• Latest News

    September 01, 2019

    விழலுக்கு இறைத்த நீர்!

    சஹாப்தீன் -
    ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்குரிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. பொது ஜன பொரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை தெரிவு செய்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்காவை ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த தலைமைக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரை அங்கு யார் வேட்பாளர் என்பதில் பலத்த போட்டி நிலை காணப்படுகின்றது. 
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அக்கட்சி பொதுத் ஜன பெரமுனவின் வேட்பாளரை அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் நிலையைக் கொண்டிருப்பதாகவே இருக்கின்றது. 

    இவ்வாறு பெரும் தேசியவாதக் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆராய்ந்து முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்ற சூழலில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இவரின் கருத்தை முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளருமான எம்.ரி.ஹஸன்அலியும் ஆதரித்துள்ளார். 

    ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக போட்டியிடுவதன் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்காக பேரம் பேச முடியுமென்றும், வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 

    ஜனாதிபதித் தேர்தலை பொறுத்த வரை அளிக்கப்படும் வாக்குகளில் 50 சத வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகின்றவNர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இம்;முறை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட இருப்பதனால் எந்தவொரு வேட்பாளரினாலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும். இதனால், முதல் இரண்டு இடத்தினைப் பெற்றவர்களைத் தவிர்த்து ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் முதல் இரண்டு இடத்தினைப் பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டாம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகின்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். 

    ஆதலால், முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக போட்டியிடுவதோடு, முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பிரதான வேட்பாளர் ஒருவருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்க வேண்டுமென்று ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாஹ்வின் இக்கருத்து கேட்பதற்கு சிறப்பாக இருந்தாலும், அதிலுள்ள ஆபத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இனத்துவ அரசியலும், பௌத்த இனவாதிகளின் கெடுபிடிகளும் சிறுபான்மையினரை நசுக்கிக் கொண்டிருக்கும் இன்றைய இலங்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றறோம். தற்போதையே நிலையில் முஸ்லிம்களின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்றவாறு இனவத்துவ அரசியல்வாதிகளும், பௌத்த இனவாதிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் மீது பலியைப் போட்டு அல்லது முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவும், பௌத்த சிந்தாந்தத்திற்கு பிழையான கற்பித்தல்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் பௌத்த கடும்போக்கு இனவாத பிக்குகளும் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டால் அதற்கு இனத்துவ அரசியல் சாயமும், இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் நவீன குற்றச்சாட்டையும் முன் வைப்பார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். 
    மேலும், இன்று ஹிஸ்புல்லாஹ் மீது சிங்கள, தமிழ் இனவாதிகளும், பௌத்த இனவாத பிக்குகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அக்ககுற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்றிருந்தாலும், அதன் தாக்கம் அதிக ஆபத்தைக் கொண்டது. இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவர் மீது முன் வைக்கப்படும் இனரீதியான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதராமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனைக் கொள்வார்கள். குறிப்பாக, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்ற குற்றச்சாட்டைக் குறிப்பிட முடியும். ஆதலால், முஸ்லிம்களுக்கு இருக்கின்ற தலையிடி போதாதென்று மேலும் தலையிடியை அழைத்துக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் ஒருவர் போட்டியிடுவது அமைந்துவிடும்.

    இலங்கையின் அரசியல் யாப்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இலங்கை பிரஜைகள் எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது. அதன்படி முஸ்லிம் ஒருவரும் போட்டியிடலாம். ஆனால், இலங்கையின் இன்றைய சூழல் உண்மைக்கு பொருத்தமில்லாத ஒன்றாகவும், பௌத்த இனவாத பிக்குகளின் எண்ணங்களுக்கு ஏற்ப அரசியல்வாதிகள் செயற்படும் நிலையும், இச்சூழலை இனவாத அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறையும் காணப்படுகின்றமையும், பொய்யும், அநீதியும் ஆட்சி செய்யும் கோர நிலையும் இருக்கின்றது. ஆதலால், முஸ்லிம்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

    இதுவரைக்கும் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் முஸ்லிம்கள் பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையே ஆதரித்து வந்துள்ளர்ர்கள். சிறுபான்மையினரின் வாக்குகள்தான் ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை தீர்மானித்துள்ளன. 
    அதனால், இம்முறையும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரிப்பதே சிறந்த முடிவாக அமையும். முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் போது பிரதான கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு அதாவது முஸ்லிம்களின் சார்பு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஒருவருக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை அளிக்க வேண்டுமென்று, முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று தெரிவிக்கின்றவர்களின் கருத்தாக இருக்கின்றது. இவர்களின் இந்நிலைப்பாடு இதற்கு முன்னர் நேரடியாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரித்ததற்கும், தற்போது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க வேண்டுமென்று முஸ்லிம்களை கேட்டதற்கும் இடையே வேறுபாடுகளில்லை.

    மேலும், முஸ்லிம் ஒருவர் முஸ்லிம்களின் 16 இலட்சம் வாக்குகளில் 10 இலட்சம் வாக்குகளை இலக்கு வைத்து போட்டியிடும் போது, பெரும்பான்மையினர் முஸ்லிம்களை இன்னும் தூரமாக்கிப் பார்ப்பதற்கு வழி அமைத்துவிடும். முஸ்லிம்களின் மீது கொண்டுள்ள பொறாமை, கோபம், பலி என்பன இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடும் போது முஸ்லிம்களின் கோரிக்கைகள், உரிமைகள் பற்றி பேச வேண்டி ஏற்படும். இதற்கு வாக்களிக்குமாறு கேட்க வேண்டியேற்படும். உதாரணமாக அரசியல் தீர்வில் முஸ்லிம்களுக்கும் அதிகாரமும், அதிகார எல்லையும் தரப்பட வேண்டும் என்று கோரும் போது, அல்லது இது வரை முஸ்லிம் இழந்துள்ள காணிகளை மீள கையளிக்க வேண்டுமென்று கோரும் போது அதிலுள்ள உண்மையையும், நியாயத்தையும் விளங்கிக் கொள்ளாது அதற்கு இனவாத சாயம் பூசி, முஸ்லிம்கள் நாட்டைப் பிரிப்பதற்கு விரும்புகின்றார்கள் என்று இனவாதிகளும், பௌத்த பிக்குகளும் பிரச்சாரம் செய்வார்கள். இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே இனவாதிகளினதும், பௌத்த பிக்குகளினதும் செல்வாக்கை அதிகம் பெற்றுள்ள தரப்புக்கு சிங்கள மக்களின் வாக்குகளின் விகிதாசாரத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தும், சிங்களவர்களின் அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு துணை செய்வதாக அமையும். முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் போது பௌத்த இனவாதிகளின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு உரம் ஊட்டுவதாக அமைந்துவிடும். 

    மறுபுறத்தில் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு முஸ்லிம்களின் கோரிக்கைகளை முன் வைக்கும்; போது அதற்கு எதிராக வாக்களிக்கவும் கூடும். 
    இதே வேளை, முஸ்லிம் வேட்பாளர் முஸ்லிம் சமூகத்தின் உண்மைப் பிரச்சினைகளையும், தேவைகளையும் முன் வைத்து போட்டியிடும் போது அந்த வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காது போனால், முஸ்லிம்களே தங்களின் கோரிக்கைகளை நிராகரித்ததாக அமையும். ஆனால், முஸ்லிம்கள் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. தேர்தலின் பின்னர் பெரும்பான்மையினரின் குறிப்பாக பௌத்த இனவாதிகளின் எதிர்வினையில் இருந்து தப்புவதற்காக முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

    ஆகவே, முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கி விஷப் பரீட்சையில் ஈடுபடுவதனை விடவும், முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். ஏற்கனவே, முஸ்லிம்களின் ஒரு சில கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு அந்த ஜனாதிபதிகளை குறை காண்பதனை விடவும், முஸ்லிம் கட்சிகளையும், தலைவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும்தான் குற்றம் காண வேண்டும். தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை தாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு பெற்றுக் கொடுத்த இவர்கள், தேர்தலின் பின்னர் முஸ்லிம்களின் இலக்குகளை மறந்து அமைச்சர் பதவிகளை இலக்கு வைத்து செயற்பட்டார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இந்த இலக்கை மிகவும் சரியாகவே ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து கொண்டவர்கள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தின் இலக்குகளை நிறைவேற்றி பௌத்த இனவாதிகளினதும், இனவாத பிக்குகளினதும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வதனை விட, அமைச்சர் பதவிகளை கொடுத்துவிடுவது ஆட்சியளார்களுக்கு இலகுவான காரியமாகும். 

    இதே வேளை, ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் இரண்டாவது விருப்பு வாக்கைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதன் மூலமாக தமது இலக்கை அடைந்து கொள்ளும் தந்திரமும் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் பின்னணியில் இருக்கலாம்.

    இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததன் பின்னரே உடன்படிக்கையில் கைசாத்திட முடியுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் எதிர்காலம், அவர்களின் தேவைகள், கோரிக்கைகள் போன்றவற்றை முன் வைக்காது, வேட்பாளர் யார் என்று பார்க்க வேண்டுமென்பது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்தை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் முஸ்லிம்களின் நலன்களை கவனிக்காத நிலையே நீடித்துக் கொண்டிருக்கின்றது.

    முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்று தேடிக் கொண்டிருக்காது முஸ்லிம்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். முன் வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நிறைவேற்றாது போகலாம். ஆனால், முஸ்லிம்களின் அபிலாசைகளைக் கொண்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது என்பது கூட ஒரு வெற்றிதான். இது வரைக்கும் பெரும் தேசியவாதக் கட்சிகளும், தலைவர்களும் முஸ்லிம்களின் கோரிக்கைகளை உளரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அக்கோரிக்கைகளை வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுவதற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். 

    இதே வேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தல்களிலோ, பொதுத் தேர்தல்களிலோ முன் வைக்கவில்லை. தங்களின் அரசியலுக்கும், சுய தேடலுக்கும் யாரோடு இணைந்து கொண்டால் சுகமோ அவர்களுடன் இணைந்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் தரகர் வேலைகளையே செய்து கொண்டிருக்கின்றனர். 

    எனவே, முஸ்லிம் கட்சிகளும், அரசியல்வாதிகளும் யார் வேட்பாளர் என்றும், முஸ்லிம் வேட்பாளர் என்றும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்காது, சமூகம் சார்ந்த கோரிக்கைகளில் அவதானம் செலுத்த வேண்டும். அவற்றை ஜனாதிபதி தேர்தலுக்குரிய பேரம் பேசுதலாக முன் வைக்க வேண்டும். அதனைவிடுத்து வழக்கம் போன்று முஸ்லிம் சமூகத்தை பேரினவாத அரசியல் கட்சிகளின் திட்டங்களுக்கு அமைய செயற்பட முற்பட்டால் அது விழலுக்கு இறைத்த நீராக பிரயோசனமில்லாது போய்விடும். 
    Virakesari - 01.09.2019
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விழலுக்கு இறைத்த நீர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top