நாம் ஆட்சிக்கு வந்ததும் புத்தளம் அறுவக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ
திட்டம் உடனடியாக நிறுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி
வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியுள்ளார் என ஜனாதிபதி
சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை
ஆதரித்து மதுரங்குளி கணமூலையில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர்
எம்.எஸ்.சேகு அலாவுதீன் (அன்சார்) தலைமையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற
பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு
கூறினார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு குப்பை
விவவகாரம் புத்தளம் மக்களிடையே பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்று புத்தளத்திற்கு பிரச்சார நடவடிக்கைகளுக்காக வருவதற்கு முன்னர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை சந்தித்து
இந்த குப்பை விவகாரம் தொடர்பில் பேசினேன். உண்மையில், இந்த திட்டமானது
மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்குள்ள வீதிகள் உடைந்திருக்கிறது. சூழலுக்கும், உயிரினங்களுக்கும் இது
பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்றெல்லாம் அவருடைய கவனத்திற்கு
கொண்டு சென்ற போது, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக
புத்தளத்தில் குப்பை கொட்டும் நடவடிக்கைகளை நிறுத்துவேன் என்று வாக்குறுதி
வழங்கினார்.
அண்மையில் தான் வெளிநாடு ஒன்று சென்றிருந்த போது அங்கு திண்மக்கழிவு
முகாமைத்துவம் தொடர்பில் கற்றுக் கொண்டதாகவும், குப்பைகளை மீள்சுளற்சி செய்ய
புதிய தொழிநுட்பங்கள் வந்திருப்பதாகவும், தாம் ஆட்சிக்கு வந்ததும் குறித்த
தொழிநுட்ப உதவியுடன் இலங்கையில் காணப்படும் இந்த குப்பை பிரச்சினைகளுக்கு
நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் சொன்னார்.
எனவே, 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் கோட்டபாய ராஜபக்ஷ நிச்சயமாக
வெற்றிபெறுவார். அந்த வெற்றியில் புத்தளம் முஸ்லிம்களும் ஒரு பங்காளர்களாக
இருந்தார்கள் என்ற செய்தியை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். கோட்டபாய
ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல இல்லாமல்
எதைச் சொன்னாலும் நிச்சயமாக அதனைச் செய்வார்கள்.
தேர்தல் காலங்களில் மட்டும் சமூகம் பற்றிய சிந்தனைகள், உரிமைகள் என்று பேசி
அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் எமது முஸ்லிம் மக்களை
ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். தேர்தல் முடிவடைந்ததும் அவர்கள் வழங்கிய
வாக்குறுதிகள் அப்படியே மறைந்து போகிறது. அவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை
ஏற்று சுகபோகங்களை அனுபவிக்கிறார்களே தவிர, அவர்களை நம்பி வாக்களித்த
முஸ்லிம் சமூகத்திற்கு எந்த பிரயோசனமும் கிடைப்பதில்லை. இவர்கள் எல்லோருமே
நல்ல நடிகர்கள்.
மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோர் இனவாதிகள் என்றும் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் பாதுகாப்பு
கேள்விக்குறியாக்கப்படும், மதக் கடமைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது
என்றெல்லாம் இனவாத கருத்துக்களை விதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த இனவாதக் கூட்டமும் ஐ.தே.மு பக்கமே இருக்கிறது என்பதை மறந்துவிட
வேண்டாம்.
2005ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
அப்போது இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதி. அவர்
ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல முடியாது. முஸ்லிம்கள்
சுதந்திரமாக தமது மத கடமைகளை செய்ய முடியாது என்றெல்லாம் பேசிவிட்டு ரணில்
விகரமசிங்கவுடன் போய்ச் சேர்ந்தார்.
எனினும் அப்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க தோல்வி
அடைந்ததும், பின்கதவாக வந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு
ஆதரவு வழங்கி அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொண்டார். ஐந்து வருடங்கள்
அமைச்சராகப் பதவி வகித்தார். நல்ல சுகபோகங்களையும் அனுபவித்தார்.
அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ
மீண்டும் ஒரு இனவாதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீமால் காண்பிக்கப்பட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடையாது
என்றெல்லாம் சொல்லி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகவுக்கு அதரவு
வழங்கினார்.
ஆனால், அப்போதும் சரத் பொன்சேகா தோல்வியடைந்து மஹிந்த ராஜபக்ஷ
வெற்றிபெற்றார். அதனையடுத்து, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவோடு இணைந்துகொண்டு
அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொண்டார்.
அதுமாத்திரமின்றி, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து கொண்டு அத்தனை
சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு அப்போதைய பொதுவேட்பாளராக களமிறங்கிய
மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்து அவருக்கு ஆதரவாக தேர்தல்
பிரச்சாங்களையும் மேற்கொண்டார்.
அப்போது, ஒருவேளை பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்கள்
தோல்வியடைந்து, மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் இந்த ரவூப் ஹக்கீம்
அமைச்சர் மீண்டும் பின்பக்கமாக வந்து அமைச்சுப் பதவிகளை எடுக்க மஹிந்த
ராஜபக்ஷவுடன் மீண்டும் வெட்கமின்றி இணைந்திருப்பார். இப்படி நாகரிகமற்ற
அரசியலை செய்து வருகிறார்கள்.
கலாநிதி டி.பி.ஜாயா, கலாநிதி பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ்.ஹமீத், ராசிக்
பரீத் போன்றவர்கள் இவ்வாறான கீழ்த்தரமான அரசியலை ஒருபோதும் செய்தது
கிடையாது. இவர்கள் யாரும் தமது தனிப்பட்ட நலன்களுக்காக ஒருபோது அரசியல்
செய்தது கிடையாது. சமூக நலன்களை முன்னிருத்தியே எமது சமூகத்தின்
விமோசனத்திற்காக வேண்டி அர்ப்பணிப்புக்ளுடன் அரசியலை முன்னெடுத்தார்கள்.
ஆனால், அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் இந்த சமூகத்திற்காக அன்றி, தமது
சுயநலத்திற்காகவே அரசியலை செய்து வருகிறார்கள். எனவே, கலாநிதி டி.பி.ஜாயா,
கலாநிதி பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ்.ஹமீத், ராசிக் பரீத் போன்றவர்களின்
அரசியல் முன்மாதிரிகளை அமைச்சர் ரவூப், ரிஷாத் பதியுதீன் போன்றவர்கள்
படிக்க வேண்டும்.
இன்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக எனக்கு முழு அமைச்சைத்
தரவேண்டும். எனது தம்பியை தலைவராக்குங்கள். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு
படிக்க வைக்க , தமக்கும், குடும்பங்களுக்கும், அதி உச்சப் பாதுகாப்பு ,
அதிசொகுசு வாகனம் என்று தங்களுக்கான சுகபோகங்களை மாத்திரமே கேட்டுப்
பெற்றுக்கொள்கின்றார்களே தவிர மக்களுக்கு தேவையான எந்த நலன்கள்
விடயத்திலும் இவர்கள் ஒருபோது அக்கறையாக செயல்பட்டது கிடையாது.
இன்று உங்களது வாக்குகளை வாங்கி சஜிதுக்கு கொடுத்துவிட்டு சஜித் பிரேமதாச
தோற்றுப் போனதும் எப்படியாவது கோட்டபாய அரசாங்கத்தில் இடம்பிடிக்க வேண்டும்
என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அல்லது பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இந்த
முஸ்லிம் சமூகத்தை உங்களைத் தவிர வேறு எவராலும் பாதுகாக்க முடியாது என்று
நல்லவர்களைப் போல நடித்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வார்கள். இது
அவர்களுக்கு பழக்கப்பட்டதொன்றாகும்.
இவர்களுக்கு ஒரு கொள்கை கிடையாது. முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய சிந்தனை
இல்லை. நாட்டைப் பற்றியும் எந்த அக்கறையும் கிடையாது. ஆனால், அமைச்சராக
வேண்டும் என்றதொரு ஒரேயொரு கொள்கை மட்டும்தான் இவர்களுக்கு இருக்கிறது.
மக்கள் இந்த விடயத்தில் இப்போது மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டுவார்கள்.
இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வருமாறு
எனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி
வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து உங்களது தலைமையிலான புதிய
அரசாங்கத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனுக்கும் எந்த
வகையிலும் இடம்கொடுக்கக் கூடாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டால் மாத்திரமே
நான் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று கேட்டபோது ரவூப்
ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனுக்கும் புதிய அரசாங்கத்தில் இடமில்லை; என்ற
உத்தரவாதம் வழங்கப்பட்டதன் பின்னரே இவ்வாறு தேர்தல் பிரச்சாரக்
கூட்டங்களில் பங்கேற்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தைக் காட்டி அரசியல் செய்ய நான் அரசியல்வாதியல்ல. எமது
சமூகத்தை காட்டிக்கொடுத்த முஸ்லிம் அரிசியல்வாதிகளிடமிருந்தும், இனவாத
அரிசியலில் இருந்தும் எமது முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்
என்பதற்காகவே எவ்வித எதிர்பார்ப்புக்களுமன்றி தேர்தல் பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருகிறேன். இப்போது மட்டுமல்ல இனி எப்போது எமது முஸ்லிம்
சமூகத்திற்கு என்ன பிரச்சினைகள் வந்தாலும் நிச்சயமாக அச்சமின்றி குரல்
கொடுப்பேன்.
மஹிந்த அரசாங்கத்தில் அளுத்கம தாக்கப்பட்டன. அதை மாத்திரம் வைத்துக் கொண்டு
இனவாதக் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அளுத்கம தாக்குதல்
சூத்திரதாரி, முஸ்லிம் மக்கள் பற்றி பிழையான கருத்துக்களைச் சொல்லி அந்த
தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்கவே. அவர் இப்போது யார்
பக்கம் இருக்கிறார் என்பதை மக்கள் அறிவர்.
அளுத்கம தாக்கப்பட்டதைப் போல கண்டி திகன, மினுவாங்கொட என்று பல முஸ்லிம்
கிராமங்கள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. அந்த
தாக்குதல்களையும் கோட்டா, மஹிந்த ஆகியோரின் அனுசரணையிலேயே பொதுபலசோன போன்ற
இனவாதக் கும்பலால் நடத்தப்பட்டது என்றார்கள். கண்டி திகன உள்ளிட்ட முஸ்லிம்
கிராமங்கள், பள்ளிவாசல்கள் யாருடைய அரசாங்கத்தில் தாக்கப்பட்டது.
உண்மையில் கோட்டபாயவின் உத்தரவில் அவை நடந்திருந்தால் தாக்குதலுடன்
சம்பந்தப்பட்டவர்களை ஏன் கைது செய்ய முடியாமல் போனது. அப்போது முழு
அதிகாரங்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம்தானே இருந்தது.
அதுமட்டுமல்ல அளுத்கம தாக்குதல் நடத்தப்பட்ட போது அவை உடனடியாக பூரணக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அங்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு மஹிந்த
ராஜபக்ஷ அரசாங்கத்தில் நஷ்டஈடுகளும் வழங்கப்பட்டன. ஆனால், பாதுகாப்பு
தரப்பினர் கைகட்டி வேடிக்கை பார்க்க திகன போன்ற முஸ்லிம் கிராமங்கள்
தாக்கப்பட்டன. எந்த விதமான நஷ்டஈடுகளும் இதுவரையிலும் இந்த அரசாங்கத்தினால்
வழங்கப்படவில்லை.
பொதுபலசேனா அமைப்பை கோட்டபாய ராஜபக்ஷதான் தலைமை தாங்கி வழி நடத்துகிறாராம்
என்று கூறுகிறார்கள். அண்மையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார
தேரர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அவரை வெளியே விட வேண்டும் என்று அஷாத்
சாலியும், ரவி கருணாநாயக்கவுமே கடுமையாகப் போராடினார்கள். அதுபோல பொதுபலசோன
அமைப்பின் முக்கியஸ்தர் டிலந்த விதானகே அமைச்சர் ரவி கருநாயணயக்கவின்
அமைச்சில் ஆலோசகராக உள்ளார்.
எனவே, பொதுபலசேனா அமைப்பு யாருடைய தயவில் இயங்குகிறது. அவர்களை யார்
இயக்குவது என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இவ்வாறு பிழையான
தகவல்களை வழங்கி மக்கள் மத்தியில் பாரிய குழப்பங்களை ஏற்படுத்த
முயற்சிக்கிறார்கள்.
கோட்டபாய அரசாங்கத்தில் இனரீதியான, மதரீதியான, பிரதேச ரீதியான அரசியலுக்கு
இடமில்லை. இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே வாழவேண்டுமே
தவிர, பிரிந்துகொண்டு வாழ முடியாது. அரசியல் செய்த காலம் மலையேறிப்
போய்விட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச முஸ்லிம்களின் நண்பன் என்றும் அவர்
முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் உதவினார் என்பதால் அவருடைய மகனும் அதே
சிந்தனையில் உள்ளவர் என்று அவரை ஜனாதிபதியாக்குங்கள் எனவும் ஆதரவு
வழங்குமாறு கோரி முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று பிரச்சாரங்களை
செய்து வருகிறார்கள்.
வடகிழக்கு முஸ்லிம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸாவின்
ஆட்சியை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். 1990இல் 77 ஆயிரம் முஸ்லிம் மக்கள்
கிழக்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள். அவர்களின்
உடமைகளை விட்டுவிட்டு நிர்க்கதியாக தமது சொந்த மண்ணை விட்டு
வெளியேற்றப்பட்டனர். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ரணசிங்க பிரேமதாஸ.
வடக்கு , கிழக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றிய மற்றும் படுகொலை செய்த
விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ஆயுதம் வழங்கினார்.
செலவுக்காக பணம் கொடுத்தார். பதுங்குக் குழிகளை அமைப்பதற்கு சீமெந்து
மூடைகளை அனுப்பி வைத்தாரே தவிர முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க எந்த
நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இந்த மக்கள் பாரிய நெருகக்கடிக்குள்
தள்ளப்பட்டனர்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய பாதுகாப்புச்
செயலராக இருந்த கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவில் யாராலுமே அழிக்க முடியாது,
கட்டுப்படுத்த முடியாது என்றுகைவிரித்த யுத்தத்தை தலைமைதாங்கி முடிவுக்கு
கொண்டு வந்து இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் நிம்மதியான வாழ்வைப்
பெற்றுக் கொடுத்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் என்பதை யாராலும்
மறுக்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினாலேயே இந்த முஸ்லிம் சமூகத்தை
காப்பாற்ற முடியாமல் போனது. அப்படி இருக்கையில் அவரது மகன் சஜித் பிரேமதாச
எப்படி இந்த முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றப் போகிறார். அவர் இப்போது
ஒரு நகைச்சுவை நடிகரைப் போலவே மேடையில் பேசி வருகிறாரே தவிர பொறுப்புள்ளவர்
போல பேசுகிறார் இல்லை. அவர் இப்போது குழம்பிப் போயிருக்கிறார். அவரை நம்பி
இந்த முஸ்லிம் மக்கள் எப்படி வாக்குகளை அளிப்பது.
எனவே, இந்த புத்தளம் மக்கள் மீது கோட்டபாய ராஜபக்ஷ நல்ல மதிப்பும்,
நம்பிக்கையும் வைத்திருக்கிறார். நிச்சயமாக குப்பை விவகாரத்தை மிகவும்
நேர்மையாகக் கையாண்டு, இங்கு வாழும் மூவின மக்களுக்கும் சமமான
அபிவிருத்திகளை வழங்கி உங்களை கௌரவிப்பார். ஆகவே, வெற்றி பெறப் போகின்ற
கோட்டபாய ராஜபக்ஷவுக்கு உங்களுடைய வாக்குகளை வழங்கி நாங்களும் ஒரு
பங்குதாரர்களாக இருந்தோம் என்பதை காட்டுங்கள என புத்தளத்தில் வாழும்
முஸ்லிம் மக்களிடம் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
(புத்தளம் நிருபர் ரஸ்மின்)
0 comments:
Post a Comment