• Latest News

    October 26, 2019

    ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

    மொட்டு அணியிடம் தேசியப்பட்டியலை பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மஹிந்தவும் கோட்டபாயவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அரசியல் பணிமனையை இன்று வெள்ளிக்கிழமை (25) திறந்துவைத்த பின்னர், நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

    அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

    இந்த ஜனாதிபதி தேர்தலானது அடுத்து வரவுள்ள எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கும், மாகாண சபை தேர்தலுக்குமான ஒரு ஒத்திகையாகும். இத்தேர்தலில் நாங்கள் வேட்பாளராக களமிறக்கியுள்ள சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் எதிர்கால அரசியல் இருப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

    நாங்கள் ஆதரவளிக்கும் சஜித் பிரேமதாச இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவது நிச்சயம். அவரது தரப்பை பலப்படுத்துவதற்கு எங்களது வாக்குவங்கி பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. கடந்த தேர்தலை விட வாக்களிப்பு வீதம் பல மடங்கு அதிகரிப்பதன் மூலம் இலகுவாக எங்களது வெற்றிவாய்ப்பை உறுதிசெய்து கொள்ளலாம்.

    ஹிஸ்புல்லாஹ் தேசியப் பட்டியலில் மூலம் மீண்டும் பாராளுமன்றம் நுழைவதற்காக சமூகத்தை அடகுவைத்து, கோட்டபாயவுக்கு வாக்குகளை சேகரிக்கும் வேட்டையில் இறங்கியிருக்கிறார். நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ள கோட்டபாயவை வெற்றிபெறச் செய்வதே ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் செயகலாகவுள்ளது. அவருடைய சுயலாபத்துக்கு துணைபோகும் வகையில் ஏமாந்து போகமாட்டார்கள்.

    சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குளை சிதறடிப்பதே இவர்களின் நோக்கமாகும். அதுமாத்திரமின்றி தேசியப்பட்டியல் ஆசனங்களை ஒதுக்கித் தருவதாகக்கூறி, ஹிஸ்புல்லாஹ்வுடன் சேர்த்து பிள்ளையானும் கருணா அம்மானும் மொட்டு அணிக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். அவர்களின் இந்த நாடகம் ஒருபோதும் பலிக்காது. கோட்டபாயவும், மஹிந்த ராஜபக்ஷவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள்.

    சஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும் நோக்கில் சகல மாவட்டத்திலும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய ஏனைய கட்சிகளோடு முரண்பட்டுக் கொள்ளாத வகையிங் எங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். சிறுபான்மை சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சஜித் பிரேமதாசவை தவிர வேறொரு தெரிவு இருக்கமுடியாது என்றார்.

    இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், மன்சூர் ஏ. காதிர், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கல்குடா தொகுதி அமைப்பாளர் றியாழ், இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

    ஊடகப்பிரிவு
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top