொன்றின் மீது ஏறி பார்த்துள்ளது. அதன் போது தவறி சலவை இயந்திரத்திற்குள் விழுந்து. அதிலுள்ள நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி இறந்திருக்க வேண்டுமென்று கருதப்பட்டது. அதற்குரிய ஆதாரங்களும் அங்கு இருந்துள்ளன.
    தனது குழந்தை மனைவியின் கவனக் குறைவால் இறந்து விட்ட போதிலும், கணவன் சியாதுல் ஹக்கீம் மனைவியின் மீது கோபங் கொள்ளவில்லை. விதியை நொந்து கொண்டார். ஆனால், அமீஸா மிகுந்த கவலையில் இருந்தாள். கணவன் அவளை சாந்தப்படுத்தினான். அவளுக்கு அருகில் இருந்து ஆறுதல் கூறினான். ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டார்.
    மனநிலை பாதிப்பு
    இவ்வாறு கணவன் சியாதுல் ஹக்கீம் மனைவியின் கவலைகள் இல்லாமல் போக வேண்டுமென்று நடந்து கொண்டாலும், அமீஸாவின் கவலை நீங்கவில்லை. அவள் தான் குற்றம் செய்து விட்டாகவே கருதினால். தான் சற்று தூங்காமால் இருந்தால் குழந்தை இறந்திருக்காதே என்ற குற்ற உணர்வால் துடித்தாள். தூக்கத்தை மறந்தாள். பசியை மறந்தாள். தான் உயிர் வாழ்வதனை விட இறப்பதே மேல் என்று முடிவு செய்தாள். தற்கொலை செய்வதற்கும் முயற்சி எடுத்தாள். மனநோய்க்கு ஆளானாள். 
    மனநோய் மருத்துவரிடம் அமீஸாவை அழைத்துச் சென்றார்கள். மருத்துவர் சிகிச்சை அளித்தார். அமீஸாவும் குணமடைந்து கணவன் மற்றும் உறவினர்களுடன் பழைய படி பழகத் தொடங்கினாள். ஆயினும், அமீஸா தொடர்ந்தும் மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்தாள்.
    என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், ஒருவருக்கு ஏற்பட்ட மனப் பாதிப்பு இலகுவில் மறக்காது. மனதில் எங்கோவொரு மூலையில் அது உறங்கிக் கொண்டுதான் இருக்கும். அது அடிக்கடி விளித்துக் கொள்ளும். இதற்கு அமீஸாவும் விதிவிலக்கல்ல.
    அமீஸா கிண்ணியாவில் தாயின் வீட்டில் இருப்பதனால்தான் அடிக்கடி மரணித்த பிள்ளையின் நினைப்பு ஏற்படுகின்றது என்று கருதி, சியாதுல் ஹக்கீம் தான் நிந்தவூரில் கட்டிய புதுவீட்டிற்கு மனைவியை அழைத்து வந்து குடியமர்த்தினார்.
    இவ்வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளார். இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டு கொண்டார்கள். அவரை காப்பாற்றி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். உயிர் பிழைத்துக் கொண்டார்.  
    அய்னா, ஸைனா
    இவ்வாறான கவலைகளுக்கு மத்தியில் அமீஸா தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். கணவரும் மனைவியை நோகாதவாறு பார்த்துக் கொண்டார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு அமீஸா கர்ப்படைந்தாள். மருத்துவ அறிக்கையின்படி அவளது வயிற்றில் இரட்டை குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டது. கணவனும், மனைவியும், இருவரது குடும்பத்தினரும் சந்தோசப்பட்டார்கள். ஒன்றை எடுத்த இறைவன் இரட்டைக் கொடுத்துள்ளான் என்று இறைவனைப் புகழ்ந்தார்கள்.
    இதே வேளை, அமீஸா கர்ப்பமடைந்துள்ளமையால் அவள் ஏற்கனவே எடுத்துக் கொண்ட ஒரு சில மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
    குழந்தைகளும் எந்த பிரச்சினைகளுமின்றி பிறந்தன. இரட்டை குழந்தைகள். அதுவும் பெண் குழந்தைகள். மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் இரட்டையர்கள். அவர்களுக்கு அய்னா என்றும், ஸைனா என்றும் குடும்பத்தினர் பெயரிட்டு மகிழ்கிறார்கள்.
    குழந்தை பிறந்ததன் பின்னர் மீண்டும் மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெறப்பட்டு வந்துள்ளமையை அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. ஆயினும், கணவன் மனைவின் பல குறைகளை சமாளித்துக் கொண்டு வந்துள்ளார். 
    முனநல மருத்துவ சிகிச்சை பெற்ற போதிலும் அமீஸாவுக்கு இடையிடையே தனது முதலாவது பிள்ளையை பற்றிய எண்ணம் ஏற்பட்டு வந்துள்ளது. அவரது நடவடிக்கைகளில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவதும், பின்னர் நல்ல நிலைக்கு வருவதும், மருத்துவம் பார்ப்பதும் தொடர்ந்துள்ளது. 
    இந்நிலையில் 2019.07.29ஆம் திகதி வீட்டில் வழக்கம் போன்று எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு முழுவதும் இரண்டு குழந்தைகளும் தூக்கமின்றி இருந்துள்ளன. குழந்தைகளின் தாயும், தகப்பனும் குழந்தைகளை தூங்க வைக்க எவ்வளவு முயற்சிகளை எடுத்த போதிலும் தூங்கவில்லை. இதனால், தாயும், தகப்பனும் தூக்கமின்றி நீண்ட நேரம் இருந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் தாய் தூங்கியுள்ளார். இதனால், தகப்பனே குழந்தைகளுடன் தூஙடகாது குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்துள்ளார். 
    29ஆம் திகதி காலை 7.00 மணிக்கு பின்னர் அமீஸா தனது குழந்தைகளுடன் வீட்டின் முன் பகுதி வராந்தாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இரவு முழுவதும் தூக்கமின்றி இருந்த கணவன் வீட்டிற்கு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தான். இதன் போது பாடசாலை செல்லும் உறவு முறை மாணவன் பாடசாலைக்கு செல்வதற்கு முன்னதாக இரட்டைக் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்லுவது வழக்கம். அன்றும் பாடசாலைக்கு செல்வதற்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அமீஸாவின் முகத்தில் மாற்றத்தைக் கண்டுள்ளார். அந்த மாணவன் விடை பெற்றுச் செல்லும் போது கதவை வேகமாக அடைத்துவிட்டு குழந்தைகளுடன் உள்ளே அமீஸா சென்றுள்ளார். 
    பாத் ரூமில் பிள்ளை .....பாத் ரூமில் பிள்ளை .....
    இதன் பின்னர் சிறிது நேரங் கழித்து, அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை அமீஸா எழுப்பினாள். சியாதுல் ஹக்கீம் கண்விளித்துப் பார்த்த போது மனைவி கையில் ரத்தக் கறையுடன் நின்று கொண்டிருந்தாள். கைகளும், கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. பேச்சுக்களில் தடுமாற்றங்கள் இருந்தன. தான்  சொல்லப் போவதனை முழுமையாக ஒப்புவிக்க முடியாதவளாக இருந்தாள். கணவனைப் பார்த்து பாத் ரூமில் பிள்ளை .....பாத் ரூமில் பிள்ளை..... என்று மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
    சியாதுல் ஹக்கீம் விரைந்து சென்று குளியல் அறையை பார்த்த போது தனது இரண்டு குழந்தைகளும் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து இரத்த வெள்ளத்தில் கிடப்பதனைக் கண்டார். தலை சுற்றியது. தனது தந்தையை அழைத்தார். அவர் வந்து பார்த்த போது அமீஸா மிகவும் மோசமான நிலையில் இருந்தார். தன்னிலையை மறந்து இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸார் விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டார்கள். இதே வேளை, அமீஸாவின் நிலை மோசமாகிக் கொண்டே சென்றது. 
    வீட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் அமீஸாவை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல எனக் கருதி நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கு வைத்தியர்கள் முதலுதவிச் சிகிச்சையை மேற்கொண்டார்கள். வைத்தியர்களும், தாதிகளும், வைத்தியசாலையின் ஊழியர்கள் பலரும் அமீஸாவை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கொலையாளியை பர்த்துக் கொண்டிருப்பதனைப் போன்றே பார்த்தார்கள். 
    இதனிடையே சமூக வலைத்தளங்களில் பெற்றே தாயே தனது இரட்டை குழந்தைகளை கொலை செய்தாள் என்று பரப்புரை செய்யப்பட்டது. சம்பவத்திற்கு கற்பனையில் கை, கால்கள் வைக்கப்பட்டன. நிந்தவூர்pல் பரபரப்பு ஏற்பட்டது. அமீஸா வாழ்ந்த வீட்டைச் சூழ பொலிஸாரும், பொது மக்களும் அதிகம் வந்து குவிந்திருந்தார்கள். 
    எனது பிள்ளைகள் எங்கே?
    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமீஸா சுற்றி இருந்தவர்களில் சிலர் படிப்படியாக விலகிச் செல்லுகின்றார்கள். அவள் நினைவற்றவளாக கட்டிலில் கிடக்கின்றாள். இந்நிலையில் மெல்லக் கண்களை திறக்கின்றாள். அங்குமிங்கும் பார்க்கின்றாள். மெதுவாக எழும்புகின்றாள். உடலில் வலியுள்ளதை அவளது முகத்தில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அங்கிருந்த ஒருவரைப் பார்த்து, எனது பிள்ளைகள் எங்கே, பால் சுரந்துள்ளது. கடுப்பாக இருக்கின்றது. பால் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தாருங்கள் என்று கேட்கின்றாள். அப்போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள். சுயநினைவு இல்லாத நிலையிலேயே கொலை செய்துள்ளாள் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 
    இப்போது அமீஸா கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மனநோய் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், அவர் தனது பிள்ளைகள் எங்கே எனக் கேட்ட வண்ணம் இருக்கின்றார்.
    தனது மூத்த பிள்ளையை தனது கவனக் குறைவால் இழந்து விட்டேன் என்ற பாதிப்பு அமீஸாவை அதிகம் பாதிக்கச் செய்துள்ளது. அதனால், அவள் மனநோயாளி, மூன்று பிள்ளைகளையும் இழந்து மருத்துவ மருத்துவ மனையில் இருக்கிறாள். இச்சம்பவம் நீதிமன்றுக்கு வரும் போது என்ன தீர்ப்பளிக்கப்படும்? முன நோயாளி என்று விடுதலை செய்வார்களா? இன்றேல் அமீஸாவுக்கு சிறைதான் இனி வாழ்க்கையாகிப் போமா? இந்தக் கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
    நமது பொறுப்பு என்ன?
    நிந்தவூரில் நடைபெற்ற இச்சம்பவம் நமக்கு பல படிப்பினைகளை கற்றுத் தந்துள்ளது. இச்சம்பவத்தை படிக்கின்ற போது உங்கள் மனதில் எவ்வாறான சிந்தனைகள் தோன்றுகின்றன? இச்சம்பவத்தில் அந்தத் தாயை  ஒரு கொலையாளியாகப் பார்க்கின்றீர்களா? இவ்வாறான சம்பவங்கள் நமது குடும்பங்களிலும் நடக்கக் கூடாதென்றால் நாம் செய்ய வேண்டியதென்ன?
    இலங்கையைப் பொறுத்த வரை மன அழுத்தம் என்பது அதிகரித்து வரும் கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய ஆபத்தாகும். உலக சுகாதார திணைக்களத்தின் தகவல்களின் படி இலங்கையில் 08 இலட்சம் பேர் இவ்வாறு மன அழுத்ததினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, எட்டு பேருக்கு ஒருவர் என்ற நிலையில் இலங்கையர்கள்  மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் 40 வீதத்தினர் மட்டுமே தமது நோய்க்கான சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகம் மன நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 
    முன அழுத்தத்தின் உச்சக் கட்டமே கொலை, தற்கொலை போன்ற நிலைகளுக்கு இட்டுச் செல்லுகின்றது. இலங்கையில் வருடாந்தம் 03 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக சுகாதார அமைச்சின் தேசிய உள சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் சித்திரமாலி டி சில்வா குறிப்பிடுகிறார்.
    இலங்கையை பொறுத்த வரையில் உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் விசேட மனநல சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கு அப்பால் சுமித்ராயோ, சாந்தி மார்க்கம், சமுத்தானா, மனநலத்திற்கான தேசிய கவுன்ஸில், தேவை நாடும் மகளிர் போன்ற அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாகவும், மனநலக் குறைபாடுடையவர்கள் சிகிச்சைகளையும், வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
    துரதிஸ்ட வசமாக ஏதேனுமொரு விதத்தில் மன நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் 'பைத்தியங்கள் என்று' குடும்பத்தை விட்டும், சமூகத்தை விட்டும் ஒதுக்குகின்ற மனோநிலையே இலங்கையில் இன்னமும் நீடிக்கின்றது. அவர்களது உண்மையான மனக் குறைகளை செவிமடுப்பதற்கோ, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொடுப்பதற்கோ நாம் தயாரில்லை. இந்த நிலை தொடருமாயின் நிந்தவூரில் நடந்தது போன்ற சம்பவங்கள் மேலும் தொடரவே செய்யும்.
    எனவேதான், இவ்வாறான சம்பவங்களுக்கு சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும். இலங்கையில் எட்டுப் பேரில் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என தரவுகள் கூறுகின்ற நிலையில் நிச்சயம் நமது குடும்பத்திலும், நமது சுற்றயல் பிரதேசங்களிலும்இவ்வாறான பலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில் இவ்வாறான மனநலக் குறைபாடுடையவர்களை ஒதுக்காது இனங் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், வழிகாட்டல்களை வழங்கவும் நாம் முன் வர வேண்டும். நாம் மேலே சுட்டிக் காட்டிய வைத்தியசாலைகளும், தொண்டு நிறுவனங்களும் அதற்கு தயாராக இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியது அவர்களது சேவையை தேவையானவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதேயாகும். இது தொடர்பில் நாம் அனைவரும் நம் மீதுள்ள பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
    விடிவெள்ளி 02.8.2019
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் இரட்டைக் குழந்தைகள் கொலை! நடந்தது என்ன? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top