• Latest News

    October 27, 2019

    அற்பத்தனமானவற்றில் சிற்றின்பம் காணும் அரசியல்வாதிகள்

     சூடுபிடித்துள்ளன. முஸ்லிம் சமூகத்தின் செயற்பாட்டு அரசியல் களத்தில் கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்த, சீசன் வியாபாரிகளைப் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் வாடிக்கையாளர்கள் முன்னே கடை விரிக்க, அதாவது பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கின்றார்கள். 

    அபத்தமான விமர்சனம்
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றன. தேசிய காங்கிரஸ் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பதுடன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனும் சிறுகட்சி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு வழங்குகின்றது. இதேநேரம், ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தாரக மந்திரத்துடன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் தனி முஸ்லிம் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். 

    இந்நிலையில் கோத்தாவுக்கும், சஜித்திற்கும், அனுரவுக்கும் வாக்கெடுத்துக் கொடுப்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் நாகரிகமற்ற வார்த்தைகளை மேடைகளில் பயன்படுத்துவதையும், அபத்தமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு தாங்கள் செய்த சேவையை, பெற்றுக் கொடுத்த உரிமைகளைச் சொல்லி வாக்குக் கேட்க முடியாத வங்குரோத்து அரசியல்தனத்தால், ஏனைய அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரசாரம் செய்கின்ற ஒரு இழிநிலையை பரவலாக அவதானிக்க முடிகின்றது. 

    முஸ்லிம் காங்கிரஸ், ஹிஸ்புல்லா அணி, மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் சார்ந்த அரசியல்வாதிகள் மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பக்குவமற்ற, சிறுபிள்ளைத் தனமான விமர்சனங்களை கூறுகின்றனர். தெருவில் அல்லது தேனீர்க்கடையில் அமர்ந்து கதைப்பது போல மறுதரப்பினரின் மீதான விமர்சனங்கள் அமைந்து விடுகின்றன. 

    இவ்வாறு எந்தெந்த அரசியல்வாதிகள் பொது அரங்கில் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இங்கு பட்டியலிட்டுச் சொல்ல முடியும். ஆனால் வாசகர்களாகிய மக்கள் அதை நன்கு அறிவார்கள் என்பதாலும், அவ்வாறான மோசமான கருத்துக்களை நானும் மீளக் குறிப்பிடத் தேவையில்லை என்பதாலும் அதை எழுதாது தவிர்த்துக் கொள்கின்றேன்.

    குலைந்த ஒற்றுமை
    எது எவ்வாறாயினும், திகண கலவரத்திற்குப் பிறகும் அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இருந்த ஒற்றுமையும் இணக்கப்பாடும் இல்லாது போயிருக்கின்றது. யாரையோ வெற்றி பெறச் செய்வதற்காக இவர்களுள் பலர் 'தமது பல்லையே குத்தி முகர்ந்து பார்க்கின்றனர்' அல்லது 'தமது கண்களை குத்த கையெடுக்கின்றனர்' எனலாம். 

    ஒரு கட்டத்தில் 'நாங்கள் ஒற்றுமைப்பட்டு விட்டோம்' என்று சமூகத்திற்கு அறிவிக்கவும்  பின்னர், தேர்தல் வந்தால் பிரிந்து நின்று எதிராளிகள் போல மற்றைய அரசியல்வாதிகளை வசைபாடி ஏமாற்றவும் தேவையான நடிப்பாற்றலை அவர்கள் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு மேடையில் கதாநாகனாக தோன்றுபவர்கள் இன்னுமொரு நாடகத்தில் வில்லனாக வருகின்றார்கள். 

    நிஜ வில்லன்களை ரொபின்ஹூட்களாக காட்ட முயற்சிக்கின்றனர். அந்த ரொபின்ஹூட்களை தேவை ஏற்பட்டால் அடுத்த தேர்தலில் வில்லன் என்றும் வியாக்கியானம் சொல்வார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதே வழிமுறையையே அந்தந்த முஸ்லிம் கட்சிகளின் தீவிர ஆதரவாளர்களும், பேஸ்புக் போராளிகளும் கடைப்பிடித்து வருகின்றார்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது. 

    இவ்வாறு, முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களது பக்தர்களும் தமது அரசியல் நிலைப்பாடு அல்லது தாம் பூண்டுள்ள வேடத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காக, ஆளுக்காள் போட்டுக் கொடுத்தும் காட்டிக் கொடுத்தும் அரசியல் செய்வதால், நடத்தைப் பிறழ்வான அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகியிருப்பது மட்டுமன்றி, சிலவேளைகளில் அச் செயற்பாடுகள் பொல்லை எடுத்து இனவாதிகளின் கையில் கொடுத்து விடுகின்றன. 

    அவ்வாறான ஒரு நிலைமையே இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுக்கு  ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் காரணங்களுக்காக வெளியிடப்பட்ட பயங்கரவாதி சஹ்ரானுடன் ஹக்கீம் மற்றும் பலர் இருக்கின்ற காணொளி மற்றும் புகைப்படம் என்பன இனவாத நெருக்குதல்களுக்குள் அவரைச் சிக்க வைத்துள்ளன. 

    முஸ்லிம்களுடனான ஒரு சந்திப்பில் எடுக்கப்பட்ட காணொளியாக இது காணப்படுகின்றமையால், இதனை முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற புல்லுரிவிகளின் ஒத்துழைப்பு இன்றி கசிய விட்டிருக்க முடியாது என்றே கூற வேண்டும். ஹக்கீமை மாட்டிவிடுவதற்கோ, அவர் ஆதரவளிக்கும் வேட்பாளருக்கான கடும்போக்கு வாக்குகளை குறைப்பதற்கோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையிலான குடுமிச் சண்டையை மூட்டிவிடுவதற்காகவோ வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியும் புகைப்படமும் இன்று இன்னுமொரு முஸ்லிம் தலைமைக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரமாக உருவெடுக்கும் அபாயமும் அதில் மறைந்திருக்கின்றது. 

    றிசாட் விவகாரம்
    சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் பலம் பொருந்திய அமைச்சராக இருந்த தே.கா. தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஒரு ஆயுதக்குழுவுடன் அல்லது ஒட்டுக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுகின்றார் என்ற கதைகள் புனையப்பட்டன. இதன்மூலம் அவரை ஒரு இனம் சார்ந்தவர் எனக் காட்டி அவரின் மீது வேறு ஒரு கோணத்தில் இருந்து இனவாத நெருக்குதலை பிரயோகிக்க எத்தனம் எடுக்கப்பட்டது. ஆனால் அது அப்போதிருந்த அரசியல் சூழலில் சாத்தியப்படவில்லை. 

    பிறகு, தொடராக முஸ்லிம்கள் மீது இனவாதத்தை பலப் பிரயோகம் செய்துவந்த சிங்கள கடும்போக்கு சக்திகள் அளுத்கம, திகண, அம்பாறை மற்றும் வடமேல் மாகாணம் என நாட்டின் பல பாகங்களிலும் கலவரங்களை உண்டுபண்ணி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. 

    இந்நிலையில், இவ்வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோருக்கு எதிரான இனவாதப் பிரசாரங்கள் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டன. 

    குறிப்பாக, றிசாட்டும் ஹிஸ்புல்லாவும் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிப்படுவோருடன் முன்னைய காலங்களில் கலந்து கொண்ட நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் தூசுதட்டி எடுக்கப்பட்டு ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன. சில சிங்கள ஊடகங்கள் ஊடக தர்மத்தை மீறி இதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டு இனவாதத்திற்கு ஊக்கமருந்து கொடுத்ததை யாரும் மறுக்கவியலாது.  

    இதன் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் தொழில்வாண்மையாளரான வைத்தியர் சாபிக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவரை ஒரு சிங்கள இனஅழிப்புக்கு வித்திடுபவராக காட்டும் இனவாதப் பிரசாரங்களை கடும்போக்கு சக்திகள் திட்டமிட்டு மேற்கொண்டன. ஆனால், கடைசியில் நீதி விசாரணையின் அடிப்படையில் மேற்படி அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டதுடன் டாக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யென தெரியவந்தது. 

    றிசாட், பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் போன்ற அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணினார்கள் என்ற தோரணையில் இனவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் இது வெறுமனே ஒரிரு அரசியல்வாதிக்கு எதிரான நடவடிக்கை அல்ல. மாறாக, ஒரு சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சதித்திட்டம் என்று நான் வீரகேசரியில் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன்.

    அதுமட்டுமன்றி, இன்று றிசாட்டை பயங்கரவாதி, இனவாதி என்று கூறுபவர்கள், நாளை ஒருநாள் தமக்கு தேவையேற்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் இனவாதியாக சித்திரிக்க தயங்க மாட்டார்கள் என்று பல தடவை இப்பக்கத்தில் வெளியான கட்டுரைகளில் சுட்டிக்காட்டியும் இருந்தேன். அதுதான் ஏதோ ஒரு அடிப்படையில் இன்று நடந்திருக்கின்றமை கவனிப்பிற்குரியது. 

    அரசியல் இலாபத்திற்காக

    முஸ்லிம் கட்சிகளோ, அரசியல் அணிகளோ பிரதான வேட்பாளர்களுடன் பகிரங்க ஒப்பந்தம் எதனையும் செய்யவில்லை. முஸ்லிம்களின் உரிமைகள், இனவாத அடக்குமுறை பற்றி மேடையில் பேசுவதாகவும் தெரியவில்லை. எனவே தமது கையிலுள்ள இனவாதம் எனும் பிரதான ஆயுதத்தை எவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைவது என்பது கடும்போக்கு அரசியல் சக்திகளுக்கு குழப்பமாகவே இருந்தது. 

    இந்தச் சூழ்நிலையிலேயே ரவூப் ஹக்கீமின் வீடியோவும் அதன்பின்னர் ஒரு புகைப்படமும் அவர்களுக்கு கையில் கிடைத்திருக்கின்றது. ஒன்றில், நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போன்று எதிரெதிர் முகாம்களில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரமாக மறுதரப்பு பற்றி வீடியோக்களை வெளியிட்டு அபகீர்த்தி ஏற்படுத்துவது போல முஸ்லிம் தரப்பில் இருந்தே இந்த ஒளிப்படம் கசிய விடப்பட்டிருக்க வேண்டும். 

    அவ்வாறில்லாவிடின், தேர்தல் பிரசார உத்தியாக பயன்படுத்தும் பொருட்டு இந்த வீடியோ வேண்டுமென்றே பெறப்பட்டிருக்கலாம் என்றும் அனுமானிக்கப்படுகின்றது. இது இன்று அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விவகாரமாகியுள்ளது. 

    முன்னதாக 'ஹக்கீம் சுற்றவாளி' என்று சொன்ன கடும்போக்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இன்று அரசியல் இலாபத்திற்காக இந்த வீடியோவை, புகைப்படத்தை தூக்கிப் பிடிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் றவூப் ஹக்கீம்  அங்கம் வகிக்கின்ற காரணத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூட்டு எதிரணி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

    பாராளுமன்ற தெரிவுக்குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையில், மத. அடிப்படைவாத முரண்பாடே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு, புலனாய்வு உயரதிகாரிகள், சட்ட மா அதிபர் திணைக்களம் முதல் ஜனாதிபதி வரை அரசாங்க தரப்பில் பல்வேறு தவறுகள் விடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

    இதன் மூலம் சாதாரண, அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது பூசப்பட்ட கறை ஓரளவுக்கு துடைத்தெறியப்படுகின்றது. இவ்வாறான நிதர்சனமான கண்டறிதல்களை ஏற்றுக் கொள்ளாமல் விடுவதற்காக இப்போது எதிரணியினர் ஹக்கீமை ஒரு காரணமாக காட்டுகின்றனர். அதனூடாக தேர்தல் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யலாம் என்றும் மனக்கணக்கு போடுகின்றனர். 

    ஹக்கீமின் விளக்கம்

    இந்நிலையில், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியும், பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தியும் தன்னையும் சஹ்ரானையும் சம்பந்தப்படுத்தும் இனவாத பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளித்திருக்கின்றார். '2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் காத்தான்குடியில் இடம்பெற்ற கைகலப்பை பார்வையிடச் சென்ற வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படமும், அங்கிருந்தவர்களுடன் உரையாடுகையில் எடுக்கப்பட்ட காணொளியுமே இவை' என்று ஹக்கீம் கூறியுள்ளார். 

    'அந்த சந்தர்ப்பத்தில் தன்னை சந்தித்தவர்களுடன் சஹ்ரானும் இருந்திருக்கின்றானே தவிர, அப்போது சஹ்ரானை ஒரு பயங்கரவாதியாக யாரும் அறிந்திருக்கவில்லை' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, 'குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் மற்றும் தனக்கெதிராக முறைப்பாடு செய்தவர் ஆகியோர் மஹிந்த தரப்புக்கு மிக நெருக்கமானவர்கள்' என்பதையும் புகைப்பட ஆதாரங்களுடன் ஹக்கீம் தெளிவுபடுத்தியுள்ளார். 

    மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் எப்பேர்ப்பட்டவர் என்பதை முஸ்லிம்கள் நன்கறிவர். சிங்கள மக்களுக்கு நோகாமல் பேச வேண்டும் என்பதற்காகவும், தமிழ் தேசியம் முகம் சுழித்துவிடக் கூடாது என்பதற்காகவும் முஸ்லிம்களின் உரிமை சார்ந்த முக்கிய விடயங்களில் கூட அடக்கி வாசிக்கும் ஒரு அரசியல்வாதியாவார். இது போன்ற காரணங்களாலேயே அவர் தனது சமூகம் சார்ந்த அரசியலில் ஈடுபடவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், சிங்கள கடும்போக்கு சக்திகளும் ஹக்கீமை இதுவரை காலமும் நல்லிணக்கவாதியாகவே நோக்கி வந்தன. 

    ஆனால், அப்பேர்ப்பட்ட ஹக்கீமே இன்று குறிவைக்கப்பட்டிருக்கின்றார் என்றால், இந்த இனவாத்தின் தீவிரத் தன்மையையும் இம்முறை தேர்தலில் மீண்டும் அதே ஆயுதம் கையில் எடுக்கப்பட்டுள்ளதையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனுக்கும் அரசியல்வாதிக்கும் இருக்கின்றது. 

    முதலாவது விடயம், எந்தத் தேர்தல் மேடையென்றாலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும்; ஏனைய அரசியல்வாதிகள் நாகரிகமாகவும் பக்குவமாகவும் உரையாற்றுகின்ற அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும். ஒரு அரசியல்வாதியை (பயங்கரவாதம் போன்ற விடயங்களுடன் தொடர்புபடுத்தி) சிக்கலுக்குள் தள்ளுவதற்காக எடுக்கப்படும் தந்திர முயற்சிகள் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பாதகமாகி விடுமா என்று சிந்திக்க வேண்டும். இனவாதிகளை உசுப்பேற்றுகின்ற ஆதாரங்களை தேர்தல் இலாபத்திற்காக பயன்படுத்துவது அற்பத்தனமான அரசியலாகும். 

    'ஏனைய கட்சிகளை, அரசியல்வாதிகளை விமர்சித்த றவூப் ஹக்கீம் மாட்டிக் கொண்டார்தானே, அவருக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும்' என்று ஹக்கீமின் எதிரியும் கூட மகிழ்ச்சியடைய முடியாது. 

    ஏனெனில், றிசாட் பதியுதீனின், ஹிஸ்புல்லாவின் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு கட்டத்தில் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மீது திருப்பி விடப்பட்டதோ, அதுபோலவே, இதை இப்படியே விட்டால், றவூப் ஹக்கீமும் சஹ்ரானும் இருக்கின்ற ஒரு வீடியோவை வைத்துக் கொண்டே மீண்டும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாதம் வெளித்தள்ளப்படும் ஆபத்து நிறையவே இருக்கின்றது என்பதை மறந்து விட வேண்டாம்.  

    முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையில் அரசியல் பொறாமையும் போட்டியும் இருக்கலாம். ஆனால், அற்பத்தனமான விடயங்களில் சிற்றின்பம் காணுகின்ற ஒரு கலாசாரம் இருக்கக் கூடாது. அத்துடன் எதிர்ப்பு அரசியலுக்காக  அல்லது இயக்க முரண்பாட்டுக்காக செய்யப்படுகின்ற முட்டாள்தனமான காட்டிக் கொடுத்தல் போன்ற காரியங்கள்... சுற்றி வளைத்து வந்து கடைசியில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பலிகொண்டு விடவும் யாரும் இடமளிக்கக் கூடாது.
    - ஏ.எல். நிப்றாஸ் (வீரகேசரி – 27.10.2019)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அற்பத்தனமானவற்றில் சிற்றின்பம் காணும் அரசியல்வாதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top