• Latest News

    October 27, 2019

    இனவாத பிரசாரத்தை மக்கள் மத்தியில் விதைத்து வெற்றி பெறுவதற்கு துடிக்கின்ற மொட்டு அணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

    எங்களது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் நடந்தபோது, "இப்போது சுகமா?" என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார். இந்த சம்பவங்களின் பின்னாலிருந்த இனவாத நாசகாரக் கும்பல்கள் அவரது அணியில்தால் சங்கமித்திருக்கின்றன என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 
    ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்றிரவு (26) ஏறாவூர்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
    அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, சமூகத்துக்கு எதிராக அநியாயங்கள் நடந்த போது நாங்கள் அமைச்சரவையில் தைரியமாகப் பேசினோம். சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தடங்கல்கள் குறித்து ஆராய்ந்தோம். அநீதியாக நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றுவதற்கான சூழல் இந்த ஆட்சியில்தான் ஏற்பட்டது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாங்கள் இப்படி தைரியமாக பேசமுடியாது. அவ்வாறு பேசினால், எங்களுக்கு மேல் பாய்ந்து விழுவார்கள். 
    ஏறாவூரிலுள்ள ரம்மியமான புன்னக்குடா கடற்கரையை ஆக்கிரமித்து அடாத்தாக இராணுவமுகாம் அமைப்பதற்கான முயற்சியை தடுப்பதற்கு நாங்கள் பலவிதமான முற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த அழகிய கடற்கரையில் பீரங்கிகளை கொண்டு வந்து ஆட்டிலெறி ரெஜிமன்ட் முகாமை அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது. இதன்மூலம் இன்னுமொரு சாலாவ வெடிப்பு சம்பவத்தை நாங்கள் எதிர்கொள்ள முடியாது. 
    கிட்டத்தட்ட 3,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த முகாமை அமைப்பதற்கு எவ்வளவோ இடங்கள் உள்ளன. ஆனால், வெறும் 27 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள்தான் முடக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பிரதேசங்களில் இராணுவமுகாம் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது. பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்கள், கிழக்கு மாகாண செயலணி, காணி அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் என எல்லோருடனும் நாங்கள் இது தொடர்பில் பேசியிக்கிறோம். 
    அழகிய இடங்களை இராணுவத்தினருக்கு ஆக்கிரமித்து, அங்கு ஹோட்டல்களை நிறுவுவதே இவர்களின் திட்டமாகும். கல்குடா துறைமுகத்தில் படையினர் தற்போது லாயா ரிசோட் என்று நடாத்துகிறார்கள். இந்த திட்டங்களை செய்பவர்தான் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ. திருகோணமலையில் நிலாவெளி கடற்கரை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதால், குடாக்கரையிலுள்ள அப்பாவி மீனவர்கள் மீன்பிடிக்கு செல்லமுடியாதளவுக்கு கெடுபிடிகள் இருக்கின்றன. 
    பொதுமக்களின் சொத்துக்களை இராணுவத்தினருக்கு தாரைவார்த்துக் கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால், பொது மக்களுக்கு எதுவும் மிஞ்சாது. எல்லா இடங்களும் இராணுவ மயமாகிவிடும். அது மட்டுமல்லாது இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் மீது பொருளாதாரத் தடை ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கின்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தமையால்தான் அந்த போராபத்தையும் தவிர்த்துக் கொண்டோம். 
    இனவாத பிரசாரத்தை மக்கள் மத்தியில் விதைத்து வெற்றி பெறுவதற்கு துடிக்கின்ற மொட்டு அணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நாட்டுப்பற்று என்பது அயோக்கியனின் கடைசி அடைக்கலமாகும். இயலாமையினால் அதை கையிலெடுத்துள்ளவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். சகல இனங்களையும் அரவணைத்துச் செல்லும் சுபீட்சமான, செளபாக்கியமான வாழ்வுக்காக சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிசெய்வோம். 
    அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருந்தும், தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக வாக்குளை பிரிக்கும் முயற்சிகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இறங்கியிருப்பது குறித்து மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் கோத்தபாயவை வெல்லவைக்கும் வாக்கு என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். 
    கம்பெரலிய திட்டத்தின் மூலம் ஐந்து கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திகளும் ரன்மாவத்தை திட்டத்தின் மூலம் மேலும் ஐந்து கோடி ரூபா பெறுமதியான வீதி அபிவிருத்திகளும் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக ஏறாவூர்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர, ஐரோட் திட்டத்தின் மூலம் 2,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். 
    எனது அமைச்சின் மூலமாக சவுக்கடி கடற்கரையில் மக்கள் ஓய்வெடுப்பதற்கான அழகிய பூங்காவையும் அமைத்திருக்கிறோம். மாக்கான் மாக்கார் கல்லூரியை தேசிய பாடசாலை தரமுயர்த்தியிருக்கிறோம். அலிகார் தேசிய பாடசாலைக்கு அருகிலுள்ள பொலிஸ் காணியை விடுவித்து தருமாறு நாங்கள் பல போராட்டங்களை செய்திருக்கிறோம். நிரந்த கட்டிடம் கட்டாமல் தடுத்து வைத்திருக்கும் அந்தக் காணியை நிச்சயம் பெற்றுத் தருவோம் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இனவாத பிரசாரத்தை மக்கள் மத்தியில் விதைத்து வெற்றி பெறுவதற்கு துடிக்கின்ற மொட்டு அணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top