இலங்கையின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செய்லாளர் கோத்தபாய
ராஜபக்ச பதவியேற்றுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் அநுராதபுரத்தில் இன்று
காலை இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு
செய்வதற்கான தேர்தல் கடந்த 16ம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் கோத்தபாய
ராஜபக்ச சுமார் 69 லட்சம் வாக்குகளை பெற்று அமோக வெற்றிபெற்றிருந்தார்.
தேர்தல்
முடிவுகளின்படி, சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவை புதிய ஜனநாயக
முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிருந்தார். அதேநேரம்
பெரும்பான்மையின மக்களின் ஆதரவை கோத்தபாய ராஜபக்ச பெற்றிருந்தார்.
இந்நிலையில்,
தேர்தல் முடிவுகள் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து
அரசியல் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் கருத்து
வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில், பேராசிரியர் ராமு மணிவண்ணன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
“சிங்களப்
பேரினவாதத்தைத்தான் இலங்கை தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதைத்தான் இந்தத்
தேர்தல் முடிவுகள் உலகத்திற்கு உணர்த்துகின்றன. இந்த தேர்தல் ஒருவகையில்
தமிழர்களுக்கு நன்மையான ஒன்றே.
இதன்படி, தமிழர்களின் அரசியல்
இனிவரும் காலங்களில் வேறு ஒரு பரிணாமத்தை அடையும். அமெரிக்கா, பிரிட்டன்,
இந்தியா என வலதுசாரிகள் எழுச்சி பெறுகிற உலக நிலவரத்தின் நீட்சிதான்
இலங்கைத் தேர்தல் முடிவுகளும்.
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத
தாக்குதலுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு குறித்த பிரசாரம் தேர்தலில் பெரும்
தாக்கத்தை செலுத்தியுள்ளது. இது இந்தியாவோடு ஒத்துப்போக கூடிய ஒன்று.
அதேநேரம்,
இனிவரும் காலங்களில் பொருளாதாரம் போன்ற வாழ்வியல் சிக்கல்களை எவ்வாறு
கையாளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்துப்பார்க்க வேண்டும்.
தமிழ்த்
தரப்பும் சரி, சிங்களத் தரப்பும் சரி, தங்களுக்கான தேர்வைச் சரியாக
மேற்கொண்டுள்ளனர். ஆனால், வழக்கம்போல தமிழர்களே இழப்புகளைச்
சந்திக்கப்போகின்றனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,
நடைபெற்று முடிந்த இலங்கைய ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியாவின், சிரேஷ்ட
ஊடகவியலாளர் இராதகிருஸ்ணன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.
“கோத்தபாய
வெற்றியால் தமிழர்களின் நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. அனைத்துத்
தரப்பினரையும் அரவணைத்துச் செல்வோம் என கோத்தபய தெரிவித்தாலும் அவை
நம்பும்படியாக இல்லை.
காணாமல்போன மக்களின் நிலைபற்றி பத்திரிகையாளர்
சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்ட போது, 'அதைப் பற்றி தனக்கு எதுவும்
தெரியாது' என கோத்தபய பதிலளித்தார்.
இது பத்திரிகையாளர்களுக்கு
மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கான பதிலும்கூட. பொருளாதாரப் பிரச்னைகளை
அணுகுவதில் ராஜபக்ஷே தேர்ந்தவர் கிடையாது.
பொருளாதாரம்,
வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லையென்றால்,
அதிகாரத்தில் இருப்பவர்கள் அடுத்து நாடுவது பெரும்பான்மைவாதம்தான்."
"இந்தியாவில்
தற்போது நடப்பதைப் போலத்தான் இலங்கையில் பெரும்பான்மைவாதம் இனிவரும்
காலங்களில் மேலோங்கும். இந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகளைப் பிரித்த
விக்னேஷ்வரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தோலுரித்துக்
காட்டப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான்
தமிழர்கள் தங்களின் பிரதிநிதியாக மீண்டும் அங்கீகரித்துள்ளார்கள்
என்பதைத்தான் தமிழ்ப் பகுதிகளில் சஜித் முன்னிலை வகித்திருப்பது
காட்டுகிறது.
2015 தேர்தலில் இந்தியா தலையிட்டதால்தான் தோல்வி
அடைந்ததாக ராஜபக்ச வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இது,
இந்தியாவுக்கு தலைவலியாகத்தான் இருக்கும்.
இலங்கைத் தேர்தலில்
தோற்றது சஜித் மட்டுமல்ல, இந்தியாவும்தான். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்
மேலும் அதிகரிக்கவே செய்யும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை,
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் ஆய்வாலர் நிலந்தன், இலங்கையின் ஜனாதிபதி
தேர்தல் முடிவுகள் குறித்து இவ்வாறு இந்திய ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்,
“இலங்கைத்
தீவு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட பெரும்பான்மைவாதத்தை சிங்கள மக்கள்
ஏற்றிருக்கிறார்கள், தமிழ் மக்கள் அதை நிராகரித்திருக்கிறார்கள்.
தமிழர்கள்
பெருவாரியாக ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்திருப்பது அச்சத்தின்
வெளிப்பாடே. சிங்களப் பகுதிகளில் சஜித்துக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
சஜித்
தன்னை ஐக்கிய தேசியக் கட்சியின் முகமாகக் காட்டாமல் பிரேமதாசாவின்
மகனாகத்தான் முன்னிலைப்படுத்தினார். அது எடுபடவில்லை. தேர்தலுக்கு முன்பு
இனவாதம் தூண்டப்பட்டிருந்தது.
அதில் ராஜபக்சவுக்கு ஈடு இல்லை
என்பதுதான் உண்மை. அதைத்தான் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இலங்கை மிகப்பெரிய இனவாத அலை ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறது. இது ஒரு
ஆபத்தான போக்கு.
சிங்களக் கட்சிகள் சமபலமாக இருந்து ஆரோக்கியமான
போட்டி நிலவினால்தான் தமிழர்கள், முஸ்லிம்களின் வாக்குகள்
தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்கமுடியும்.
பெரும்பான்மை சிங்கள
வாக்குகள் ஒரு இடத்திலே தஞ்சம் அடையுமானால் தமிழர்களின் வாக்கு இல்லாமலே
ஒருவர் ஜனாதிபதியான முடியும் என்கிற சூழ்நிலை உருவாகும்.
அதைத்தான்
இந்தத் தேர்தலும் காட்டியிருக்கிறது. சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து
அதிகரித்தாலும் இந்தியா - சீனா உடனான உறவை கோத்தபாய சமஅளவில் கையாள்வார் என
எதிர்பார்க்கப்படுகிறது” என கூறியுள்ளார்

0 comments:
Post a Comment