• Latest News

    September 06, 2019

    முஸ்லிம்களின் சொத்தக்களை சேதப்படுத்தியவர்கள் வெட்கமில்லாமல் வாக்கு கேட்கிறார்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ

    (ரஸ்மின்)
    உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் மதஸ்தளங்களினையும், அவர்களது சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் இன்று இந்த முஸ்லிம் மக்களிடத்தில் வந்து வெட்கமற்ற முறையில் வாக்கு கேட்க முனைவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
    மேலும், இவ்வாறான செயல்பாட்டை ஒரு போதும் உண்மையான முஸ்லிம்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
    கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட கத்தோலிக்க மத வழிபாட்டு தளங்களின் மீதான தாக்குதல் சம்பவத்தினை அடுத்து முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவத்தினால் சேதமடைந்த பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்வதற்காக வேண்டி காசோலைகள் வழங்கும் நிகழ்வு புத்தளம் மொஹிதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் ( பெரிய பள்ளி) இன்று (06) இடம்பெற்றது. 
    இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
    அமைச்சர் சஜித் பிரேமதாச அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இந்த நாட்டில் இன ரீதியிலான மோதல்களை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட இனவாதிகள் அவர்கள். எதிர்பார்த்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது போனது. நாட்டையும், மக்களையும் நேசிக்கும் பெரும்பாலான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாடு தீப்பற்றி எரியும் நிலையினை ஏற்படுத்தவிடாமல் தடுத்ததை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. 
    குறிப்பாக இலங்கையின் அரசியல் அமைப்பின் 9 வது பிரிவில் புத்த மதத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை பாதுகாப்பதும் எமது அனைவரினதும் பொறுப்பாகும். அது மட்டுமல்ல 14 பிரிவில் அதே போன்று ஏனைய மதங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பினையும், உரிமையினையும் வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கின்றேன். 
    புத்தபிரான் போதித்த தர்மத்துக்கு அமைவாக சகலரும் சமமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நாம் எம்மில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
    சத்தியத்தை புரிந்து கொள்ளும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. யதார்த்தத்தை புரிந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளது. மத ரீதியானதும், இன ரீதியானதுமான அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு எமது நாட்டில் இனி இடம் கொடுக்க முடியாது. 
    நாட்டில் ஏதாவது வடிவில் மதங்களுக்குள்ளும், நாட்டுக்குள்ளும் அடிப்படைவாதம் எங்காவது காணப்படும் என்றால் அதனை ஒழித்தே ஆக வேண்டும். இது மட்டுமல்லாமல் பயங்கரவாதத்துக்கும் இனி எமது நாட்டில் இடம் கொடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், எவ்வாறு பௌத்த விகாரைகளை நாங்கள் பாதுகாக்க நடவடிக்கையெடுக்கின்றோமோ அதே போன்று எமது நாட்டில் உள்ள அனைத்து ஏனைய மதஸ்தளங்களையும் நாம் பாதுகாப்பதற்கான உறுதியினை வழங்குகின்றேன் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார். 
    அமைச்சர் சஜித் பிரேமதாச புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தருவதை முன்னிட்டு, அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
    நிகழ்வுக்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் கடும் சோதனைக்குப் பின்னரே பள்ளிவாசலுக்குள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் சொத்தக்களை சேதப்படுத்தியவர்கள் வெட்கமில்லாமல் வாக்கு கேட்கிறார்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top